Blogger Widgets

Total Page visits

Tuesday, August 13, 2013

தலைவா விமர்சனம்

மும்பையை கதைக்களமாக எடுத்துக் கொண்டாலே தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு நினைவில் தோன்றுவது “ டான் “ கதைகள் தான். நாயகனில் தொடங்கி, பாட்ஷா விட்ட வழியில் கஜேந்திரா, ஜனா இப்படி பல படங்கள் மும்பை சுற்றிய கதைக்களத்துடன் கதாநாயகனை மும்பைக்கே பெரிய சூரனாக சித்தரித்தது. ஒரு பொழுதில் பல படங்கள் சரமாறியாக இதே கதைக்களத்துடன் வெளிவந்தது, இப்போது விடப்பட்ட நீண்ட இடைவெளியில் “ தலைவா“ கோல் எடுக்கப்பார்த்துள்ளது .

மும்பை தாராவியில் வாழும் தமிழர்களுக்கு பிரச்னை, அநியாயத்தை தட்டி கேட்க்கும் நடிகராக விஜய்யின் அப்பா. அங்குள்ள மக்களுக்கு கதிரவனாக திகழ்கிறார்,  மனைவி ரேகா. கணவன் உயிர் காக்க குண்டடிகளை தாங்கி  இறக்கிறார். வழக்கமான புளித்துப் போன ப்ளாஷ்‌பேக். தன்னுடன் இருந்தால் தன் மகனும் அழிவான் என்ற எண்ணத்தில் விஜய்யின் அப்பா, மகனை நாசருடன் அனுப்பி வைக்க, ஆஸ்திரேலியாவில் வாட்டர் கம்பெனி முதலாளியாக விஜய் வளருகிறார். ‘தமிழ் பசங்க‘ என்ற குழு வைத்து ஆஸ்திரேலியாவில் குத்தாட்டம் போட்டு கலக்கி எடுக்கிறார்.

அமலாபால் மீது காதலில் விழும் விஜய், ஒரு சூழலில் இந்தியாவிற்கு வரும் நிர்பந்தம் எழ, சொல்லாமல் ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்புகிறார். விஜய் இந்தியாவிற்கு வருகை தர, அவரது அப்பா கொலை செய்யப்படுகிறார். ‘ தேவர் மகன் ‘ கமலை போல் கடமைகளை எடுக்க வேண்டிய சூழல் விஜய்க்கு. தன் அப்பாவின் இடத்தை நிரப்ப, மக்களுக்கு நம்பிக்கை தர விஜய் கையில் கத்தி எடுக்கிறார். விஜய் எடுத்த கத்தி மக்களை காப்பதும், பழி தீர்ப்பதும் தான் இரண்டாம் பாதியின் கதை.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் விஜய் அமர்க்களமாக தெரிகிறார். பாடல்களிலும், சண்டைக் காட்சிகளிலும், மௌன பார்வைகளிலும் விஜய் சிக்ஸர் அடிக்கிறார். ‘ஜெய்ஹிந்த்‘ படத்து ரஞ்சிதா மாறி அமலாபாலுக்கு பெரிய ரோல். வெறும் அழகுப் பதுமையாக வளம் வராமல் ரீவால்வேர் ரீடாவாக உருமாறி இருக்கிறார். பொன்வண்ணன், சுப்பு அருணாசலம், ஒய்.ஜி.மகேந்திரன், உள்ளிட்டோரும் விஜய் கதாப்பாத்திரத்துக்கு பில்ட்டப் ஏற்றி விடுகின்றனர்.  விஜய், சந்தானம் கதாபாத்திரங்கள் தவிர மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் ரொம்ப மிகைப்படுத்தி காட்டபட்டிருக்கு.

படத்தின் ரசிக்கத் தக்க அம்சங்கள் என்றால் விஜய்யின் நடிப்பு, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, சந்தானத்தின் ஒன் லைனெர்ஸ், வாங்கண்ணா வணக்கங்கனா பாடல்.

படத்தில் சலிப்பை தரும் அம்சங்கள் : புளித்துப் போன திரைக்கதை இடைவேளைக்கு பிறகு கதையில் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை, நீளமாக டல்லாக பயணிக்கும் திரைக்கதை தொய்வு. ‘ ஐ எம் வெயிட்டிங் ‘, ‘ ஐ எம் பாக் ‘ இப்படி சின்ன வசனங்களுக்கு சரியான மவுசு இருக்கும் காலத்தில் ‘இது ஒரு வழி பாதை‘, ‘கத்தி எடுத்தா ஒன்னு காக்கும் இல்ல அழிக்கும்‘ இப்படி ஒரே பழைய கொட்டாவி வசனங்கள், அதுவும் ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் தேய்ந்த ரெகார்டர் போல் திரைக்கதையில் பயணிக்க செய்த விதம் வெறுப்பை தருகின்றது .    

எப்போதும் இந்தி, மலையாளம், இங்கிலீஷ் படங்களிருந்து கதையை டிப்பி காப்பி செய்யும் இயக்குனர் ஏ.எல்.விஜய் ‘பிரான்சிஸ் கொப்போலா’ இயக்கிய ‘காட் ஃபாதர் ‘ படத்திலிருந்து சுடப் பார்த்திருக்கிறார். என்ன பரிதாபம் என்றால் இதே டெம்ப்லேட்டில் நாயகன், தேவர் மகன், ஹிந்தியில் சர்கார், சர்கார் ராஜ் இப்படி பல படங்கள் வந்துவிட்டது. கிளாஸ் படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இயக்குனர் ஏ.எல்.விஜய் கிளாசிக் படத்திலிருந்து சுட்டு விட்டார். கதை, திரைக்கதையும் எழுதினால் தான் இயக்குனர் என்ற விதி உள்ளதா என்ன??  என்றால் அப்போது திரையுலகில் கதையாசிரியர் எதற்கு??

பாட்ஷா, நாயகன், தேவர் மகன் முதலிய படங்களை பார்க்காதவர்களால் ‘தலைவா’வை ரசித்து பார்க்க முடியும். ஆதிபகவன், மதுரை சம்பவம் பார்க்காதவர்கள் திரைக்கதையில் வரும் ட்விஸ்ட்களை புதுமையாக உணர்வர்.

மொத்தத்தில் : ஊரார் வீட்டு தோட்டத்து காய்கறியில் சமைக்கப்பட்ட கூட்டு ‘தலைவா‘. விஜய்யின் அமைதியான அழகான நடிப்பு ரசிகர்களை ஈர்க்கும், ஏ.எல்.விஜய்யின் இயக்கம் தாலாட்டாய் உறங்க வைக்கும்.

Wednesday, August 7, 2013

சொன்னா புரியாது விமர்சனம்

‘சென்னை-28’, ‘தமிழ்படம்’, ‘தில்லுமுல்லு’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிவா நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘சொன்னா புரியாது’! இந்தப் படத்தின் கதையும் சொன்னா புரியாது.. ஹி... ஹி... படமா? பார்த்தாதான் புரியும்.. என்றாலும் நமக்கு புரிந்த வகையில் இதோ.. இதுதான் கதை. அதாகப்பட்டது,

ஹீரோ சிவா சரியான சோக்குப் பேர்வழி. குட்டி, புட்டி... என வாழ்க்கையை தனக்கு பிடித்தமாதிரி சரியாக என்ஜாய் பண்ணும் மனிதர். ஆனாலும் அவங்க அம்மா மீரா கிருஷ்ணனுக்கும் பாட்டி வத்சலாவுக்கும் அப்படி ஒரு நல்ல பிள்ளை! மகனுக்கு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டுமென்பது மீரா கிருஷ்ணனின் ஆசை! ஆனால், சிவாவுக்கு கல்யாணம், மனைவி, குடும்பம் என்றாலே... ‘எங்‌கே தனது ஜாலி லைப் காலியாகிவிடுமோ?’ என்னும் பயத்தில் திருமணப் பேச்சே எட்டிக்காயாக கசக்கிறது! இருந்தாலும் அம்மாவின் பாதயாத்திரை பயமுறுத்தலுக்காக ஒரு பெண்ணை பார்த்து கல்யாணத்திற்கும் சம்மதிக்கிறார். அந்தப்பெண் ஹீரோயின் வசுந்தரா. அம்மணியோ, சிவாவுக்கும் ஒரு படி மேல்.. கேடி, கில்லாடி! அப்பா ஆர்.எஸ்.சிவாஜியின் பழைய பாடல் பயமுறுத்தலுக்காக கல்யாணத்திற்கு சம்மதிக்கும் தில்லாலங்கடி! இப்படி பெரியவர்களின் முன்னிலையில் இருவரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டு தங்களுக்கு நடக்க இருக்கும் திரமணத்தை தாங்களே தடுக்க போடும் மாஸ்டர் பிளான்கள் காமெடியாவதும், அதுவே இருவருக்குள்ளும் காதலை எழுப்புவதும்தான் ‘சொன்னா புரியாது’ (என்ன புரிந்ததா) படத்தின் மொத்த கதையும்!

நாயகர் சிவா, பேசுவது புரியாது, நிறைய பேசிக்கொண்டே இருப்பார் என்னும் பரவலான குற்றச்சாட்டு இந்தப் படத்திலும் பிரதிபலித்திருக்கிறது... என்றாலும் புரியாமல் எல்லாம் இல்லை... கடி, கொய்யா இலை வைத்திய காமெடி... ஓப்பனிங் சீனிலேயே நண்பனை அவமதிக்கும் இந்தி பார்ட்டி கூட்டத்தி்ல், ‘ரோசாஹே சின்ன ரோசாஹே... டபுள் சைடும் போட்டா தோசா‌ஹை...’ என ‘ரோசாப்பூ சி்ன்ன ரோசாப்பூ..’ ‘சூர்யவம்ச’ பாடலை தனக்கு தெரிந்த இந்தியில் டப் பண்ணி பின்னி பெடலெடுத்திருக்கும் ஆரம்ப காட்சியில் தியேட்டரி்ல் கேட்க ஆரம்பிக்கும் சிரிப்பு சப்தமும் விசில் சப்தமும் படத்தின் க்ளைமாக்சுக்கு முந்தைய இரண்டு ரீல் வரை அடங்கிவிடாதபடி படத்தை அனாயாசமாக நகர்த்தி செல்கிறார் மனிதர்! ஹேட்ஸ் ஆப் சிவா! கடைசி இரண்டு மூன்று ரீல்களையும் அதே பெப்பில் நகர்த்தி சென்றிருந்தீர்கள் என்றால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்! சரி, அதுபோகட்டும்.. நைஸ் கோட்,  இப்போ நைட் நேரம் எல்லா கல்யாண மண்டபமும் மூடியிருக்கும். காலையில போய் பார்க்கலாம்... உள்ளிட்ட டயலாக்குகள் எல்லாம் டயலாக் வெடிகளா?! ஹாவ்! என்னமா வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறீர்கள் சிவா?! ஆனாலும் தமிழ் படத்தில் ஆரம்பித்த குசும்பு படத்துக்கு படம் பிறர் படங்களை நக்கலடித்தே தீர வேண்டுமா என்ன? கொஞ்சம் யோசியுங்கள்!

நாயகி வசுந்தரா, சிவாவுக்கு ஏற்ற ஜோடி. சில இடங்களில் நடிப்பில் சிவாவையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் அம்மணி! பேஷ்! பேஷ்!

சிவா, வசுந்தரா மாதிரியே கங்கை அமரன், சிங்கமுத்து, ஆர்த்தி, ஆர்.எஸ்.சிவாஜி, மீரா கிருஷ்ணன், அல்வா வாசு, பிளேடு சங்கர், வத்சலா பாட்டி, ஃபன் ஆண்டர்சன் உள்ளிட்ட கெஸ்ட் ரோல், டெஸ்ட்ரோல் நடிகர்களும் சும்மா ஒரு பேச்சுக்கு கூட பெஸ்ட்ரோல் செய்திருக்கின்றனர். அதிலும் அந்த வத்சலா பாட்டி இவருக்கு எஃப்.பி.ன்னா ‘பேஸ் புக்’குன்னு தெரியலை.. இந்த ஆளு பாரஸ்ட்லேயே இருந்திருக்கலாம்., இந்த வீட்டுல பொண்ணு எடுக்க வேணாம்.. என ரிட்டயர்டு பாரஸ்ட் ஆபீசர் - ஆர்.எஸ்.சிவாஜி முன் ‘டேபும்’ கையுமாக அலட்டும் அலட்டல் இருக்கிறதே! அடி ஆத்தி... சரியான ஆளைத்தான் சிவாவின் பாட்டி ஆக்கி இருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ்!

சிவா - வசுந்தராவின் இயல்பான நடிப்பு, சரவணன் சந்துருவின் நச்-டச்-வசனம், யத்தீஷ் மகாதேவ்வின் இனிய இசை, சரவணனின் அழகிய ஒளிப்பதிவு, கிருஷ்ணன் ஜெயராஜின் எழுத்து, இயக்கம் உளளிட்ட ப்ளஸ் பாயிண்ட் ‘சொன்னா புரியாது’. படத்தில் இன்டர்வெல்லுக்கு பின்னான இழுவை உள்ளிட்ட ஒரு சில குறைகளை பெரிதாக வெளிக்காட்டாதது ஆறுதல்!

ஆக மொத்தத்தில் ‘சொன்னா புரியாது’ - ‘பார்த்தா புரியும்’.. ‘பார்க்கப் பார்க்க புடிக்கும்!’