Blogger Widgets

Total Page visits

Sunday, November 24, 2013

KINGSTON ENGINEERING COLEGE,Faculty Recruitment

Professor/Associate Professor/Assistant professor in the Following Departments

  • Computer Science Engineering
  • Information Technology
  • Mechanical Engineering
  • Civil Engineering
  • Electrical and Electronics Engineering
  • Electronics and Communication Engineering
  • Master of Business Administration
Qualification & Remuneration
As per AICTE Norms
Send Your Complete Resume with Passport size Photo
Mail id:
recruitment@kingston.ac.in, principal@kingston.ac.in

Friday, November 22, 2013

விருதுகள் பலவிதம்! ! !

இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை சிவிலியன் விருதுகள். அரசியல் சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

 பாரத ரத்னா உள்ளிட்ட பத்ம விருதுகளுக்கு, பணம் எதுவும் கிடையாது. பட்டம் மாதிரி இவற்றை பெயரோடு சேர்த்துக்கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான விழா நடத்தி அரசு இவ்விருதை வழங்குகிறது. இந்திய அரசின் அங்கீகாரம் என்பதால் அதனை அடைய ஒவ்வொருவரும் அரும்பாடுபடுகிறார்கள். யார் யாரையோ பிடித்து பரிந்துரை செய்ய வைக்கிறார்கள். செல்வாக்கு பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு சிபாரிசு செய்கிறார்கள். மாநில அரசுகளும் சிபாரிசு செய்வதுண்டு. இறுதி முடிவை மத்திய அரசின் உள்துறை எடுக்கிறது.

 2013 ஆம் ஆண்டில் 1,300 பேர், பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள். அதில் 108 பேர் விருது பெற்றார்கள். யாரெல்லாம் யார் யாரால்  விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்கள் என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம்         கேட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சினிமா பின்னணி பாடகியும் பாரத் ரத்னா விருதுபெற்றவருமான லதா மங்கேஷ்கர், தன் சகோதரி உஷா மங்கேஷ்கர், பாடகர் சுரேஷ் வடேகர், கலை ஆர்வலர் ராஜ்மல் பரேக் ஆகிய மூவருக்கும் பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால், அவர்கள் யாருக்கும் விருது கிடைக்கவில்லை. சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி அமர் சிங், நடிகையும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயபிரதாவின் பெயரைப் பரிந்துரைத்தார். பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள சரோட் வாத்தியக் கலைஞர் அம்ஜத் அலிகான், தன் இரு மகன்களோடு மேலும் நான்கு பேருக்கு விருது கொடுக்க பரிந்துரை செய்தார். மோதிலால் வோரா என்ற காங்கிரஸ் தலைவர் இருபத்தைந்து பேருக்கு சிபாரிசு செய்துள்ளார். பல மத்திய அமைச்சர்கள், பலருக்குப் பரிந்துரை செய்து இருக்கிறார்கள். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை செய்கிறவர்கள் சொல்லும் ஒரே காரணம், நாங்கள் மக்கள் தொண்டர்கள். தகுதி வாய்ந்தவர்களுக்குப் பரிந்துரை செய்கிறோம். எங்கள் சேவையில் அது ஓர் அம்சம். எனவே குறை சொல்ல முடியாது என்று அடித்துச் சொல்கிறார்கள்.

 ஆள்பிடித்து விருது வாங்கிக் கொண்டு பெரிய விழா நடத்திக் கொள்கிற கூட்டத்தில் சேராமல், அதனை நிராகரிக்கிறவர்களும் இருக்கிறார்கள். சினிமா பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பத்மவிபூஷண் விருதை ஏற்க மறுத்துவிட்டார். தனக்கு வெகு தாமதமாக விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு பாரத் ரத்னா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார். அரசு அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள் பட்டியலில் அவர் பெயரைச் சேர்த்து வைத்துவிட்டது. விருது அறிவிப்பதோடு அரசு வேலை முடிந்துவிட்டது.

  2,577 பேர் இதுவரை பத்ம விருதுகள் பெற்றிருக்கிறார்கள். 1957-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ பெற்ற முதல் தமிழர், எஸ்.ஆர். ரங்கநாதன் என்று அறியப்பட்ட சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன். நூலகத்தில் இடம்பெறும் புத்தகங்களை வகைப்படுத்த, "கோலன்' என்னும் குறியீட்டு முறையை அறிமுகம் செய்தவர் இவர்தான். அம்முறை உலகளாவிய முறையில் இன்றும் பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு பத்மஸ்ரீ பெற்றவர்களில் ஒருவர் - ஜப்பானியரான கரோஷிமா. இவர் தமிழ்த் தொல்லியல், இலக்கிய ஆய்வாளர்.

 இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னா, 1954ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத்தால் தொடங்கப்பட்டது. பணம் கிடையாது. அரச இலை வடிவிலான மெடல். அதன் ஒரு பக்கத்தில் "பாரத் ரத்னா' என்பது தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது; மறுபுறம் மூன்று முகசிங்கம். முதன்முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர்கள் சர்.சி.வி. ராமன், ராஜாஜி, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். இரண்டாவது ஆண்டில் விருது பெற்றவர் பிரதம மந்திரி ஜவாஹர்லால் நேரு.
 உயிரோடு இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் பாரத ரத்னா என்று முதலில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் மரணமுற்ற மகத்தான மனிதர்களுக்கும் பாரத் ரத்னா கொடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. மரணமென்றால்  எங்கிருந்து தொடங்குவது என்ற சிக்கல் ஏற்பட்டது. சுதந்திரப் போராட்டத்தை ஓர் எல்லையாக வைத்துக்கொண்டு வல்லபபாய் படேல், அம்பேத்கர், விநோபா பாவே,  காமராஜர், எம்.ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி உள்பட பலருக்கு பாரத ரத்னா கொடுத்தார்கள்.

சுபாஷ் சந்திர போஸூக்கு 1992-ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பிந்தைய பாரத ரத்னா கொடுத்தார்கள். அவர் மரணம் உறுதி செய்யப்படவில்லை, எனவே மரணமுற்றவர்கள் பட்டியலில் அவர் பெயரைச் சேர்ப்பது முறையல்ல என்று வழக்குத் தொடரப்பட்டது. எனவே அரசு அவ்விருதை திருப்பிப் பெற்றுக் கொண்டது.

பாரத ரத்னா விருது எந்தத் துறையினருக்கும் கொடுக்கலாம் என்று இருந்தாலும் அதில் விளையாட்டுத்துறை சேர்க்கப்படவில்லை. இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட்டுதான். அது கேளிக்கையின் உச்சமாகிவிட்டது. நாள் முழுவதும் ஆடுகிறார்கள். தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அதனைக் காட்டுகிறார்கள். கிரிக்கெட்டில் புகழ் மிக்கவராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வருகிறார். எனவே அவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும். விதிமுறையில்லையென்றால் புது விதி உண்டாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் முன் வைத்தார்கள். மத்தியில் ஆளும் கட்சி ஏதோ காரணத்திற்காக அவருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்து விட்டது. உடனே ஊடகங்களில் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வர ஆரம்பித்துவிட்டன. எதிர்ப்பவர்கள் ஹாக்கி வீரர் ஒருவருக்குதான் தந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்கள் வாதத்தில் தவறில்லை. ஹாக்கிதான் இந்தியாவின் தேசிய விளையாட்டு. அது ஒலிம்பிக்கில் ஆடப்படுகிறது. ஒலிம்பிக்கில் ஆடி நாம் தங்க மெடல் பெற்றிருக்கிறோம். கிரிக்கெட் ஒலிம்பிக்கில் கிடையாது. 

நான்காயிரம் ஆண்டுகளாக செஸ் எனப்படும் சதுரங்கம் இந்தியாவில் ஆடப்பட்டு வருகிறது. அது இந்தியாவில் பிறந்தது. இன்று உலகம் முழுவதும் ஆடப்பட்டு வருகிறது. அறிவாளிகள் ஆட்டமாக அது அங்கீகாரம் பெற்றிருக்கிறது. செஸ் ஆட்டத்தில் உலக சாம்பியன் ஓர் இந்தியர். அவருக்குத்தான் முதன்முதலாக பாரத் ரத்னா தரவேண்டும் என்று சிலர் பேசவும் எழுத ஆரம்பித்தார்கள்.

உயர்ந்த விருது என்றால் அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்றும், தனக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் பலர் விரும்புகிறார்கள். அதில் அரசியல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சமூக சேவகர்கள், நடிகை நடிகர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் போன்ற பலரும் இருக்கிறார்கள்.

அவர்களில் தகுதியானவர்களும் தகுதியற்றவர்களும் கலந்தே இருக்கிறார்கள். அவர்கள் அரசுக்கு ஆண்டுதோறும் பெரும் நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த பிரச்னை முற்றியதால் 2008ஆம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது கொடுப்பதை அரசு நிறுத்தி வைத்தது.

உலகம் முழுவதிலும் உயர்ந்த விருதுகள் கொடுக்கப்பட்டபோதெல்லாம், இவருக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்றும் இவருக்கு ஏன் கொடுக்கவில்லை என்றும் கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதுபோது, மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கப்படாதது பற்றி பேசப்பட்டது. சிலருக்கு விருதுகள் அறிவிக்கும்போது எல்லா தரப்பினரும் மகிழ்ச்சியடைகிறார்கள். அதற்கு உதாரணம், இவ்வாண்டு விஞ்ஞானி சி.எஸ்.ஆர்.ராவுக்கு அறிவிக்கப்பட்டது. அதுவே பரிசு, விருது என்பவற்றை அர்த்தம் பெற வைக்கிறது.

இந்தியாவில் இதுவரையில் நாற்பத்து மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் உயிரோடு இருந்து விருது பெற்றவர்களும், மரணத்திற்குப் பிறகு விருது அறிவிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். மரணத்திற்குப் பிறகு விருது பெற்றிருக்க வேண்டியவர் மகாத்மா காந்தி. "பெரிய விருது' என்று அறியப்படும் பாரத் ரத்னா அவரைப் பொருத்தவரை "சிறிய விருது' என்று கருதி அவருக்குக் கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் போலும்.

பெற்றோர்களின் கவனர்திற்கு ! ! !

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

நன்றி : அமுதா சுரேஷ்

Wednesday, November 20, 2013

மனம் ஒப்பவில்லை!

தனது 200ஆவது டெஸ்ட் பந்தய விளையாட்டை முடித்த கையோடு ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, அவரது சாதனைகளைப் பாராட்டும் விதத்தில் இந்தியாவின் தலைசிறந்த விருதான "பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவித்திருக்கிறது மத்திய அரசு.

இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக கிரிக்கெட் சரித்திரத்திலும் அழியாப் பெயரும் பெருமையும் சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. முதன் முதலாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த பெருமை சச்சினுடையது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நூறு முறை சதம் அடித்த பெருமை சச்சினுடையது. 17 தடவை டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை சச்சினுடையது. 62 முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்ட பெருமை சச்சினுடையது. டெஸ்ட் பந்தயங்களில் உலகிலேயே மிக அதிகமான ரன்களை (15,921) எடுத்த பெருமை சச்சினுடையது. ஒருநாள் கிரிக்கெட் பந்தயங்களில் மிக அதிகமான ரன்களை (18,426) எடுத்த பெருமை சச்சினுடையது. டெஸ்ட் போட்டிகளிலும் (51), ஒருநாள் போட்டிகளிலும் (49) மிக அதிகமாக சதமடித்த பெருமை சச்சினுடையது. சச்சினின் கிரிக்கெட் சாதனைகளைப் பட்டியலிடுவதாக இருந்தால் ஒரு புத்தகம்தான் எழுத வேண்டும்.

24 ஆண்டுகள் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சச்சின் டெண்டுல்கர், தனது 200ஆவது டெஸ்ட் ஆட்டத்தை முடித்த கையோடு, ஓய்வு பெறுவதாக அறிவித்தது பாராட்டுக்குரியது. இந்த சாதனையை எட்ட வேண்டும் என்பதற்காகவே, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியபிறகும் சௌரவ் கங்குலி, ராகுல் திராவிட், வீரேந்தர் சேவாக், அனில் கும்ப்ளே, மகேந்திரசிங் தோனி ஆகியோரின் குழுவில் அவர் தொடர்ந்து ஆடி வந்தார். நினைத்ததை சாதிக்கவும் செய்திருக்கிறார்.

கிரிக்கெட் வீரர் என்கிற முறையில் சச்சினின் விடாமுயற்சி, சாதனை புரிய வேண்டும் என்கிற முனைப்பு, அற்புதமான விளையாட்டு ஆகியவற்றிற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்காக, அவருக்கு 1994இல் அவரது கிரிக்கெட் சாதனைகளுக்காக அர்ஜுனா விருது வழங்கப்பட்டபோதும், 1998இல் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் ராஜீவ்காந்தி "கேல் ரத்னா' விருது வழங்கப்பட்டபோதும், 1999இல் பத்மஸ்ரீ விருது தரப்பட்ட போதும், 2008இல் பத்ம விபூஷண் கொடுக்கப்பட்டபோதும், ஏன், அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட போதும் கரவொலி எழுப்பி மகிழ்ந்ததுபோல, "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருக்கும் வேளையில் பாராட்டி மகிழ மனம் ஒப்பவில்லை.

"பாரத ரத்னா' விருது என்பது சாதனைகளுக்காக வழங்கப்படும் விருது அல்ல. சாதனையாளர்களின் சமுதாயப் பங்களிப்புக்காக வழங்கப்படும் விருது. அன்னை தெரசாவுடையது சாதனையல்ல, சேவை. "இசைக் குயில்' எம்.எஸ். சுப்புலட்சுமி தலைசிறந்த கர்நாடக இசைக்கலைஞர் என்பதற்காக விருது வழங்கப்படவில்லை. எத்தனை எத்தனையோ சமுதாய நல, மக்கள் நல்வாழ்வு முயற்சிகளுக்குத் தனது இசையின் மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், அரசுக்கும் நிதி வசூலித்துக் கொடுத்த சேவைக்கு வழங்கப்பட்ட விருது. காமராஜுக்கும், எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் அரசியல் காரணங்களுக்காக விருது வழங்கப்பட்டது என்று சிலர் குறை கூறினாலும், அவர்கள் இறந்தும் பலரது மனதில் வாழ்கிறார்கள் என்பதால், அவர்களுக்குத் தரப்பட்ட விருதில் நியாயம் இருக்கிறது. அவர்களது சமுதாயப் பங்களிப்பை காலம் வழி மொழிந்திருக்கிறது.

சர்தார் வல்லபபாய் படேல் மறைந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகும், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் காலமாகி 34 ஆண்டுகளுக்குப் பிறகும்தான் நிஜமாகவே சமுதாயப் பங்களிப்பு நல்கிய அந்தப் பெருந்தகைகளுக்கு உயரிய விருதான "பாரத ரத்னா' வழங்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கருக்கு அவரது 200ஆவது டெஸ்ட் சாதனை முடிந்ததும் இந்த விருதை 40 வயதிலேயே வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பதற்காக, விருதுக்கான நிபந்தனைகளே தளர்த்தப்பட்டிருக்கிறதே, அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சச்சின் டெண்டுல்கர் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இருந்து சம்பாதித்தார். கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தார். உலக அரங்கில் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தார். அதெல்லாம் சரி, இவரது சமுதாயப் பங்களிப்பு என்ன? இவரால் பல இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது என்பது "பாரத ரத்னா' விருது அளித்து கௌரவிக்கப்பட வேண்டிய தகுதியா, என்ன?

தகுதியற்றவர்களுக்காகத் தேவையற்ற கோரிக்கைகளுக்கு மத்திய அரசின் இந்த முடிவு வழிவகுக்கப் போகிறது. "பாரத ரத்னா'வின் மரியாதை குறையப் போகிறது. சச்சினின் விளையாட்டு சாதனைகளைப் பாராட்டும் அதே நேரத்தில், "பாரத ரத்னா' விருதுக்காக அவரை பாராட்ட மனம் ஒப்பவில்லை.