Blogger Widgets

Total Page visits

Thursday, July 11, 2013

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்!

கல்லூரி சேர்க்கை காலத்தில், மாணவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சினை, கல்லூரிக்கு முக்கியத்துவம் தருவதா? அல்லது குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் தருவதா? என்பதுதான்.

சிறிய வயதில், எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தகைய முக்கியமான மற்றும் நெருக்கடியான முடிவுகளை எடுக்கும் இக்கட்டான நிலைக்கு ஒரு மாணவர் தள்ளப்படுகிறார். எனவே, இதுதொடர்பான ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

நற்பெயரின் முக்கியத்துவம்

பொதுவாக புகழ்பெற்ற கல்லூரிகளை நோக்கி அனைவருமே செல்வதால், அதில் இடம்பெறுவதற்கான போட்டி, எதிர்பாராத அளவில் மிகவும் கடுமையாக உள்ளது. பிடித்த கல்லூரியில், பிடித்த பாடப்பிரிவில் சேர்வதென்பது, இன்றைய நிலையில் அதிர்ஷ்டமான விஷயம் என்ற அளவில் ஆகிவிட்டது.

இன்றைக்கு பிரபலமான கல்வி நிறுவனங்களாக திகழ்பவை, ஒரே நாளில் அந்த நிலையை அடைந்தவை அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே, தங்களின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் தரம், 100% வேலை வாய்ப்புகளை உறுதிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளால் அந்த நிறுவனங்கள் இந்த நிலையை அடைந்துள்ளன.

எனவே, புகழ்பெற்ற உயர்தர கல்வி நிறுவனத்தை, ஒரு மாணவர் தேர்வு செய்கையில், அவர் பட்டப் படிப்பை முடித்து வெளிவருகையில், பலவிதமான தகுதிகளோடும், உத்தரவாதங்களோடும் வெளிவருகிறார். உதாரணமாக, பொறியியல் படிக்க விரும்பும் ஒருவர், ஐஐடி அல்லது என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்கிறார் என்றால், அவர், என்ன மாதிரியான சிறப்பான பொறியியல் படிப்பு அனுபவத்தைப் பெறுவார் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேநேரம், சாதாரண, ஒரு பெயர் தெரியாத பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு கிடைக்கும் வசதிகள் எப்படியிருக்கும்? என்பதையும் நினைத்துப் பார்க்கலாம்.

புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு வெளியே சிறந்த கல்வி

ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்கள் தவிர, சிறந்த மற்றும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு, பல நவீன கல்வி உபகரணங்களைக் கொண்ட பல பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் உள்ளன. ஆனால், பல காரணங்களால், அதுபோன்ற நிறுவனங்கள் வெகு மக்களால் அந்தளவு அறியப்படுவதில்லை.

பல கல்வி நிறுவனங்கள், பலவிதமான படிப்புகளை, மாலைநேரக் கல்லூரி என்ற முறையில் வழங்குவதின் மூலமாக, தங்களின் திறனை அதிகப்படுத்திக் கொள்கின்றன. சிறிது முயன்றால், இதுபோன்ற சிறந்த கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். அதுபோன்ற கல்வி நிறுவனங்களில், சமீபத்தில் படித்து முடித்த சில மாணவர்களிடம் விசாரித்து, அக்கல்வி நிறுவனங்களைப் பற்றிய உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Checklist -ல் வழங்கப்பட்டுள்ள benchmarks -ஐ பார்த்து, ஒரு குறிப்பிட்ட கல்லூரி, நமக்கு பொருத்தமானதா, நமக்கு தேவையானது கிடைக்குமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பாடத்தின் மீதான விருப்பம்...

ரிமோட் கண்ட்ரோலை கையில் வைத்து தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கையில், உங்களுக்கு பிடிக்காத சேனலை கடந்து செல்கையில், எவ்வளவு விரைவாக நீங்கள் ரிமோட்டை இயக்குகிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு விஷயத்தின் மீது, நமது ஆர்வம், திறன் மற்றும் ஆற்றல் எந்தளவு இருக்கிறதோ, அதை வைத்தே அந்த புதிய விஷயத்தை நாம் கற்றுக்கொள்ள நினைப்போம் என்பதைப் புரிந்துகொள்ள அதிக சிரமப்பட வேண்டியதில்லை.

சிறந்த கல்லூரியில், பிடித்தமான பாடம் கிடைத்துவிட்டால், நம் சந்தோஷத்திற்கு சொல்லவே வேண்டியதில்லை. ஆனால், மதிப்பெண்கள் குறைவாக இருந்து, குறிப்பிட்ட கல்லூரி கிடைக்காமல் போகும்போது, நாம் மாற்று வாய்ப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒரு சுமாரான பொறியியல் கல்லூரியில் பணம் கொடுத்து, பொறியியல் படிப்பை மேற்கொள்வது உங்களுக்கு ஒத்துவராது எனில், அதற்காக நேரத்தை வீணாக்க வேண்டாம். அதற்கு பதிலாக, தொடர்புடைய இதர துறைகளின் மீது கவனம் செலுத்தலாம். காலணி தொழில்நுட்பம், கணிதம் மற்றும் புள்ளியில் போன்ற துறைகளில் உங்களின் கவனத்தை செலுத்தலாம். இதன்மூலம், உங்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும்.

சில சமயங்களில், புதிய விஷயங்களை முயற்சித்துப் பார்க்க நமக்கு பயமாக இருக்கலாம். ஆனால், மாறிவரும் பொருளாதார சூழல் வேறுமாதிரியாக இருக்கிறது. எனவே, பழைய பாரம்பரியமான படிப்பு தொடர்பாகவே யோசித்துக் கொண்டிருப்பதை, இன்னும் புத்திசாலித்தனம் என்று கருத முடியாது.

சற்று நேரம் எடுத்துக்கொண்டு, தீவிரமாக யோசிக்கவும். புதிய விஷயங்களில், உங்களின் ஆர்வத்தை தூண்டுவதாக எது உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதில் உங்களின் திறமையை செலவழித்து முன்னேற முயற்சிக்க வேண்டும்.

பணி வாய்ப்பு வித்தியாசங்கள்

புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, நல்ல கற்பித்தல் வாய்ப்பினைத் தவிர்த்து, வேறு பல நன்மைகளும் உண்டு. அக்கல்வி நிறுவனங்களின் பழைய மாணவர் நெட்வொர்க் மூலமாக, பல சிறப்பான தொடர்புகள் கிடைப்பதுடன், சமூக ஒருங்கிணைப்பும் ஏற்படுகிறது.

புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்கையில், உங்களுக்கு இயல்பாகவே ஒரு முக்கியத்துவம் கிடைக்கிறது. பணியின் ஆரம்ப நாட்களில் இந்த லேபிள் நிச்சயம் உதவும். ஆனால், பின்னாளில் நமது திறமைதான் நம்மை உயர்த்தும் என்பதையும் யாரும் மறக்கக்கூடாது.

என்னதான் ஆரம்ப நாட்களில், பணிபுரியும் நிறுவனங்களில், படித்த கல்வி நிறுவனத்தின் புகழுக்கு முக்கியத்துவம் கிடைத்தாலும், நாட்கள் செல்ல செல்ல ஒருவர் தன்னை எவ்வாறு திறமையின் மூலம் நிரூபிக்கிறார் என்பதைப் பொறுத்தே அவருக்கான மரியாதையும், முக்கியத்துவமும் கிடைக்கிறது.

கடுமையாக உழைத்து, நூலகத்தில் அதிகநேரம் செலவிட்டு, ஆராய்ச்சித் திறனை வளர்த்துக்கொண்டு, பலவிதமான திறமைகளை மேம்படுத்திக் கொள்பவர்களே, தாங்கள் என்ன கல்லூரியில் படிக்கிறோம் என்ற தடையை தாண்டி, வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக ஜொலிப்பார்கள்.

எனவே, ஒரு மாணவர், தான் கல்லூரியில் படிக்கும் நாட்களை விளையாட்டாக கருதாமல், அக்கறையுடன் படித்து, இன்டர்ன்ஷிப், கோடைகால பணிகள் ஆகியவற்றை முயற்சித்து, பல்வேறான மென் திறன்களை வளர்த்துக்கொண்டு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் பணிக்கான நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெற முடியும்.

ஒருவரின் வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றியில், அவர் படிக்கும் கல்லூரியின் பெயருக்கு சிறு பங்குதான். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ஒரு மாணவர் எப்படி பயன்படுத்துகிறாரோ, அதைப் பொறுத்தே அவரின் முன்னேற்றமும். எப்போதுமே, வெறும் பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு ஒப்பேற்ற முடியாது என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

ஒரு நல்ல கல்லூரிக்கான சில அடையாளங்கள்

* அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள்
* ரெகுலர் வகுப்புகள்
* கட்டாய வருகைப்பதிவு
* சிறந்த கற்பித்தல் சூழல்
* நடப்பு நிலையிலான பாடத்திட்டம்
* ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகளில் ஆசிரியர்களின் ஈடுபாடு
* தொழில்துறை ஆலோசனையில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருத்தல்
*தொடர்புடைய மாநாடுகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கிடைப்பது.
* பெரியளவிலான இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்
* நூலகம் மற்றும் ஆய்வகங்களில் அனைத்து வசதிகளும் நிரம்பியிருத்தல்
* பல்வேறு விதமான திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள்.

No comments: