Blogger Widgets

Total Page visits

Monday, May 18, 2015

அத்தியாயம் 5 - கவனம் என்னும் மூலதனம்

ஒரு நேர்முகத் தேர்வை நடத்துபவரைக் கவர, அவரது மனதில் நுழையும் முதல் சாவி, நமது கவனம்தான் என்பதைப் பார்த்தோம். ஆனால், உண்மையில் நமது கவனம் எவ்வளவு சதவீதம் தெளிவாக இருக்கிறது என்று அளந்திருக்கிறோமா?
அப்படி அளப்பதற்குத்தான், நான் சில கேள்விகளைக் கேட்டிருந்தேன். அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் அளித்துக்கொண்ட நேர்மையான பதில்கள்தான் உங்கள் கவனத்தை மதிப்பிட்டிருக்கும்.
மீண்டும் கேள்விகளுக்கு வருவோம்.
1. பைக் சாவி, வீட்டுச் சாவி, மணிபர்ஸ் இவற்றில் ஏதாவது ஒன்றை கடந்த மூன்று நாள்களுக்குள் எங்கு வைத்தோம் என்று தெரியாமல் மூன்று நிமிடத்துக்கு மேல் தேடி இருக்கிறீர்களா?

2. உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண் என்ன?

3. உங்கள் வீட்டின் வரவேற்பறையில் கடந்த ஒரு மாதத்துக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன என்று தெரியுமா?

4. ரமேஷின் அப்பாவுக்கு மூன்று மகன்கள். அவர் ஒரு ரஜினி ரசிகர். முதல் இரண்டு மகன்களுக்கு அண்ணாமலை, அருணாசலம் என்று பெயர் வைக்கிறார். மூன்றாவது மகனுக்கு என்ன பெயர் வைத்திருப்பார்?

5. FINISHED FILES ARE THE RESULT OF YEARS OF SCIENTIFIC STUDY COMBINED WITH THE EXPERIENCE OF YEARS ON FATAL FAMILY. இந்த வாக்கியத்தில் எத்தனை ‘F’கள் உள்ளன?
முதல் கேள்விக்கான பதிலில், கடந்த மூன்று நாள்களுக்குள் நீங்கள் ஒரு பொருளை மூன்று நிமிடத்துக்கு மேல் தேடியிருந்தால், உங்கள் கவனம் 20 சதவீதம்தான் சரியாக உள்ளது என்று உணரவும்.
ஏனெனில், அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை, அதற்குரிய இடம் ஒன்றை உருவாக்கி அதில் வைத்துப் பழகுபவர்கள், அதைத் தேடுவதற்கென்று தனியாக நேரம் செலவழிப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு பொருளையும் தேடுபவர்கள் நேரம் செலவழிப்பதுடன், மன உளைச்சலுக்கும் பதற்றத்துக்கும் ஆளாகிறார்கள். இதிலிருந்து வெளிவந்தால்தான், கவனம் இன்னும் சிறக்கும்.
இதற்குத் தீர்வு இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
முதலில், ஒரு பொதுவான பெட்டி அல்லது ட்ரே ஒன்றில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களைப் போட்டுப் பழகலாம். வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன், நம் பாக்கெட்டில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் அந்த ட்ரேயில் போட்டுவிடுவது உத்தமம். அது முறையான ஒழுங்காக இல்லாவிட்டாலும், உங்கள் அனைத்துப் பொருள்களும் இந்த ட்ரேயில் கிடைத்துவிடும் என்ற எண்ணமாவது வரும். அதன்மூலம், வெவ்வேறு இடங்களில் ஒரு சாவியைத் தேடும் நேரம் மிச்சப்படும்.
அடுத்த கட்டமாக.. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு இடம் என்று தேர்ந்தெடுத்து அதில் வைத்துப் பழகுவது.
பர்ஸ், அடையாள அட்டை, பேனா ஆகியவற்றை ஒரு சிறிய ட்ரேயில் வைக்கலாம்,
அன்று சேகரிக்கப்பட்ட காகிதங்களை ஒரு பேப்பர் க்ளிப் மூலம் ஒன்று சேர்த்து வைக்கலாம்.
சாவியை, வெளியில் உடனடியாகத் தெரியும் வகையில் ஹாலில் உள்ள ஆணியிலோ, சாவி ஸ்டாண்டிலோ வைக்கலாம். அதனை தினசரி வைத்துப் பழகுவதுதான் முக்கியம். ஒரு நாள் சாவியைக் காணவில்லை என்று அரை மணி நேரம் தேடினால், அதற்கான மாற்றுச் சாவியையும் ஒரு மணி நேரம் தேடும் நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன். இதைச் சரி செய்ய, மாற்றுச்சாவி(களை)யை பணம் வைக்கும் பகுதியில், பீரோவுக்கு உள் அறையில் வைத்துவிடலாம்.

ஆனால், மாற்றுச்சாவியை நம்பிக்கொண்டிருப்பதைவிட, ஒருமுறை சாவியை நீண்ட நேரம் தேடவேண்டி இருந்தால், அன்று நடந்தேபோவது என்ற தண்டனையை நமக்கு நாமே வழங்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான், கொஞ்சம் அக்கறையுடன் சாவியைக் கையாளுவோம்.
சாவி என்பது ஒரு உதாரணம்தான்! இதுபோல் பல பொருள்களை இடம் தவறி வைத்துவிட்டு, நம் கவனமின்மையால், அந்தப் பொருளையோ, நேரத்தையோ இழந்திருக்கிறோம். உண்மையில் வீட்டிலோ, அலுவலகத்திலோ, ஒரு பொருளை பத்து விநாடிகளுக்குள் எடுத்துவிட்டால், அதுதான் உண்மையில் நாம் சிறந்த கவனத்துடன் இருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி! அப்படி எடுத்த இடத்தில் பொருள்களை வைப்பதை 24 வயதுக்குள் கற்றுக்கொண்டுவிட்டால், பின்னர் அது நம்மை விட்டுப் போகாது. ஆனால், அதற்குப் பிறகு கற்றுக்கொள்ளவே நமக்கு எண்ணம் போகாது.
அடுத்த கேள்வி, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண் என்ன?
அட்டையைப் பார்த்தால் தெரிந்துவிட்டுப்போகிறது? என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், அதை நினைவில் வைத்திருந்தால், மூளையில் 20 GB இடம் குறைந்துவிடும் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா? உண்மையிலேயே மனித மூளைதான், உலகத்திலேயே மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க். ஆகவே, இதனை நாம் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
தவிர, இது  நம் மூளையின் கவனப்பகுதிக்குக் கொடுக்கும் இன்னொரு விதமான பயிற்சி. இதற்கும் நேர்முகத் தேர்வுக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனக்குத் தெரிந்த ஒரு இளைஞனுக்கு நேர்முகத் தேர்வு நடந்துகொண்டிருந்தபோது, அவனை சோதித்துக்கொண்டிருந்தவருக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அழைத்தவர்கள், அவரிடம் ஆறு இலக்க கோப்பு எண்ணாக 563487 என்று கூறியிருக்கிறார்கள். இவரும் திரும்பச் சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு நிமிட உரையாடலுக்குப் பிறகு, தனது உதவியாளரை அழைத்து 536487 என்று ஒரு எண்ணை மாற்றி தவறாகச் சொல்லியிருக்கிறார். அப்போது, அந்த இளைஞன், இடையூறுக்கு மன்னிக்கவும் என்று சொல்லிவிட்டு, தங்களுக்கு சொல்லப்பட்ட எண் 563487 என்று சரியாகச் சொல்ல, அவர், மீண்டும் அழைத்தவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, இவனைப் பாராட்டி வேலைக்குச் சேர்த்துக்கொண்டுவிட்டார்.
இப்போது அவன் அங்கு வேலைக்குச் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில், அவன் ஏன் தனக்குத் தேவையில்லாததை கவனிக்கிறான் என்று தோன்றும். ஆனால், அவன் கவனிக்க வேறு எதுவும் அங்கு நிகழாத பட்சத்தில், இதனை கவனித்ததால், வேலை உறுதியானது. மேலும், அந்த இடத்தில் அவனது அக்கறையும் ஈடுபாடும் சேர்ந்து வெளிப்பட்டுவிடுகிறது. அதனால்தான், உளவியல்ரீதியாக, எண்களை நினைவில் வைப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. இது கவனத்துக்கான அடுத்த படிநிலையாகிறது. இதற்காக, அடுத்தவர்கள் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள, வேறு ஒருவர் பேசுவதை வேண்டுமென்றே கவனிப்பதை ஒட்டுக்கேட்பது என்றும் சொல்வார்கள்.

அடுத்த கேள்வி, உங்கள் வீட்டின் வரவேற்பறையில் ஒரு மாதத்துக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன?
இது நிலையற்ற சில தகவல்களை UPDATE செய்கிறோமா என்பதை அறிய உதவும். நம் வீட்டு வரவேற்பறை அப்படியே இருப்பதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. வீட்டில் இருப்பவர்கள் அதில் சிறு சிறு மாற்றங்களை நிகழ்த்தியிருக்கக்கூடும். ஆனால் அவற்றை நாம் கவனிப்பதே இல்லை. தினமும் நம் வீட்டின் வரவேற்பறையைப் பார்க்காமல் நம்மால் கடக்க முடியாது. அப்படியானால், பார்ப்பது என்பது வேறு, கவனிப்பது என்பது வேறு என்பதை உணரலாம். மாற்றங்களை அறிதல் என்பது ஒவ்வொரு முறையும் கவனித்தால்தான் வசப்படும். அதற்கு சில அன்றாடப் பயிற்சிகள் உள்ளன. உங்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் தினசரி இரண்டு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்தோ, நின்றோ கவனித்துப் பாருங்கள். அப்போது தொலைபேசுவதோ, அரட்டையோ வேண்டாம். தொடர்ச்சியாக மாற்றங்களைக் கவனித்தால்தான் முன்னேற முடியும் என்பதற்கான உளவியல் கேள்வி இது. வாய்ப்பு இருந்தால் WHO MOVED MY CHEESE என்ற ஆங்கில நூலைப் படித்துப் பாருங்கள். இந்தக் கவனத்தின் முக்கியத்துவம் விளங்கும்.
அடுத்த கவனம்… வார்த்தைகளைக் கவனிப்பது.
அதன்படி, ரமேஷின் அப்பாவுக்கு மூன்று மகன்கள். அவர் ஒரு ரஜினி ரசிகர். முதல் இரண்டு மகன்களுக்கு அண்ணாமலை, அருணாச்சலம் என்று பெயர் வைக்கிறார். மூன்றாவது மகனுக்கு என்ன பெயர் வைத்திருப்பார்? என்று கேட்டிருந்தேன். அதிகபட்சமாக முத்து, வீரா, படையப்பா என்று பல்வேறு ரஜினி படப் பெயர்கள் விடையாக மனத்தில் வந்து விழும். ஆனால், கேள்வியை ஒரு முறைக்கு இரண்டு முறை கவனித்துப் படித்தவர்கள் சொல்லிவிடுவார்கள். மூன்றாவது மகனின் பெயர் ரமேஷ் என்று! இதில்தான் நாம் கவனம் சிதறுகிறோம். உளவியல்ரீதியாக சராசரி மனிதர்கள் எந்த உரையாடலிலும் முதல் வார்த்தையை பெரிதாகக் கவனிப்பதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், கவனமானவர்கள் ஒவ்வொரு எழுத்தையும் கவனிப்பார்கள். ஆகவே ஒவ்வொரு எழுத்தையும் கவனிப்பதுதான் நன்மை பயக்கும் என்பதை அறியவும். ஏனெனில் நிறுவனங்களுக்கு சராசரிகள் தேவையில்லை. எல்லாவற்றையும் கவனிக்கும் சாதனையாளர்கள்தான் தேவை!
அடுத்த கேள்வியில் உள்ள F-களின் எண்ணிக்கை, இதில் பெரும்பாலானோர், OF என்ற வார்த்தையில் உள்ள F-ஐ கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். காரணம், ‘எனக்குத் தெரியுமே’ மனநிலை! அது நிகழாமல் பார்த்துக்கொள்வதுதான் மிகவும் நல்லது. அதற்கு எப்போது கவனிக்கத் துவங்கினாலும், எனக்குத் தெரியுமே மனநிலையுடன் கவனித்தல் கூடாது. ஒருமுறை என் வங்கிக் கணக்கில் 25 லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. நான் அதிர்ச்சியாகிவிட்டேன். ஏனெனில், நான் போட்டிருந்த காசோலையின் மதிப்பு 25000 ரூபாய் மட்டுமே! பிறகு வங்கியில் சென்று கேட்ட பிறகுதான் தெரிந்தது, 25000.00 என்று எழுதப்பட்டிருந்ததை, 25 லட்சம் என்று அந்த வங்கி அதிகாரி புரிந்துகொண்டு, அரசு நிர்வாகக் கணக்கிலிருந்து எனக்கு அந்தத் தொகையை மாற்றியிருக்கிறார். பின்னர் அவரை சஸ்பெண்ட் வேறு செய்தார்கள்.  இதில் அவர் செய்த தவறு “எனக்குதான் தெரியுமே” மனநிலைதான். அதிலிருந்து வெளிவருவது மிகவும் முக்கியம்.
ஆக, கவனத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொண்டோம். ஆங்கிலத்தில் கவனம் என்றால் LISTEN என்று சொல்லலாம். அதிலிருந்தே, அதை அதிகப்படுத்தும் சூட்சும வார்த்தையை வடிவமைக்க முடியும். அது என்னவென்று முயன்று பாருங்களேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம்.

No comments: