Blogger Widgets

Total Page visits

Thursday, January 1, 2015

நல்ல பேச்சே நமது மூச்சு

அலுவலகம் என்பது தொழிற்சாலையோ பொது நிறுவனமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில், நிதித் துறை, மனிதவளத் துறை, தொழில் துறை, எனப் பல துறைகள் இருக்கும். அவர்களுடன் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை மட்டும் பாதிக்கப்போவதில்லை. பலருடைய எதிர்காலமும் அதைச் சார்ந்திருக்கும்.



நம்முடன் பணிபுரியும் சகநண்பர்களுடனும் மேலதிகாரிகளுடனும், நமக்குக் கீழ் பணிபுரிபவர்களுடனும் நல்ல பெயர் எடுக்கவும், நல்ல உறவுகளை வைத்துக்கொள்ளவும் தொடர்புடைய பேச்சுத் திறன் மிகவும் முக்கியம்.

இதற்கு முக்கிய அடிப்படை நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக நீங்களே புரிந்து கொள்ளுவதும், மற்றவர்களுக்கு அதைப் புரிய வைப்பதும்தான்.

மொழியின் முக்கியத்துவம்

பொதுவாகத் தொடர்புடைய பேச்சுக்கு மொழி ஒரு சாதனமாகிறது. சிலர் வெவ்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்படலாம். வெளிநாட்டு அதிகாரிகளோடு தொடர்புகொள்ள நேரிடலாம். நாம் பேசுகிற மொழி அவர்களுக்கோ, இல்லை அவர்கள் பேசுகிற மொழி நமக்கோ தெரிந்திருக்க நியாயமில்லை. அதற்கு ஒரே தீர்வு ஆங்கிலம்தான்.

பெரும்பாலான இளைஞர்கள் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. தெரிந்தாலும் மற்றவர்கள் முன்னால் பேசப் பயப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் பேசுவது என்றாலே நல்ல இலக்கணம் தேவை என்று நினைக்கிறார்கள்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். தாய் மொழியைத் தவறாகப் பேசுவதுதான் தவறு. ஆங்கிலத்தில், தொடக்கத்தில் தவறாகப் பேசித் தவறுகளைத் திருத்திக்கொண்டு பயிற்சி செய்து பின் ஆங்கிலத்தில் ஆளுமை வளர்த்துக் கொள்ளலாம். மொழி என்பது ஒரு சாதனமே. அதைப் பேச்சாக மாற்றி, தொடர்பு கொள்ளும்போது நல்ல உறவு உண்டாகும்.

நம் தாய்மொழி நமக்கு உயர்வானதுதான். ஆனாலும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. நீங்கள் மொழிப்பற்று உடையவராக இருந்தால் உங்களுக்கு நான் யதார்த்தமாகச் சொல்வது “ஆங்கிலத்தைப் பேச்சில் வையுங்கள். தமிழை மூச்சில் வையுங்கள்.”

இப்போதிலிருந்தே சிறிது சிறிதாக ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தொடங்குங்கள். மற்றவர்களுடைய மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள். உடன் பணிபுரிபவரின் மொழியில் பேசினால் நெருங்கிய தொடர்பு ஏற்பட வாய்ப்புண்டு.

கூர்ந்து கவனித்தல்

அடுத்தவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தல் அவசியம். அந்தக் கவனம் நம் வேலையைத் திறம்படச் செய்ய உதவும். செய்யப்போகிற வேலையில் நல்ல தெளிவு கிடைக்கும். சந்தேகத்தில் செய்கிற வேலை பல பிரச்சினைகளை உண்டு பண்ணிவிடும். நமக்குப் புரிந்துவிட்டதுபோலத் தீர்மானம் செய்துகொண்டு செய்யும் வேலையில் தவறு ஏற்பட்டால், உறவுகள் முறிந்து நம் எதிர்காலம் பாதிக்கும்.

அலுவலகத்தில், கம்யூனிகேஷன் என்பது மேலதிகாரிகளிடமிருந்து கீழ் மட்டத்துக்கும், கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்துக்கும் நடக்கும். நீங்கள் ஒருவேளை மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவுகளைப் பெறலாம். சில சமயத்தில் உங்களுக்குக் கீழுள்ளவர்களுக்கு உத்தரவுகளையோ அறிவுரைகளையோ சொல்லலாம். பொதுவாக, நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் மனதில் கொள்ள வேண்டியவை:

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்

#அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பில் பாதிப்பு ஏற்படுத்தாமல் பேச நினைப்பது.

#அடுத்தவர்களைக் கடிந்துவிடுவோமோ என்று நினைப்பது.

#அலுவலக நிர்ப்பந்தங்களோ , நம்முடைய கலாச்சாரப் பாதிப்போ நம்மைத் தாக்கி, அதனால் நினைத்ததைப் பேச முடியாமல் இருப்பது.

#எதைப் பேச நினைத்தாலும் நான் இதைச் சொல்லட்டுமா என்று பயத்துடன் பேசுவது.

இந்த உணர்ச்சிகளை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது?

அலுவலகத்தில் உங்கள் உணர்வுகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் உங்களை யாராவது புண்படுத்திவிட்டார்களா அல்லது ஏதாவது தர்மசங்கடமா அல்லது கோபமா?
#எதுவாக இருந்தாலும் இரண்டொரு வார்த்தைகளில் முடித்து விடுங்கள். குறிப்பிட்ட எண்ணத்தை மட்டும் வெளிப்படுத்துங்கள்.

#உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காதீர்கள்.

#பேசுவதற்கான நல்ல இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுங்கள்.

#நான்தான் தவறு செய்து விட்டேன், நான்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற தொனியில் பேசுங்கள்.

பொதுவாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை,

#ஒருவரிடம் பேசத் தொடங்கும் முன் நம்முடைய எண்ணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

#எதைப் பற்றிப் பேசப் போகிறோம். ஒரு திட்டத்தைப் பற்றியா அல்லது வெறும் சந்திப்பா அல்லது யாரிடமாவது தனியாகப் பேசப் போகிறோமா என்பது மனதில் தெளிவாக இருக்கட்டும்.

#நம்பிக்கையுடன் பேசுங்கள்.

#உங்களுடைய குரலும் தொனியும் ஏற்ற இறக்கங்களோடு, பேசுகின்ற பொருளுக்கு ஏற்றாற்போல இருக்கட்டும்.

#உண்மையைப் பேசுங்கள். உங்களுடைய பேச்சு நேர்மையானதாக இருக்கட்டும். எந்த உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமோ அதை நேர்மையாக வெளிப்படுத்துங்கள்.

#ஒரு விஷயத்தைப் பிடிக்காமல் செய்வது, வேண்டாம் என்று சொல்வது எனக்கு உடன்பாடு இல்லை, என்று சொல்வதில் தவறில்லை. “நாம் கேட்டால், நமக்குத் தெரியவில்லை என்று நினைத்துவிடுவார்களோ அல்லது பிறர் கோபப்படுவார்களோ” என்று நினைத்து விடாதீர்கள்.

#மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பளியுங்கள்.

#நான் என்ற ஈகோவை விட்டுத் தள்ளுங்கள்.

இதைக் கவனத்தில் கொண்டால் உங்களின் பணியிடத்தில் உங்களின் பேச்சு சிறப்பானதாக மதிக்கப்படும்.

No comments: