Blogger Widgets

Total Page visits

Wednesday, April 24, 2013

கின்னஸ் சாதனை படைத்த கணித மேதை சகுந்தலா தேவி மரணம்!

 Human Computer Shakuntala Devi No More
மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 80.

கணித மேதை சகுந்தலா தேவிக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக அவர் கடந்த 2 வாரங்களாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.15 மணிக்கு இறந்ததாக சகுந்தலா தேவி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் டிசி சிவதேவ் தெரிவித்தார்.

சுவாசப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளும் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். சகுந்தலா தேவியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆளுநர் பரத்வாஜ், முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சகுந்தலா தேவி கர்நாடக மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவர் 3 வயதில் தனது தந்தையுடன் சீட்டாட்டம் விளையாடியபோது தான் அவரது கணிதத் திறமை வெளிச்சத்திற்கு வந்தது.

அதன் பிறகு அவர் தனது 6வது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தனது கணித ஆற்றலை வெளிப்படுத்தினார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் தனது கணிதத் திறமையை காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

அவர் கடந்த 1971ம் ஆண்டில் 201 இலக்கங்கள் கொண்ட எண்ணின் 23வது வர்க்கமூலத்தை மனக்கணக்குப் போட்டு தெரிவித்தார்.

பின்னர் 1980ம் ஆண்டு ஜூன் மாதம் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் துறையில் தலா 13 இலக்கம் கொண்ட 7,686,369,774,870 x 2,465,099,745,779 ஆகிய எண்களை வெறும் 28 நொடியில் பெருக்கி விடை அளித்தார்.

எண் விளையாட்டு, எண் ஜோதிடம், திகைக்க வைக்கும் கணித உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியவர் சகுந்தலா தேவி. அவரது கணித திறமைக்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: