Blogger Widgets

Total Page visits

Thursday, May 30, 2013

90% கேன் குடிநீர் குடிக்க உகந்தது இல்லை

சந்தையில் விற்கப்படும் குடிநீர் கேன்களில், 90 சதவீத கேன் குடிநீர் குடிக்க உகந்ததில்லை எனஇந்திய நுகர்வோர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தச் சங்கத்தின் சார்பில் பாதுகாப்பான குடிநீர் குறித்த பயிற்சி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் ஆர். தேசிகன் பேசியதாவது:

இந்தியாவில் நுகர்வோர் தொடர்பான சட்டங்கள் போதுமான அளவு இருப்பினும் அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. சுகாதாரமான குடிநீர் தர வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசு தவறும்போது நாம் வழக்குத் தொடரலாம்.

நமது குடும்பத்தினரும், உறவினர்களும் சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டியது மகளிரின் கடமை. எந்தக் குடிநீராக இருந்தாலும் நன்கு காய்ச்சி, ஆற வைத்துப் பருக வேண்டும். சிறிய குடிநீர்ப் பாட்டில்களில் வாங்கும் நீரைப் பயன்படுத்தியதும், அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி எறிந்துவிட வேண்டும். அவற்றை மீண்டும் பயன்படுத்தினால் உடல் நலக் குறைபாடு வரும். தற்போது கேன் குடிநீர் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம். அதிர்ச்சிதரத்தக்க உண்மை என்னவெனில், 10 நிறுவனங்களின் கேன் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் 9 குடிநீர் மாதிரிகள் குடிக்க உகந்ததில்லை எனத் தெரியவந்துள்ளது என்றார்.

சென்னை, இந்திய தரக்கட்டுப்பாட்டு வாரிய (பிஐஎஸ்) அதிகாரி (தென் மண்டலம்) எச்.எல். உபேந்திரா பேசியதாவது:

தரத்தைப் பொருத்தவரை சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தரத்தை மக்கள் கேட்டுப் பெற வேண்டும். எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் தரம் குறித்து மக்களிடம் திருப்தியற்ற நிலையே காணப்படுகிறது.குடிநீரைப் பொருத்தவரை சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் என்பது அத்தியாவசியமானது.

மக்கள் தொகை அதிகரிக்கும்போது, நீரின் அளிப்பு குறைந்து விடுகிறது. மழை நீர் சேகரிப்பு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். நீர் நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு, போதிய குடிநீர் வழங்குவதில்லை என அரசைக் குறைகூறக் கூடாது. தனி மனித ஒழுக்கமும் அவசியம்.மாசுபட்ட நீரை சுத்திகரிப்பதைவிட, நீரை மாசுபடாமல் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். திறந்த வெளியில் மலம் கழிப்பதை மக்கள் நிறுத்த வேண்டும். முறையாக கழிப்பிடங்களைப் பயன்படுத்தாததால்தான் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது. குப்பைகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். குழந்தை கழித்த மலம்தானே என அலட்சியமாக வெளியில் வீசி எறியக் கூடாது. கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தினால், பாதுகாப்பான குடிநீர் என்பது பாதியளவுக்கு சாத்தியமாகிவிடும் என்றார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை, ஈரோடு, நீலகிரி, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் 1122 குடிநீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. இவற்றில் 44 சதவீத குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட டிடிஎஸ் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைகளில் கிடைக்கும் குடிநீர் மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றில் டிடிஎஸ் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோதும், பாக்டீரியாக்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

மாதிரி பரிசோதனைகளில் ஈடுபட்டவர்களுக்கும், பயிற்சியில் பங்கேற்ற 782 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்திய நுகர்வோர் சங்க இயக்குநர்கள் ஜி.சந்தானராஜன், ஸ்வாதி (நிதி), இணை இயக்குநர் எம்.ஆர். கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த தகவல் தினமணி வலை பக்கத்தில் இருந்து பக்கிரபடுகிறது. 

No comments: