நமது தகுதியுடன் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் தான்
சாப்ட் ஸ்கில்ஸ் என அழைக்கப்படுகிறது. இதை பாட புத்தகங்களில் படித்து பெற
முடியாது. உங்களது தொழில் நுட்பத் திறன்கள் மட்டுமே உங்களுக்கு வேலையைப்
பெற்றுத் தராது என்பதால் இவற்றைப் பெற முயற்சிக்க வேண்டும் என்றே ஐ.டி.
போன்ற துறைகள் எதிர்பார்க்கின்றன.
* மென்திறன்கள் உங்களது வேலையில் மேலே மேலே முன்னேற உதவுகின்றன.
* உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் அறிந்து கொள்ளவும் அவற்றை உருவாக்கிக் கொள்ளவும் மென் திறன்கள் உதவுகின்றன.
* உங்களது வாடிக்கையாளரோடும் சக ஊழியரோடும் உங்களுக்கு நட்பு ரீதியிலான
உறவு ஏற்படவும் இதனால் பணியில் நீங்கள் சாதனைகள் புரியவும் இவை
வழிவகுக்கின்றன.
* வேலை என்பது வெறும் பணம் மட்டுமல்ல.. நமது உணர்வோடு தொடர்புடையது என்பதை இவை தான் அடையாளம் காட்டுகின்றன.
மென்திறன்கள் எவை
* எதையும் சாதிக்க வேண்டும் என்ற விடா முயற்சி தான் உங்களிடம் அவசியம் காணப்படவேண்டிய மென் திறன். இதை நீங்கள் பெற்றிருக்கும் போது நீங்களும் நீங்கள் சார்ந்திருக்கும் குழுவும் எந்த வேலையையும் எளிதாக திறம்பட முடிக்க முடியும். இதனால் உங்களது குழுவானது வெகுவிரைவிலேயே பலரது கவனத்தை கவரக்கூடியதாக மாறி விடுவதை நீங்களே காணலாம்.
* ஐ.டி. துறையில் பணி புரிபவர் என்ற வகையில் பல மாநிலத்தவரோடும் சில
நாட்டினரும் கூட நீங்கள் பணி புரிய நேரலாம். பல கலாசாரம், பல மொழிகள், பல
இனம் என ஒருங்கே இணைந்து பணியாற்றும் ஐ.டி. சூழலில் தகவல் தொடர்பு என்பது
மிக முக்கியமானது. சிறப்பான தகவல் தொடர்பு இருந்தால் மட்டுமே உங்கள்
குழுவால் இலக்கை எட்ட முடியும். இன்டர்நெட், வீடியோ கான்பரன்சிங், தொலைபேசி
என எந்த ஊடகத்தின் வழியான தகவல் பரிமாற்றத்திற்கும் இது மிக உதவும்.
* உங்களது திறமையான அணுகுமுறை, சிறப்பான தகவல் தொடர்புத் திறன்
ஆகியவற்றைக் கொண்டு உங்களது குழுவை வழிநடத்திச் செல்வது அடுத்ததாகத்
தேவைப்படும் மென் திறன். இப்படி விளங்க, நீங்கள் இனிமையாக
பழகக்கூடியவராகவும் நட்பான மனோபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
* உங்களது குழுவில் பணியாற்றும் ஜூனியர் ஊழியர்களின் பலத்தை அறிந்து
அதற்கேற்ப பணிகளை பிரித்துக் கொடுக்க முனையும் குணத்தைப் பெற்றிருக்க
வேண்டும். சரியான நபருக்கு சரியான வேலை என்பது உங்களது அடிப்படை நோக்கமாக
இருந்தால் தான் இதைப் பெற முடியும்.
* சிறப்பாக இலக்கை எட்டும் போது, அதற்கான பாராட்டுக்களையும் பிற ஊக்க
வெளிப்பாடுகளையும் அதற்குக் காரணமான அத்தனை பேருக்கும் உரித்தாக்குவது ஒரு
நல்ல குணம். வெளிப்படையாக இது போல பாராட்டப்படும் போது அவர்களின் ஆர்வமும்
செயல்பாடும் இன்னமும் மேம்படும் என்பதை அறியுங்கள்.
* உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்வதும் மேலும் ஊக்கப்படுத்திக்
கொள்வதும் கூட முக்கியம் தான். உங்கள் குழுவினரையும் தட்டிக் கொடுத்து
சிறப்பாக பணி புரியச் செய்யும் குணமும் ஒரு சாப்ட் ஸ்கில் தான்.
* நகைச்சுவை உணர்வைப் பெற்றிருப்பது பலருக்கும் பிடித்த குணம் அல்லவா?
என்றாலும் செயற்கையாக இதை கொண்டு வர முடியாது. தவிர பல்வேறு கலாசாரங்களைச்
சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து பணி புரியும் போது அவற்றை தெரியாமல் கூட
கிண்டல் அடிப்பது ஆபத்தானது.
* உங்களிடம் பணி புரிபவரை புரிந்து கொண்டு அவர்களை வழிநடத்தும் திறனும் தேவை. இதனால் பணியிடத்தில் உறவுகள் மேம்படும்.
* விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சுபாவத்தைப் பெற வேண்டும்.
* ரிஸ்கில்லாத துறை எது தான் இருக்கிறது? தோல்விகளுக்குப்
பொறுப்பேற்பதும் வெற்றியை பகிர்ந்தளிப்பதும் உன்னதமான குணங்கள். இவை
இருக்கிறதா என பரிசீலித்துக் கொள்ளுங்கள்.
* படிக்கும் போதும் சரி பணி புரியும் போதும் அந்த குழுவில் ஒருவராவது
எதிர்மறையான சுபாவத்தைப் பெற்றிருப்பதைக் காணலாம். இவர்களைப் பொறுத்துக்
கொள்வதை பழகிக் கொள்ள வேண்டும். அவர்களை அனுசரித்து வழிக்குக் கொண்டு வர
வேண்டும்.
* இமெயிலில் தான் இன்றைய பல வேலைகள் நடைபெறுகின்றன. எனவே இமெயிலில்
சரியான மொழி நடை, தொடக்க அழைப்பு, கடித முடிவு போன்றவற்றை எளிதாக மற்றும்
ஜாக்கிரதையாக கையாளுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள்.
* பன்முகத் திறன்களைப் பெற பன்முகப் பணிகளை செய்து அனைத்தையும் சரியான திட்டமிடலோடு செய்திட பழகிக் கொள்ள வேண்டும்.
இந்தத் திறன்களைத் தான் பல நிறுவனங்கள் தேர்வுகள் மற்றும் நேர்முகத்
தேர்வுகள் மூலமாக உறுதி செய்து கொண்டு பணி வாய்ப்பைத் தருகின்றன. எனவே
இவற்றில் எது உங்களிடம் இருக்கிறது.. எது இல்லை என்பதை அறிந்து
இப்போதிருந்தே வளர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.
No comments:
Post a Comment