Blogger Widgets

Total Page visits

Tuesday, May 21, 2013

பொறியியல் கல்லூரிகளில் லட்சம் சீட் நிரும்புமா ? மாணவர்களிடம் பொறியியல் கல்லூரி ஆர்வம் குறைவு.

பொறியியல் படிப்பில் சேர, இந்த ஆண்டு, 2.35 லட்சம் விண்ணப்பங்களை, மாணவர்கள் போட்டாபோட்டி வாங்கிய போதும், மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாததால், நேற்று வரை, 1.4 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு, அண்ணா பல்கலையால் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த, ஒரு சில தினங்கள் வரை, தபால் மூலம், 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தாலும், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, 2 லட்சம் இடங்களில், 1 லட்சம் இடங்கள் நிரம்புமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பி.இ., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த, 4ம் தேதி முதல், 59 மையங்களில் வினியோகிக்கப்பட்டு வந்தன. விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் மாலை, நிலவரப்படி, 2 லட்சத்து, 34 ஆயிரத்து, 230 விண்ணப்பங்கள், விற்பனையாகி இருந்தன. நேற்று, 1,000 விண்ணப்பங்கள் வரை, விற்பனை ஆனதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, மொத்த விண்ணப்பங்கள் விற்பனை எண்ணிக்கை, 2.35 லட்சமாக உயர்ந்து உள்ளது.எந்த ஆண்டும், இந்த அளவிற்கு, விண்ணப்பங்கள் விற்பனை ஆகவில்லை. 2008ல், 1.25 லட்சமாக இருந்த விண்ணப்ப விற்பனை எண்ணிக்கை, கடந்த ஆண்டு, 1.8 லட்சமாக உயர்ந்தது. இந்த ஆண்டு, 2.35 லட்சமாக உயர்ந்து விட்டது. கடந்த ஆண்டு, 1.8 லட்சம் இடங்கள், கலந்தாய்வுக்கு வந்தன. பல சுற்று கலந்தாய்வுக்குப் பின், 1.10 லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பின; 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள், கடைசி வரை நிரம்பவில்லை.

அதிகரிக்கும் "ஆப்சென்ட்' :

நடப்பு ஆண்டில், அதிக மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கினாலும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள் எண்ணிக்கை, அதிகபட்சமாக 1.6 லட்சமாக உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கலந்தாய்வு துவங்கியதும், 1.6 லட்சம் பேரில், 30 ஆயிரத்தில் இருந்து, 40 ஆயிரம் பேர் வரை, "ஆப்சென்ட்' ஆகலாம். ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும், "ஆப்சென்ட்' ஆகும் மாணவர்கள் எண்ணிக்கை, 30 ஆயிரத்தைத்தாண்டுகிறது.

1 லட்சம் இடங்கள் நிரம்பாது? :

கடந்த ஆண்டு, 26.54 சதவீத மாணவர்கள், கலந்தாய்வுக்கு வரவில்லை. அதாவது, 37 ஆயிரத்து, 633 மாணவர்கள், கலந்தாய்வுக்கு வரவில்லை. எனவே, இந்த ஆண்டு, 1.6 லட்சம் மாணவர்களில், 40 ஆயிரம் பேர், கலந்தாய்வுக்கு வர மாட்டார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மீதியுள்ள 1.2 லட்சம் இடங்கள் பூர்த்தியாக வாய்ப்பு உள்ளது. எப்படி பார்த்தாலும், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, 2 லட்சம் இடங்களில், 80 ஆயிரம் முதல், அதிகபட்சமாக 1 லட்சம் இடங்கள் வரை, நிரம்பாத நிலை ஏற்படலாம்.

காரணம் என்ன:

பொறியியல் படிப்பிற்கு, திடீரென இந்த அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:பி.இ., படித்தால், "வேஸ்ட்' என, ஆரம்பத்திலேயே நான் கூறினேன். அது, தற்போது சரி என்பது உறுதியாகி உள்ளது. 2.35 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருந்தும், கடந்த சனிக்கிழமை வரை, 1 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தியாகி வந்துள்ளன. 19, 20 மற்றும் தபால் மூலம் வரும் விண்ணப்பங்கள் ஆகியவற்றை சேர்த்தாலும், பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 1.5 லட்சம் முதல், 1.6 லட்சம் வரை தான் இருக்கும்.
 
இவர்கள் அனைவரும், கலந்தாய்வுக்கு வருவராஎன, கூற முடியாது. "ஆப்சென்ட்' கணிசமாக இருக்கும். பொறியியல் படிப்பின் மீது, மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்ததற்கு, பொறியியல் கல்வி தரமாக இல்லை என்பதும், அதனால், படிக்கும் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் உத்தரவாதம் இல்லாத நிலை இருப்பதும் காரணம்.

கலை, அறிவியல் படிப்பு மீது கவனம்:

பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை, புற்றீசல் போல் அதிகரித்து விட்டன. அதே நேரத்தில், பொறியியல் கல்லூரிகள், பல்வேறு கட்டணச் சலுகை விளம்பரங்களை வெளியிட்டு, மாணவர்களை இழுக்க முயற்சிப்பதில் இருந்தே, அதன் நிலையை உணரலாம்.

தரமான கல்வியும், படிக்கும் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கின்ற நிலை உருவானால் தான், பொறியியல் படிப்பு உருப்படும்.இந்த ஆண்டு, மாணவர்களின் கவனம், கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் திரும்பி உள்ளது  என்றார்

இந்த தகவல் தினமலர் நாளிதழில் இருந்து பகிரபடுகிறது.

No comments: