Blogger Widgets

Total Page visits

Tuesday, February 5, 2013

சமுதாயத்தின் மீது அக்கறை இல்லையா ? ஆவேசப்படும் கல்லூரி மாணவர்கள்


இன்றைய சமுதாயத்தின் மீது இளைஞர்களுக்கு அக்கறை இருக்கிறதா...?' என்ற கேள்வியை, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் முன் வைத்தோம். முத்துக்குமார், கலையரசன் (பி.எஸ்.சி., இயற்பியல் இரண்டாம் ஆண்டு), வெங்க டேஷ், ரகுபாரத், பிரசாந்த் (எம்.எஸ்.சி., சி.எஸ்., முதலாம் ஆண்டு); ஜானகி, ரிஸ்வானா, ஹசீனா பானு, சகானாஸ், சசிகலா (பி.காம்., மூன்றாம் ஆண்டு) ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர்.

சகானாஸ்: பொதுவாக இன்றைய இளைஞர்களுக்கு சுயநலமே அதிகம். தான் நல்லா இருந்தா போதும்; மற்றவர் நலனில் அக்கறை தேவையில்லை என்ற எண்ணமே அவர்களிடம் இருக்கிறது. தமிழகத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு பறக்கின்றனர். படித்தவர்களுக்கு உண்டான சம்பளமும், அங்கீகாரமும் கிடைத்தால், அவர்கள் வெளிநாடு செல்ல விரும்ப மாட்டார்கள்; எல்லா கல்லூரிகளிலும், "கேம்பஸ் இன்டர்வியூ' நடத்த வேண்டும். படித்து முடித்ததும், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும். படித்தாலும், வேலை கிடைக்காது என்ற நிலையில், பலரும் பள்ளியுடன் படிப்பை நிறுத் திக் கொள்ளும் நிலை உள்ளது. பெண்கள் படிப்பில் பல துறைகளிலும் காலடி பதித்து வருகின்றனர். இந்நிலை மேலும் உயர வேண்டும். அதற்கு வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்க வேண்டும்.

முத்துக்குமார்: ரோட்டில் வாகன விபத்து ஏற்பட்டு யாராவது அடிபட்டு விழுந்து கிடந்தால், முதலில் உதவ செல்வது ஆண்கள்தான்; அதுவும் மாணவர்கள். படித்து முடித்தவர்கள், வெளிநாடு செல்ல முக்கிய காரணமே, குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம். படித்த படிப்புக்கான அங்கீகாரம், இந்தியாவில் கிடைத்தால், வெளிநாட்டுக்கு செல்லும் அவசியம் இருக்காது. வாலிப வயதில் மாணவர்கள் கெட்டுப்போக பல வாய்ப்பு கள் உள்ளன. பெற்றோர், தங்களது பிள்ளைகளிடம் போதிய கவனம் செலுத்த வேண்டும்; பொருளாதார சிரமங்களில், பலருக்கு தங்களது பிள்ளைகளை கண்டுகொள்ளவே நேரமில்லை. தவறு செய்வதற்கு தூண்டுகோலாக சினிமாவும், "டிவி' மீடியாவும் உள்ளது. குறிப்பாக, மொபைல்போன், இன்டர்நெட் பாதிப்பு, பள்ளி பருவ மாணவர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறது.

ஹசீனா பானு: ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்ற போனாலும், ஒருவர் முன்னே சென்றால், அவர்களது பின்னே செல்லும் குணமே இளைஞர்களிடம் உள் ளது. தானாக முன்வந்து உதவும் குணம், பெரும்பாலானவர்களிடம் இல்லை. கூடியிருப்பவர்கள் மத்தியில், தனது "கெத்தை' காட்டிக் கொள்ளும் ஆண்களே அதிகம். கல்வித்துறையில் விவசாய படிப்புக்கு முன்னுரிமை தர வேண்டும்; பெற்றோரும், நாட்டின் நலன் கருதி விவசாய படிப்புகளை, தங்களது பிள்ளைகள் படிக்க வேண்டும் என ஊக்குவிக்க வேண்டும். படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. பிள்ளைகளை காப்பாற்ற, பெற்றோர், கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்றனர். அதை உணர்ந்து, பிள்ளைகள் நல்ல வழியில் செல்ல வேண்டும்.

ரிஸ்வானா: தமிழகத்தில் படித்துவிட்டு, வெளிநாட்டுக்கு பலரும் வேலை தேடி செல்கின்றனர். அதுக்கு முக்கிய காரணம், அவுங்க, தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலை, நம் நாட்டில் கிடைப்பதில்லை. ஏழ்மையான வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு, குடும்பத்தில் உள்ள சிரமங்களும், கஷ்டங்களும் தெரிகிறது. பெற் றோர், தங்களது கஷ்டங்களை பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே சுட்டிக்காட்டி வளர்க்க வேண்டும். இன்டர்நெட், பேஸ் புக் போன்றவற்றில் நல்ல விஷயங்களும் உள்ளன. எதையும், தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதில்தான் நன்மை உள்ளது. விவசாய பகுதிகள் எல்லாம், வீடுகளாக மாறி வருவதால், எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சம் வரும் அபாயம் உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதும், இன்றைய சூழலில் மிகவும் முக்கியமாக உள்ளது.

வெங்கடேஷ்: சிலருக்கு சமுதாய அக்கறை இல்லை என்பதை ஏற்றுக் கொண்டாலும், ஒட்டுமொத்தமாக யாருக்குமே சமுதாய அக்கறை இல்லை என்று கூற முடியாது. எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்பு மாதிரி விவசாயத் துறைக்கு, கல்வித்துறையில் முக்கியத்துவம் தருவதில்லை. நாளுக்கு நாள் விவசாயம் அழிந்து வருகிறது; இது, எதிர்காலத்தில் உணவு உற்பத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். வெளிநாடுகளில், கொத்தடிமையாய் பணியாற்றி பணம் சம்பாதிப்பதை காட்டிலும், கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டு நம் நாட்டிலேயே வாழ முடியும். அதிக பணம் கிடைத்தாலும், பெற்றோர், உறவினர்களுடன் வாழும் நிம்மதி அங்கு கிடைக்காது. பேஸ்புக், இன்டர்நெட் போன்றவற்றில், வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் இருக்கு; கெட்ட விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்வது, வாழ்க்கையை பாதிக்கிறது.

சசிகலா: தனது குடும்பத்தை பற்றி கூட கவலைப்படாத, பொறுப்பில்லாதவர்கள், சமுதாயத்தில் அதிகமாக உள்ளனர். தவறான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை பார்த்தும் பலர் கெட்டுப்போகின்றனர். நல்ல கதையம்சம் உள்ள படங்களின் வரவு, வெகுவாக குறைந்து விட்டது. குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; நல்ல விஷயங்களை, குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். நம் நாட்டில் கிடைக்கும் அனைத்து சலு கைகளையும் பெற்று, படித்துவிட்டு, வெளி நாட்டு வேலைக்கு செல்வது நாட்டுக்கு செய் யும் மிகப்பெரிய துரோகம். நம் நாட்டில் தகுதிக்கு ஏற்ற வேலையில்லை என்ற நிலைமையும், இதற்கு முக்கிய காரணம்.

தினமலர் நாளிதழில் 05.02.13 அன்று பிரசுரிக்க பட்ட தகவல். 

No comments: