Blogger Widgets

Total Page visits

Tuesday, June 23, 2015

அத்தியாயம் 18-நெருக்கடியில் நீங்கள் யார்?

முடிவெடுக்கும் திறனை ஆராய்ந்து பார்க்க, ரயில் வரும் கேள்வியைப் பார்த்தோம்.
ஒரு கிராமம், இரண்டு இரயில் பாதைகள். ஒன்று 15 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லை. இன்னொன்றில் தினமும் மாலை 4 மணிக்கு ரயில் வரும். அப்படி ஒரு நாள், பயன்பாட்டுத் தடத்தில் 10 குழந்தைகள் விளையாடுகிறார்கள். ஒரு குழந்தை மட்டும் பழைய தடத்தில் விளையாடுகிறது. ரயில் வந்துகொண்டிருக்கிறது. நீங்கள்தான் நிலைய அதிகாரி. ரயிலின் பாதையை மாற்றும் லீவர் உங்கள் கையில்… ரயில் பழைய பாதையில் செல்லுமா? தினசரி செல்லும் பாதையில் செல்லுமா? குழந்தைகளைக் காக்க, என்ன முடிவெடுப்பீர்கள்?
இந்தக் கேள்வி கேட்கப்படும்போது பெரும்பான்மையானோர் ஒரே முடிவைத்தான் எடுப்பார்கள்.
ரயிலை பழைய பாதைக்குத் திருப்பிவிடுவது! ஏனெனில், அதில்தான் ஒரு குழந்தை மட்டும் விளையாடிக்கொண்டிருக்கிறது. மற்ற 9 குழந்தைகளும் காப்பாற்றப்படும் என்று சிந்தித்தோம் என்று பதில் வரும்.
இதைத்தான் Emotional Decision Making என்று சொல்கிறோம். அதாவது உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது…
ஆனால், சரியான முடிவு இது இல்லை.
இந்த ரயில் பிரச்னையை இன்னும் ஆழமாக அணுகினால் போதும். நீங்கள் ஸ்டேஷன் மாஸ்டராக இருக்கும்பட்சத்தில், முதலில், ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லது என்று முடிவெடுப்பீர்கள். ஏனெனில், ரயில் ஒவ்வொரு நாளும் 4 மணிக்கு வரும் என்று தெரிந்துதான் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும். ஆகவே, ரயில் அருகில் வரும்போது, ஆண்டாண்டு காலமாக, பயன்படுத்தாமல் இருக்கும் பாதையில் சென்று நின்றுகொள்ளலாம் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கும்.
ஒரு குழந்தை மட்டும் பழைய பாதைக்குச் சென்றிருக்கும்பட்சத்தில், அது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும், நாம் குழந்தைகளுக்கு வழிகாட்ட விரும்பினால், அந்த பழைய பாதையை நோக்கி போகச் சொல்லிவிட்டு பேசாமல் இருக்கலாம்.
இப்போது, ரயில் அதன் பாதையில் வரும். குழந்தைகள் பழைய பாதையில் நிற்பார்கள். ரயில் அதன்போக்கில் சென்றுவிடும்.
ஆனால், நன்மை செய்கிறேன் பேர்வழி என்று பழைய பாதைக்கு ரயிலை திருப்பிவிட்டால் என்ன ஆகும்?
15 ஆண்டுகளாகப் பயன்படுத்தாத பாதை, - அப்படியெனில் அது பராமரிப்பே இல்லாமல்தான் இருந்திருக்கும். வேகமாக ரயில் அதன் மீது வரும்போது என்னவேண்டுமானாலும் ஆகலாம். அந்த வகையில் திடீரென்று அந்தப் பழைய தண்டவாளம் உளுத்துப்போய் இருந்து, ரயிலின் பாரம் தாங்காமல் உடைந்துவிட்டால் என்ன ஆகும்? மிகப்பெரிய விபத்து ஏற்படும். அந்த ஒரு குழந்தையோடு சேர்த்து, ரயிலில் பயணிக்கும் 1500 பயணிகளின் உயிருக்கும் ஆபத்து நேரிடும்.
மேலும், இன்னொரு பிரச்னையும் உண்டு. ரயில் அருகில் வந்துவிட்டது என்று தெரிந்ததும், விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் பழைய பாதையை நோக்கிப்போனால் என்ன ஆகும்? யாருமே மிஞ்சமாட்டார்கள்.
ஆக, ஸ்டேஷன் மாஸ்டரான நீங்கள் உணர்ச்சிவசத்தால் எடுக்கும் முடிவு, பெரிய சோகமான செய்தியாக மாறியிருக்கும்.
அப்படியெனில், அனைத்தையும் உணர்ச்சிவசப்படாமல் யோசித்து முடிவெடுப்பதற்கு என்ன பெயர்?
Rational Decision Making – விழிப்புணர்வுடன், தர்க்கரீதியாகச் சிந்தித்து முடிவெடுத்தால் போதும். அனைவரது வாயிலிருந்தும் ‘வாவ்’ நிச்சயம்!
ஆக, முடிவெடுப்பதிலும் ஒரு சரியான அணுகுமுறை தேவை என்பது புரிந்துகொள்ளலாம். ஏனெனில், பல நேரங்களில், நிறுவனங்களுக்கு அப்படிப்பட்ட திடீர், அதிரடி முடிவுகளை எடுக்கவேண்டி நேரிடும். அதனை எடுக்கவைப்பது அங்கு வேலை பார்க்கும் நீங்கள்தான் என்றால், அந்த முடிவை எடுத்ததே நாம்தான் என்று ஆகிவிடும். அந்த அடிப்படையில், ஒரு பிரச்னை ஏற்படும்போது எப்படி முடிவெடுக்கிறோம் என்று நிறுவனம் நம்மை எடைபோட்டுப் பார்க்கும்.
அதை நெருக்கடி நிலைச் சிந்தனை என்று தமிழில் சொல்லலாம். ஆங்கிலத்தில் CRITICAL THINKING என்கிறார்கள்.
மேற்கண்ட ரயில் கதை ஒரு நெருக்கடி நிலை முடிவெடுக்கும் திறனைச் சோதிக்கும் முயற்சிதான்! நிதானமாக அமர்ந்து, டீ குடித்துக்கொண்டே முடிவெடுக்க முடியாத நிகழ்வுகள் நம் நிறுவன வேலை வாழ்வில் அடிக்கடி நிகழும். அதில் எடுக்கும் பல தவறான முடிவுகள் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை படைத்தவை! அது நடக்காமல் இருக்கத்தான் நிறுவனங்கள் கொஞ்சம் கூர்மதியுடன் அப்படிப்பட்ட சரியான சிந்தனை உள்ள மனிதர்களை வேலைக்கு அமர்த்த முயற்சிக்கின்றன. 
நமக்கும் வாழ்வில், பல தருணங்களில், நெருக்கடி நிலை முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். அதனை நாம் உணர்ச்சிவசப்பட்டு அணுகினோமா? அறிவுப்பூர்வமாக அணுகினோமா? என்பதை வைத்தே அதன் விளைவு என்ன ஆகியிருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக, உணர்ச்சிவசப்பட்டு எடுத்த எல்லா முடிவுகளின் விளைவும் தவறாகத்தான் போயிருக்கும். அறிவுப்பூர்வ முடிவுகளின் விளைவுகள் நிச்சயம் முழுத் தவறாகப் போயிருக்க வாய்ப்பில்லை.
ஒரு காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்வில் எடுத்த நெருக்கடி நிலை முடிவுகளைப் பட்டியலிடுங்கள். அதில் நீங்கள் எடுத்த அதிகபட்ச முடிவுகள் உணர்வு சார்ந்திருந்தால், உங்கள் முடிவெடுக்கும் திறனை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டி இருக்கும்.
எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் பெரிய கடனாளி ஆகிவிட்டார். கடனை அடைக்க முடியாமல்போன தருணத்தில், கடன் கொடுத்த ஒருவர் வீட்டு வாசலில் வந்து சத்தம் போட்டுச் செல்லவும், என்ன செய்வதென்று தெரியாமல், அன்று இரவே விஷம் வாங்கிவந்து, உணவில் கலந்து மனைவி, பிள்ளைகளுக்குக் கொடுக்கும் முடிவுடன் கடைசியாக குடும்பத்துடன் அமர்ந்திருக்கிறார்.
அதற்குப்பிறகு நடந்ததுதான் அவரது வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது.
என்ன நடந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

No comments: