Blogger Widgets

Total Page visits

Tuesday, February 19, 2013

நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’

‘ஆசு’ என்றால் அய்யம், குற்றம் என்ற பொருள்படும். ‘இரியன்’ என்ற சொல்லுக்கு அகற்றுதல், நீக்குதல் என்ற பொருள். மாணவர்களின் மனதில் தோன்றும் சந்தேகங்களுக்கு விடையளித்து, அறியாமையைப் போக்குகின்றவர் “ஆசிரியர்” ஆவார். “மாணவன்” என்ற சொல்லுக்கு மாண்பு பொருந்தியவன், மாட்சிமை அமைந்தவன் என்ற அர்த்தம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் என்று சொன்னாலே, அழுது அடம் பிடிக்கக்கூடாது. விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் பள்ளிக்குச் செல்லுகின்ற சூழ்நிலையை, அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உருவாக்கித் தர வேண்டும். பள்ளிக் குழந்தைகளை, ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை வீட்டுப் பாடங்களுக்கு (Homework) முக்கியத்துவம் கொடுத்து, பள்ளிக்கூடங்களின் மேல் வெறுப்பை உண்டு பண்ணி விடுவார்கள். இதற்கு மாறாக, ஒரு சில பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் இருக்காது, காலாண்டு, அரையாண்டுத் தேர்வு என்ற பயமில்லாமல் அவ்வப்போது பாடங்களைப் படித்தவுடன் சைக்கிள் டெஸ்ட்(CycleTest) என்ற பெயரில் தேர்வு (Examination) தேர்ச்சி (Result) பயத்தை, மாணவர்கள் மனதில் இருந்து முற்றிலும் அகற்றி விடுவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி புகட்ட, கல்விக்கூடங்களைத் தேடி அலையும் போது, இம்மாதிரிப் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு சிறந்த பள்ளிகூடங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மாணவர்களுக்கு வழிகாட்டும் பள்ளிக்கூடங்களையும், ஆசிரியர்களையும் பற்றிப் படித்துக்கொண்டிருக்கும் வேளையில், எல்லோருக்கும் பொதுவாகப் பொருந்தும்படி, பாவேந்தர் பாரதிதாசன் (கனகசுப்புரத்தினம்) அவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காகப் பாடிய ஒரு பாடலைச் சற்று நினைவு கூர்வோம். “கல்வியில்லா வீடு இருண்ட வீடென்க” என்னும் பொன்வரிகளைக் குழந்தைகளிடையே உரைத்தவர்,

“தலைவாரிப் பூச்சூடி உன்னைப்
பாடசாலைக்குப் போ! என்று
சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் நீ!
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்தினாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்?…கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்
மலைவாழையல்லவோ கல்வி!… நீ
வாயார உண்ணுவாய்! போ என் புதல்வி”

பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடத்தில் பரிவுடனும் பாசத்துடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும், கல்வி புகட்டும்போது குழந்தைகளுக்கு வெறுப்பும் சலிப்பும் தட்டாமல், அவர்களுக்கு இனிப்பைப் போல பாடங்களைக் கட்டாயப் படுத்தாமல் ஊட்ட வேண்டும் என்பதைப் பாவேந்தர் எவ்வளவு அழகாகச் சொல்கிறார். ஒவ்வொரு அன்னையும் மனனம் செய்ய வேண்டிய பாடல் இது.
இன்றைக்குக் கணிதம், பெளதிகம், விஞ்ஞானம் போன்ற மூன்று துறைகளில், குறுகிய காலத்தில் படித்து அதிக மதிப்பெண் பெற்றால் போதும், என்ற நிலையில், குறிப்பிட பாடங்களில் மாணவர்களின் அறிவுத்திறனை அளவிட முடியாத நிலை ஏற்படுவதால் திறமையான மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

 படிக்கின்ற பாடங்களில் ஈடுபாடு இல்லாமலே, மதிப்பெண்களை அதிக அளவில் பெற்றால்தான், பொறியியல், மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலே இடம் பெற முடியும் என்பதால், மாணவனின் அறிவுத்திறனை முழுவதுமாக எடை போட முடியாமல், மதிப்பெண்ணுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் ஆசிரியர் தள்ளப்படுகிறார்.

இவை தவிர ‘இது படிச்சா வேலை கிடைக்கும், அது படிச்சா உருப்படாம போகலாம்’ என்று அண்டை வீட்டுக்காரர்களும், அலுவலக நண்பர்களும் தவறான அறிவுரைகளை அளிப்பதாலும், மாணவர்களின் மனநிலை பாதிப்பதோடு, திட்டமிட்டு விருப்பப் படிப்பைத் தொடர முடியாமல் சங்கடத்துக்குள்ளாகின்றபோது, ஆசிரியர்களின் ஆறுதல் வார்த்தைகளெல்லாம் அறிவுரைகளாக மாணவர்களுக்கு ஒரு ஊக்க மருந்தாக அமைகிறது.

மாணவனுக்கு, எந்தத் துறையில் அதிக ஈடுபாடு உள்ளது என்பதை அவன் கல்வி கற்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரால் மட்டுமே எளிதில் அடையாளம் காணமுடியும். மேலும், மாணவனுக்கு அந்தத் துறையில் ஈடுபாடு வரும்படி செய்து விட்டால், அதில் தனிப்பட்ட முறையில் சிறந்து விளங்கி, உலக சாதனை நிகழ்த்த முடியும்/
இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கல்வி கற்க விருப்பம் இருக்கின்றது என்பதை அவர்கள் மதிப்பெண் பெறுகிற விகிதாச்சாரத்தை (percentage of marks) வைத்து ஊகிக்க முடிந்தாலும், மேன்மேலும் திறம்பட கல்வியில் அதிகக் கவனம் செலுத்த முடியாமல், தொலைக்காட்சி, விளையாட்டு மோகம், தீங்கு பயக்கும் திரைப்படம், பரபரப்பான அரசியல் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கவனம் சிதறாமல் இருப்பதற்கும் ஆசிரியர்கள் அதிக அளவில் தனது உழைப்பைச் செலவிடுவது அவர்களுக்கு ஒரு சவாலாக அமைந்து விடுகிறது.

கல்வி கற்பது யாவருக்கும் கடினம், எல்லோரும் எளிதாகக் கல்வி கற்க முடியுமா? படிப்பதற்கென்று தனி வழி ஏதாவது உள்ளதா?… என்ற கேள்விக்குப் பதில் இருந்தால் இந்த நாட்டில் படிக்காதவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து விடும். உலக அளவில் கணிதத்தில் ஜியாமெட்ரியில் புதிய விதிகளைக் கண்டுபிடித்து மிகச் சிறந்து விளங்கிய ட்டாலமி அறிஞரிடம், அந்நாட்டு அரசர் அவரிடம் “நான் உங்களைப் போல் கணிதத்தில் அறிஞராக வேண்டும், இதெற்கென எளிய வழி?……ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள், குறுகிய காலத்தில் நானும் உங்களைப்போல் அறிஞர் என்ற பட்டத்தைப் பெற முடியும்” என்று கேட்டார்.

அதற்கு ட்டாலமி அவர்கள் “அரசரே| நீங்கள் ஆட்சி புரிகின்ற இந்த நாட்டில், எங்கு சென்றாலும் பொதுமக்கள் பயணம் செய்வதற்குக் கரடு முரடான, குண்டும் குழியுமான சாலைகள் உள்ளன, ஆனல் உங்களைப் போன்ற பிரபுக்களுக்குச் சொகுசாகப் பயணம் செய்வதெற்கென்று தனிவழிச் சாலையும் உள்ளன. ஆனால், “நீங்கள் நினைக்கிறபடி, கணிதம் போன்ற இதர கல்வியைக் கற்பதற்கு, எல்லோருமே ஒரே சாலை வழியாகச் சென்றுதான் கற்க முடியும், தனியான எளிய வழி என்று ஒன்று கிடையாது” என்று பதிலளித்தாராம்.

பள்ளிப் படிப்பை முடிக்கின்ற தருவாயில், ஒவ்வொரு மாணவனுக்கும் கடைசி மூன்று வருடங்கள் என்ற பெரிய கட்டத்தைத் தாண்டி, பிளஸ் 2 முடித்து மேல்படிப்புக்கு முடிவு செய்யும் திறனையும், சக்தியையும் ஆசிரியர்கள் கொடுக்க வேண்டிய முக்கியமான காலக்கட்டம் என்று சொல்லலாம். கல்வி கற்கும் பருவத்தில், ஆசிரியர் கற்றுக் கொடுத்த நல்லொழுக்கம், நற்பண்பு நன்னடத்தை எல்லாம் வாழ்க்கைப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்ய துணை நிற்கிறது. மாணவர்கள் தங்களது லட்சியத்தை அடையவும், குறிக்கோளை எட்டவும், ஆசிரியர்கள் தொடர்ந்து ஏணிப்படிகளாகச் செயல் படுகிறார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

பள்ளிப் படிப்பின் கடைசி இரண்டு வருடங்கள், மாணவர்களுக்கு மட்டுமல்லாது, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தருணத்தில்தான் ஆசிரியர்களைப் போலவே பெற்றோர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அதிகம் தேவைப்படுகிறது என்றே சொல்லலாம்.

10 ஆம் வகுப்பு வரை எதையுமே கண்டு கொள்ளாமல் இருந்த சில பெற்றோர்கள் “டிவி, இணையதளம், சினிமான்னு வெட்டித்தனமாப் பொழுதக் கழிச்சிகிட்டு இருந்த உன் அட்டூழியங்களெல்லாம் இப்ப அடக்கிட்டேன். இப்ப பிளஸ் 2 வந்தாச்சு, உன்னோட ஆட்டம் பாட்டமெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு குரூப் ஸ்டடின்னு பொய் சொல்லாம ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே படிக்கிற வழியப் பாரு” என்று தங்கள் பிள்ளைகளை மிரட்டி, கடைசி இரண்டு வருடங்கள் தங்கள் செளகர்யங்களையெல்லாம் என் பையனுக்காக நான் தியாகம் செய்து விட்டேன் என்று மார் தட்டிக் கொண்டால் மட்டும் தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற்றுச் சாதனை புரிந்து விட மாட்டார்கள். பள்ளிப் படிப்பின் போது, தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு வருட கடின உழைப்புக்கு, இருவருமே உறுதுணையாக இருந்து பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டால் மட்டுமே ஒரு மாணவனின் வெற்றிக்கு வழிகாட்டும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எனப் பெயரெடுக்க முடியும்.

பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் முடித்து விட்டு வெற்றிகரமாகத் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற மனோபாவம் உள்ள மாணாக்கர்களுக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருந்து, மேன்மேலும் அவர்கள் கல்வியில் சாதனை புரிய உறுதுணையாக இருக்கும் நல் ஆசிரியர்களுக்கு, மற்ற ஆசிரியர்களை விட அதிக மதிப்பு உண்டு என்பதைச் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் புரட்டும் போது தெரிய வரும்.

வகுப்பறையில் ஒரு மாணவன் ஆசிரியரைக் கேட்கிறான்?….

வாழ்க்கை முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டிய எண்ணத்தைத் தூண்டுபவர் யார்?…
அதற்கான வித்தை (விதையை) ஊன்றுபவர் யார்?….
கல்வி கற்பதற்கு வயது உண்டா?…
கல்விக்கு எல்லைதான் இருக்கிறதா?….
இதற்கு ஆசிரியர் இதிகாசங்களிலிருந்து, பின் வரும் உதாரணத்தைச் சொல்லி விளக்குகிறார்.

சப்த ரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ முனிவர், இயற்கையிலேயே படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ள மகிரிஷி ஆவார். இந்த ஆர்வம்தான், அவரைத் தமது வாழ்நாளுக்குள் வேதங்களையெல்லாம் முழுவதுமாகக் கற்று முடித்து விடவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது. ஒரு நூறு ஆண்டுகள் வேதங்களைப் படித்த பிறகு, பிரம்மாவை வரவழைத்து… ‘நான் மேன்மேலும் வேதங்களைக் கற்று அறிய, எனக்கு இன்னும் நூறு ஆண்டுகள் தேவைப்படுகிறது’ என்றார். பிரம்மாவும் அதன் படியே அருளினார்.

இருநூறு ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், மறுபடி பிரம்மாவை வேண்டி, அதிகப்படியான மேலும் நூறு ஆண்டு வாழ்நாளைப் பெற்று விட்டார்.

ஆக, மொத்தம் முன்னூறு ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், பரத்வாஜ மகரிஷிக்குத் திருப்தி ஏற்படவில்லை, மறுபடி பிரம்மாவை நினைக்கிறார். மேலும் நூறு ஆண்டுகள் வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். மகரிஷிக்கு ஒரு உண்மையை விளக்க, பிரம்மா விரும்பினார்.

“மகரிஷியே, இங்கிருந்த படியே, தூரத்தில் தெரியும் நான்கு மேருமலைகளைப் பாருங்கள், அந்த மலைகள்தான் நீங்கள் கற்க வேண்டிய வேதங்களின் அளவு. ஒவ்வொரு மலைக்கும் கீழே உள்ள “சிறு கைப்பிடி மண்” இருக்கிறதே, அதுதான் நீங்கள் இதுவரை கற்றது. “கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலக அளவு” என்பது மகரிஷியான உங்களுக்குத் தெரியாதா என்ன?” என்று வியப்போடு வினவுகிறான் பிரம்மா.

கல்விக்குக் கரையில்லை, படிப்பதற்கு எல்லையில்லை, இதைச் சாதிப்பதற்கு வயது வரம்பு கிடையாது என்ற தன்மையை, முக்காலமும் உணர்ந்த பரத்வாஜ முனிவரே எண்ணி வியப்பு அடைகிறார்.

Thanks vallamai.com

No comments: