சமீப காலங்களில், பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும், குடும்ப வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதற்காகவே பெண்கள் பணிக்கு செல்கின்றனர்.
கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில்தான், பெண்களிடையே இம்மாதிரி மனமாற்றம் வேகமாக வளர்ந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
படிப்பு, வேலை, சம்பளம் ஆகியவற்றைக் கடந்து, தங்களுடைய தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி, தங்களுக்குத் தாங்களே முதலாளியாக பரிணமிக்க வேண்டும் என்ற ஆசை பெண்களிடையே வளர்ந்து வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியமானதாகும். அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில், தொழில் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. ஐ.ஐ.டி. மாணவர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு முடிவுகளின்படி, அமெரிக்கா, கனடாவில், சிறுதொழில் அதிபர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் ஆவர்.
பிரிட்டனில், கடந்த இருபது வருடங்களில் பெண் தொழில் அதிபர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. சீனாவில், புதிய தொழில்களைத் துவங்குவதில், ஆண்களைவிட, பெண்கள் இருமடங்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
மேல்நாடுகளை ஒப்பிடும்போது, இந்திய பெண்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல.
பெப்ஸிகோவின் தலைமை நிர்வாகி இந்திரா நூயி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் சந்தா கோச்சர், ஆக்ஸிஸ் வங்கியின் முதல்வர் சிகா சர்மா, பாரத ஸ்டேட் வங்கி யின் தலைவர் அருந்ததி பட்டாசார்யா ஆகியோர் வெற்றித் தடம் பதித்த பெண்களில் சிலர்.
பொருளாதாரச் சரிவு தருணங்களில், நாட்டின் பெரிய தனியார் வங்கியைத் திறம்பட நிர்வகித்த பெருமை சந்தா கோச்சரை சார்ந்ததாகும். பத்ம பூஷன் உள்பட பல விருதுகளைப் பெற்று, நுண்திறமையில் பெண்கள் ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை இவர் நிரூபித்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன், பல பிரச்னைகளையும், பெருத்த நஷ்டத்தையும் சந்தித்துக் கொண்டிருந்த இந்தியன் வங்கியின் தலைவராக ரஞ்சனா குமார் நியமிக்கப்பட்டார்.
வங்கித் துறையில் நியமிக்கப்பட்ட முதல் பெண் தலைவர் என்பதால், அவரால் நிலைமையை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. தன் மன உறுதி, சரியான திட்டமிடுதல், திறமையான நிர்வாகம், எதிர் நோக்குத் திறன் ஆகியவற்றால், குறுகிய காலத்தில் வங்கியை பிரச்னைகளிலிருந்து அவர் மீட்டார்.
பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரண் மஜூம்தார் ஷா, பாலாஜி டெலிஃபிலிம் நிறுவனத்தை வழி நடத்தும் ஏக்தா கபூர், புகழ் பெற்ற ஃபேஷன் டிசைனரான ரீது குமார் ஆகியோரையும் வெற்றிநடை போடும் பெண்களுக்கான உதாரணமாகச் சொல்லலாம்.
கிரண் மஜூம்தார், தன் இளம் வயதில் வாடகை வீட்டு கார்ஷெட்டில், 10,000 ரூபாய் முதலுடன் பப்பாளி பழத்திலிருந்து நொதியை (ங்ய்க்ஷ்ஹ்ம்ங்) பிரித்தெடுக்கும் தொழிலை துவங்கினார். அந்தச் சமயத்தில், அவருடன் பத்து பேர் பணியாற்றினர்.
பயோ டெக்னாலஜி என்ற விஞ்ஞானப் பிரிவு வளர்ச்சியடையாத அந்த காலகட்டத்தில், வங்கிகள் அவர் தொழிலுக்கு கடன் தர மறுத்தன. ஆனால், தான் விருப்பப்பட்ட துறையில் வெற்றியடைய அவர் தொடர்ந்து உழைத்தார்.
தற்போது, பயோகான் இந்தியாவிலேயே மிகப் பெரிய பயோடெக்னாலஜி நிறுவனமாகத் திகழ்கிறது. ஆராய்ச்சி உள்பட பல துறைகளில், 4,500 ஊழியர்களை உள்ளடக்கிய இந்த நிறுவனத்தின் தற்போதைய மூலதனம் 100 கோடியாகும். இதன் விற்பனை ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாயை தாண்டி நிற்கிறது. பத்ம விபூஷன் விருதைப் பெற்ற இவர் ஒரு சாதனை பெண்மணி ஆவார்.
இந்தப் பெண்களின் சாதனை, முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு ஓர் உந்துதல் ஆகும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளும் திறன், தொலைநோக்குப் பார்வை ஆகிய காரணிகள்தான், இலக்கை அடைவதற்கான வழிகள் என்பது இவர்களின் வெற்றி போதித்த பாடமாகும்.
நம் நாட்டைப் பொருத்தவரை, சிறுதொழில் முனைவோர்களில், சுமார் 7 சதவீதத்தினர் மட்டும்தான் பெண்கள். தொழில் நிறுவனங்களை இயக்குவதற்கு தகுதியானவர்கள் ஆண்கள்தான் என்ற முன்முடிவே இதற்கு முக்கியக் காரணமாகும்.
தொழில் முனைவோர்களுக்கான பயிற்சிகளைப் பெறும் பெண்களில் பெரும்பாலானோர், தொழில் துவங்கும் எண்ணமே இல்லாதவர்கள் என்பது ஆய்வின் மூலம் அறியப்பட்டிருக்கிறது.
தொழில் துவங்க நினைக்கும் பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதற்குப் பதிலாக, சுற்றமும், சூழலும், அவர்களை கேலி செய்து முடக்கி விடுகின்றன.
தொழில் துவங்குவதற்கான மூலதனத்தைப் பெற, பெண்கள் பெரும் சோதனைகளைச் சந்திக்கின்றனர். கணவன் தொழில் துவங்க தன் நகைகளை பெண்கள் கழற்றிக் கொடுக்கின்றனர். ஆனால், பெண்கள் தொழில் துவங்க உதவும் பொருட்டு, குடும்ப சொத்துகளைப் பயன்படுத்த பெரும்பாலான ஆண்கள் சம்மதிப்பதில்லை.
பெண்கள் தொழில் துவங்குவதற்கான கடன் வசதிகளை வழங்குவதில் வங்கிகளும் தயக்கம் காட்டுகின்றன. கடன் வசதி பெறுவதற்கு, கணவனின் எழுத்துப்பூர்வ சம்மதமும், உத்தரவாதம் கையெழுத்தும் கோரப்படுகின்றன. ஆனால், இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர். நீண்ட காலமாக நம் சமூகத்தில் பெண்கள் குடும்ப பராமரிப்பாளர்களாக மட்டுமே கருதப்படுகின்றனர்.
தொழில் துவங்கத் தேவையான தன்னம்பிக்கை வளர, கல்வி அவசியம் தேவை. கல்வி கற்பதில், பெண்களுக்கு இன்றளவும், பல சமூக மற்றும் பொருளாதாரத் தடைகள் நிலவி வருகின்றன. பல சமுதாயங்களில், பெண் உயர் கல்வி என்பது வெறுப்புடன் பார்க்கப்படுகிறது. இம்மாதிரி சமூக சூழ்நிலைகள், தொழில் துவங்க கனவு காணும் பெண்களின் எண்ணங்களை கருவிலேயே அழித்திவிடுகின்றன.
பெண்களால் நிர்வகிக்கப்படும் பல தொழில்கள், பகுதி நேரமாகவும், பொழுதுபோக்கிற்காகவும் (ட்ர்க்ஷக்ஷஹ்) துவங்கப்படுகின்றன. அதனால், அவற்றில் பெரிய அளவில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.
வரவு } செலவுகளைத் திட்டமிடுதல், சேமிப்பு ஆற்றல், பொறுமை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, எதிர்நோக்குத் திறன் போன்றவை பெண்களிடையே இயற்கையாக அமைந்த குணநலன்கள். இவை தொழில் வெற்றிக்குப் பெரிதும் உதவும். இவற்றுடன் கல்வியும் சேர்ந்தால் அந்த திறன்கள் முழுமை பெறும்.
சமீபத்திய ஆய்வின்படி, பெண் தொழில் அதிபர்கள் மிகுதியாக உள்ள ஊர்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் வகிக்கிறது. தில்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத், புணே, ஆமதாபாத் ஆகிய நகரங்கள் அடுத்த இடங்களை பிடிக்கின்றன. அலங்கார ஆடைகள் தயாரிப்பு, தோற்றப் பராமரிப்பு, பயண சேவைகள், ஐ.டி. சேவைகள், உணவுப் பொருள் தயாரிப்பு, ஊடகம் போன்ற துறைகளில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.
சுய தொழில் செய்யும் பெண்களில் பெரும் பகுதியினர், தொழில் மற்றும் குடும்ப நிர்வாகத்திற்கு தனித் தனி நேரத்தை தங்கள் வசதிக்கேற்ப ஒதுக்கி செயல்பட முடிவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 450 பெண் தொழிலதிபர்களிடம் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது (ஈங்ப்ப் ரர்ம்ங்ய்ள் எப்ர்க்ஷஹப் உய்ற்ழ்ங்ல்ழ்ங்ய்ங்ன்ழ்ள்ட்ண்ல் ள்ற்ன்க்ஹ்).
பல சமூக மற்றும் பொருளாதாரத் தடைகளை உடைத்துதான், பெரும்பாலான இந்திய பெண்கள் தொழில் துவங்குகின்றனர். தொழில் துவங்குவதற்கான கனவுகள் பலரிடையே விரிந்திருந்தாலும், தடைகளைத் தகர்த்து வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
பெண் கல்வி, தொழில் ஈடுபாடு பற்றிய சமூக பார்வையில் தற்போது மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பெண்கள் இந்த மன மாற்றங்களைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டால், சில வருடங்களுக்குள் பெண்களில், தொழில் முனைவோரின் எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது என்று அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
எதிர்கொள்ளப்போகும் இடர்ப்பாடுகளை கணித்து பெண்கள் செயல்படுவதால், அவர்கள் சந்திக்கும் தோல்விகளின் அளவு குறைவாகவே இருக்கிறது. இந்த காரணத்தினால், பெண்களால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் வாராக்கடன்களின் அளவு குறைவாகவே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தற்போது பல வங்கிகள், பெண்களுக்கான தொழில் கடன் திட்டங்களை வகுத்திருக்கின்றன. பாங்க் ஆஃப் இந்தியாவின் "பிரியதர்ஷினி யோஜனா' திட்டத்தின் கீழ், பெண்கள் தொழில் துவங்க 5 லட்சம் ரூபாய் வரை பிணையம் கோராத கடன் வசதி அளிக்கப்படுகிறது.
ஓரியண்டல் வங்கியின் "மஹிளா விகாஸ யோஜனா' திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் வரையிலான கடன், புதிதாக தொழில் துவங்கும் பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களில், வட்டிச் சலுகைகளும் உண்டு. ஸ்டேட் பாங்க், கனரா வங்கி, பெண் தொழில் முனைவோருக்கான தனிப் பிரிவை வகுத்துள்ளன.
இந்திய பெண் தொழில் முனைவோர்களின் கூட்டமைப்பின் (ஊங்க்ங்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் ஐய்க்ண்ஹய் ரர்ம்ங்ய் உய்ற்ழ்ங்ல்ழ்ங்ய்ன்ங்ழ்ள்) உறுப்பினர்கள் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவது, தொழில் துறையில் கால் பதிக்க பெண்களிடையே உள்ள ஆர்வத்துக்கான அறிகுறி.
தொழில் துவங்க நினைக்கும் பெண்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி, இடர்பாடுகளை களைந்து, அவர்களை ஊக்குவிக்கும் பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது.
மாறிவரும் சமூக, பொருளாதாரச் சூழலில், தங்களுக்கேற்ற தொழில் துறையை தேர்ந்தெடுத்து செயல்படும் பெண்களுக்கு வெற்றி காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை!
By
No comments:
Post a Comment