நண்பர் என்பவர் எனக்கு ஒரு சிந்தனைப் பகிர்தலுக்குத்தான். அவரது ஆசாபாசங்களும், என்னுடையதும் வேறாயிருக்கலாம். ஒன்றாயிருந்தாலும் தவறில்லை. ஆனால், என்ன துறை எடுப்பது என்று இருவருமே தனித்தனியே சிந்தித்து, தன் பலம், பலவீனங்களை அலசி, அதன்படி முடிவெடுத்திருந்தால், வாழ்க வாழ்கவென்று வாழ்த்தலாம்.ஆனால், பொதுவாக என்ன நடந்துவிடுகிறது என்றால், ‘செந்தில், இன்ஜினீயரிங்கில் என்ன படிக்கலாம்னு இருக்க?’ என்று கேட்டால்,
சந்துரு மெக் படிக்கலாம்னு சொல்றான். அதுலதான் நல்ல ஸ்கோப் இருக்காம்!’
‘ஓ, அப்படியா? சந்துரு, இதை எதை வச்சு சொல்றானாம்?’
‘அவன் எதிர்வீட்டு பையன் பிரபுன்னு இருக்கான். அவன் அதான் எடுக்கப்போறானாம். அதனால சொல்றான். ஏன்னா, பிரபு ப்ளஸ்டூல 1175 மார்க் எடுத்திருக்கான்’
பிரபுவிடம் கேட்டால்,
‘எங்க அப்பா சொன்னாங்க!’
அவனது அப்பாவிடம் கேட்டால்,
‘சார், நான் ஒரு ஆட்டோமொபைல் கம்பெனில வேலை பாக்குறேன். அதே கம்பெனியில் என் பையனுக்கு என்னால இன்ஜினீயர் வேலை வாங்கிடமுடியும். அதனாலதான் சொன்னேன். மேலும், என் ஃப்ரெண்டு
வேலு, டெய்லி பேப்பர் படிக்கிறவர்! அவர்தான் சொன்னார். இப்போ கம்ப்யூட்டரெல்லாம் வேஸ்டாம்! அப்புறம், மெடிக்கல் படிக்கவைக்க காசு அதிகமா செலவாகும். மேலும் MBBS மட்டும் படிச்சா போதாது. ஏதாவது Speciality MD வேற படிக்கணும். பாவம் பையன் 26 வயசுலதான் வேலைக்குப் போகமுடியும். அதான் இந்த முடிவெடுத்தேன்’.
அந்த பேப்பர் படிக்கும் நபரைக் கேட்டால் இப்படிச் சொல்லுவார்.
‘மெக்கானிக்கல் படிச்சா, ஒரு மெக்கானிக் ஷெட்டாவது வச்சு பொழச்சுக்கலாம்ல சார்! அதான் சொன்னேன்’.
ஆக மொத்தத்தில், வேலுவின் கும்மாங்குன்ஸான கணிப்புதான், செந்திலை இயந்திரவியல் எடுக்கவைத்திருக்கிறது. ஆனால், ஆழமாகச் சோதித்துப் பார்த்தால், செந்திலுக்கு நன்றாக எழுதவும், பேசவும் வரும். அவன் ஜர்னலிஸம் படித்தால், பெரிய ஆளாக வாய்ப்பு இருக்கிறது.
‘நண்பன்’ படத்தில் விஜய் போகிறபோக்கில் அழகாகச் சொல்லுவார். ‘இவன் காதலிக்கிறது ஃபோட்டோகிராபிய, கல்யாணம் பண்ணிக்கிட்டது
இன்ஜினீயரிங்கை!’
அப்படி, தன் விருப்பத்திலேயே இல்லாமல், யாரோ ஒருவரின் திருப்திக்காகவோ, தன்னால் முடிவெடுக்க முடியாமலோ ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தவர்களை, நிறுவனங்கள் அடையாளம் கண்டு, அவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலையில் தக்கவைத்துக்கொள்வதே கடினம் என்று எண்ணி, அவர்களை ‘வேண்டாம்’ என்று நாசூக்காகவோ, நறுக்கென்றோ சொல்லிவிடும்.
உண்மையிலேயே நண்பன் சொன்னதை நம்பி, கண்ணை மூடிக்கொண்டு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், சேர்ந்த பிறகாவது அதனை நேசிக்கத் துவங்கியிருந்தால், நான்கு ஆண்டுகளில் அதன் மீது ஒரு பிடிமானம் வந்து, நேர்முகத் தேர்வை மிகவும் தைரியமாக எதிர்கொள்ளலாம். அந்த நேரத்தில் நண்பர் எந்தத் துறை? ஏன்? என்று கேட்கப்படும்போது, சாதுரியமாகப் பதில் சொல்லலாம்.
‘என்னால் உடனடியாக முடிவெடுக்கமுடியாமல், இன்ஜினீயரிங் எடுத்தேன்.
ஆனால், இப்போது அந்த முடிவை சரி என்று நிரூபிக்க என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறேன்’.
இந்தப் பதிலில் நேர்மையும் உறுதியும் ஒருங்கே தென்படுவதால், நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.
அல்லது, நண்பன் வேறு துறையில் இருக்கிறான். நான் வேறு துறையில் இருக்கிறேன் என்று சொன்னால், ஏன் அந்த முடிவெடுத்தீர்கள்? என்று அடுத்த கேள்வி வந்து விழும். அப்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
என் நண்பனும் நானும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டுள்ளோம். அவனுக்கு எது சரியாக இருக்கும் என்று நான் சொன்னேன். அதுவே அவன் மனதிலும் இருந்தது. அதேபோல் நான் எதைத் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவன் சொன்னான். அதன்படி முடிவெடுத்தோம் என்று யதார்த்தமாகப் பதில் சொன்னால், சிறப்பாக இருக்கும். நமது முடிவெடுக்கும் திறனை வைத்துத்தான், நம்மைத் தேர்ந்தெடுப்பதா வேண்டாமா என்று நிறுவனம் முடிவெடுக்கும். அதைக் கண்டறியத்தான் முன் அத்தியாயங்களில் பேசப்பட்ட கேள்விகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்பார்கள்.
சில முடிவெடுத்தல் தொடர்பான கேள்விகள் கதைபோல ஆரம்பித்து, எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று கேட்கப்படும்.அது ஒரு கிராமத்து ரயில்வே ஸ்டேஷன். அதில் மொத்தமே இரண்டு ரயில் பாதைகள்தான் இருக்கின்றன. ஒன்று 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவே இல்லை. இன்னொன்றில், காலை 8 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஒருநாளைக்கு 2 முறை ரயில் வந்து செல்லும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 3:59 மணி. பள்ளி செல்லும் சிறுவர்கள் பத்து பேர், ரயில் வரும் பாதையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரே ஒரு குட்டிப் பையன் மட்டும் ரயில் வராத தண்டவாளத்தில் சென்று விளையாடுகிறான். மற்ற அனைவரும், பயன்படுத்தப்படும் தண்டவாளத்தில் விளையாடுகிறார்கள்.ரயில் வரும் சத்தம் கேட்கிறது.
நீங்கள்தான் ஸ்டேஷன் மாஸ்டர்! உங்களுக்கு அங்கு இருக்கும் இரண்டு வழித்தடங்களில் ஏதாவது ஒன்றில் ரயிலைச் செல்லவைக்கும் அதிகாரம் இருக்கிறது. அதாவது, உங்களால் ரயிலின் பாதையை அந்த இடத்தில் மாற்றமுடியும். அந்த லீவர் உங்களிடம்தான் உள்ளது. அதிகபட்ச குழந்தைகள், ரயில் வரும் பாதையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு குழந்தை பயன்படுத்தமுடியாத, பழைய தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறது. ஆக, புதிய ட்ராக்கில் ரயில் வந்தால் 9 குழந்தைகள் பலியாவார்கள். பழைய ட்ராக்கில் சென்றால் ஒரு குழந்தை பலியாகும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது.
உங்கள் முன் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன.
1. லீவரை பயன்படுத்தி, ட்ராக்கை மாற்றி பழமையான பயன்படுத்தாத தண்டவாளம் வழியே ரயிலை போகச் செய்வேன்…
2. லீவரை மாற்றாமல் வேறு ஏதாவது உபாயம் செய்வேன்…
இதில்தான், நிறுவனம் வேலைக்கு எதிர்பார்க்கும் அடுத்த தகுதியும் ஒளிந்திருக்கிறது.
இதில் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?
No comments:
Post a Comment