Blogger Widgets

Total Page visits

Friday, November 1, 2013

தேவையற்ற சடங்குகள்!!!

அண்மையில் ஒருநாள் இரவு தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் ஆனந்தமாக வந்த அந்த இளைஞர் இன்று மருத்துவமனையில் படுத்திருக்கிறார். காரணம் சிறு தேங்காய்ச் சிதறல்; சாலையில் கிடந்த சிதறு தேங்காயைக் கவனிக்காத சிறு கவனக்குறைவு. அதன் காரணமாக, அவரது குடும்பமே இன்று மருத்துமனையில்.

வெள்ளிக்கிழமை இரவுகளில் நகரங்களில் வாகனம் ஓட்டுவோர் மிகவும் கவனத்துடன் இருந்தாக வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் சாலையில் சறுக்கி விழுந்து மருத்துவமனைக்குப் போக வேண்டியது தான்.

அந்த ஒரு நாள் இரவில் மட்டும் நகரத் தெருக்களில் பல்லாயிரக் கணக்கான பூசணிக் காய்களும் தேங்காய்களும் உடைக்கப்படுகின்றன. சாலை நடுவே கிடக்கும் திருஷ்டிப் பூசணிக் காயைக் கவனிக்காமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் அதோகதி தான்.

வாரம் முழுவதும் கடைகளில் நடைபெறும் வர்த்தகத்தில் கண்ணேறு ஏற்படாமல் தவிர்க்கவே இந்த திருஷ்டி கழிக்கும் சடங்கு நிகழ்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படும் பூஜை முடித்தவுடன் இவை உடைக்கப்படுகின்றன.

இதையே ஒரு கற்பூரம் கொளுத்தியும் கழிக்கலாம். ஆனால், பூசணிக்காயை உடைப்பதிலும் தேங்காயைச் சிதறடிப்பதிலுமை நமது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மிருகபலிச் சடங்கிற்கு மாற்றாக அறிமுகமான பூசணிக் காய் உடைப்பு இப்போது மனிதர்களை வதைக்கும் சடங்காக மாறியிருப்பதுதான் வேதனை.

அதுமட்டுமல்ல, வெள்ளிக்கிழமை இரவுகளில் சாலையில் உடைபடும் காய்களால் மட்டும் பல லட்ச ரூபாய் வீணாகிறது. நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு தெருக்களில் உடைக்கப்படும் பூசணி, தேங்காய்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் தெருவில் எறியப்படும் பணத்தின் மதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

முழுத் தேங்காய் வாங்கக் காசில்லாமல் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் "தேங்காய் பத்தை' (துண்டுகள்) வாங்கும் ஏழைகள் நடந்துசெல்லும் அதே சாலையில் சிதறிக் கிடக்கின்றன ஆயிரக் கணக்கான தேங்காய்கள்.

கிடுகிடுவென உயர்ந்துள்ள காய்கறி விலையைச் சமாளிக்க முடியாமல் நடுத்தரக் குடும்பங்களே காய்கறிப் பயன்பாட்டைக் குறைத்துவிட்டன. அதேசமயம், எந்தப் பயனும் இன்றி சாலையில் வாகனங்களால் அரைக்கப்பட்டு கூழாகிக் கிடக்கின்றன ஆயிரக் கணக்கான பூசணிக் காய்கள். இதை பொருளாதாரக் குற்றம் என்றும் கூறலாமல்லவா?

இதைவிட கொடுமையான இன்னொரு பழக்கம், இறுதி ஊர்வலத்தில் செல்வோர், சடலத்தின் மீது அணிவிக்கப்பட்ட மாலைகளைக் குதறி அதிலிருக்கும் பூக்களை சாலையில் வீசிச் செல்வது. எதற்காக இப்படிச் செய்கிறோம் என்பது அவர்களுக்கே புரியாத புதிர். இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டுசெல்லும்போது சிற்றுயிர்களுக்கு உணவளிக்க பொரி வீசுவது கிராமங்களில் உருவான வழக்கம். அத்துடன் அன்றலர்ந்த உதிரிப் பூக்களை வீசிச் செல்வது, உயிரிழந்தவரைப் போற்றும் செயலாக அமையலாம்.

ஆனால், ஒரு சடலத்தின் மீது பல மணி நேரம் அணிவிக்கப்பட்டிருந்த மலர்மாலைகளில் இருந்த பூக்களை போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வீசிச் செல்வது, எவ்வாறு அவரைப் போற்றுவதாக அமையும்? அது மாபெரும் சுகாதாரக் கேடல்லவா?

இத்தகைய தவறான பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே, நாம் நாகரிக சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான அடையாளமாகும்.

யாரோ ஒருவரது திருஷ்டி கழிய உடைக்கப்படும் பூசணியால், வேறு யாரோ சிலர் சாலையில் அடிபட வேண்டுமா? மரணித்தவரின் மீது அணிவிக்கப்பட்ட மலர்கள், சாலையில் செல்வோரின் முகச்சுளிப்புக்கு வித்திட வேண்டுமா? நாம் சிந்திக்க வேண்டும்.

No comments: