தமிழக அரசு அனைவருக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என அறிவித்துள்ளது. தற்போது 9-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி செய்திட வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
இங்கேதான் கோளாறு உள்ளது எனக் கல்வி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்ச்சி நிச்சயம் உண்டு. அவர்கள் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன என நினைக்கும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர் என கல்வித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பல ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கையெழுத்து இட்டுவிட்டு தங்களது சொந்த வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறார்கள். சில ஆசிரியர்கள் பல தனியார் நிறுவனங்களில் பகுதிநேரப் பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களை ஒன்றும் செய்ய இயலாது. சஸ்பெண்டு போன்ற நடவடிக்கை எடுத்தால் சங்கம் போராட்டத்தில் இறங்குகிறது என வேதனையுடன் கூறினார் ஓர் அதிகாரி.
ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியுடனும், சேவை மனப்பான்மையுடனும் வேலை செய்தால்தான் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்க இயலும்.
அடுத்து பாடத் திட்டங்களை எடுத்துக் கொள்வோம். அப்போதெல்லாம் தேர்வில் சாய்ஸ் என்பது மிகமிக குறைவாகவே இருக்கும்.
மேலும் ஒரு கேள்விக்கு 4 பதிலைக் கூறி, இதில் எது சரி எனக் கூறு என்ற கேள்விகள் இருக்காது. தற்போது உள்ள இந்த இரு முறைகளினால் மாணவர்கள் படிக்கும் திறன் குறைந்து விடுகிறது. அவர்களின் ஞாபகத் திறன் மழுங்கடிக்கப்படுகிறது.
மேலும், தற்போது மனக்கணக்கு என்கிற பாடம் இல்லை. இந்த மனக் கணக்கு ஞாபக சக்தியை வளர்ப்பதோடு, பிற்காலத்தில் பல வேலைகளை சுலபமாகச் செய்ய வழி செய்யும்.
தற்போது கால்குலேட்டர் வந்துவிட்டது. அந்த காலத்தில் பின்னல் கணக்கு, அல்ஜீப்ரா கணக்கு என எதையும் எழுதி பார்த்து தான் விடையளிக்க முடியும். இதனால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் வளர்ந்தது. தற்போது கால்குலேட்டர் பயன்படுத்தப்படுவதால், இந்தத் திறன் வளர்க்கப்படுவதில்லை.
மேலும், நோட்ஸ் புத்தகம் வாங்கி அக் காலத்தில் யாரும் படிப்பதில்லை. வகுப்பில் ஆசிரியர் கற்பிக்கும்போதே கேள்வி பதிலைக் கூறிவிடுவார். அதனை நோட்டுப் புத்தகத்தில் எழுதி படிக்க வேண்டும்.
தற்போது எங்கும் நோட்ஸ். எதற்கும் நோட்ஸ் என மாணவர்களின் கற்கும் திறனை மிகவும் குறைத்து விடுகிறது.
அடுத்து அந்தக் காலத்தில் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை இருந்தது. தற்போது அது இல்லை. காரணம் பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க இயலாது. அப்படி கண்டித்தால் ஆசிரியர் அடித்து விட்டார் என புகார் எழும்.
மாணவர்களை அடிக்கக் கூடாது என அரசு கூறியுள்ளதை மாணவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பல ஆசிரியர்கள் மாணவர்களின் தவறுகளைக் கண்டும் காணாதது போல இருந்து விடுகிறார்கள்.
தற்போது பள்ளியில் வகுப்பறையை மாணவர்கள் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தால் சிலர் மாணவர்களின் நிலை பாரீர் எனக் கூக்குரலிடுகின்றனர். இதுபோன்ற பல காரணங்களால் மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் பயமும், மரியாதையும் இல்லாமல் போய் விட்டது.
இப்படிப் படிப்பவர்கள் பின்னாளில் ஆசிரியர்களாக பணிபுரிய நேர்ந்தால் எப்படி இருக்கும்? இது போன்ற காரணங்களால்தான் ஆரம்பக் கல்வியின் தரம் குறைந்து வருகிறது.
நம் பிள்ளைகள் நம்மைவிட பல மடங்கு புத்திசாலி எனக் கூறி வருகிறோம். அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி அளித்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமைவதோடு, வருங்கால சமுதாயமும் மேம்படும்.
By
No comments:
Post a Comment