பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்கும் இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் தொடங்கியுள்ளது. இதனால், மாணவர்களின் கவனம் பாதிக்கப்படுமே! என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவலைப்படுகின்றனர்.
எனவே, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவலையைப் போக்க வேண்டியது மாணவர்களின் கடமையாக இருக்கிறது. இந்தியாவின் தேசிய விளையாட்டு வேறாக இருந்தாலும், இது ஒரு கிரிக்கெட் நாடு என்பதால், விளையாட்டு என்றாலே, கிரிக்கெட்தான் என்பதாக இருக்கிறது. அதுவும், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியான இதில், நடப்பு சாம்பியனாக இந்தியா களமிறங்குகிறது என்ற முக்கியத்துவமும் சேர்ந்திருக்கிறது.
எனவே, பள்ளி மாணவர்கள் (மாணவிகளைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கவலையில்லை) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அதிக கவனம் செலுத்தி, அதன்மூலம், தங்களது தேர்வின்மீது கவனம் சிதறி விடுவார்களோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது.
இந்த விஷயத்தில் மாணவர்கள் சிந்திக்க வேண்டிய அம்சங்கள்
* உலகக்கோப்பை கிரிக்கெட் என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கிரிக்கெட் வாரியங்களின் வருமானத்திற்காகவும்(நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான வருமானத்தை திரட்டுவதற்காக அல்ல), பொழுதுபோக்கிற்காகவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி.
* கிரிக்கெட் வீரர்கள், தங்களின் வருமானத்திற்காகவும், புகழுக்காகவும் அதில் விளையாடுகிறார்கள்.
* கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பதோ, ரசிப்பதோ அல்லது அதை விளையாடுவதோ எந்த விதத்திலும் தவறில்லை. ஆனால், உயர்கல்வியை நிர்ணயிக்கக்கூடிய அரசுத் தேர்வுகள் நடக்கும் சமயத்தில், அதில் கவனம் செலுத்தி, எதிர்காலத்தை தடுமாறச் செய்வது தேவையா?
* நமது நாட்டுப்பற்றை, உலகக்கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி ஆடுவதைப் பார்த்துதான் நிரூபிக்க வேண்டியதில்லை. நாட்டுப் பற்றை நிரூபிக்க இது சிறந்த வழியுமில்லை மற்றும் இதனால் நாட்டிற்கு குறிப்பிடும்படியான நன்மை எதுவுமில்லை.
* நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டுமெனில், நேரடியாக நாட்டிற்கு நன்மை செய்யும் விஷயங்களில் ஈடுபட வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை நம்மால் இயன்ற அளவிற்கு பாதுகாத்தல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளே நாட்டுப் பற்றை நிரூபித்தலுக்கான சிறந்த உதாரணங்கள்.
* கிரிக்கெட் போட்டிகளை நாள் முழுவதும் உட்கார்ந்து ரசித்து, அதுசம்பந்தமாக தொடர்ச்சியான விவாதங்களை நடத்தி, நமது நேரத்தை வீணாக்குவதைவிட, படிப்பிற்கிடையிலான ஒரு relaxation முறையில், போட்டிகள் தொடர்பான செய்திகளை கேட்டுக் கொள்ளலாம். ஆனால், நமது அணி வென்றாலும் சரி, தோற்றாலும் சரி, அதை விளையாட்டாக மட்டுமே நாம் கருத வேண்டும். தோல்வியை நினைத்து கவலையடைந்து, அதன்மூலம் உங்களின் கவனத்தை படிப்பிலிருந்து விலகிச்செல்ல விட்டுவிடல் கூடாது.
* இது ஒன்றும் பிற நாடுகளுடன் நடக்கும் போர் அல்ல; தோற்றுவிட்டால் பெரிய இழப்பு என்று கவலைப்படுவதற்கு. கிரிக்கெட்டில் நமது அணி தோற்பதால், நாட்டிற்கோ, நமக்கோ எந்த இழப்பும் ஏற்படாது. மாறாக, அந்தக் கவலையில், நாம் படிப்பை கோட்டை விட்டால்தான், நமக்கு மாபெரும் இழப்பு ஏற்படுவதோடு, அதன்மூலம் மறைமுகமாக, இந்த நாட்டிற்கும் இழப்பு ஏற்படுகிறது.
* சில மாணவர்களுக்கு, கிரிக்கெட்டின் மீது அலாதி ஆர்வம் இருக்கலாம். ஆனால், அதைவிட பொதுத்தேர்வு என்பது மிகமிக முக்கியமானது. கொஞ்ச நாட்களுக்கு, உங்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்தியேதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
* அணி வீரர்கள், அவர்களுடைய வெற்றிக்காக பாடுபடுகிறார்கள். எனவே, அதை வேடிக்கைப் பார்ப்பதைவிட, உங்களின் வெற்றிக்காக நீங்கள் பாடுபடுவதுதான் உங்களுக்கு முக்கியம்.
* இல்லையெனில், உலகக் கோப்பையை எந்த அணி வெல்கிறதோ, அந்த அணி வீரர்கள் வெற்றிக் கோப்பையுடன் சிரித்துக் கொண்டிருக்க, இங்கே நீங்களோ, உங்களின் மதிப்பெண் பட்டியலைப் பார்த்து அழுது கொண்டிருப்பீர்கள்!
No comments:
Post a Comment