Blogger Widgets

Total Page visits

Wednesday, March 11, 2015

அத்தியாயம் 2 - சுயமான விவரம்

பொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வோம். அல்லது வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ, தொழில் செய்து கொண்டிருந்தாலோ, அந்த நிறுவனத்தின் பெயருடன், நம் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும் விசிட்டிங் கார்ட் எனப்படும் அறிமுக அட்டையைக் கொடுப்போம்.
வேலை இன்னும் கிடைக்கவில்லை என்றால்… வேலைக்காகச் சந்திக்க வேண்டியவரிடம் நம்மைப் பற்றி ஏதாவது சொல்லலாம். அதைவிட, நம் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, விருப்பங்கள் போன்ற விவரங்களுடன் நம்மைப் பற்றிய கொஞ்சம் பெரிய அறிமுக அட்டையாக அளிக்க வேண்டியதைத்தான் தமிழில் ‘சுய விவரக் குறிப்பு’ என்ற பொருளில் ‘BIO DATA’ என்று பெயரிட்டு அழைத்துக்கொண்டிருந்தோம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, அதன் பொதுவான பெயர் பயோடேட்டாதான். பிறகு உலகளவிய அளவில், அதன் வடிவம் மாறி இப்போது RESUME, CV என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

முந்தைய அத்தியாயத்தில் RESUME-க்கும் CV-க்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்கள் இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று சொல்வார்கள். ஆனால், RESUME – CURRICULAM VITAE இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாலே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வோம்? உண்மையிலேயே ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ரெஸ்யூமுக்கும் சிவிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டிருக்கிறார்கள். நம் ஆள் இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் கடவுளுக்குப் பல பெயர்கள் இருப்பது மாதிரி இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று வாதாடியிருக்கிறார். அப்புறம் என்ன ஆச்சு? என்ற உங்கள் கேள்விக்கு “இதுகூடத் தெரியாத உங்களுக்கு இங்கு வேலை தர இயலாது’ என்ற அவர்களது பதில்தான், பதில்!!
ரெஸ்யூமே என்பது ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் நறுக்குத்தெறித்த அறிமுகப் படிவம். இதில் உங்கள் சுய விவரம், கல்வித் தகுதி, திறமைகள் மற்றும் முன் அனுபவம் இருந்தால் அதனைப் பற்றிய ஒற்றை வரிச் செய்தி இவற்றுடன் நிறுத்திக்கொள்ளலாம்.
கரிக்குலம் விட்டே எனப்படும் CV என்பது, இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களை கொஞ்சம் விரிவாக, ஆற அமரப் படிக்கும் வகையில் அமைக்கும் அறிமுகப் படிவம். இதில் சுய விவரம். கல்வித் தகுதி. அந்தப் படிப்பில் செய்த ப்ராஜக்ட்கள் (செயல்முறைகள்), சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள், விளையாட்டில் வாங்கிய பரிசுகள், பொது நிகழ்வுகளில் பங்களிப்பு, NSS, NCC, RED CROSS, ரோட்டரி, லயன்ஸ் போன்ற சங்கங்களின் கல்வி நிறுவன அமைப்புகளில் வகித்த பதவிகள் ஆகிய அனைத்தும் இடம்பெறும்.
முதலில் நாம் ரெஸ்யூமை பற்றி விரிவாகப் பார்ப்போம். பொதுவாக முதலில் நிறுவனம் நம்மைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள விரும்பும்போது, ரெஸ்யூமைத்தான் கேட்பார்கள். ஏனெனில் இதனை முதலாம் நிலை வடிகட்டலுக்குப் பயன்படுத்தமுடியும்.
ஒரு நிறுவனத்தில் புதிய வேலைகளுக்கு 6 பேர் தேவைப்படுகிறார்கள் என்றால், முதலில் விண்ணப்பிக்கும் 250 நபர்களைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்வது கடினம் என்பதால், அவர்களது ரெஸ்யூமை பார்த்துத்தான் முதல்கட்ட முடிவு எடுப்பார்கள். அப்படியெனில், உண்மையிலேயே ஒரு வேலை தேடும் நபர், நிறுவனத்தின் மனத்துக்குள் நுழைய முதலில் வீச வேண்டிய அம்பு, ரெஸ்யூமேதான். அப்படியெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். பொதுவாக நாம் செய்வது என்னவென்றால், நண்பனுடைய ரெஸ்யூமை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, அதில் நம் தகவல்களை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே தேவையான நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துவிடுகிறோம்.
இதனை இப்படி ஒப்பிடலாம். ஒரு பெண்ணைக் காதலிக்க கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற சூழலில், ஏற்கெனவே ஒரு நண்பன் அதே பெண்ணுக்குக் கொடுத்த கடிதத்தை அப்படியே காப்பி அடித்து, அதில் பெயரை மட்டும் மாற்றிக்கொடுத்தால், அந்தப் பெண் நம்மைப் பற்றி என்ன நினைப்பாள்? (இந்தக் காலகட்டத்தில் அதனை இ-மெயில், SMS என்றுகூடக் கொள்ளலாம்) ஒரு பெண்ணுக்கு நண்பன் அனுப்பிய காதல் ப்ரோப்பஸல் SMS-ஐ அப்படியே பெயர் மாற்றி அவளுக்கே FORWARD செய்தால் எப்படிச் சொதப்புமோ… அதேபோல்தான் காப்பி அடித்து ரெஸ்யூமே அனுப்பினாலும் சொதப்பும்.
சொந்தமாகச் சிந்தித்து கொஞ்சம் கற்பனையும் கலந்து அனுப்பப்படும் ரெஸ்யூமேக்கள் நிறுவனங்களை வெகுவாகக் கவர்கின்றன. ஆனால், அது எந்த வேலை என்பதைப் பொறுத்து மாறுபடும். இங்கே சில கற்பனை மிகுந்த ரெஸ்யூமேகளை பார்க்கலாம்.
இதனையும் அப்படியே காப்பி அடித்துவிட வேண்டாம். உங்களைப்போலவே, நிறுவனத்தினரும் இந்த மாடல் ரெஸ்யூமேக்களை இணையத்தில் நிறையப் பார்த்திருப்பார்கள். அதனால், எச்சரிக்கையாக இருக்கவும்.
ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக, உண்மையிலேயே சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமிற்கு மதிப்பு அதிகம். அதனை பெயருக்குக் கீழ் எழுதும் OBJECTIVE என்ற விவரத்திலேயே நிறுவனம் கண்டுபிடித்துவிடும். பொதுவாக, அதில்தான் வேலை தேடும் அனைத்து நபர்களும் மாட்டுவார்கள். தன்னுடைய சுயசக்தியால், நேர்மையால், உழைப்பால், நிறுவனத்தையும் நிமிர்த்தி, தன்னையும் வளர்த்துக்கொள்வதுதான் நோக்கம் என்றபோக்கில் இருக்கும் அந்த வார்த்தைகள். இதெல்லாம் சினிமா வசனத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால் யதார்த்தமாக எழுதப்படும் OBJECTIVE மீதுதான் நிறுவனம் அதிகக் கவனம் செலுத்தும்.
புதுப் பட்டதாரியாக இருந்தால், OBJECTIVE–ல் முதல் வேலையாக இருப்பதால், வேலை கற்றுக்கொண்டு, அதனை திறம்பட இங்கேயே செயல்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். வேலையில் என் திறமைகள் என்னவென்று கண்டுணர்ந்து, வளர்த்துக்கொள்ள என்னை இங்கு ஒப்படைக்க விரும்புகிறேன் என்ற ரீதியில் இருந்தால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்.
ஏனெனில் HARD WORKING என்ற பதத்தை, முதலில் வேலை தேடுபவர்கள் பயன்படுத்தவே முடியாது. அவர்கள் படிப்பதற்காகச் செய்த கடின உழைப்பு வேறு. அதில் அவர்கள் பணம் செலவழித்து உழைத்தார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு உழைக்க வேண்டும். இதில் மனநிலையே மாறும். அதனை நிறுவனம் கண்டறிந்துகொள்ளும். கடினமாக உழைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாலே போதும்.
அடுத்த அத்தியாயத்தில் தொடர்வோம்...

அத்தியாயம் 1 - அறிமுக அழகு!

து ஒரு நீண்ட ரயில் பயணம். நம் எதிரில் மூன்று பேர். அருகில் இரண்டு பேர். முதலில் நேர் எதிரில் இருப்பவர்தான் நம் இலக்கு. அவருக்கும் நாம்தான் இலக்கு. முதலில் ஒரு புன்னகையை வீசிப் பார்ப்போம். அவர் அதை கேட்ச் பிடித்து திரும்ப புன்னகையாகவே வீசினால், பிழைத்தோம்.. இல்லையென்றால், அந்த வரிசையில் யார் புன்னகைக்கிறார்களோ அவரிடம் தாவுவோம். அதன்பிறகு, பேச்சு இந்தவிதமாகத்தான் துவங்கும்..
ஒரே புழுக்கமா இருக்குல்ல?
நீங்க எங்க இறங்கணும்? (சென்னையா, பெங்களூரா என்ற ரீதியில்)
டயத்துக்கு எடுத்துருவாங்களா?
ட்ரெயினை பிடிக்கிறதுக்குள்ள ஒரே டென்ஷனாய்டுது…
என்று ஆரம்பித்து, “தம்பி என்ன பண்றீங்க?” என்று அவர் கேட்கத் துவங்கி (பெண்ணாக இருந்தால், “என்னம்மா பண்றீங்க?”) பேச்சு வளரும். அப்போது நம்மைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுப்போம். அவர் கேள்வியாகக் கேட்டுத் தள்ளுவார். பிறகு, அவருக்கு நம்மையோ, நமக்கு அவரையோ பிடித்திருந்தால்தான் அந்த உரையாடல்கூட அடுத்த கட்டத்துக்குப் போகும்.
இதே நிலைதான், ஒரு வங்கிக்குள் நுழையும்போதும் ஏற்படும். எதிரில் அமர்ந்திருக்கும் வங்கி அதிகாரிகளில், எந்த கவுன்ட்டரில் உள்ள நபர் நம்மைக் கவர்கிறார்களோ, அவரைத்தான் தேர்ந்தெடுத்து நம் சந்தேகத்தைக் கேட்போம்.
இரு நபர்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்து, இவர் நமக்கு ஒத்துவருவாரா என்று மனத்துக்குள் அனுமதித்த பிறகுதான் ஒவ்வொரு சந்திப்பும் வெற்றிகரமாக நிகழும்.
பெண் பார்க்கும் படலத்தில், ஆண், பெண் அழகைத் தவிர, அவர்கள் இருவரும் எப்படிப் பேசுகிறார்கள், அவர்களது எண்ணம் எப்படிச் செல்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்பதைத்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அதில் ஏதேனும் சிறு இடர் ஏற்பட்டால்கூட, அப்போதே கௌரவமாகத் தவிர்த்துவிடலாம் என்பதுதான் பெண் பார்க்கும் படலத்தின் நோக்கம்.
மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதரைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதோ, சந்தேகம் கேட்பதோ, வாழ்வதோ நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எதை வைத்து ஒருவர் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கிறார்? எந்த விஷயங்கள் ஒருவரை ஈர்க்கிறது என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக இருக்கும்.

ஒரு ஆளுக்குப் பிடிக்காதவர், வேறு ஒருவருக்கு மிகவும் பிடித்தவர் ஆவதன் மர்மமும் இதுதான்!
ஆனால், சில பொதுவான நல்ல குணாதிசயங்கள் உள்ள நபரை எல்லோருக்கும் பிடிக்கும். அதற்கும் மேல் ஒரு மனிதர் சேர்த்து வைத்திருக்கும் அறிவை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதும் மற்றவர்களைக் கவரும் வாய்ப்பு இருக்கிறது.
இதேபோலத்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஒரு துறையில் ஊழியர் வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, அதற்குத் தகுதியான ஆளைத் தேர்ந்தெடுக்க ,நடத்தும் ஒற்றைச் சந்திப்பில்தான், ஒரு தனி மனிதரின் அடிப்படை குணாதிசயங்கள் மற்றும் அறிவு கணக்கிடப்படுகிறது. அந்தச் சந்திப்புதான் அவரை “இவர் இதுக்கு ஒத்துவருவாரா? மாட்டாரா?” என்று முடிவெடுக்க வைக்கிறது.
பொதுவாக, ஒரு நிறுவனம், தங்களிடம் காலியாக உள்ள வேலைக்கு – தொழில்நுட்பத் தகுதி மற்றும் வேலைக்கான குணாதிசயம் இருக்கிறதா என்பதை ஒரு சில நிமிடங்களில் அல்லது ஓரிரு சுற்றுகளில் கண்டறிய ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள். அந்த வார்த்தைதான் நம் இளைஞர்களின் வயிற்றில் பந்தாக உருளவைக்கும் ஒற்றைச்சொல்லாகி கபடி ஆடிக்கொண்டிருக்கிறது.
இன்டர்வியூ – நேர்முகத் தேர்வு!
ஒரு இளைஞர் (ஞன், ஞி இருவரும் சேர்த்துத்தான்) கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தின் இன்டர்வியூவுக்கு செல்கிறார் என்றால்…
ட்ரெஸ்ஸை இன் பண்ணிக்க…
கேட்ட கேள்விக்கு, தெரியுதோ தெரியலையோ, பட் பட்டுன்னு பதில் சொல்லு…
நிதானமா பேசு…
நேரா உக்காரு…
லைட் கலர் சட்டை போட்டுக்க…
தலையை லூசா விடாத…
கண்ணைப் பாத்து பேசு…
உக்காரலாமான்னு கேட்டுட்டு உக்காரு…
ஒரு சிரிப்போடயே இரு…
சீரியஸா முகத்தை வச்சுக்க…
சொந்த விவரங்களை ரொம்ப சொல்லாத…
சம்பளம் என்னன்னு கேளு…
சம்பளத்த பத்தியே கேக்காத…
என்று பல்வேறு தரப்பில் இருந்தும் அறிவுரைகள் பறக்கும். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு, அங்கே போய், கேள்வி கேட்பவரின் முன்னால் எப்படி அமர்வது என்றுகூட முடிவெடுக்க முடியாமல், திகில் படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுபோல், சீட்டின் நுனியிலேயே அமர்ந்து, ஏற்கெனவே காதில் வாங்கிய அறிவுரைகளில் எதைச் செய்வது என்று தெரியாமல், மொத்தமாகச் சொதப்புவதுதான் நமது வேலையாக இருக்கும்.
கேட்கும் கேள்விக்குப் பதில் தெரிந்தால் ஹீரோவாகவும், பதில் தெரியாவிட்டால் வில்லனாகவும், ஒரே நேரத்தில் நமக்கு நாமே உணரவைக்கும் உன்னத நிகழ்வான இன்டர்வியூ பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று உத்தேசம்.
இன்டர்வியூ – இது ஒரு மாயச்சொல்லாகவே மாறியிருக்கிறது.
இன்டர்வியூவை தமிழில் நேர்முகத் தேர்வு என்று சொல்கிறோம். இன்னும் சரியாகத் தமிழாக்கினால், உள்பார்வை என்று பொருள்படும்.
இந்தப் பொருளுடன் இதனை அணுகினாலே பாதி வேலை முடிந்துவிடும்.
இருந்தாலும், ஒரு ஊழியருக்கான உள்பார்வைப் பேட்டியில் இன்றைய நிறுவனங்கள் எதை எதிர்பார்க்கின்றன என்று பார்ப்போம்.
முதலில் பார்க்கவேண்டியது ரெஸ்யூம் எழுதுவது.
அதற்கு முன்னால், ஒரு கேள்வி. Resume - Curriculam Vitae எனப்படும் CV. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அடுத்து பார்க்கலாம்…
சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், எழுத்தாளர், தொழில் ஆலோசகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். எளிய வார்த்தைகள் மூலம் கல்வி, தொழில் ஆகியவற்றில் உள்ளங்களில் மாற்றம் கொண்டுவரமுடியும் என்று நம்புபவர். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் புதிய, பிரபல தொழில் நிறுவனங்களின் நிரந்தர ஆலோசகர். இதுவரை 5 நூல்கள் எழுதியுள்ளார். தமிழில் முதல் தொழில் நாவல் எழுத்தாளர் (Business Novelist) என்ற பெயருக்குச் சொந்தக்காரர். சுவாரஸ்யமான எழுத்துநடை இவரது பலம்!
இன்றைய இளைஞர்களுக்கு வேலை தேடுவது என்பது கற்கால மனிதனின் வேட்டையைப் போன்ற ஒரு சாகஸமாகவே ஆகிவிட்டது.
மான் எதிரில் இருக்கிறது. கையில் அம்பும் இருக்கிறது. மானைக் கொல்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அம்பு மட்டும் இருந்தால் போதுமா? மானை வீழ்த்த சாதுரியம் வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதே சக்ஸஸ் ஃபார்முலாதான், வேலைக்கான வேட்டைக்கும்.
அம்பைப்போல் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு, வேலை என்ற மானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேட்டையின் முக்கிய அம்சமே நேர்முகத் தேர்வுதான். அப்படிப்பட்ட நேர்முகத் தேர்வு என்ற இலக்கை/ஒற்றைக் கதவை எப்படி எட்டுவது/ஓங்கித் திறப்பது என்று எளிமையாகப் புரியவைக்கும் முயற்சிதான் இந்த நேர்முக்கியத் தேர்வு என்ற தொடர்.

Saturday, March 7, 2015

நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன்



• சில பக்கங்களைப் படிக்கிறோம். ஆனால் படித்த பிறகு என்ன படித்தோம் என்று நினைவுக்கு வருவதில்லை. காரணம் மனம் அதில் ஈடுபடாமல் இருப்பதால், கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் குறிப்புகள் எடுப்பது சிறந்தது.
• கண்கள் 5 சதவிகிதம் தான் வேலை செய்கிறது. 95 சதவிகிதம் மூளைதான் வேலை செய்கிறது. 1 மணி நேரம் படியுங்கள். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
• காலையில் கிழக்குப் பக்கமும், மாலையில் மேற்குப் பக்கமும் உட்கார்ந்து படியுங்கள். தெற்கு நோக்கிப் படிப்பதை தவிர்க்கவும்.
• எவற்றைப் படிக்க வேண்டுமென்று முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
• அவசியமில்லாததை ஒதுக்கித்தள்ள வேண்டும். மூளை ஒரு சேமிக்கும் வங்கி.
அவசியம் அல்லது முக்கியம் என்று கருதுவதை நன்கு படித்து நினைவுப் பெட்டியில் பத்திரப்படுத்த வேண்டும். மனப்பாடம் செய்வதில் தவறில்லை. ஆனால் புரிந்து கொண்டு செய்தால், எப்போதும் நினைவிலிருக்கும்.
• படிக்கும் வேகம் என்ன என்று அறிந்து, அதனைப் படிப்படியாக அதிகரித்துக் கொள்.
ஒரு நிமிடத்திற்கு 150 வார்த்தைகளைப் படிக்கவும், அதில் 100 வார்த்தைகளையாவது கிரகிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் 200-150, 200-250 எனப் படிப்படியாக உயர்த்திக் கொள்ள முயற்சி செய்யவும்.
• தினசரி பாட சம்பந்தமில்லாத, பொது அறிவினை வளர்க்கக் கூடிய ஏதேனும் ஒரு புத்தகத்தை குறைந்தது 15 நிமிடமாவது படிக்கவும். ஒரு வாரத்தில் சுமார் 2 மணி நேரம், மாதத்தில் 8 மணி நேரம் கிடைக்கிறது. ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்க சுமார் 4 மணி நேரம் தேவை. மாதத்தில் இரண்டு புத்தகங்களைப் படிக்கலாம். ஆண்டில் 24 புத்தகங்களைப் படிக்கலாம்.
• வெளியில் போகும் போது, ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள், பயணம் செய்யும் போதும், பலவற்றிற்காகக் காத்திருக்கும் போது, நமது நேரத்தை வீணாகச் செலவிடாமல், பயனுள்ள வகையில் செலவிடலாம்.
• படிப்பதைக் கடமையாகக் கருதாமல் பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக மறக்காது.
• படிக்கிற நேரம் உங்களுக்கு எந்த நேரம் சிறந்தது என்று கருதுகிறீர்களோ, அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
• படிக்கின்ற போது முக்கியமானவற்றை அடிக்கோடிடுங்கள். தனி குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
• படிக்கும் பழக்கும் ஒரு சிறந்த பழக்கம். அதனை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன், வழிபோக்கத் துணைவன்

தினமணி 07-03-2015 அன்று வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

'ஓயாத’ வேலை உயிருக்கு ஆபத்தா?

ன அழுத்தம் ஒரு மனிதனை என்ன செய்யும்? கோமாவில் கொண்டுபோய் சேர்க்கும்! கிஷோரை அப்படித்தான் கோமாவில் தள்ளியிருக்கிறது மன அழுத்தம்!
'பரதேசி’, 'ஆடுகளம்’, 'எங்கேயும் எப்போதும்’, 'பயணம்’ என தனித்துவமான படங்கள் மூலம் தன்னுடைய கலைப்பயணத்தைத் தொடர்பவர் எடிட்டர் கிஷோர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் என்ற கிராமத்தில் இருந்து வந்த இளைஞர் கிஷோர். 'ஆடுகளம்’ படத்துக்காக தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றார். தற்போது பாலாவின் 'தாரை தப்பட்டை’, வெற்றிமாறனின் 'விசாரணை’ போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி வந்தவர், கடந்த சனிக்கிழமை திடீரென மயங்கி சரிந்திருக்கிறார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. 'ஓவர் ஸ்ட்ரெஸ்ஸில் தன்னை வருத்திக்கொண்டு ஓயாமல் வேலை செய்தது மட்டும்தான் கிஷோரின் இந்த நிலைக்குக் காரணம்!’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
கிஷோர் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயா மருத்துவமனைக்குச் சென்றோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் எந்த அசைவும் இல்லாமல் படுத்திருக்கிறார் கிஷோர். உறவுகள், நண்பர்கள் என மருத்துவமனையில் சூழ்ந்திருந்தார்கள்.
'கடந்த வாரம் சனிக்கிழமை காலையில் வெற்றிமாறனின் 'விசாரணை’ படத்தை எடிட் பண்ணிட்டு இருந்தார். திடீர்னு உட்கார்ந்து இருந்ததுபோலவே அப்படியே சிலை மாதிரி ஆகிட்டார். வெற்றிமாறன் கூப்பிட்டுப் பார்த்தும் சுயநினைவுக்குத் திரும்பாதவர். அவர் அருகில் சென்று தொட்டு அழைத்ததும் மயங்கி கீழே சாய்ந்துவிட்டார். சிறிது நேரத்துக்குள் சுயநினைவு திரும்பியவரை மருத்துவமனையில் சேர்த்தார் வெற்றிமாறன். அங்கு ஸ்கேன் செய்தபோது தலைக்குள் சின்ன கட்டி இருப்பது  தெரியவந்தது. அறுவைச் சிகிச்சை மூலம் அதை அகற்றலாம் என்று இருந்தபோது சனிக்கிழமை இரவு, மூளைக்குள் அந்தக் கட்டி வெடித்து ரத்தம் கசிந்து நினைவு இழந்து கோமாவுக்குச் சென்றுவிட்டார். 'நினைவு திரும்ப 95 சதவிகிதம் வாய்ப்பு இல்லை’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். 'அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவராகவே சுவாசிக்க வேண்டும். அப்படிச் சுவாசித்தால் அவரைக் காப்பாற்றலாம்’ என்றார்கள். ஆனால், இதுவரை அவராகவே சுவாசிக்கவில்லை. வென்ட்டிலேட்டர் மூலம் ஆக்சிஜனை செலுத்தி வருகிறார்கள். கிஷோருக்கு 36 வயசு ஆகுது. இன்னும் கல்யாணம் ஆகலை. கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் நடந்துட்டு இருந்துச்சு. ஆனால், அதற்குள் இப்படி ஆகிடுச்சு. இயக்குநர்கள் பொறுமையாகப் பல மாதங்கள் ஷூட்டிங் நடத்திவிட்டு... அது அத்தனையும் எடிட்டர் டேபிளுக்கு வரும்போது மட்டும் நாலு நாட்களில் அத்தனையையும் பார்த்து உடனே எடிட் பண்ணித்தாங்க. டீஸர் கட் பண்ணித்தாங்க, டிரெய்லர் ஒட்டித்தாங்கன்னு சொன்னால் எப்படி? நாலு மணி நேரம்கூட தொடர்ந்து கிஷோர் தூங்க மாட்டார். எப்பவும் வேலை வேலைன்னு பரபரன்னு இருப்பார். அதுவே அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துடுச்சுங்க. 'இனி கிஷோர் மீண்டு வந்தாலும் ஒரு குழந்தைபோலத்தான் இருப்பார். அவரை பொறுமையாகப் பராமரிக்க வேண்டும்’ என்று டாக்டர்கள் சொல்லிட்டாங்க.!'' என்று கலங்குகிறார்கள் அவரது நண்பர்கள்.
கிஷோரின் அக்கா பரணி பிரியாவுக்கு ஆறுதல் சொல்லி பேசினோம். 'அவனுக்கு இப்படி ஆனதை எங்களால நினைச்சுக்கூட பார்க்க முடியலைங்க. காசு, பணம் இந்தப் பேரு, புகழ் எதுவும் எங்களுக்கு வேணாம். எங்க கிஷோர் மட்டும் திரும்பி வந்துட்டா போதும். அவனை நாங்க ஊருக்குக் கூட்டிட்டுப்போய் காலம் முழுக்க பக்கத்துல இருந்து பார்த்துக்குவோம்!'' என்று தேம்பித் தேம்பி அழுகிறார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி  நரம்பியல் அறுவைச் சிகிச்சை பேராசிரியர் டாக்டர் டி.பாலசுப்ரமணியனிடம் கேட்டபோது, ''உடலுக்கும், மனசுக்கும் ஓய்வு என்பது கட்டாயம் தேவை. எந்த வேலையாக இருந்தாலும் ஒருநாளைக்கு எட்டு மணி நேரத்துக்குள்தான் செய்ய வேண்டும். எட்டு மணிநேரம் வேலை செய்தாலும், இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் 10 நிமிட பிரேக் தேவை. மூளைக்குள் இருக்கும் ரசாயனத்தின் அளவு குறைந்தாலோ, கூடினாலோ பிரச்னைகள் வரும். அப்படி குறையவோ, கூடவோ காரணம், மூளையை கசக்கி ஓய்வு இல்லாமல் வேலை செய்வதுதான். உடலை நாம் ஓய்வு இல்லாமல் அளவுக்கு அதிகமாக வருத்தும்போது மூளை தானாகவே ஓய்வெடுத்துக்கொள்ளும். அந்த ஓய்வு என்பது நீங்கள் நினைப்பதுபோல சாதாரணமானது அல்ல... அதுதான் கோமா!'' என்று சொல்லி அதிரவைத்தார்.

சீக்கிரம் நலமுடன் திரும்பி வாங்க கிஷோர்!
நா.சிபிச்சக்கரவர்த்தி

விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.