Blogger Widgets

Total Page visits

Monday, April 8, 2013

பொறியியல்: எப்படி கல்லூரியையும் பாடத்தையும் தேர்ந்தெடுப்பது?


 மாணவர்கள் பொறியியல் கல்விக்கான வேட்டையைத் தொடங்கவிருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் மதிப்பெண் பட்டியல் வரவிருக்கிறது. எந்தக் கல்லூரியில் சேர்வது, எந்தப் பாடத்தை தேர்ந்தெடுப்பது என மண்டை காயப்போகிறார்கள். மாணவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் குழம்பிக் கொண்டிருக்க இடையில் Educational consultant என்ற ஒரு குரூப் களமிறங்கும். அவர்களுக்கும் செம வேட்டை காத்திருக்கிறது.

மாணவர்கள் தங்களின் 12 ஆண்டு கால உழைப்பினைக் கொண்டு எதிர்காலத்திற்கான நல்ல படிப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது. மற்ற படிப்புகளை விட பொறியியல் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் நிறையக் குழப்பம் இருக்கிறது.  300 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் 1,00,000க்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன. மதிப்பெண் வரட்டும், கட் ஆஃப் வரட்டும், ரேங்க் வரட்டும் என்று காத்திருந்தால் கடைசி நேரத்தில் திணற வேண்டியிருக்கும் அல்லது கிடைத்த கல்லூரியில் கிடைக்க்கும் பாடத்தில் சேர வேண்டிய நிலைமையில் மாட்டிக் கொள்வோம். மதிப்பெண் வரும் வரைக்கும் காத்திருக்காமல் இப்பொழுதே ஃபீல்ட் வொர்க்கில் இறங்கினால் மிக எளிதாக அட்மிஷன் காரியத்தை முடித்துவிடலாம்.

கல்லூரி முக்கியமா? அல்லது பாடப்பிரிவு முக்கியமா? என்னும் வினா எழும் போது இரண்டும் முக்கியம் என்ற பதில் வந்தாலும், கல்லூரிக்கு முக்கியத்துவம் தருவதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு. நல்ல கல்லூரி என்பதில் உள்கட்டமைப்பு(Infrastructure), ஆய்வக வசதி, நூலகம், ஆசிரியரின் திறன் போன்றவை அடங்கும். வளாக நேர்முகத் தேர்வுக்கு(Campus Interview) வருகின்ற நிறுவனங்களும் இதைத் தான் முக்கியமாக கவனிக்கின்றன. ஒரு நல்ல மாணவன் நிறைய மதிப்பெண் பெற்று மோசமான கல்லூரியில் சேர்ந்து வேலையின்றித் தவிப்பது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம் நல்ல கல்லூரியில் சுமாரான மதிப்பெண்ணுடன் தேறும் மாணவனுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நல்ல கல்லூரியை எப்படிக் கண்டுபிடிப்பது? ரொம்ப சிம்பிள். நண்பர்கள், ஆசிரியர்கள், சீனியர்கள் போன்றோரின் ஆலோசனைகளைப் பெற்று சுமார் பதினைந்து அல்லது இருபது கல்லூரிகளின் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொண்டு அந்தக் கல்லூரிகளுக்கு ஒரு ‘விசிட்’ போய்வருவது நல்லது. வெறுமனே போய் வராமல் அங்கிருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களைச் சந்தித்தும் விசாரிக்கலாம். இப்படி இருபது கல்லூரிகளை ஒரு சேரப் பார்க்கும் போது நமக்கே ஒரு ஐடியா கிடைத்துவிடும்.

அடுத்து பாடப் பிரிவு. பெரும்பாலான மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ECE  போன்ற சில பாடங்களே தெரிகின்றன. அதுவும் கடந்த சில ஆண்டுகளில் மென்பொருள் துறையில் வேலை வாய்ப்பு நன்றாக இருப்பதனால் இதற்கான டிமாண்டும் அதிகமாகவே இருக்கும். பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களிலும் பெரும்பாலானோர்- அவர் எந்த பாடப்பிரிவு எனினும் மென்பொருள் துறையில் நுழைவதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர்.

உடனடியாக கிடைக்கக் கூடிய அதிக சம்பளமும், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும் மாணவர்களை அதிகம் கவர்கின்றன. இந்தத் துறை பத்து ஆண்டுகளுக்கு பின்னர் எப்படி இருக்கும் என்பதனையும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இத்துறையில் நான்காண்டுகளுக்கு முன்னர் ஐந்தாண்டு அனுபவம் மிக்க ஒரு வல்லுனருக்கு ஒரு லட்சம் வரையிலும், அதற்கு மேலாகவும் ஊதியம் தரப்பட்டது. இன்று அதே ஐந்தாண்டு அனுபவம் உள்ள வல்லுனருக்கு நாற்பதிலிருந்து ஐம்பதாயிரம் என ஊதியம் குறைந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இது மேலும் குறையக் கூடும்.

இதற்கான காரணங்களை அலசும் போது, நான்காண்டுகளுக்கு முன்னர் இத்துறையில் அறிவு பெற்றோர் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால், அவர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. நிறுவனங்களும் அதிக ஊதியம் கொடுத்து அவர்களை பணிக்கு அமர்த்தத் தயாராக இருந்தன. இன்று சூழல் மாறிக் கொண்டிருக்கிறது. எந்தப் பாடப் பிரிவில் இருப்பவரும், மென்பொருள் துறையில் நுழைவது என்றாகிவிட்ட நிலையில், தேவையின் அளவிற்கு ஆட்களும் இருக்கிறார்கள். நிறுவனங்களும் சம்பளத்தின் அளவை மிகக் குறைத்துவிட்டன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஒருவர் ரூ.20 ஆயிரத்துக்கு செய்யும் வேலையை இன்னொருவர் ரூ.15 ஆயிரம் என்னும் அளவில் செய்ய தயாராக இருப்பார்.

இன்று வரையில், இத்துறையில் இந்தியாவிற்கு போட்டியாக வேறு எந்த நாடும் பெரிய அளவில் செயல்படவில்லை. அதற்கு நமது ஆங்கில அறிவும் ஒரு முக்கிய காரணம். சீன அரசு ஆங்கில அறிவுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் மற்ற துறைகளைப் போலவே இத்துறையிலும் நமக்கு சீனா கடும் போட்டியை உண்டு பண்ணும் எனலாம். ஏற்கனவே மென்பொருள் ப்ராஜக்ட்கள் பிலிப்பைன்ஸ் போன்ற கீழை நாடுகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டன.

அதற்காக IT துறையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதைத் தவிர்த்து நல்ல வாய்ப்புகள் அமையக் கூடிய வேறு துறைகளையும் கவனிக்கலாம். வேறு துறைகளில் நல்ல பணியிடங்கள் காலியாகவும், பணியிடங்கள் தகுதியற்றவர்களாலும் நிரம்பி இருக்கின்றன. ஆட்டோமேஷன், உற்பத்தி(Manufacturing), தரக்கட்டுப்பாடு போன்ற துறைகளில் அனுபவம் பெறுகின்ற எவருக்கும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நல்ல எதிர்காலம் இருக்கும். இன்று இத்தகைய துறைகளில் அனுபவம் பெற்ற பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. நம் நாட்டில் இப்போது தான் உற்பத்தி நிறுவனங்கள் நன்கு கால் பதிக்க ஆரம்பித்துள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

பாடப் பிரிவினை தேர்ந்தெடுக்கும் போது இரண்டு அல்லது மூன்று துறைகளில் வாய்ப்பு உள்ள பாடப் பிரிவினை எடுக்கலாம். உதாரணமாக EEE எடுக்கும் மாணவர்கள் மின்னியல்(Electrical) அல்லது மின்னணுவியல்(Electronics) அல்லது மென்பொருள்(Software) துறைகளில் வேலை வாய்ப்பை பெறலாம். இது போன்று பல பாடப் பிரிவுகள் உள்ளன.

மெக்கானிக்கல், சிவில் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைவு என்னும் போதிலும், இப்படிப்புகளுக்கு எப்போதும் நல்ல மவுசு உள்ளது. இத்துறை பொறியாளர்களுக்கான தேவை என்றும் ஒரே அளவில் இருந்து கொண்டிருக்கும். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் போன்ற துறைகள் மிக முக்கியமானவை. வேதியியல் தொழிலகத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சி வரையிலும் இவற்றிற்கான தேவைகள் இருக்கின்றன.

டெக்ஸ்டைல் துறை சார்ந்த படிப்புகள் குறைவான கல்லூரிகளில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், இத்துறையில் நிபுணர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. மெரைன்(Marine), ஏரோநாட்டிக்கல், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், ஆட்டோ மொபைல் போன்ற துறைகளை மாணவர்களும், பெற்றோர்களும் பரிசீலிக்கலாம். பாலிமர், பிரிண்டிங், மைனிங் போன்ற துறைகள் குறைவான கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. குறைவான கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகளுக்கு குறைவான வேலை வாய்ப்பே இருக்கும் என்றாலும், அதற்கு போட்டியும் மிக குறைவாகவே இருக்கும்.

சில துறைகளில் மேற்படிப்பு படித்து தனிப்பட்ட பாடத்தில்(Specialization) தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். இது வல்லுனர்களை தனிப்படுத்திக் காட்டும். கல்லூரிகள் மாஸ்டர் பட்டம் பெற்றவர்களுக்கு விரிவுரையாளர் பணிகளை தருகின்றன.

கல்லூரியில் சேரும் முன்னரே மாணவர்களின் விருப்பத்தினை நன்கு ஆலோசிக்க வேண்டும். இதற்கும் ஒரு உபாயம் இருக்கிறது. Basic Electrical, Basic Mechanical போன்ற புத்தகங்களை வாங்கி ஒரு புரட்டு புரட்டுவது நமக்கான ஆர்வத்தை அடையாளம் காட்ட உதவும். அதைத் தவிர்த்து நம் பக்கத்து வீடுகளில், பள்ளி சீனியர்கள் போன்றவர்களிடம் பேசுவதும் ஒரு ஐடியா தரும். 
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஒரே ஆளிடம் ஆலோசனை கேட்பது குழியில் தள்ளிவிடும். நம் ஊரில் தெரிகிறதோ தெரியவில்லையோ அட்வைஸ் கொடுக்க மட்டும் தயங்கவே மாட்டார்கள். அதனால் குறைந்தது பத்து “தகுதியுள்ள” நபர்களிடம் ஆலோசனை கேட்பதுதான் நல்லது. தகுதியுள்ள என்று எழுதியதற்கு அர்த்தம் புரிகிறதுதானே? விரிவாகவே சொல்லிவிடுகிறேன். தன் மகனோ அல்லது மகளோ பொறியியல் படிக்கிறார்கள் என்பதற்காக இஸ்ரோ சயிண்டிஸ்ட் ரேஞ்சில் பீலா விடும் புண்ணாக்கு விற்பவரும், பருத்திக் கொட்டை விற்பவரும் நம் ஊரில் அதிகம். தன் மகன் படிப்பதனாலேயே அந்தப்படிப்புதான் ஒஸ்தி என்று அடித்துவிடுவார்கள்.  இத்தகைய ஆட்களை நாசூக்காக கத்தரித்துவிட்டு விடும் வழியைப் பாருங்கள்.

மாணவர்கள் தமக்கு தாமே ஒரு பத்து கேள்விகளை கேட்டுப்பார்க்கலாம். உதாரணமாக-

1) எதற்காக பொறியியல் கல்வியை படிக்க வேண்டும்?
2) படித்து முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறேன்?
3) வேலைக்கு போகப் போகிறேனா? சுய தொழில் தொடங்கப் போகிறேனா? மேலே படிக்கப் போகிறேனா?
4) மேலே படிப்பதனால் மேனேஜ்மெண்ட் கல்வியா? பொறியியல் கல்வியா?
5) ஆராய்ச்சி செய்யப் போகிறேனா? அப்படியானால் எனது ஆராய்ச்சி எது சார்ந்து இருக்கும்?
6) வேலைக்கு போவதாக இருப்பின் எந்திரங்கள் (Machines) சார்ந்த வேலைக்கா? மின்னணுவியல் சார்ந்த வேலைக்கா? வேதியியல் சார்ந்த வேலைக்கா?
இப்படியான கேள்விகளையும் அதற்கான பதில்களையும் யோசித்துக் கொண்டிருப்பது ஒரு தெளிவைக் கொடுக்கும். எந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம்மால் பதில் கண்டுபிடிக்க இயலவில்லையோ சந்தேகங்களுக்கு மேற்சொன்ன தகுதியானர்வகளிடம் ஆலோசனையப் பெறலாம்.

இதை அடுத்த பதினைந்து நாட்களுக்கு தொடர்ந்து செய்யும் போது கல்லூரி குறித்தும், பாடத்திட்டம் குறித்தும் ஓரளவுக்கு தெளிவு கிடைத்துவிடும். வீட்டிற்கு அருகில் உள்ளது என்பதற்காகவோ அல்லது பக்கத்து வீட்டு அண்ணன்/அக்கா படிக்கிறார் என்பதற்காகவோ மோசமான கல்லூரியில் சேர்வது மோசமான விளைவுகளை உண்டாக்கும். உண்மையில் எந்தப் பாடப்பிரிவும் மோசமானது இல்லை. படிக்கின்ற மாணவனின் ஆர்வம், திறமையை பொறுத்தே அந்தப் பாடம் மோசமானது அல்லது நல்லது என்று நிர்ணயம் செய்யப்படும்.

பன்னிரெண்டு வருடம் உழைத்தாகிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்கள்தானே? சோம்பேறித்தனம்படாமல் உழையுங்கள். தயக்கமேயில்லாமல் கேள்விகளைக் கேளுங்கள். உங்கள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த நகர்வும் நீங்கள் எடுக்கவிருக்கும் இந்த ஒரு முடிவில்தான் இருக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம்-தகுதி வாய்ந்த எல்லா மாணவருக்கும் எல்லாத் துறையிலும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.தனது ஆர்வத்தை கண்டுணர வேண்டியது மாணவனின் கடமை. தங்களது ஆர்வத்தை மாணவன் மீது திணிக்காது இருத்தல் பெற்றோரின் கடமை.


இந்த தகவல் நிசப்தம் இன்னும் வலைபூவில்  இருந்து பலரும் அறிய பகிரபடுகிறது. 

No comments: