கட்டமைப்பு வசதிகளில், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் இன்ஜினியர்களுக்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவில், மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட படிப்புகளுக்கு, அதிக அளவில் கிராக்கி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சிக்கு பல புதிய திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. 'நிடி ஆயோக்' அமைப்பை, மாற்றத்தை உருவாக்குதல் என்ற வகையில் ஏற்படுத்தி, மாநில முதல்வர்களையும் இடம் பெறச் செய்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுப்பயணங்களில், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில் வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகள் குறித்து வலியுறுத்தி வருகிறார்.அதிக அளவில், நெடுஞ்சாலைகளை ஏற்படுத்துதல், சாலை மற்றும் ரயில் போக்குவரத்தில் பெரிய பாலங்கள் அமைத்தல், புல்லட் ரயில் இயக்குதல், கடலோரப் பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், புதிய மின் திட்டங்கள் ஏற்படுத்துதல் போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் வரவுள்ளன.
100 'ஸ்மார்ட் சிட்டி':
பிரதமரின் மற்றொரு திட்டமான, 'மேக் இன் இந்தியா'வில், நாடு முழுவதும் புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், இந்தியாவிலேயே அதிக அளவுக்கு பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்தல் போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்களும் வரவுள்ளன. நாடு முழுவதும், 100 'ஸ்மார்ட் சிட்டி' உருவாக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணிகளுக்கு அனைத்து வகை இன்ஜினியர்களும் தேவைப்படுகின்றனர். வழக்கத்தை விட அதிக அளவில் இன்ஜினியர்கள் தேவைப்படுவதால், வரும் ஆண்டுகளில், இன்ஜினியரிங் படிப்புகளுக்கும் அதிக கிராக்கி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் படிப்புகளில், மாணவர்கள் அதிக அளவில் சேருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 லட்சம் பேர்: இதுகுறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன சேர்மன்பி.ஸ்ரீராம் கூறியதாவது:மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களால், அடுத்த, 10 ஆண்டுகளில், 25 லட்சம் இன்ஜினியர்கள் தேவைப்படுவர். உற்பத்தி துறை, வடிவமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆராய்ச்சி துறை, புதிய பொருட்கள் வடிவமைத்தல், தொழில்நுட்பக் கருவிகள் தயாரிப்பு என, பல துறைகள் வளர்ச்சி பெறும். இதுவரை பொறியியல் துறை வேண்டாமென்று ஓடியவர்கள் கூட, இதன் பக்கம் வர வேண்டிய நிலை ஏற்படும். தற்போது வரை, ஐ.டி., படித்த இன்ஜினியர்கள் மட்டுமே வெளிநாடு வேலை வாய்ப்புக்கு சென்றனர். இந்த நிலை மாறி, மற்ற இன்ஜினியர்களுக்கும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய முதலீட்டு திட்டங்கள்:
*ரயில்வே துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 8.71 லட்சம் கோடி ரூபாய் புதிய முதலீடுகள் வர உள்ளன.
*ரிலையன்ஸ், எல் அண்ட் டி போன்ற தனியார் நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளன.
*கோல்கட்டா துறைமுகத்தில், 11,600 கோடி ரூபாய்க்கு, மத்திய அரசு புதிய திட்டங்களை கொண்டுவருகிறது.
*2.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள், பல்வேறு துறைகளில் எதிர்பார்க்கப்படுகிறது.
*மின் துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 16 லட்சம் கோடி ரூபாய்க்கு புதிய திட்டங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
மத்திய அரசின் திட்டங்களால், வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக தொழிற்சாலைகளை அமைக்கும். இதனால், இன்ஜினியர்களின் தேவையும் அதிகரித்து, வேலைவாய்ப்பு பெருகும். அதேநேரம், ஐ.ஐ.டி., அண்ணா பல்கலை போன்ற மத்திய, மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், அரசின் பொருட்செலவுடன் படிக்கும் பொறியியல் பட்டதாரிகளை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லாமல், இந்தியாவில் பணியாற்ற கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்
பாலகுருசாமி,முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்
No comments:
Post a Comment