Blogger Widgets

Total Page visits

Saturday, November 2, 2013

கோப்பையை வெல்லப் போவது யார்? ஆஸ்திரேலியா ? இந்தியா ?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை இந்தியா கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இடையேயான 7 ஒருநாள் ஆட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போது 2-2 என்ற சமநிலையை எட்டியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதால், கடைசி ஒருநாள் ஆட்டம் பைனலாக மாறியுள்ளது. தீபாவளி பண்டிகை தினத்தில் நடைபெற உள்ள 7-வது ஒருநாள் ஆட்டம் பெங்களூருவில் மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

முன்னதாக, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்த ஆஸ்திரேலிய அணியை, கடந்த ஆட்டத்தில் இந்திய அணி பின்னுக்குத் தள்ளியது. இந்திய அணியின் 2 வெற்றிகளும் 2-வதாக பேட்டிங் செய்து கிடைத்தவையாகும். பேட்டிங்கில் யுவராஜ், ரெய்னாவை தவிர மற்ற அனைவரும் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.

இத்தொடரில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜான்சனிடம் இவர்கள் இருவரும் சிக்கித் தவிக்கின்றனர். கடைசி ஆட்டத்தில் ஓரளவுக்கு ரன்கள் சேர்த்து ரசிகர்களை அவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய அமித் மிஸ்ரா விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. மாறாக 10 ஓவர்கள் வீசி 78 ரன்கள் விட்டுக் கொடுத்ததுதான் மிச்சம். புவனேஷ்வர் குமார், கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசினாலும் விக்கெட்டுகளைக் கைப்பற்ற திணறினார். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, கேப்டன் பெய்லி, வாட்சன், பிஃஞ்ச் என பலமான பேட்டிங் படையே உள்ளது. 

ஜான்சன் கேள்விக்குறி? 

முக்கிய வேகப் பந்துவீச்சாளரான ஜான்சன் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்பது கேள்விக்குறிதான்.  இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. அத்தொடருக்கு ஜான்சனை தயார்படுத்த ஆஸ்திரேலிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவருக்கு பதிலாக கோல்டர் நீல் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாக உள்ளன.

மழைக்கு வாய்ப்பு: இந்த ஆட்டத்திலும் மழை இடையூறு இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மழை பெய்ய 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இறுதி ஆட்டத்திலும் அதிரடி தொடரும்: கோலி

7-வது ஒருநாள் ஆட்டம் குறித்து இந்திய அணி வீரர் விராட் கோலி கூறியது:

சேஸ் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் பல்வேறு சூழ்நிலைகளை ஆராய்ந்து நன்கு திட்டமிட்டு விளையாடி வருகிறோம். என்னை பொறுத்தவரை, எந்த பந்து வீச்சாளரின் பந்தை அடித்து ஆட வேண்டும் என்பதை நன்கு கணித்து, பின்பு ஆடுவேன்.

பயிற்சியின்போது நல்ல ஷாட்களை அடித்து பழகிக் கொள்வேன். அது, எனக்கு ஆட்டத்தின்போது நம்பிக்கை அளிக்கிறது. இந்தப் போட்டித் தொடரில் என்னுடைய ஆட்டம் திருப்தி அளிக்கும் விதமாக உள்ளதாக நினைக்கிறேன். கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் என் திறமையை வெளிப்படுத்துவேன். 

இருப்பினும், எந்த ஒரு வீரருக்கும் தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றிதான் முக்கியமாக இருக்க வேண்டும். அதைத் தான் நானும் எதிர்நோக்கியுள்ளேன். இப்போது ஐசிசி அமல்படுத்தியுள்ள புதிய விதிகள் பந்துவீச்சாளர்களுக்கு மிகக் கடினமாக உள்ளன. இதனால், ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. எனினும், இந்த விதிகளை ஐசிசி அறிவித்துள்ளதால் அவை குறித்து பேசுவது சரியல்ல.

முதலில் பேட் செய்தாலும் அல்லது இரண்டாவதாக பேட் செய்தாலும் ஓர் அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைவது மிகவும் அவசியம். இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம். அவற்றை வெளிப்படுத்தி தொடரை வெல்வோம்.

சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறுவது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தித் தரும். அதன்மூலம், சச்சினுக்கு வெற்றியுடன் விடைபெறும் வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்தித் தருவோம் என்று கோலி தெரிவித்தார்.

No comments: