Blogger Widgets

Total Page visits

Tuesday, May 21, 2013

வளாகத் தேர்வுக்கு தயாராகுங்கள்!

படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களைவிட தற்போதெல்லாம், இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே கேம்பஸ் இன்டர்வியூ எனப்படும் வளாகத் தேர்விலேயே பணி வாய்ப்பு பெறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐஐடி முதல் பொறியியல் கல்லூரிகள் வரை தற்போதெல்லாம் வளாகத் தேர்வு நடத்தும் கல்லூரிகளைத் தேடி மாணவர்கள் சேர்க்கை பெறுகின்றனர் என்பதில் இருந்தே வளாகத் தேர்வின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் பலவும் ஒன்றாக சேர்ந்து ஒரு கல்வி நிறுவனத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு வளாகத் தேர்வு நடத்தி தங்களுக்குத் தேவையான ஊழியர்களை பணிக்கு நியமிக்கின்றன. இல்லையெனில், ஒவ்வொரு நிறுவனமாக ஒவ்வொரு நாளில் வளாகத் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்கின்றன. ஒரு சில கல்வி நிறுவனங்களில் வளாகத் தேர்வுகளே திருவிழா போல நடத்தப்படுகின்றது.எதுவாக இருந்தாலும், தற்போதெல்லாம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வளாகத் தேர்வு என்பது ஒரு வரப்பிரசாதம் என்றேக் கூறலாம்.

சரி இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வளாகத் தேர்வில் நீங்கள் பெரிய நிறுவனத்தில் பணி நியமனம் பெற வேண்டும் என்றால் அதற்கு சில முறைகளைப் பின்பற்ற வேண்டும் அவற்றைப் பார்ப்போம்..

நீங்கள் தயாரிக்கும் சுயவிவரப் பட்டியலில் தெளிவாக விஷயங்களை பதிவு செய்யுங்கள். தவறான விவரங்களை பதிவு செய்வதை தவிர்ப்பது நலம். உங்களைப் பற்றி நீங்கள் முதலில் அறிந்து கொள்ளுங்கள். எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்காது. ஒரு சிலருக்கு தெரிந்த விஷயம் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். எனவே உங்களுக்கு என்னத் தெரியும், என்ன தெரியாது என்பதை படிப்பு ரீதியாக பிரித்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயத்தைப் பற்றி நுணுக்கமாக தெரிந்து கொள்ள முயலுங்கள். இது உங்களை அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவராக்கும். தெரியாத விஷயங்களை அப்படியே விட்டுவிடாமல் மேலோட்டமாகவாவது தெரிந்து கொள்ள முயலுங்கள்.

சில நேரங்களில் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தும் நிறுவன ஊழியர்கள், மாணவர்களே அவர்களைக் கேட்க விரும்பும் பாடத்தை தேர்வு செய்யச் சொல்கிறார்கள். எனவே, நீங்கள் ஏதேனும் ஒரு பாடத்தை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் தேர்வு செய்த பாடத்தில் இருந்து கேட்ட கேள்விக்கு உங்களால் பதில் அளிக்க முடியாமல் போனால் அது நிலைமையை மோசமாக்கிவிடும்.

நிறுவன அதிகாரி கேட்கும் கேள்விக்கு மிகச் சரியான பதிலை மட்டும்தான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை அவர் கேட்ட கேள்விக்கு மாற்றாக அல்லது சரியாக இருக்கும் என்று கருதும் பதிலையும் கூறலாம். ஒரு கேள்விக்கு பதிலே சொல்லாமல் இருப்பதை விட, ஒரு பதிலைச் சொல்லி சமாளிப்பது உங்களது சமாளிப்புத் திறனை அவர்களுக்கு எடுத்துக் காட்டும். பதில் நினைவில் இருந்தும், சட்டென்று கூற முடியவில்லை என்றால், சற்றும் யோசிக்காமல் நிறுவன அதிகாரியிடமே ஒரு குறிப்பைக் கேட்டு பெற்று அதன் பதிலை அளிக்கலாம். ஆனால் அடிக்கடி இவ்வாறு செய்யாதீர்கள்.

நேர்காணலுக்கு வரும் அதிகாரிகளை சந்தித்து முதலில் துவங்குவதற்கு என்று சில மிகச் சிறந்த வாக்கியங்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பதற்றத்தில் எதுவுமே வரவில்லை என்று வெளியே வந்து புலம்ப வேண்டாம்.
அதேப்போல, சரியாக பதிலளிக்காவிட்டாலும், நேர்காணல் முடிந்து வெளியேறும் போது நல்ல முறையில் விடைபெற்று வாருங்கள்.

பேசும் போது உங்களிடம் உள்ள தைரியம், திறமை, நம்பிக்கை அனைத்தும் வெளிப்படும் படியான வார்த்தைகளைப் பேசுங்கள். அதிகம் உணர்ச்சி வசப்படும் மாணவர்களை பெரிய நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துவதில்லை.

ஒரு நேர்காணலில் உங்களை கேள்வி கேட்கும் ஒரு அதிகாரியைத் தவிர மற்றவர்கள் உங்களது வாக்கியப்பிழைகள், பேசும் விதம், முகபாவணை ஆகியவற்றை கவனிப்பார்கள். எனவே, அனைத்திலும் ஒரு சிறந்த மாணவராக நீங்கள் திகழ வேண்டும். அதற்கு முறையாக பயிற்சி பெறுதல் நலம்.

நிமிர்ந்தபடி அமருங்கள். கண்களைப் பார்த்து பேசுங்கள். தைரியமாக கைகுலுக்குங்கள். திக்காமல் திணறாமல் பேசுங்கள். உங்களுக்கு வேலை நிச்சயம் என்று சொன்னவுடன் சந்தோஷத்தில் குதிக்காமல், என்ன வேலை, எந்த விமான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பனவற்றை கேட்டறிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் எவ்வாறு சிறந்த மாணவரை ஊழியராகப் பெற வேண்டும் என்று வளாகத் தேர்வு நடத்துகிறார்களோ, அதேப் போல, சிறந்த நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் வளாகத் தேர்வுக்கு வருகிறோம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்து பணி வாய்ப்பை பெறுங்கள்.


இந்த தகவல் தினமணி நாளிதழில் இருந்து பகிரப்படுகிறது. 

No comments: