ஆட்டோ ஒன்றின் பின்புறத்தில், "யாமிருக்க நடை ஏன்?' என எழுதப்பட்ட வாக்கியம் கண்ணில்பட்டது. பக்தி மணம் கமழும் வாசகம் ஒன்றை அடியொற்றி, ஆட்டோ பயணத்துக்கேற்ப வாசகம் எழுதிக்கொண்ட அந்த ஓட்டுநரின் வார்த்தை ஜாலம் ரசிக்கவைத்தது.
சில மாதங்களுக்கு முன்புவரை ஆட்டோக்களில் எவ்வளவு பணம் கேட்பார்களோ என்ற பயத்துடனேதான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் கொஞ்சம் நிம்மதியுடன் ஏற முடிகிறது.
மேலும், ஏறக்குறைய ஆட்டோ கட்டணத்துக்கே அழைத்துச் செல்ல கால் டாக்ஸிகளும் வந்துவிட்டன. இதனால், இப்போதெல்லாம் அடிக்கடி கால் டாக்ஸியில், அதுவும் சில நேரங்களில் ஏசி கால் டாக்ஸியில் பயணம் செய்ய முடிகிறது.
எல்லோருமே நடக்கத் தொடங்கிவிட்டால் ஆட்டோ, கார், கால் டாக்ஸி என தங்கள் வாகனங்களை நம்பி வாழ்க்கை நடத்துவோரின் நிலை திண்டாட்டம்தான்.
இருந்தபோதிலும், ஆட்டோ, கார்களை மட்டுமல்லாமல், இருசக்கர வாகனங்களையும் அவசரத்துக்கோ, அத்தியாவசியத்துக்கோ மட்டும் பயன்படுத்திக்கொண்டு மற்ற நேரங்களில் முடிந்தவரை நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதே சாமானிய மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு (பர்ஸூக்கும்) நல்லது.
பொதுவாக, உடல் நலத்துக்குத் தேவையானவற்றை நம்மைவிட்டுத் தள்ளிவைப்பதே பேஷன் என்றாகிவிட்டது. "ஊருடன் ஒத்துவாழ்' என்பதைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், நாமும் சமுதாய ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து நடக்க வேண்டியதாகிவிடுகிறது.
உணவு, உடை, உடல் ஆரோக்கியம் போன்றவற்றில் நன்மை தருபவற்றைவிட, எது பாதகமானதோ அவற்றையே விரைந்து பின்பற்றி நடக்கப் பழகி விடுகிறோம்.
எண்ணெய்ப் பலகாரங்கள், துரித உணவு, எப்போதும் நொறுக்குத் தீனி, எதற்கெடுத்தாலும் குளிர்பானம் என, பெரியவர்கள் உண்பதைப் பார்த்து குழந்தைகளும் அதற்குப் பழகிவிடுகின்றனர். "அடிக்கடி நொறுக்குத் தீனி; ஆரோக்கியத்தை நொறுக்கும் தீனி' என்பதை நாம் எண்ணிப்பார்த்து நடப்பதில்லை.
இளமை முதலே சுறுசுறுப்பாக நடக்காமல், ஒரே இடத்தில் இருந்தே பழகிவிட்டால், முதுமையில் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருத்துவமனையாய் தேடித்தேடி நடக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
அதற்காக, அசை போட்டுக் கொண்டோ, வயிறு புடைக்க உண்டு விட்டோ, காலைக் கடன்களைக் கழிக்காமலோ "கடனே' என நடைப் பயிற்சி மேற்கொள்வது தவறு. முறையான நடைப் பயிற்சியே நல்லது.
நடைப் பயிற்சிக்குச் செல்லும் பலர் தங்களது நாயைத் தங்களுடன் அழைத்துச் செல்வர். சிலர் தங்கள் மனைவியையோ அல்லது நண்பரையோ அழைத்துச் செல்வதுண்டு.
சில தனிமை விரும்பிகளோ தங்களது தொப்பையை மட்டுமே துணைக்கு அழைத்துச் செல்வதுண்டு. நாயும் நண்பர்களும் நாம் அழைத்தால்தான் வருவார்கள். தொப்பையோ அழைக்காமலே கூடவரும்; எது எப்படியாயினும் நடப்பது நல்லது.
நாள்தோறும் நடைப் பயிற்சியில் ஈடுபட்டால் உடல் வலிமை பெறுவதுடன் மனதுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது.
நாள்தோறும் இப்பயிற்சியில் ஈடுபட முடியாதவர்கள் வாரத்தில் ஐந்து நாள்கள் நடந்தால்கூட போதுமானது. ரத்த ஓட்டம் சீரடையும். நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும். நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்வடையும். அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது. முதுகு நரம்புகள், எலும்புகள் உறுதிப்படுகின்றன. வயிற்றுத் தொப்பை குறைகிறது.
மாரடைப்பு வரும் அபாயமும், கெட்ட கொழுப்புத்திறனும் சர்க்கரையின் அளவும் குறையும். ஆழ்ந்த தூக்கம் வரும். நல்ல கண் பார்வை கிடைக்கும். எல்லாருமே நாள்தோறும் சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடக்கலாம்.
காலாற நடப்பதில் இத்தனை நன்மைகள் கிடைக்கின்றன. இத்தனை விஷயங்களையும் பட்டியலிட்டு, நிபுணர்கள் உத்தரவாதம் அளித்த பிறகும் நடைப் பயிற்சியை தொடங்காமலிருக்கலாமா?
ஆனாலும், "நடப்பது நடக்கட்டும், நாம் ஏன் வீணாக நடக்க வேண்டும்' என எண்ணுவோரும் இல்லாமலில்லை. எதுவும் நடந்தபின்னர் நினைத்துத் தவிப்பதைவிட, முன்னெச்சரிக்கையுடன் நடக்கும் முன்பே உணர்ந்து "நடப்பதுதானே' நல்லது?
By
No comments:
Post a Comment