Blogger Widgets

Total Page visits

Wednesday, July 17, 2013

நேர்காணலில் என்ன செய்யக்கூடாது?

வேலை கிடைப்பதற்கு இன்று இருக்கும் போட்டிகள் நிறைந்த சூழலில் ஒவ்வொரு நிலையையும் மிகவும் கடினத்துடனேயே கடக்க வேண்டியிருக்கிறது. அதுவும் எழுத்துத் தேர்வுகளை எதிர்கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக விடைகளை தருவதுடன், நெகடிவ் மதிப்பெண் அபாயத்தையும் வெற்றிகரமாகக் கடப்பது போன்ற சவால்கள் அதிகம்தான்.

இவ்வாறான கடினமான சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று அடுத்த நிலையான நேர்காணலை எதிர் கொள்ளும் போது அறிந்தோ அறியாமலோ நாம் சில தவறுகளை செய்ய நேர்ந்தால் அது நமது பணிவாய்ப்பை பாதித்துவிடும்.  இப்படிப்பட்ட நிலையில் எந்த  முக்கிய தவறுகளை செய்யக்கூடாது என்பதை தருவதே இந்த படைப்பின் நோக்கம்.

போதுமான தயாரிப்பின்மை

பணி வாய்ப்பாளர்களால் பெரிதும் வெறுக்கப்படும் தவறு இதுதான்.  ஒவ்வொரு பணி வாய்ப்பாளரும் தங்களிடம் நேர்காணலை எதிர்கொண்டு வேலை தேடி வரும் ஒவ்வொருவரும் போதுமான தயாரிப்புகளுடன் தான் வருகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவே முனைகிறார்கள்.  அதனால்  வேலை தேடுபவர்கள்  இதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர வேண்டும்.  உங்கள் பணியின் தன்மை, பணி வாய்ப்பளர் பற்றிய விபரங்கள், எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்கான தயாரிப்புகள் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.

தாமதமாக செல்லுதல்

ஒரு நேர்காணலுக்கு தாமதமாக வருவது பணி வாய்ப்பாளரால் எதிர்மறையான அம்சமாகவே பார்க்கப்படும்.  நமது தாமதத்திற்கு என்னதான் காரணங்களை கூறி நியாயப்படுத்த நாம் முயன்றாலும், அது நமது பணி வாய்ப்பை பாதிக்கவே பாதிக்கும்.  எனவே நேர்காணலுக்கு சரியான நேரத்திற்கு சென்றுவிடுவதை உத்திரவாதம் செய்ய வேண்டும்.

பொருத்தமற்ற உடை அணிதல்

ஒரு நேர்காணல் அறைக்குள் நாம் நுழையும் போது நம்மைப்பற்றிய முதல் பதிவை நமது ஆடைகளே செய்கின்றன என்பதை கவனத்தில் வைக்கவும்.  இதன் பின்னரே நமது திறமை, தகவல் பரிமாற்றத்திறன் போன்ற இதர விஷயங்கள் உள்ளன.  அதனால் உங்களுக்கு மனநிறைவைத் தரும் பொருத்தமான உடைகளை மட்டுமே அணியவும்.

உங்கள் ஊதியத்தைப் பற்றி பேசத் தயங்காதீர்கள்

இன்றைய வேலை தேடுபவர்களில் பலரும் தங்கள் ஊதியம் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள்.  அதே போல் இது தொடர்பான கேள்விகள் உங்களிடம் எழுப்பப் பட்டால் அவற்றுக்கு எப்படி பதில் சொல்வது என்பதிலும் போதுமான தயாரிப்புகள் கட்டாயம் தேவைப்படும்.   நாம் பதில் தேடும் தொழில் அரங்கில் நடப்பில் உள்ள ஊதிய விகிதங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடியான பதில்களைத் தருவது நல்ல பயன் தரும்.

No comments: