Blogger Widgets

Total Page visits

Saturday, November 2, 2013

நகைச்சுவையல்ல, நடைமுறை !!!

நான் சிறுவனாக இருந்தபோது, எனது சொந்த கிராமத்தில் எங்கள் பள்ளியின் மேலாளர் வீட்டின் மாடியில் வானொலிப் பெட்டி இருந்தது. அதிலிருந்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் செய்திகள், நாடகங்கள் ஒலிபரப்ப, நாங்கள் கேட்டிருக்கிறோம். தெருவில் நடந்து செல்லும்போது காதால் கேட்டுக் கொள்வோமே தவிர அந்த வானொலிப் பெட்டி எப்படி இருக்கும் என்பதுகூட எங்களுக்குத் தெரியாது.

பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வானொலி பெட்டி வந்தது. ஊராட்சி மன்றத்தின் முன்பு உள்ள கம்பத்தில் குழாயைக் கட்டி, மாலை வேளைகளில் வானொலியை இயக்குவார்கள். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அந்த வானொலியில் நிகழ்ச்சிகளை கேட்கலாம். கிராமத்தில் சில நாள்கள் தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர் வந்தால், அப்போது ரேடியோ போடுவார்கள். வருடத்தில் ஒருநாள் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்துபவர்கள் கிராமத்திற்கு வருவார்கள். அதனை சிறுவர் முதல் பெரியவர் வரை பார்த்து மகிழ்வார்கள். கோவில் திருவிழா என்றால் 16 எம்.எம். திரையில் திரைப்படம் போடுவார்கள்.

மேலும் கோவில் திருவிழாவின்போது, கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். பள்ளி ஆண்டு விழாக்களில், ஆசிரியர்களே எழுதிய பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் நடனம் ஆடுவார்கள். திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடுவது கிடையாது. திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால், அருகில் உள்ள நகரத்திற்குதான் செல்ல வேண்டும். அப்படி செல்பவர்கள் மிகவும் குறைவுதான். இந்த பொழுதுபோக்குகள் கிராமங்களின் உள்ள மக்களின் வாழ்க்கை முறையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை எனக் கூறலாம். இவை தவிர, ஓடை மணலில் சடுகுடு விளையாடுவது, கிளித்தட்டு விளையாடுவது என பொழுதை கழிப்பதுண்டு.

இந்தவகை பொழுது போக்குகளால் உடல் மற்றும் மன வலிமை கிடைத்து வந்தது. நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, தூத்துக்குடி துறைமுகத்தை பார்க்க சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். அப்போது அங்குள்ள ஒரு திரையரங்கில் எம்.ஜி.ஆர். படம் ஒன்று பார்த்தோம். அதுவே, எனது வாழ்கையில் பார்த்த முதல் திரைப்படம். இன்றைய நிலை என்ன? பிறந்து சில மாதமே ஆன குழந்தை அழுதால்கூட டி.வி. முன் படுக்க வைத்துவிட்டு, திரைப்படப் பாடலை போட்டுவிடுகிறார்கள் தாய்மார்கள். குழந்தை அதை பார்த்துவிட்டு அழுகையை நிறுத்திவிடுமாம். இதிலிருந்தே குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கு நம்முடைய பங்கு என்ன என்பது தெரிந்து விடுகிறது.

குழந்தைகளை மடியில் வைத்து கொஞ்சிக் குலவி, குட்டிக் கதைகள் சொல்லவேண்டிய தாத்தா, பாட்டிகள் தனித்து வாழ்கிறார்கள். பாவம் பெற்றோர் என்னதான் செய்வார்கள். டி.வி. என்னும் பொழுதுபோக்கு சாதனம் நம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதி என ஆகிவிட்டது. நண்பர் ஒருவர் மனைவியின் பெயரில் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். இதனை அந்த மனைவி அவரது தோழியிடம் கூறியுள்ளார். தோழி, "ஜாக்கிரதையாக இரு. ஒரு டி.வி. சீரியலில் இதுபோல மனைவி பெயரில் கணவன் கடன் வாங்கினான். கடன் செலுத்தவில்லை என மனைவியை போலீஸôர் பிடித்துச் சென்று விட்டார்கள்' எனக் கூறியுள்ளார். இது வேடிக்கையாக இருந்தாலும் டி.வி. நிகழ்ச்சிகள் மக்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். பொழுதுபோக்கிற்கு டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பதில் தவறு இல்லை. அதனை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொழுதுபோக்கு சாதனங்கள் நம்மை பாதிக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். டி.வி.யில் வரும் நிகழ்ச்சிகளுக்கும் நம்முடைய வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் முடிச்சுப் போட்டு பார்க்கக் கூடாது. ஒரு வீட்டில் கணவன் காலையில் தினசரி பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார். மனைவி, "பத்திரிகையை பொழுதுபோக்கிற்கு படிக்காதீர்கள். நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளுங்கள். ஜவுளிகடை, நகை கடை விளம்பரம் வந்துள்ளதா என பார்த்துச் சொல்லுங்கள். டி.வி.யில் இன்று என்னென்ன திரைப்படம்' என பார்த்துச் சொல்லுங்கள் என்றார். இது நகைச்சுவையல்ல, இன்றைய நடைமுறை.

No comments: