Blogger Widgets

Total Page visits

Thursday, December 18, 2014

பதினாறு படிக்கட்டுகள்

உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்களுக்கு, தாங்கள் பெரிய அளவில் வியாபாரம் செய்து அல்லது தொழிற்சாலைகளைத் தொடங்கி, பெரிய தனவந்தர்களாகி விட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. எனினும், அவர்களில் குறிப்பிட்ட சிலர்தான் தொடர்ந்து கட்டுக்கோப்பான உழைப்புடன் வாழ்க்கையில் முன்னேறி வெற்றியடைகிறார்கள்.
இதுபற்றி ஆராய்ந்தவர், சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த பத்திரிகையாளரான நெப்போலியன் ஹில். இவர் தனது இளம் வயதில், அமெரிக்காவின் தொழிலதிபரான ஆண்ட்ரூ கார்னகி என்பவரை பேட்டி காணச் சென்றார்.
ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு கையில் காசில்லாத பெற்றோருடன் 1848-ஆம் ஆண்டு குடியேறி, 60-ஆவது வயதில் (1908) உலகின் மிகப் பெரிய பணக்காரராக உருவானது எப்படி என்ற கேள்வியை அவரிடம் எழுப்பினார் பத்திரிகையாளர் ஹில்.
இந்தப் பத்திரிகையாளர் பிரபலமானவர் என்ற எண்ணம் தோன்றியதால், தனது முன்னேற்றம் பற்றிய எல்லா விஷயங்களையும் அவரிடம் எடுத்துரைத்தார் ஆண்ட்ரூ கார்னகி!
இந்த விவரங்களை புரிந்துகொண்ட பத்திரிகையாளர் ஹில், அது முதல் பல பணக்காரர்களைச் சந்தித்து, அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து "சிந்தியுங்கள் - பணக்காரர் ஆகுங்கள்' என்ற ஒரு புத்தகத்தை 1937-ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்.
தாமஸ் ஆல்வா எடிஸன், ஹென்றி ஃபோர்டு போன்ற பெரும் தனவந்தர்களைச் சந்தித்த ஹில், ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் இதுபற்றிய கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
12 ஆண்டுகளில் வாழ்க்கையில் வெற்றியடைந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சாதாரண மக்கள் என்று சுமார் 12,000 பேரைச் சந்தித்துப் பேட்டி எடுத்து, அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும் நடவடிக்கைகளையும் தெரிந்து கொண்ட ஹில், "வெற்றிக்குத் தேவையான 16 நெறிமுறைகள்' என்ற அட்டவணையைப் பிர
சுரித்தார்.
1. வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் தேவை. அதாவது, எந்தக் குறிக்கோளும் இல்லாமல் வாழ்க்கைப் பயணத்தை தொடர்வது, துடுப்பு இல்லாத ஒரு படகில் பயணம் செய்வது போன்றது.
2. திடமான குறிக்கோள் ஒன்று இருந்தால், அதை அடையும் தன்னம்பிக்கை உருவாகி விடும். தன்னம்பிக்கை உள்ள மனிதன் தன்னைத்தானே மிகவும் நம்புவான். தன்னம்பிக்கை உள்ள மனிதனை, அவனைச் சுற்றியுள்ளவர்களும் நம்புவார்கள்.
3. ஒரு நிறுவனத்தில் வேலையில் இருக்கும்போது தனது பணிகளை முடித்த பின், தான் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பவர்களுக்குப் பெரிய வெற்றி கிட்டும். அதை விடுத்து, தனது வேலையைச் செய்யாமல் டிமிக்கி கொடுத்து விட்டு, பேராசையுடன் அடுத்த வேலைகளில் திளைப்பது தோல்வியைத் தரும்.
4. கற்பனை சக்தியுடன் கூடிய சிந்தனைத் திறன் முன்னேற்றத்திற்கு அடிப்படை. 95 சதவீத மக்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றக் கனவும் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த 95 சதவீத மக்கள்தான் மற்றவர்களைப் பின்பற்றுபவர்களாக, சாதாரண வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.
5. நீங்கள் சிறந்த பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டங்கள் பெற்றிருக்கலாம். நிறையப் புத்தகங்களைப் படித்து அறிவைப் பெருக்கியிருக்கலாம். ஆனால், இந்த அறிவுக்குச் செயல்வடிவம் கொடுத்து சாதனைகளைச் செய்தால்தான் வெற்றி கிட்டும். இல்லையேல், இந்த அறிவைப் பெறாத சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரமே உங்களுக்குக் கிடைக்கும்.
6. நீங்கள் விரும்பியதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது.
7. தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் குணாதிசயம் இல்லாத மனிதன், வாழ்க்கையில் வெற்றியடைந்ததே இல்லை. கோபம், திமிர் ஆகிய இரண்டு குணாதிசயங்களும் உங்களுக்கு எதிராகச் செயல்படும் குணங்கள்.
8. மற்றவர்களின் வெற்றியை முறியடித்து வாழ்க்கையில் உச்சிக்குச் சென்றுவிட்டவர்கள், அடுத்து தங்களையே போட்டியாளர்களாக உருவகப்படுத்திக் கொண்டு மேலும் முன்னேறுகிறார்கள்.
9. எல்லோராலும் விரும்பப்படும் குணம் உங்களிடம் இருந்தால், நீங்கள் கேட்காமலே எல்லோரும் உங்களுக்குத் தேவையான உதவியைச் செய்வார்கள்.
10. மற்றவர்கள் கூறுவதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அதில் பொதிந்திருக்கும் உண்மை எது, பொய் எது என்பதைப் புரிந்து கொள்கிறவர்கள் விரைவில் வெற்றியடைவார்கள்.
11. குறிப்பிட்ட குறிக்கோள்களை நோக்கிப் பயணம் செய்பவர்கள், தேவையில்லாத விஷயங்களைத் தவிர்த்து விடுவார்கள்.
12. வெற்றியை நோக்கிப் பயணிப்பவர்கள், இடையில் வரும் சவால்களையும், எதிர்ப்புகளையும் கண்டு அஞ்சுவதில்லை.
13. தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால், துவண்டு விடாமல் தோல்வியின் குணாதிசயங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் தோல்வியடையாமல் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
14. தங்களுடன் சேர்ந்து உழைப்பவர்களுக்கு அன்பான ஒத்துழைப்பு வழங்குவது, வெற்றிப் படிக்கட்டின் முக்கியமான அம்சம். அவ்வாறு செய்யாதவர்கள்தான் தோல்வியைத் தழுவிய ஆட்சியாளர்கள் முதல் சர்வாதிகாரிகள் வரை என்பது சரித்திரம் நமக்குத் தரும் பாடம்.
15. வெற்றியடைந்து, மிகப் பெரிய தனவந்தராக உருவான பின்பும் முயற்சியில் தொய்வு கூடாது. தொய்வு ஏற்பட்டால் தோல்வி நிச்சயம்.
16. மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்த வேண்டும். இதுவே வெற்றி ஏணியின் கடைசிப் படி.
இதுபோன்ற 16 வெற்றிப் படிக்கட்டுகளை உருவாக்கித் தந்த ஹில் எனும் அறிவுஜீவி, முதன்முதலாக 1908-ஆம் ஆண்டு சந்தித்த ஆண்ட்ரூ கார்னகிதான், அமெரிக்காவில் 19-ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய வியாபார சாதனைகளைப் புரிந்து, தான் சம்பாதித்த செல்வத்தில் 90 சதவீதத்தை 1919-ஆம் ஆண்டில் நன்கொடையாக ஏழை - எளிய மக்களுக்காக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், 1848-ஆம் ஆண்டு தனது 13-ஆவது வயதில் ஏழை பெற்றோருடன் பிழைப்பு தேடி ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து, தபால், தந்திகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் வேலையில் சேர்ந்து, பின் தனது 25-ஆவது வயதில் ரயில்கள், தரைவழிப் பாலங்கள், எண்ணெய்க் கிணறுகள் ஆகிய வியாபாரங்களில் புகுந்து பணம் சம்பாதித்தார்.
பணத்துடன் சேர்த்து நற்குணங்களையும், உதவும் கரங்களையும் கொண்ட கார்னகி போன்ற செல்வந்தர்கள், இப்போது மிகவும் குறைவு என்பதுதான் இன்றைய நிலைமை!
ஹில் விவரித்த 16 வெற்றிப் படிக்கட்டுகள் மிக தெளிவான, விரிவான நடைமுறையை வெளிப்படுத்தியபோதிலும், ஆண்ட்ரூ கார்னகி இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைப் பாதையில் என்ன குறிக்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறுவது சுவையானது.
இது இன்றளவிலும் அமெரிக்காவில், "ஆண்ட்ரூ கார்னகியின் ஆணைகள்' என பெருமையுடன் கூறப்படுகின்றன. அதன்படி ஒரு வெற்றி பெறும் மனிதனின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் உண்டு:
  • முதல் பருவத்தில், தன்னால் முடியும் அளவிற்கு கல்வி கற்று தேர வேண்டும்.
  • இரண்டாவது பருவத்தில், தன்னால் முடிந்த அளவுக்கு செல்வத்தைச் சேர்க்க வேண்டும்.
  • கடைசிப் பருவத்தில், தனது செல்வத்தை தரமான, தகுதியான நற்பணிகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
1919-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி மரணமடைந்த ஆண்ட்ரூ கார்னகி, அதுவரையிலும் 480 கோடி டாலரை (இந்திய ரூபாய் மதிப்பீட்டில் 29 ஆயிரத்து 760 கோடி) தானம் செய்திருந்தார். அவர் இறந்த பின்னர் ஏழைகளுக்கும், வயோதிகர்களுக்கும் 3 கோடி டாலர் (ரூபாய் 186 கோடி) வழங்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்.
இவரது வாழ்நாளில் இவர் செய்த முயற்சிகளினால் உருவான உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இன்றும் நம்மை திகைக்கச் செய்பவை.
பிட்ஸ்பெர்ஃக் நகரின் கார்னகி ஸ்டீல் கம்பெனி (பின்னர் இது யு.எஸ். ஸ்டீல் கம்பெனி என பெயர் மாற்றப்பட்டது), நிறைய நகரங்களில் முதன்முறையாக பொது நூலகங்கள், நியூயார்க் நகரில் பொதுமக்களின் உபயோகத்திற்கான "கார்னகி மண்டபம்', நியூயார்க்கில் கார்னகி உலக அமைதிக்கான மையம், கார்னகி விஞ்ஞான மையம், ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் கார்னகி மையம், உலகப் புகழ்வாய்ந்த கார்னகி மெல்லான் பல்கலைக்கழகம், கார்னகி மியூசியம் ஆகியவை இவரது சொந்த மேற்பார்வையில் உருவானவை!
நற்குணங்களுக்கும் பணச் சேர்க்கைக்கும் தொடர்பு உண்டு என நிரூபித்த கார்னகியின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, ஏழை நாடுகளின் இளம் தொழிலதிபர்களில் சிலருக்காவது இந்த குணங்களை முன்மாதிரியாக விட்டுச்சென்றிருந்தால் ஏழ்மையும் அறியாமையும் உலகிலிருந்து சீக்கிரம் அகலும் என்ற பேராசை நமக்கு உருவாவதைத் தவிர்க்க முடியவில்லை!

By என். முருகன்,ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

No comments: