Blogger Widgets

Total Page visits

Monday, July 1, 2013

மாணவர்களைக் குழப்பும் பட்டியல்

தமிழகத்தில் மொத்தம் 565 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எது சிறந்த கல்லூரி என மாணவர்கள் தேர்ந்தெடுத்து, தாங்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப முடிவு செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டதைத் தொடர்ந்து தேவை அதிகரித்தது. இதனால், அதிகமானோர் பொறியியல் படிக்கத் துவங்கினர்.

இப் பொறியியல் கல்லூரிகளின் கட்டமைப்பை ஆராய்ந்து அறிக்கை தரவேண்டிய அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் உள்ளவர்கள் தங்களிடம் அளிக்கப்படும் ஆவணங்கள், தகவல்களைக் கொண்டும் சில வேளைகளில் கள ஆய்வு செய்தும் கல்லூரி துவங்க அனுமதி வழங்குகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஆலை முதலாளிகள், பத்திரிகை அதிபர்கள், மடாதிபதிகள், அரசியல்வாதிகள் என எல்லோரும் கல்லூரிகளை நடத்துகின்றனர்.

ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் என்ற பெயரில் வரம்பின்றி பணம் வசூலிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் அரசே கட்டணம் நிர்ணயித்தது. ஆனாலும் பல்வேறு கல்லூரிகளில் பல்வேறுவிதமான கட்டணங்கள் இப்போதும் வசூலிக்கப்படுகின்றன. பொறியியல் கல்லூரிகளில் சேரக் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்கள் இல்லாத, சேராத பல்வேறு கல்லூரிகளின் நெருக்குதல் காரணமாக "பிளஸ்-2' தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம் என்று விதி தளர்த்தப்பட்டது. அப்படியும் பல பொறியியல் கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்களைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் உள்ள பிரிவுகளில், மாணவர்கள் சேர்ப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தி ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவிட்டது. இதனால், புதிய கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக் குறைந்தது. இச் சூழ்நிலையில் பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலமாக, கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் சிறந்த கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தேர்ச்சி விகிதப் பட்டியலைப் பார்த்தால் மாணவர்கள் மட்டுமல்ல - பேராசிரியர்களும்கூட புரிந்து கொள்ள முடியாது.

உதாரணமாக, தேர்ச்சி விகிதம் என்றால் மொத்தமாக அனைத்துப் பருவத் தேர்வுகளையும் எழுதியவர்கள், அதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றிருந்தால் 560 கல்லூரிகளையும் வரிசைப்படுத்தியிருக்க முடியும். ஆனால், பல்கலைக்கழகத்தார் ஒவ்வொரு பருவ வாரியாகவும், துறை வாரியாகவும் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதத்தைப் பறைசாற்றியுள்ளனர்.

இதனால், ஒவ்வொரு கல்லூரியின் தேர்ச்சி விகிதத்தையும் பார்த்து விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கே இணையதளத்தில் பலமணி நேரம் செலவிட்டாக வேண்டிய நிலை உள்ளது. பல்கலைக்கழகம் இவ்வாறு தேர்ச்சி விகிதத்தை வெளியிட்டது, "யாரோ சிலரை' திருப்திப்படுத்துவதற்காகத்தான் என்கின்றனர் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள்.

அறியாமை எனும் இருளை நீக்குவதற்காக கற்கும் மாணவர்கள், தங்களது மேல்படிப்பை சிறந்த கல்லூரியில் தொடர வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. அவர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்ட வேண்டியது பல்கலைக் கழகத்தின் கடமை.

கல்லூரிகள் தவறு செய்தால் பல்கலைக்கழகத்திடம் முறையிடலாம்; ஆனால் பல்கலைக்கழகமே தவறு செய்தால் யாரிடம் போய் முறையிடுவது?

No comments: