தமிழகத்தில் விஸ்வரூபம் படத்துக்கு எழுந்த பிரச்னை சுமூக முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து இப்படம் தொடர்பான வழக்குகளும் வாபஸ் ஆன நிலையில் படம் பிப்-7ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கமலின் பிரம்மாண்ட தயாரிப்பில், அவரே இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த 25ம் தேதியே தமிழகம் மற்றும் புதுவை தவிர்த்து பிற மாநிலங்களில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் முஸ்லிம் அமைப்புகள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு விஸ்வரூபம் படத்தை தடை செய்தது.
தடை நீங்கி மீண்டும் தடை: விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கமல் வழக்கு தொடர்ந்தார். முதலில் விசாரித்த தனிநபர் நீதிபதி வெங்கட்ராமன் படத்துக்கான தடையை நீக்கி உத்தரவிட்டார். இருந்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததில் மீண்டும் இப்படத்திற்கு தடை விதித்தது சென்னை ஐகோர்ட்.
கமல் உருக்கம்: இதற்கிடையே இப்படத்தால் தமக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்தும், இப்படம் வெளியாகாவிட்டால் தான் இம்மாநிலத்தை விட்டோ அல்லது இந்த நாட்டை விட்டோ வெளியேறும் சூழல் உருவாகும் என்று பரபரப்பு பேட்டி கொடுத்தார் கமல். இதனால் படத்தின் பிரச்னையும் விஸ்வரூபமாக இந்தியா முழுக்க பேசப்பட்டது. கூடவே தமிழக அரசு மீது பிற கட்சிகள் குற்றம் சாட்ட ஆரம்பித்தனர்.
தடை ஏன்..? முதல்வர் விளக்கம் : நிலைமை வேறுவிதமாக சென்று கொண்டு இருப்பதை உணர்ந்த முதல்வர் இப்படத்திற்கு ஏன் தடை விதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் கொடுத்தார். மேலும் கமல் மீது தனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது என்றும் கூறினார். அதேசமயம் இந்தவிஷயத்தில் கமல், முஸ்லிம் அமைப்புடன் சேர்ந்து சுமூகமாக பிரச்னையை தீர்த்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.
சமரசம் : முதல்வரின் இந்த பேச்சை தொடர்ந்து கமல் தரப்பினரும், முஸ்லிம் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தனர். அதன்படி கடந்த 2ம் தேதி உள்துறை செயலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் சர்ச்சைக்குரிய சில காட்சிகளையும், சில வசனங்களில் ஒலியை நீக்கவும் கமல் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து முஸ்லிம் அமைப்பினரும் தங்களது போராட்டத்தை இத்தோடு முடித்து கொள்வதாகவும், தங்களது வழக்குகளையும் வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தனர். அதேப்போல் கமலும் தனது வழக்குகளை வாபஸ் பெறுவாக அறிவித்தார். இதனையடுத்து விஸ்வரூபம் படத்தின் பிரச்னைகள் தீர்ந்ததால் சென்னை ஐகோர்ட்டும் இப்படம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற சம்மதம் தெரிவித்தது. அதன்படி இன்று(04.02.13) அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது.
பிப்., 7ம் தேதி ரிலீஸ் : விஸ்வரூபம் படம் தொடர்பாக எழுந்த பிரச்னைகளும், வழக்குகளும் முடிவுக்கு வந்துள்ளதால் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் கமல் தீவிரமாக இறங்கியுள்ளார். குறிப்பாக சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார். இந்த பணிகள் அனைத்து இரு தினங்களில் முடிய இருப்பதால் படத்தை பிப்-7ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக கமல் அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தை ரிலீஸ் செய்ய தனக்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், ரசிகர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
கூடுதல் திரையரங்குகளில் ரிலீஸ் : விஸ்வரூபம் படம் தமிழகத்தில் 524 தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகள், இப்படத்தில் என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதனால் அனைவரும் இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று எண்ணியுள்ளனர். இதனால் ஏற்கனவே ரிலீஸாக இருந்த தியேட்டர்களுடன் கூடுதல் தியேட்டர்களிலும் விஸ்வரூபம் படம் திரையிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
தினமலர் நாளிதழில் 04.02.13 அன்று பிரசுரிக்க பட்ட தகவல்
No comments:
Post a Comment