இந்தியாவில் இணையதள சமத்துவப் பயன்பாடு வரும் நாட்களில் இருக்குமா என்ற கேள்வி இணையதள உலகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இணைய வழி தொடர்பில் இணைய தளங்கள் மற்றும் ஆப்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி இதுவரை அறிவுசார் விஷயங்களையும், ஆன்லைன் வர்த்தகங்களையும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் நடுநிலைமையோடு நாம் அணுகி வருகிறோம். நமக்கு என்ன தேவையோ அதை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து பயன்படுத்திவருகிறார்கள்.
அதாவது அனைத்து இணையதளங்களும், சரிசமமாக அணுகுவதாக இருக்கவேண்டும், சமச்சீரான வேகத்தை கொண்டதாக இருக்கவேண்டும். ஒவ்வொரு இணையதள தகவலுக்கான கட்டணம்(Data Cost) ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் (Per KB/Per MB). இதுதான் இணைய சமத்துவம் என்றழைக்கப்படுகிறது.
இந்த நடுநிலைமையைத் தகர்த்து, இணையத்தில் எதை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளவேண்டும், எவ்வளவு வேகத்தில் தொடர்பு கொள்ளவேண்டும், எவ்வளவு கட்டணம் செலுத்தி தளங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பதுதான் `ஏர்டெல் ஜீரோ` என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது ஒரு இணையதளத்தை அணுகுவதற்கே கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி கட்டணம் செலுத்தி பெறும் இணையதளமானது மிகுந்த வேகத்தில் கிடைக்கும். மற்ற இணைய தளங்கள் குறைவான வேகத்தில் கிடைக்கும். இது இணைய நடுநிலைமையை பாதிப்புக்குள்ளாக்குவதுடன், பல்வேறு இணைய வர்த்தக நிறுவனங்களுக்கும் பாதிப்பை உருவாக்கும் என்ற அச்சம் தற்போது இந்தியாவில் நிலவுகிறது.இது வாடிக்கையாளர்கள் மீது கூடுதல் செலவை சுமத்தும் உத்தி என்றும் கூறப்படுகிறது. இதனால் இணையதளம் பயன்படுத்துவோர் மத்தியில் கடுமையான அதிருப்தி உண்டாகியுள்ளது.
மேலும் செல்போன்களில் பயன்படுத்தும் சில ஆப்ஸ் வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பதும் `ஏர்டெல் ஜீரோ`வின் அங்கம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சந்தேகத்தின் விளைவாக இணையத்தைப் பாதுகாப்போம் என்று விமர்சனங்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் குவிந்து வரும் நிலையில், ஏர்டெல் ஜீரோ திட்டத்தில் இணைந்த பிளிப்கார்ட் நிறுவனம் அதிலிருந்து நேற்று விலகிக்கொண்டது.
இந்நிலையில், இணைய சமத்துவத்துக்கு தாங்களும் எதிரானவர்கள் அல்ல என இணையவழி சேவை நிறுவனங்களும் தற்போது கூறியுள்ளன. இந்திய சூழலுக்கு ஏற்றவாறு இணைய சமத்துவம் குறித்து நடுநிலையான தீர்வு காணவேண்டும் என்று இந்நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளதுடன், இணைய சமத்துவம் பற்றிய விவாதம் மிகவும் அவசியம் என்று கூறியுள்ளன. விவாதத்தின் முடிவில் இந்தியாவுக்கான இணைய நடுநிலை குறித்து அனைத்து தரப்பினரும் சரியான முடிவுக்கு வரமுடியும் என இந்திய செல்போன் சேவையாளர்கள் சங்கப் பொது இயக்குனரான ராஜன் மேத்யூஸ் கூறியுள்ளார்.
இதைத்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் துல்லியமாக செய்து வருவதாகவும் ராஜன் தெரிவித்தார். அதே போல் கடந்த நான்கு மாதங்களில், இரு முறை பலத்த கண்டங்களுக்கு உள்ளான ஏர்டெல் நிறுவனமும் இணைய சமத்துவத்துக்கு நாங்களும் ஆதரவு தருகிறோம் என்று கூறியுள்ளது. மேலும் ஏர்டெல் ஜீரோவின் கட்டணமில்லா சேவை (Toll Free) தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்ஸ் மற்றும் இணையம் வழியாகப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், ஏர்டெல் நெட்வொர்க்கில் உள்ள தங்கள் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு, தாங்கள் வழங்கும் சலுகைகள் குறித்த விவரங்களைத் தெரியப்படுத்தலாம். இந்த ஆப்ஸ் பயன்பாட்டிற்கு அந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மாறாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டேட்டா கட்டணத்தை ஆப்ஸ் க்கு சொந்தமான நிறுவனங்கள் செலுத்தவேண்டும் என்பது `ஏர்டெல் ஜீரோ` திட்டமாகும் என அந்நிறுவனம் புதிய விளக்கத்தை அளித்துள்ளது.
இந்த சேவையை பெற இதுவரை 150 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஏர்டெல் கூறியுள்ளது. ஆனால் இந்தத் திட்டமே மோசடி திட்டம் எனk கூறப்படுகிறது. தற்போது ஆப்ஸ்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கூறப்பட்டாலும், நாளடைவில் வலைத் தளங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். அப்போது எந்தெந்த வலைத்தள நிறுவனங்கள் பணம் தருகிறதோ அவற்றை மட்டுமே இணையவழி சேவை நிறுவனங்கள் அனுமதிக்கும். பணம் தராத நிறுவனங்களின் வலைத்தள பக்கங்கள் முடக்கப்படும். இது மிகவும் ஆபத்தானது என்பதுதான் அனைத்து தரப்பினரின் கருத்தாகும். எனவே ஏர்டெல் ஜீரோ திட்டம் இணைய சமத்துவத்துக்கு எதிரானதுதான் என்பதில் மாற்று கருத்தில்லை என்ற விமர்சனம் வலுத்துள்ளது.
இந்த ஆபத்தான திட்டத்தை முடக்கி இணைய சமத்துவத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிலை நாட்டவேண்டும், இணைய சமத்துவத்தை நீக்கி வாடிக்கையாளர்களின் பணத்தைப் பிடுங்கும் எந்தச் செயலையும் மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்க கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment