Blogger Widgets

Total Page visits

Tuesday, May 28, 2013

திசை திருப்புகிறார்களோ?

ஐ.பி.எல். சூதாட்டத்தைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பதும், ஒவ்வொரு ஐ.பி.எல். அணி வீரர்களையும் கண்காணிக்க ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக ஊழல் தடுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் கூறியிருப்பதும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகத் தெரியவில்லை.

கிரிக்கெட் போட்டிகளை வைத்து நடைபெறும் சூதாட்டங்களைத் தடுக்க இப்போதுள்ள இந்திய தண்டனை சட்டத்தில் இடம் இல்லை. தற்போதைய சட்டத்தில் "மேட்ச் பிக்ஸிங்', "ஸ்பாட் பிக்ஸிங்' குற்றம் என வரையறுக்கப்படவில்லை. எனவே, கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுப்பதற்கு தனியாகச் சட்டம் தேவைப்படுகிறது என்று ஒரு சட்ட அமைச்சர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியானால், ஏன் கிரிக்கெட் வீரர்கள் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள்?

பணம் வைத்து சீட்டாடியதற்காக சாதாரண மக்கள் கைது செய்யப்படுவது எந்த சட்டத்தின் கீழ்? சூதாட்டம் என்பது சீட்டுக்கட்டா, லாட்டரியா, காட்டனா, "மேட்ச் பிக்ஸிங்', அல்லது "ஸ்பாட் பிக்ஸிங்கா' என்று சட்டத்தில் பாகுபாடு செய்யப்படாமல் இருக்கலாம். ஆனால் சூதாட்டம் என்பது இந்திய தண்டனைச் சட்டத்தில் கைது செய்து அபராதம் விதிக்கத் தக்க குற்றமாக உள்ளது.

அண்மையில் ஆற்காடு காவல்நிலையத்துக்கு உட்பட்ட ஒரு காவல் உதவி ஆய்வாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டதில், அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று, காட்டன் சூதாட்டத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதித்தார் என்பதுதான். சட்டத்தில் காட்டன் என்று இல்லை என்பதால் அது சூதாட்டம் இல்லை என்று ஆகிவிடுமா?

முன்னதாகவே பந்தயம் கட்டியவர்கள் தோற்றுப்போகுமாறு மோசடி செய்து ஆட்டம் ஆடுவது, பல மடங்கு பணம் கிடைக்கும் என ஏமாற்றி அடிமையாக்குவது என எந்த ஆட்டமாக இருந்தாலும் சூதாட்டம்தான்!

இருக்கும் சட்டத்தில் நடவடிக்கை எடுக்காமல், புதிய சட்ட வரைவு மசோதா தயாரித்து அடுத்த நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். மீண்டும் அவை அமளியில் முடியும், சட்டம் நிறைவேறாமல் இழுத்தடிக்கப்படும்.

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் மிகப்பெரிதாக பேசப்படும் விவகாரமாக மாறியிருக்கிறதே தவிர, இந்த சூதாட்டம் பல ஆண்டுகளாக நடந்துவருவது அனைவருக்கும் நன்றாகவே தெரிந்த ஒன்றுதான்.

ஐ.பி.எல். சூதாட்டப் பணம் ரூ.500 கோடியை ஒரு மும்பை ஏஜன்டிடமிருந்து இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுருட்டிக்கொண்டு வெளிநாடு போவதுதான் 2011-ஆம் ஆண்டு, நடிகர் அஜித் நடித்து வெளியான "மங்காத்தா' படக் கதை. இந்தப் படத்தில் இவ்வளவு தெளிவாகக் கதை அமைந்தது வெறும் கற்பனை அல்ல. மிகப்பெரும் அளவில் சூதாட்டம் நடக்கின்றது என்பதை அறிந்து, கேட்டு, அதை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட கதைதான் "மங்காத்தா'. இப்படி ஐ.பி.எல். விளையாட்டில் சூதாட்டம் நடப்பது சினிமா கதாசிரியருக்கே தெரிகிற விவகாரமாக இருக்கிறது என்றால், மும்பை, தில்லி போலீசுக்குத் தெரியவில்லை என்பது நம்பக்கூடியதாக இல்லை.

"ஸ்பாட் பிக்ஸிங்' போன்ற நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க கிரிக்கெட் வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் கூறுவதும் ஆச்சரியமாக இருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தொடர்ந்து ஊழல் புகார்களில் சிக்குவதாலும், இரு அமைச்சர்கள், பவன்குமார் பன்சால் மற்றும் அஸ்வினி குமார் பதவி விலகிய பிறகும் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று கடும் நெருக்கடி தரும் நிலையில் இந்த விவகாரம் இந்தியாவின் கவனம் முழுவதையும் வேறொன்றுக்கு திசை திருப்புவதற்காக கையில் எடுக்கப்பட்டதோ என்றுகூடச் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பாஜக அரசியல் தலைவர்களும் ஐ.பி.எல். அணியில் பங்குதாரர்களாக இருப்பதால், பதிலடியாக அவர்களுக்குப் புதிய நெருக்கடி தருவதற்காகவோ, அல்லது இந்தப் புகாரில் அதிக எண்ணிக்கையில் வீரர்கள் சிக்கியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கழற்றிவிட்டு, வேறொரு பெரும்புள்ளியை உள்ளே கொண்டுவருவதற்காகவோ இந்தப் பிரச்னை தற்போது கையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கும் இடமுண்டு.

கிரிக்கெட் விளையாட்டிலாவது பெரும்பணக்காரர்கள், கணினி மூலமாக பணப்பரிமாற்றம் செய்து பந்தயம் கட்டுகிறார்கள். ஆனால் அரசாங்கமே நடத்திய குதிரைப்பந்தயம், லாட்டரிச் சீட்டுக்கு அடிமையாக வாழ்க்கை இழந்த சாதாரண மக்கள் எத்தனைப் பேர்?

தமிழ்நாட்டில் லாட்டரிச் சீட்டு தடை செய்யப்பட்டபோதிலும் ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு சட்ட விரோதமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் அரசின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

பிற மாநில லாட்டரிகளை, அவர்கள் அனுமதியுடன் தமிழ்நாட்டிலேயே அச்சிட்டு, வரிசை எண் கட்டுப்பாடு இல்லாமல் அச்சடித்து விற்ற சம்பவங்களும் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் நடைபெறவில்லையா என்ன! ஒரு பரிசுக்கு இரண்டு பேர் உரிமை கோரும் சம்பவங்கள் வெளிப்படாமல் இருக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது தமிழக லாட்டரி உலகம் அறிந்ததுதானே!

சட்டம் போடுவது அல்ல முக்கியம். சட்டம் தனது கடமையை முறையாக, பாரபட்சம் இல்லாமல் செய்வதுதான் முக்கியம். சூதாட்டத்துக்கு உள்ளும் சூது உண்டு!

இந்த தகவல் தினமணி வலை  பக்கத்தில் இருந்து பகிரப்படுகிறது.  

No comments: