Blogger Widgets

Total Page visits

Sunday, December 28, 2014

படித்துக்கொண்டே இருப்போம்!

இந்தியாவில் கற்றோர் மிகுதியாக உள்ள மாநிலம் கேரளம். புத்தகம் வாசிப்போர் மிகுதியாக உள்ள மாநிலம் மேற்கு வங்காளம். புத்தகம் மிகுதியாக வெளியாகும் இந்திய மொழிகளில் முதலாவது இடம்பெற்றிருப்பது இந்தி. திரைப்படம், தொலைக்காட்சி முதலான காட்சி ஊடகங்களும், கிரிக்கெட் முதலான பொழுதுபோக்கு ஊடகங்களும் கணிசமான அளவு படிப்பைப் பாதிக்கின்றன.
இத்தடைகளை எல்லாம் மீறி நூல்களைப் படிக்க வாய்ப்பும் தேவையும் ஒரு நாட்டில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் புதிய புதிய கருத்துகள் எல்லாருக்கும் சென்று சேரும். புதிய கருத்துகளை எழுதுவோரும் ஊக்கம் பெறுவர்.
தமிழைப் பொருத்த அளவு நூல்களின் வரத்து கற்றவர் எண்ணிக்கை அளவு தொடர்ந்து பெருகுவது இல்லை. கற்றவர் பிளஸ் 2-வோ, பிற பட்டப் படிப்புகளோ படித்துவிட்ட பிறகும் படித்துக் கொண்டிருக்கும்போதும் நூல்களை வாசிக்கும் பழக்கத்தைப் பெருக்கிக் கொள்வது இல்லை.
பொதுவாகத் தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் நூலகப் பதிவுகளைக் கல்லூரி முதல்வர்களில் சிலர் அன்றாடம் மாலையில் அமைதியாகச் சென்று பார்ப்பது உண்டு. யாரார் நூலகத்திற்கு வந்து செல்கிறனர் என்பதையும், புத்தகம் எடுத்துச் செல்கின்றனர் என்பதையும் கூர்ந்து கவனிப்பார்கள்.
விரிவுரையாளர்களில் சிலர் தம்முடைய பாடப்பொருளுக்குத் தக்க நூல்களை எடுத்துச் செல்வது மட்டுமன்றி, பெரும்பெரும் நாவல்களையும் சிறுகதைகளையும் தம் வீட்டில் உள்ளோர் படிப்பதற்காக எடுத்துச் செல்வதுண்டு. சிலர் நூலகம் பக்கமே வருவதில்லை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1963-வாக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி வே. சுப்பிரமணிய நாடார் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அப்பல்கலைக்கழகத்தில் உள்ள பேரரங்கான ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில் வாசிப்போர் அரங்கம் நடத்துவார்.
அங்கு பயிலும் மாணாக்கர், தாம் அந்த வாரம் படித்த புதிய புத்தகம் பற்றி மேடை ஏறிப் பேசவேண்டும். ஆண்டு இறுதியில் மிகுதியாக நூல் வாசித்தோர்க்குத் தனிப் பரிசுகளைத் துணைவேந்தர் தன் சொந்தச் செலவில் கொடுப்பார்.
ஞாயிற்றுக்கிழமைதோறும் விடுமுறை என்றும் பார்க்காமல் துணைவேந்தர் காலை 10 மணி முதல் 1 மணி வரை வந்து அமர்ந்திருப்பது அதிசயம்.
அந்தப் பேரரங்கு முழுதும் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் அமரமுடியும் என்றாலும், சில நூறு பேராவது வந்து அமர்ந்திருப்பர். நோக்கம், மாணவரிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் பெருக்கவேண்டும்.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக இருந்து அதனை நிறுவி வளர்த்த அறிஞர் கே. வெங்கடசுப்பிரமணியம் புத்தக விரும்பி. எனவே, ஒவ்வோர் ஆண்டும் பல்கலைக்கழக சார்பில் பெரும் புத்தகக் கண்காட்சியை நகரிலே செலவு செய்து நடத்துவார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இதுபோன்றதொரு புத்தகக் கண்காட்சியை அப்பல்கலைக்கழக நூலகர் துணைவேந்தர் துணையோடு நடத்துவார். ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாகக் காசு கொடுத்து அல்ல, கடனுக்காக புத்தகத்தைக் கண்காட்சியில் வாங்கிக் கொள்ளலாம். புத்தகம் வாங்கினதற்கு அடையாளமாகக் கையெழுத்து இடவேண்டும். உரிய தொகையைப் பல்கலைக்கழக நிதி அலுவலர் நேரில் பார்த்துச் செலுத்திவிடுவார்.
செலுத்தப்பட்ட பணம் 10 மாதத் தவணைகளில் ஆசிரியர் சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும். புத்தகம் வாங்கும் ஆசிரியர் தனக்குத் தேவைப்படும் புத்தகங்கள் மட்டுமல்லாமல் தன் மனைவி, மக்கள், உறவினர் முதலான அனைவருக்கும் தேவைப்படும் புத்தகங்களை இக்கடன் வசதியைப் பயன்படுத்திக்கொண்டு வாங்கிக் கொள்ளலாம். பின்னாளில் துணைவேந்தர் மாறியபோது இப்பழக்கம் ஏனோ கைவிடப்பட்டு விட்டது.
புத்தக வாசிப்பைப் பெருக்குவதற்காகப் புதுவைப் பல்கலைக்கழகத்திலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் அறிவு என்பதோடு தொடர்புடைய புதன்கிழமையில் அறிவரங்கம் நடத்தப்பெறும். இந்த அறிவரங்கத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டுரையை எழுதி வழங்குதல் வேண்டும்.
கல்லூரி ஆசிரியரிடையேயும் புத்தகம் வாசிக்கும் பழக்கமும் கட்டுரை எழுதும் பழக்கமும் வரவேண்டும் என்பதற்காக மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக எல்லையில் உள்ள கல்லூரிகளில் இவ்வறிவரங்கம் தொடர்ந்து நடத்தப்பெற்றது.
நோக்கம், ஆசிரியர்களை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்பதாகும்.
பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்று, வேலைக்கு அலைந்து, வேலை கிடைத்தவுடன் ஆசிரியராக அமர்கிறவர்கள், தொடர்ந்து தம் பாடப்பொருளில் வெளிவரும் புதிய புதிய நூல்களைப் படிப்பதில்லை.
அவர்கள் படிக்க படிக்கத்தான் புதிய கருத்துகளையும் புதிய செய்திகளையும் வகுப்பறையில் மாணவர்களுக்குச் சொல்லமுடியும். பழைய புத்தகங்களிலும் பழைய குறிப்பேடுகளிலும் உள்ள செய்திகளை மட்டும் வாந்தி எடுப்பதால் வளர்ச்சி ஏற்படாது.
புதிய புத்தகங்களை எழுதவும், வெளியிடவும் அப்புத்தகங்களில் உள்ள கருத்துகள் பரவவும் வேண்டுமென்றால், தொடர்ந்து விடாமல் நூல்கள் வெளிவந்துகொண்டே இருக்க வேண்டும். அண்மையில் ஐரோப்பிய, அமெரிக்க, ஜப்பான் பகுதி நாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கு பரவியுள்ள தொலைக்காட்சி, மின்னஞ்சல் முதலான காட்சி ஊடகங்களால் புதிய நூல்வரத்து நின்றுவிடவில்லை என்பதை நேரில் காணமுடியும்.
இரயிலிலும் விமானத்திலும் பயணம் செய்வோர் இன்னொன்றையும் நேரில் கண்டிருக்க முடியும். எல்லார் கையிலும் ஏதேனும் புத்தகங்கள் இருக்கும். பயணி தான் படிக்க ஏதேனும் புத்தகம் வேண்டும் என்று கேட்டுப் பெறலாம். இதுபோன்ற அன்பழைப்பு நம் நாட்டிலும் பெருகவேண்டும்.
நெடுந்தூர இரயில் பயணங்களில் பெட்டிக்கு உள்ளேயே புத்தகங்களைக் கொடுத்துப் படிக்க வைத்து வாங்கும் நூலகங்களை அந்தந்த நிர்வாகம் நடத்த வேண்டும். அதற்காக வாசகரிடமிருந்து சிறு வாடகை பெற்றாலும் தவறில்லை.
தற்போது இரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் புத்தகக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றிற்கு மேலாக இரயில் பயணத்தின் ஊடேயும் புத்தகங்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்தல் வேண்டும்.
சென்னை இலயோலா கல்லூரி ஆங்கிலத் துறையிலும் தமிழ்த் துறையிலும் ஒரு சிறந்த பழக்கம் கடைப்பிடிக்கப் பெற்றது. அங்கு மதிப்பெண் கிரெடிட் ஆக வழங்கப்பெறும். புத்தக வாசிப்புக்கு என்று தனி கிரெடிட் உண்டு.
ஒவ்வொரு மாணவருக்கும் புதுப்புது புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் செய்வது. அவரே புதுப்புது நூல்களைப் படிக்க ஊக்குவிப்பது. அவர் ஒரு பருவத்தில் படித்த நூல்களை உரிய ஆசிரியரிடம் காட்டி அதற்கு என்று தனி கிரெடிட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
அதற்கு என்று தனி மதிப்பெண் வழங்கப்பெற்றது. இத்தகு பழக்கங்களை எல்லாக் கல்வி நிலையங்களிலும் கொண்டு வருவது கடினமில்லை.
அயல்நாடுகளில் பல்கலைக்கழக வினாத்தாள்களில் புத்தகப் பகுதியையே அப்படியே கொடுத்தும் புத்தகத்தையே அப்படியே கொடுத்தும் குறிப்பிட்ட நேரம் வழங்கி அந்த நேரத்திற்குள் நூல்களை வாசித்துச் சுருக்கி எழுதவேண்டும். அதற்குத் தனி மதிப்பெண் வழங்கப்பெறும்.
இப்படிப் பலவேறு வழிகளில் வெறும் பாடப்புத்தகப் புழுக்களாக மட்டும் இருக்கின்ற மாணவரைப் புதிய நூல் வாசிக்கும் பழக்கம் உடையவராக மாற்றுதல் வேண்டும். முன்பை விட நம் இளைஞரிடையே வாசிக்கும் பழக்கம் கூடியிருக்கிறது.
இப்பழக்கம் அந்தந்த வாரம் வெளிவரும் பொழுதுபோக்கு இதழ்களை மட்டும் சார்ந்திருக்கிறது. அத்துடன் இல்லாமல் அவற்றிற்கு அப்பால் புதிய நூல்களையும் படிக்கச் செய்வது பற்றி தொடர்புடைய அனைவரும் சிந்திக்க வேண்டும்.
இதன் விளைவு உடனடியாகக் கண்ணுக்குத் தெரியாது. காலப்போக்கில் தொடர்புடைய அந்த இளைஞர்க்கும் அந்த நிறுவனத்திற்கும் அந்தச் சமுதாயத்திற்கும் அந்த நாட்டிற்கும் பெரும் நன்மையைத் தரும்.

கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

No comments: