Blogger Widgets

Total Page visits

Friday, November 1, 2013

அரசு பள்ளிகளில் பாழாகும் கம்ப்யூட்டர்கள்.... பீரோக்களில் பூட்டிவைப்பு

அரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கிய கம்ப்யூட்டர்கள் லேப்-டாப்கள், ஆசிரியர்களின் ஆர்வமின்மையால் பயன்பாடின்றி முடங்கி உள்ளது.

பள்ளி மாணவர்கள் கல்வியை எளிமையாகவும், இனிமையாகவும் கற்றுக்கொள்ள மத்திய, மாநில அரசுகள், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.,) திட்டம் மூலம் பள்ளி வளர்ச்சிக்காக நிதி உதவி, உபகரணங்கள் வழங்குகிறது. 

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும், அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 4 முதல் 6 கம்ப்யூட்டர்கள், பிரின்டர்கள், லேப் டாப், யு.பி.எஸ்., பாட சம்மந்தமான சி.டி.,க்கள் வழங்கப்பட்டுள்ளன. பாடங்களை கேட்பதை விட, கம்ப்யூட்டரில் பார்த்தால் மாணவர்கள் மனதில் ஆழமாக பதியும். 

புதிய சிந்தனைகள் தோன்றும் என்ற அடிப்படையில், வகுப்பறைகள் கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. இது தவிர ஒன்றியம் வாரியாக ஒரு பள்ளியை "ஸ்மார்ட் கிளாஸ்" ஆக மாற்ற பள்ளி ஒன்றுக்கு தலா ரூ.1.90 லட்சம் வழங்கப்படுகிறது.

கம்ப்யூட்டர்களை கையாள்வதற்கு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியையும் அரசு அளித்துள்ளது. மாணவர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள், இரு பாட வேளையில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இவ்வளவு வசதிகளையும் அரசு, கல்வித் துறைக்கு செய்து கொடுத்தும் ஒருசில அரசு பள்ளிகள், கம்ப்யூட்டர்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொடுக்காமல் பாதுகாப்பு என்ற பெயரில் பீரோகள், தலைமை ஆசிரியர்கள் அறையில் முடக்கி வைத்துள்ளன. நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்ட கம்ப்யூட்டர், யு.பி.எஸ்., பிரின்டர் போன்ற விலை உயர்ந்த பொருட்களை, பயன்படுத்தபடாததால் பேட்டரி சார்ஜ் இறங்கியும் மென்பொருட்கள் தூசி படித்து பழுதாகி பயன்பாடின்றி உள்ளது.

"மாணவர்கள், கம்ப்யூட்டர்களை பழுதாக்கி, சேதப்படுத்தி விட்டால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, அரசு வழங்கிய பொருளை பாதுகாக்கிறோம்" என கூறி திட்ட பயனை மாணவர்கள் அனுபவிக்க விடாமல் முடக்கி வைக்கின்றனர். அதே நேரத்தில் 50 சதவீத பள்ளிகளில், கம்ப்யூட்டர்களை மாணவர்கள் பயன்படுத்திடவும் லேப் டாப் மூலம் கற்பித்தல் செய்கின்றனர். 

கம்ப்யூட்டர்கள் முடக்கப்பட்ட பள்ளிகளை கண்டறிந்து அதை மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகாசி மைக்கேல், "மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த, மத்திய, மாநில அரசுகள், ஆரம்ப பள்ளி முதல் கம்ப்யூட்டர் கல்வியினை வழங்க நடவடிக்கை எடுக்கின்றன. அதற்கான நிதி ஒதுக்கி, கம்ப்யூட்டர்களையும் வழங்குகிறது. தனியார் பள்ளிகளில் கிடைக்காத கூடுதல் வசதிகள், அரசு பள்ளிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி வழங்க, ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். 

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் பழுதாகி விடாமல், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

காரியாபட்டி அழகர்சாமி,  "அரசு பள்ளிகளில், ஏழை எளிய மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களும் மற்ற மாணவர்களைப் போல் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. 

அரசு பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க, கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் இல்லாததால் கம்ப்யூட்டர் காட்சிப் பொருளாகவே உள்ளன. பயனுள்ள திட்டமாக இருந்தும், அரசு நிதி வீணாகி வருகிறது. இதுபோன்ற பள்ளிகளில், ஆசிரியர்களை நியமித்து கம்ப்யூட்டர் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

வத்திராயிருப்பு பாண்டியன், "கம்ப்யூட்டர் கல்வியை பயிற்றுவிக்க, பள்ளிகளில் ஆசிரியர் கிடையாது. கம்ப்யூட்டர் கல்விக்கென தனியே ஒவ்வொரு பள்ளிக்கும் ஆசிரியர் நியமித்து, கம்ப்யூட்டர் மூலமாக பாடம் நடத்தி, மாணவர்களை செய்யச் சொன்னால் மட்டுமே, அரசின் நோக்கம் நிறைவேறும்" என்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சுரேஷ் ரத்தினகுமார், "மாணவர்களுக்கு கற்பிக்க வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள், பல பள்ளிகளில் செயல்படுத்தப்படாமல், முடங்கியே கிடக்கிறது. அங்குள்ள ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் குறித்து போதிய பயிற்சி இல்லாமல் உள்ளது. மேலும் பல அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் இல்லாத நிலையும் உள்ளது. 

அரசின் திட்டமே வீணடிக்கப்பட்டு, நிதியும் பாழடிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க, ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி வழங்கி, மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் கற்பிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

விருதுநகர் அனைவருக்கும் கல்வி திட்டம் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், "ஒவ்வொரு அரசு பள்ளியிலும், குறைந்தபட்சம் ஒரு ஆசிரியருக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கி, பாடம் நடத்த வலியுறுத்துகிறோம். இதை மாவட்ட அளவில், குழு அமைத்து கண்காணிக்கிறோம்.

வகுப்பறையில் கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்து, உதவி கல்வி அலுவலர், சூப்பர்வைசர்களிடம் அறிக்கை பெறுகிறோம். கம்ப்யூட்டர் பழுது ஆவதுபற்றி தலைமை ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் அதை பராமரிக்க, ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்படும் பராமரிப்பு மானியத்தில், பழுதினை சரி செய்து கொள்ளலாம். 

இதற்கு கிராம கல்வி குழு, பெற்றோர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குகின்றன. அனைத்து பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் பயன்பாடு இருக்க வேண்டும். குறிப்பிட்டு புகார் வந்தால், உடன் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments: