Blogger Widgets

Total Page visits

Sunday, December 21, 2014

நீங்கள் தள்ளுவண்டியா? இல்லை தானியங்கியா?

நேரத்திற்கு முடிக்க இயலாத வேலை கவலை தருவதாகவே அமைகிறது. சிறப்பாக வேலை பார்த்தால் சிறந்த வருமானத்தை, பாராட்டை வெகுமதியை அடையலாம். செயல்திறன் இன்மையோ, செயல்திறன் குறைபாடோ கெட்ட பெயரை மட்டுமே வெகுமதியாகப் பெற்றுத்தரும்.
முதலாளி இருக்கும்போது சிறப்பாகவும், முதலாளி இல்லாதபோது மோசமாகவும் செயல்படுவது அல்ல வேலை என்பது. ஒரே ஆள் இருவேறு நிறங்களைக் காட்டுவது சிறப்பாகாது.
சிக்கல் சிங்காரத்தை சமாளிப்பது எப்படி?
அடுத்த சிக்கல், பெரும்பாலான நிறுவனங்களில் புதிய ஊழியர்களை செயல்படவிடாமல் தடுப்பது நடக்கிறது. அவர்களிடம் நம்பிக்கையைக் குலைத்தல், ஒத்துழையாமை, குழப்பிவிடுதல், தவறாக வழிநடத்துதல் மற்றும் பொறாமையோடு நடந்து கொள்ளுதல் இவை எல்லாமே பணி ஒழுக்கத்தை தடுக்கிறது.
உங்கள் உடன் பணியாற்றுபவர்கள் இப்படி ‘சிக்கல்’ சிங்காரமா? அவர்களை எப்படி சமாளிப்பது? அது ஒரு கலை. பறவைகள் பலவிதம் என்பது போல மனிதர்களும் பலவிதம். நகர்ந்துகொண்டே இருப்பதுதான் நதிக்கு அழகு. பறந்துகொண்டே இருப்பதுதான் பறவைக்கு அழகு. விரிந்துகொண்டே இருப்பதுதான் அறிவுக்கு அழகு. அதுபோல வளர்ந்துகொண்டே இருப்பதுதான் வியாபாரத்திற்கு அழகு என்பதனை உணர்ந்து ஒவ்வொரு ஊழியரும் செயல்படும் போது அந்த நிறுவனம் மிகப்பெரிய உயரத்தை எட்டுகிறது.
விஷயம் கொடு, விஷம் மற்றும் விஷமம் தவிர் என்பது தாரக மந்திரமாக இருக்கட்டும். உழைப்பை அளித்தால் உயர்வைப்பெறலாம். களைப்பை அளித்தால் கஷ்டமே பெறலாம். குறிப்பாக தள்ளிப்போடுவதை தவிர்க்க வேண்டும். தள்ளிப் போடுவதால் தள்ளாமையே வரும். எது முக்கியமோ அதனை முதலில் செய்தல் வேண்டும். இலைபோட்ட பின் தானே சோறு...!
செய்யும் வேலையே வாழ்க்கை
நூறு சதவீதம் தமது செயல்திறனை வெளிக்காட்டாமல் இருப்பது தனிமனிதன், நிறுவனம் இரண்டையும் வீழ்த்துகிறது. நாம் செய்வது வேலையோ அல்லது ஊழியமோ அல்ல, நமது வாழ்க்கை என்ற எண்ணத்தோடு செயல்பட்டால் எவருமே வெற்றி பெறலாம்.
பணி வாழ்வில் சிறந்த உயரத்தைத்தொடுவதற்கு, தற்போது செய்யும் முறையைவிட வேறு ஏதாவது நல்லவழி இருக்கிறதா என்று ஆராய வேண்டும். நற்செயலுக்கு வெகுமதி நிச்சயம் என்பதில் என்ன சந்தேகம்? என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
வெற்றியின் இருப்பிடம்
மகிழ்ச்சியாக செய்யும் வேலை சிறப்பாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியான பணியிடம் எப்போதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும்.
கடந்த காலம் என்பது சில சமயம் நினைத்துப்பார்த்து கற்றுக்கொள்ள உதவும். அது நிலைத்து நிற்கும் இடம் அல்ல. எதிர்காலம் என்பது நினைத்துப்பார்க்க முடியும் என்றாலும் ஏற்கனவே நடந்து விட்டது போன்ற அனுபவத்தை தந்துவிடாது. ஆனால் நிகழ்காலம் என்பது முயற்சியின் உறைவிடம் மட்டுமல்ல வெற்றியின் இருப்பிடம் கூடத்தான் என்பதை நினைவில்கொண்டு செயல்பட்டால் என்றுமே வெற்றிதான்.
இப்போது சொல்லுங்கள் பணி வாழ்வில் நீங்கள் தள்ளு வண்டியா? அல்லது தானியங்கியா?
-டாக்டர். பாலசாண்டில்யன்

No comments: