Blogger Widgets

Total Page visits

Monday, May 18, 2015

அத்தியாயம் 4 - கவனமே பிரதானம்!

ல்லூரியில் முழுமையாகப்(!) படித்தாயிற்று. அங்கு பல தொழில்நுட்ப, அறிவியல், கலை விவரங்களைக் கற்றுக் கொண்டாயிற்று! வேலை தேடத் தகுதி வந்ததாக நினைத்தாயிற்று! ரெஸ்யூமேவுக்கும், சி.வி.க்கும் வித்தியாசம் என்ன என்று புரிந்துகொண்டாயிற்று!
தரமான ரெஸ்யூமேவை உருவாக்கி, அதனைத் தேவையான அளவு பிரதிகள் எடுத்து வைத்துக் கொண்டாயிற்று! நிறுவனம் விரும்பும் வகையில், சரியான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியாயிற்று! நேர்முகத் தேர்வுக்கு முன்னதாக, ரெஸ்யூமேவின் மென்பிரதியை மின்னஞ்சல் செய்தாயிற்று!
இன்னமும் என்னதான் சார் எதிர்பார்க்கிறாங்க இந்த நிறுவனங்கள்? நிறுவனம் நம்மிடம் எதிர்பார்க்கும் முக்கியத் தகுதிகளில் முதன்மையானது – கவனம்!!
என்ன செய்வது? அதுதான் இங்கு மிகக் குறைவாக இருக்கும் ஒரே குணம்!
முழுமையாக ரெஸ்யூமேவை அடித்து முடித்து…
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மை! உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. இதில் ஏற்படும் ஐயங்களுக்கு நானே பொறுப்பு என்று ஒரு வாக்குமூலமும் எழுதி அதன் அடியில் உங்கள் பெயரை பிராக்கெட்டில் போட்டு, நாள், இடம் எல்லாம் சிறப்பாகப் போட்டிருப்பீர்கள்.
ஆனால், நேர்முகத் தேர்வு நடத்தும் அதிகாரியிடம் சென்று ரெஸ்யூமேவை கொடுத்த பிறகுதான்… நாக்கு கடிபடும்!

கையெழுத்து போட மறந்துவிட்டது. இடம், தேதி போட விட்டுப்போய்விட்டது.
நீங்கள் நாக்கு கடித்ததைப் பார்க்காவிட்டாலும், நீங்கள் கையொப்பம் இடவில்லை என்பதை சரியாகப் பார்த்துவிடுவார் மனிதர்!
அப்புறம் என்ன? அடுத்த ரெஸ்யூமே… அடுத்த நேர்முகத் தேர்வுதான்!!
ஏனெனில், ரெஸ்யூமேவில் உண்மை, உண்மை தவிர வேறொன்றுமில்லை பாணி டிக்ளரேஷன் எனப்படும் ஒப்புதல் வரிகள் இல்லாமலும், கையொப்பம் இடவேண்டிய தேவையும் இல்லாமல் இருந்தால், யாரும் நம்மைத் தவறாக எண்ணப்போவதில்லை.
ஆனால், நாமே உருவாக்கிய நம்முடைய சுயவிவரக் குறிப்பில், நாமே ஒரு கையொப்பம் இடும் தேவையையும் உருவாக்கி வைத்திருக்கிறோம். அதனை நாமே கவனமில்லாமல் விட்டுவிட்டால், எந்த நம்பிக்கையில் அவர்கள் வேலையை நமக்குக் கொடுப்பார்கள்?
இதற்கு முதல் காரணம் – கவனமின்மை!
இதில்தான் நம் கவனம் இனி இருக்க வேண்டும். பொதுவாக, இன்றைய கல்லூரி இளைஞர்கள் – குறிப்பாக, இந்தியக் கல்லூரி இளைஞர்களில் – 12 சதவீதம் பேர் மட்டும்தான் முழுமையான கவனத்துடன் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.
அதன்படி பார்த்தால், மீதம் உள்ளவர்கள் அதிகமான கவனக் குறைவுடன் செயல்படுகிறார்கள். நமது ரெஸ்யூமேவின் ஒரு எழுத்துப்பிழைகூட பூதாகரமாகப் பார்க்கப்படுவதற்குக் காரணம், ஒரு நிறுவனத்தின் கவனத்தையும் கருத்தையும் கவர்ந்து, அவர்களிடம் வேலைக்குச் சேர நம்மைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயத்தை உருவாக்க வேண்டியது ரெஸ்யூமே! அதையே இவ்வளவு கவனக்குறைவாகக் கையாள்கிறாரே, இவரை வைத்து நாம் எப்படி வேலை வாங்குவது? என்றுதான் நிறுவனத்தின் பிரதிநிதிக்கு முதலில் எண்ணம் வரும்!
அதனால்தான் –
       “அப்புறம் சொல்லி அனுப்புறோம்…”
       “HR-லே இருந்து கால் பண்ணுவாங்க…’’
           “We will mail you soon…’’
           “Inform you later…’’
           “All the best…’’
என்று சொல்லி அனுப்புவார்கள். அதையும் மீறி ஒரு சில அதிகாரிகள், என்ன காரணம் என்பதை நாசூக்காகவோ, நறுக்கென்றோ சொல்லிவிடுவார்க்ள்.
கையெழுத்துப் போடவே மறந்துட்டீங்களா?
நீங்களே கையெழுத்துப் போட ஒரு இடத்தை உருவாக்கிட்டு அதை ஏன் கவனக்குறைவா விட்டீங்க. ஸாரி, I am not impressed என்றும் விமரிசனங்கள் வரும்.
இதனை ஏன் இவ்வளவு நீளமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றால், ஒவ்வொரு நிறுவனமும் ஒரு திறமையாளரிடம் பார்க்கும் முக்கிய அம்சங்களில் முதன்மையான அம்சமான ‘கவனத்தில்’, அத்தனை கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வ தற்காகத்தான்.
ஏனெனில், கவனம் என்பது பார்ப்பது கிடையாது. அதாவது, நாம் தினசரி பல செய்திகளை, தகவல்களை, நிகழ்வுகளை, அசைவுகளை, நிறங்களை, எழுத்துகளைப் பார்க்கிறோம். அதில் எதையெல்லாம் கவனிக்கிறோம் என்று எண்ணிப் பார்க்கலாம்.
ஒரு சாதாரணமான உதாரணம்…
எல்லோரும் சாலையில் போக்குவரத்து சமிக்ஞை எனப்படும் சிக்னலை பார்த்திருப்பீர்கள். எனது கேள்வி இதுதான். ஒரு செங்குத்தான சிக்னலில் உள்ள விளக்குகளில் சிவப்பு நிறம் மேலே இருக்குமா? அல்லது கீழே இருக்குமா?
இந்தக் கேள்வியைக் கேட்ட பிறகுதான் உங்கள் மனம் சிக்னலை பற்றி சிந்திக்கத் துவங்கும். பிறகு அதனை சமீபத்தில் மேலே பார்த்தோமா? கீழே பார்த்தோமா? என்று நினைவுப்பெட்டகத்தில் இருந்து எடுக்கும். உடனே, பதிலாக கீழேதான் பார்த்த நினைவு என்று சொல்லும்! அல்லது மேலேதான் இருக்கிறது என்று நினைவுபடுத்தும். ஆனால், நான் கொஞ்சம் அழுத்தமாக, நன்கு யோசித்துச் சொல்லுங்கள் என்கிறேன். கீழே இருக்குமா? அல்லது மேலே இருக்குமா என்று உங்கள் பதிலை சந்தேகத்துக்கு உள்ளாக்கினால், குழப்பம் வந்துவிடும். இது பொதுவாக 85 சதவீத இளைஞர்களுக்கு ஏற்படும் சந்தேகம். உண்மையில் சிக்னல் எங்கு இருக்கும் என்பதை இந்த முறை சாலையில் செல்லும்போது கவனித்துவிடுங்கள்! பதில் சொல்லி உங்கள் கற்கும் வாய்ப்பை நான் கெடுக்க விரும்பவில்லை.
இத்தனை நாள் நீங்கள் சிக்னலை பார்த்திருக்கிறீர்கள். இப்போதுதான், கவனித்தோமா என்று சிந்திக்கிறீர்கள். மீண்டும் கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதுதான் முக்கியம். பார்ப்பது என்பது வேறு! கவனிப்பது என்பது வேறு! இது கேட்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும்கூடப் பொருந்தும்.
உடனடியாக, நாம் நல்ல கவனமானவர்தானே என்று மனத்துக்குள் கேள்வி வரும்! இந்த இடத்தில்தான் உளவியல்ரீதியாகச் சில கேள்விகளைக் கேட்கவேண்டி இருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு நேர்மையாகப் பதில் சொல்லிப் பார்த்துக்கொண்டாலே போதும். நம் கவனம் எந்தவிதத்தில் இருக்கிறது என்பதை அளந்துவிடலாம். அப்படி அளந்து விட்டால், அதன் குறை நிறைகள்படி கவனத்தை அதிகப் படுத்திக்கொள்ளும் சூத்திரமும் தெரிந்துகொள்ளலாம்.
இதோ கேள்விகள் -
1. பைக் சாவி, வீட்டுச் சாவி, மணிபர்ஸ் இவற்றில் ஏதாவது ஒன்றை கடந்த மூன்று நாள்களுக்குள் எங்கு வைத்தோம் என்று தெரியாமல் மூன்று நிமிடத்துக்கு மேல் தேடி இருக்கிறீர்களா?
2. உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண் என்ன?
3. உங்கள் வீட்டின் வரவேற்பறையில் கடந்த ஒரு மாதத்துக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன என்று தெரியுமா?
4. ரமேஷின் அப்பாவுக்கு மூன்று மகன்கள். அவர் ஒரு ரஜினி ரசிகர். முதல் இரண்டு மகன்களுக்கு அண்ணாமலை, அருணாசலம் என்று பெயர் வைக்கிறார். மூன்றாவது மகனுக்கு என்ன பெயர் வைத்திருப்பார்?
5. FINISHED FILES ARE THE RESULT OF YEARS OF SCIENTIFIC STUDY COMBINED WITH THE EXPERIENCE OF YEARS ON FATAL FAMILY. இந்த வாக்கியத்தில் எத்தனை ‘F’கள் உள்ளன?
இந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில்களைச் சிந்தித்து வையுங்கள். அடுத்த வாரம் பதில்களை வைத்து கவனத்தை மதிப்பிட்டுவிடுவோம்.

No comments: