பெண்களைக் குற்றம் சொல்லாதீர்கள், உங்கள் வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைக்களைக் கண்டித்து வளருங்கள்' சுதந்திர தின விழா உரையில் நாட்டின் பிரதமர் உரைத்த வைர வரிகள் இது.டெல்லியில் பதின் பருவ பெண் மீது நடந்த பாலியல் வன்முறைக்குப் பிறகு, இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்துவிட்டனர் என்று இந்தியாவின் சுற்றுலாத்துறையினர் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். இந்தியாவில் நொடிக்கும் ஆறு பெண்கள் வதைக்கபடுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுவதாகத் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகின்றன. தமிழகத்தில் வினோதினி, வித்யா என்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது.
"நம் தெருவைச் சுத்தமாக வைத்துக்கொண்டால், இந்த நாடு தானாகச் சுத்தமாகும் என்பார்கள். அந்த வகையில் இனி, ஆசிட் வீச்சால் எந்தப் பெண்ணும் வாழ்க்கையை இழக்கக்கூடாது. இதற்கு அனைத்து இளைஞர்களும் ஒன்றுபட வேண்டும். இதுவே என் விருப்பம்" எனச் சமுகத்தின் மீதான அக்கறையோடு ஆரம்பிக்கிறார் ஒட்டுறுப்புச் சிகிச்சை நிபுணர் (Plastic Surgeon) வி.எஸ்.ராதா கிருஷ்ணன்.
"ஆசிட் வீசுபவருக்கு அந்த ஆசிட் தன்மையோ, அதன் பெயரோ கூடத் தெரியாது. சுற்றமும், தவறான நட்புமே அவர்களை இந்தக் கொடூரமான செயல் தூண்டுக்கிறது. அதிலும், பெரும்பானவர்கள் பயன்படுத்துவது பாத்ரூமிலும், கம்பெனிகளிலும் பயன்படுத்தும் ஆசிட் வகைக்களே. ஆசிட் மட்டும் அல்லாமல் அல்கலின் (alkaline) எனப்படும் கார வகைகளையும் பயன்படுத்துகின்றனர்.
சில ஆசிட், கார வகைகளின் வீரியம், மிகவும் அதிகம். பொதுவாகவே, இந்த ஆசிட் வகைகள் தோலில் பட்டால், தோலில் டெர்மிஸ் (termis) எனப்படும் சரும பகுதியைச் சேதப்படுத்தி, தோலில் இருக்கும் புரதம் முழுவதையும் உறிஞ்சிவிடும். இதனால், தோலில் சுருக்கங்கள் ஏற்படும்.மேலும் தோலைத் தாண்டி நரம்புகளைப் பாதிப்பதாலும் தீராத வலி ஏற்படும்.
இதில், நரம்புகள் பழுதடைந்தால் வலி அதிகம் இருக்காது. நரம்புகள் வெளியில் தெரிவது போன்ற நிலை வந்தால் அதன் வலி பயங்கரமாக இருக்கும். பொதுவாக எல்லாப் பிரச்னைகளுக்கும் முதலுதவி என்பது அந்த நோய் பெரிதாகாமல் வலியைக் குறைக்கவே உதவும். ஆனால், ஆசிட் வீச்சைப் பொறுத்தவரை செய்யும் முதலுதவியே 90 சதவிகித வீரியத்தைக் குறைத்துவிடும். கிட்டத்தட்ட இதை முதலுதவி என்பதைவிட 'டீரிட்மென்ட்' என்றே கூறலாம்" என்ற டாக்டர் ராதா கிருஷ்ணன், ஆசிட் பட்டவுடன் செய்ய வேண்டிய அவசர முதலுதவி குறித்து விளக்கினார்.
* ஆசிட் வீசியவுடன் வீசிய பகுதியில் தண்ணீரை பாய்ச்ச வேண்டும். அது குளிர்ந்த நீராக இருந்தால் மிகவும் நல்லது. ஏனெனில் தண்ணீர் ஊற்றும் போது வலி தீவிரமாக இருக்கும். குளிர்ந்த நீர் இல்லாத பட்சத்தில், அதைத் தேடி அலையாமல் சாதாரண நீரையே ஊற்றலாம்.
* எந்த அளவுக்கு வேகமாகச் செயல்படுகிறோமோ அந்த அளவுக்கு அதன் வீரியத்தைத் தவிர்க்கலாம். கிட்டதட்ட 90 சதவிகிதத்துக்கு மேல் அதன் விளைவைக் குறைக்கலாம்.
* அமிலம் தவறி கண்களில் பட்டுவிட்டாலும், உடனடியாகக் கண்ணிலும் தண்ணீர் ஊற்றலாம். பிறகு, கண் மருத்துவரிடம் சென்று வைத்துப் பரிசோதித்துக் கொள்ளலாம்.
* அமிலம் வாயில் சென்றாலும், மூச்சுக் குழாய்ப் பாதிக்கப்பட்டாலும் அதற்கான மருத்துவரை அணுக வேண்டும்.
* அதேபோல், துணிகள் மீது ஆசிட் பட்டிருந்தால் உடனே அந்தத் துணியை மாற்றிவிடுவது அவசியம்.
* அமிலம் தாக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு வருவதற்குள் அது அவர்களின் தோலை சேதமாக்கிவிடுகிறது. எனவே, சுற்றியிருப்பவர்கள் திறம்படச் செயல்பட்டால் ஆசிட் வீச்சால் ஏற்படும் பாதிப்பு குறையும்" என்றார்.
ஆசிட் வீச்சைத் தடுக்க வேண்டி போராடி வரும் சமூகச் சேவகி சுவர்ணலதா, "ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவரையும், அதை விற்பவரையும் அடுத்த நாளே தண்டிக்க வேண்டும். அவர்களுக்குச் சட்டம் என்கிற பெயரில் மிகக் குறைந்தபட்ச தண்டனையே தருகிறார்கள். தண்டனைக் அதிகரித்தால்தான் தவறுகள் குறையும். ஆனால், இங்குப் பாதிக்கப்பட்ட குடும்பம்தான் பெரிதாகத் தண்டனை அனுபவிக்கிறது. விநோதினியின் அம்மாகூடத் தற்கொலைச் செய்துகொண்டார். இதைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது.
பெண்களின் முக்கியத்துவத்தையும், அவர்களை வதைக்கக்கூடாது என்பதையும் பள்ளியில் இருந்தே கற்று தர வேண்டும். சிறு வயதிலிருந்தே இதைச் சொல்லி வளர்த்தால் ஆசிட் வீச்சு போன்ற வன்முறை குறையும். ஒவ்வொரு பெண்ணும் நம் சகோதரி, தாய் போன்றவள் என்று நம் வீட்டுக் குழந்தைகளிடம் முதலில் புரிய வைத்தாலே போதும். பெண்களின் மீதான வன்மத்தை வேரோடு அறுத்துவிடலாம்" என்கிறார்.
- கு.அஸ்வின்
No comments:
Post a Comment