Blogger Widgets

Total Page visits

Thursday, December 18, 2014

வீட்டிலிருந்து தொடங்குவோம்

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுகாதாரத்தை மேம்படுத்த, அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும், அவை மக்களிடம் முழுமையாகச் சென்றடைவதில்லை.
அதற்குக் காரணம், திட்டத்தின் முழு விவரமும் அவர்களுக்கு விளங்காததேயாகும். இதற்கு சமீபத்திய உதாரணம் "தூய்மை இந்தியா திட்டம்'.
இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு அமைப்புகளும், கட்சியினரும் கையில் துடைப்பத்துடன் அங்குமிங்கும் ஓடியாடி, பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தியா தூய்மையாகிவிடுமா?
இவர்கள் தூய்மைப்படுத்திய இடம், மறுநாளே குப்பைக்கூளமாகிவிடும். இதுபோன்ற திட்டங்கள் வெற்றிபெற மக்களின் தொடர் ஒத்துழைப்பும், பங்களிப்பும் மிகவும் அவசியமாகும்.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை ஏதோ அரசியல்வாதியின் பேச்சாகவும், ஒரு குறிப்பிட்ட கட்சியின் கோஷமாகவும் மட்டும்தான் மக்கள் பார்க்கிறார்களே தவிர, இதில் நிறைந்திருக்கும் நாட்டின் நலனை யாரும் பார்ப்பதில்லை.
தன் வீட்டைத் தூய்மைப்படுத்தும் ஒருவர், வீட்டுக் குப்பையை வீட்டுக்கு வெளியே கொட்டுகிறார். அதைக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.
தன் வீடு மட்டும்தான் தனக்குச் சொந்தம் என்ற சிந்தனையில், வீட்டுக்கு வெளியே இருக்கும் நாட்டை மறந்து குப்பைகளைக் கொட்டுகிறார்கள். தன் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்களுக்கு, தன் நாடும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை வருவதில்லை.
நம் வீட்டுக்கு வெளியே இருப்பது நம் நாடுதான். நம் வீட்டைத் தூய்மைப்படுத்தி, நாட்டை அசுத்தப்படுத்துகிறோம் என்ற எண்ணம் வருவதில்லை. காரணம், தன் வீடு வேறு, நாடு வேறு என்ற எண்ணமே.
தன் வீட்டைப் போலவே நாடும் சுத்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் உதிக்கவேண்டும்.
இந்தத் திட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வீட்டில் இருந்தும் தொடக்கப்பட்டிருக்க வேண்டும்.
முதலில் வீடு, பிறகு சுற்றுப்புறம், தெரு, கிராமம், நகரம் எனப் படிப்படியாக தூய்மை இந்தியா வளர வேண்டுமே தவிர, கட்சிக்காரர்களின் மூலமும், ஊடகங்களின் மூலமும் மட்டும் இது சாத்தியமல்ல.
நாட்டைத் தூய்மையாக்கும் திட்டத்துக்கு தெரு அளவில், வட்ட அளவில், மாவட்ட அளவில் பொறுப்பாளர்களை நியமித்து, அவர்களிடம் இந்தத் தூய்மைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மக்களை ஊக்குவித்து நாட்டைத் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம்.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என அனைவரும் வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக தங்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என விதி இயற்றலாம்.
இவ்வாறு செய்வதன்மூலம், ஓரிரு ஆண்டுகளில், இந்தத் தூய்மைச் சிந்தனை மக்களின் மனதில் வேரூன்றி, அது அவர்களின் இயல்பாக மாறி, துய்மையான இந்தியா தானாகவே மலர்ந்துவிடும்.
மேலோட்டமாகப் பார்த்தால் குப்பைக் கூளங்களை ஒழிப்பது மட்டும்தான் இத்திட்டத்தின் நோக்கம் என்று நமக்குத் தோன்றலாம்.
ஆனால், இத்திட்டத்தின் பின்புலமாக பல்வேறு சமுதாய நலன்கள் நிறைந்திருப்பது உற்றுநோக்கினால் புரியும்.
நாம் தினசரி பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் ஆங்காங்கே வீசிவிடுவதால், அவை நிலத்தில் தங்கி, நிலத்தைப் பாழ்படுத்துவதோடு, மழைநீர் நிலத்துக்குள் போகவிடாமல் தடை செய்து, நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கிறது.
இதுபோன்ற குப்பைகளை இதற்கென நமது வீட்டருகே வரும் குப்பை வண்டிகளில் உள்ள மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளில் பிரித்துப் போடுவதன்மூலம் மண்ணுக்கும், நிலத்துக்கும் தீங்கு விளைவிக்கும் இத்தகைய பொருள்கள் பாதுகாப்பாக அழிக்கப்படுவதோடு, நம் மண்ணின் வளத்தையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்கலாம்.
மேலும், இன்றைக்கு நம்மை அச்சுறுத்திவரும் பல்வேறு தொற்று நோய்களுக்கு முக்கியக் காரணமே தூய்மையற்ற சுற்றுப்புறமும், அதனால் பெருகும் கொசுக்களுமேயாகும்.
நாம் நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும்போது இத்தகைய நோய்கள் நம்மை நெருங்காது.
எனவே, தூய்மை இந்தியா திட்டமானது ஒரு ஆரோக்கியமான, வளமான இந்தியாவை அமைப்பதற்கான அடிக்கல் என்பதை நாம் உணர்ந்து, அதை செயல்படுத்தினால் உண்மையான "தூய்மை இந்தியா' நிச்சயமாக உருவாகும்.

By இராம. பரணீதரன்

No comments: