Blogger Widgets

Total Page visits

Tuesday, June 23, 2015

அத்தியாயம் 15- முடிவெடுக்க…முடிவு முக்கியம்

பொறுப்பாக இரண்டு வாரங்களாக நேர்முக்கியத்தேர்வுக்கு பொறுப்பு எவ்வளவு முக்கியம் என்று புரிந்தாலும், இந்தத் தொடரை பொறுப்பாகப் படித்துவரும் நண்பர்களுக்கு நன்றியுடன், அடுத்த எதிர்பார்ப்பை அலசுவோம். நிறுவனம் நடத்துவதில் இருக்கும் இன்னொரு சிக்கல், ஊழியர்கள் இரண்டுவிதமாகச் செயல்படும் மனநிலைதான்.! அதாவது தனக்கு எல்லாம் தெரியும். தானே எல்லா வேலையும் செய்துவிடலாம் என்று கொஞ்சம் அதீதமாக நம்பி, 10% சதவீத வெற்றியையும் 90% சொதப்பலையும் நிர்வாகத்துக்குப் பரிசளிக்கும் ஆட்கள் முதல் ரகம்!

எதுக்கு வம்பு? என்ற ஒரே தாரக மந்திரத்துடன், எதை எடுத்தாலும், எங்க சாரைத்தான் கேக்கணும் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு, தன்னால் எந்த ஒரு செயலும் நடக்காதமாதிரி செயல்பட்டு, வெற்றியோ, சொதப்பலோ எதையுமே நிறுவனத்துக்குப் பரிசளிக்காமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் நபர்கள் இரண்டாம் ரகம்.!

இதில் எது நல்லது என்று கேட்டால்…, இரண்டுமே தவறு என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. ஏனெனில், ஒரு நிறுவனத் தலைவர் தனக்கான ஊழியர்களை ஒவ்வொரு துறைக்கும் நியமிப்பதே, அந்தந்தத் துறையில் அனைத்து வேலைகளையும் அவர்கள் பார்த்து, தன்னிடம் பதில் சொல்வார்கள். அந்தத்துறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் நிதி, செயல்பாடு , முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம் என்று நம்பித்தான்!

ஆனால், மேலே கண்ட இருவிதமான நபர்களும் நிறைய குடைச்சலைக் கொடுக்கக்கூடியவர்களாக ஆகிவிடுவார்கள்.



ஆக, நேர்முகத்தேர்வில், இத்தனை கட்டங்களைத் தாண்டிய ஒரு இளைஞனை / ஞியை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்போவது அவர்களது முடிவெடுக்கும் திறன்தான்.. இந்த நேரத்தில்தான், இந்த ஆள் நமக்கு ஊழியராக வேண்டுமா, வேண்டாமா என்று நிறுவனம் முடிவெடுக்கும்.

நாலு வாரத்துக்கு முன்னாடிதானே, தீர்வுத் திறன்கிறதைப் பார்த்தோம், அதுவும் முடிவு எடுப்பதுதானே என்று உடனே தோன்றும். அதில்தான் சில வித்தியாசங்களை நாம் உணரவேண்டும். தீர்வு என்பது சிந்தனையின் முடிவு. ஆனால் முடிவெடுப்பது, செயல்வடிவத்தின் வாசல்!

தீர்வுத் திறன் என்பது ஒரு நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, அதற்கு அறிவும், பெட்டியைவிட்டுச் சிந்திக்கும் ஆற்றலும் தேவை! ஆனால், முடிவெடுக்கும் திறனுக்கு தீர்வுத்திறனுடன் சேர்ந்து,  கால் கிலோ தைரியம், கால் கிலோ பொறுப்புணர்வும் தேவை!

முடிவெடுக்கும் திறன் என்பது இரண்டுவிதமாக வேலையில் வெளிப்படும்.

நமது மேலதிகாரி அன்று வரவில்லை. அவரது அனைத்து தகவல் தொடர்புகளும் Not Reachable ல் இருக்கிறது. ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம். இன்று ஏதாவது முடிவு எடுக்கவில்லை என்றால், அது அவ்வளவுதான் என்ற நிலை! அந்தச் சூழலில், தீர்வு என்னவென்று தெரிந்தும், மேலதிகாரியின் அனுமதி இன்றி அதனை செயல்படுத்த தைரியமும், அப்படி எடுத்த முடிவால், ஏதேனும் பிரச்னை வந்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்வுடன் சேர்ந்து இருந்தால், சரியோ, தவறோ - அந்தச் சூழலை ஒரு சரியான ஊழியன் சிறப்பாகக் கடந்துவிடுவான்.

இரண்டாவது விதம் என்னவென்றால், மேலதிகாரி ஊரில்தான் இருக்கிறார். ஒரு முடிவை எடுக்கிறார். ஆனால், அவர் எடுக்கும் முடிவில் தவறு இருக்கலாம் என்று பல்வேறு காரணிகள்மூலமாக, ஊழியருக்குத் தெரியவருகிறது. உடனே

'எக்கேடாவது கெடட்டும்'

'சொன்னா, கேக்கவா போறாரு!'

'அதிகப்பிரசங்கி, முந்திரிக்கொட்டைன்னு திட்டிட்டா?'

'நாம அவசரக்குடுக்கையா முடிவை மாத்திச் சொல்லி, ஏதாவது பிரச்னை ஆகிட்டா?'

'நாம சொல்ற முடிவு சரியா இருந்தா என்ன கிரீடமா குடுக்கப்போறாங்க?' என்று பல்வேறு சிந்தனைகள் ஓடி, உண்மையில் நமக்குத்தோன்றிய -உணர்வை,- முடிவெடுக்கும் திறனை ஒடுக்கிவிடும்.

இதனை எப்படி வளர்த்துக்கொள்வது என்று பார்த்தால், பெரிய சூத்திரம் எதுவும் இல்லை.

ஒவ்வொரு நாளும் நாம் குறைந்தபட்சம் 26 முடிவுகளை எடுப்பதாக புள்ளிவிபரம் சொல்கிறது.




வீட்டில் காஃபி, டீ, ஹார்லிக்ஸ், க்ரீன் டீ போன்ற அனைத்து பானங்களும் கிடைக்கும்.  எதைக் கேட்கிறோமோ அதைத்  தருவார்கள் என்றால், , ஒருநாள் காஃபி கொடுக்கச் சொல்வோம். அன்றைய தினம் ஒரு நண்பரைச் சந்தித்துப் பேசும்போது, க்ரீன் டீயின் சிறப்பையும், அதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் பற்றி அவர் சிலாகித்தால், நாம் கொஞ்சம் குழம்பி அடுத்த நாள் காலையில் நம் வாயிலிருந்து 'எனக்கு க்ரீன் டீ' என்று வந்து விழும்..

இதுதான் துவக்கம். அதற்கு முன்னால், அலாரம் அடித்தவுடன்,  எழுந்திருக்க வேண்டாம் என்று எடுக்கும் முடிவாகட்டும்,

இந்த உடையை அணிவது.?

கிளம்பும் நேரத்தை நிர்ணயிப்பது,.

பைக்கா?, காரா?, பஸ்ஸா?.

காலை டிஃபனுக்கு இட்லியா? சப்பாத்தியா?

குறுக்கு வழியிலா? மெயின் ரோட்டிலா?

மேனேஜர் கண்ணில் படுவதா? வேண்டாமா?

முதலில் எந்த வேலையைப் பார்ப்பது?

போன்ற சின்னச்சின்ன கேள்விகளுக்கு விடையாக எடுக்கும் முடிவுகள்தான் அன்றைய நாளின் போக்கைத் தீர்மானிக்கின்றன. ஒரு சிலர் நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அன்று எடுத்த முடிவுதான் என் வாழ்க்கையையே மாற்றியது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். உண்மைதான்! வேலைக்குச் சேரும் ஊழியர் உண்மையில் முடிவெடுக்கும் திறனுடன் இருக்கிறாரா என்று நிறுவனம் அறிந்துகொண்டால்தான், அவரை சேர்த்துக்கொள்ளவேண்டுமா இல்லையா என்று முடிவெடுக்க முடியும்.

அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதை எப்படி வளர்த்துக்கொள்வது? அடுத்த வாரம் முடிவெடுப்போம்.

No comments: