Blogger Widgets

Total Page visits

Thursday, May 28, 2015

ஏன் இன்ஜினியரிங் படிக்கனும்? 5 காரணங்கள்!



டந்து முடிந்த கல்வி மன்ற தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த இன்ஜினியரிங் படிப்பு படு தோல்வி அடைந்தது. எதிர் கட்சியாக இருந்த கலை மற்றும் அறிவியல் படிப்பு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்று பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மிகக் குறைந்த இடங்களை மட்டுமே பெற்ற இன்ஜினியரிங், எதிர் கட்சியாகும் தகுதியையும் இழந்தது. இன்ஜினியரிங்கின் இந்த தோல்விக்கு வேலையின்மை, தரமற்ற கல்லூரிகள் போன்ற காரணங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்படுத்திய அதிருப்தி அலையே காரணம் என்று கூறப்படுகிறது.


இதுதான் இந்த ஆண்டு உயர் கல்வி பயில இருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் மனநிலை. ஏன் இன்ஜினியரிங் படிக்கக் கூடாது? என்று கேட்டால் இந்த இரண்டு காரணங்களை மட்டுமே கூற முடியும். ஆனால், ஏன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற கேட்டால் 5 காரணங்களை முன்வைக்க முடியும்.

சிக்கல்களை தீர்க்கும் திறன்:


பொறியியலின் அடிப்படை கணிதம். எந்த துறையாக இருந்தாலும் சரி மாணவர்கள் கொஞ்சம் அதிகமாக கணக்கோடு விளையாட வேண்டியிருக்கும். நான்கு ஆண்டு படிப்பில் பொறியியலுக்குத் தேவையான அடிப்படை கணிதத்திலிருந்து துறை சார்ந்த பாடங்கள் வரை கணக்கு போடுவதில் தேர்ந்த அறிவுடையவர்களாக முடியும். கணிதத்தை விட மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி இருக்கிறது. இந்த அறிவு தொழில் நுட்பம் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் அளவுக்கு மாணவர்களின் திறமையை வளர்க்கிறது. இதனை 'ப்ராப்ளம் சால்விங் நேச்சர்' ( Problem solving nature) என்று கூறுவார்கள்.



இண்டர்வியூவில் ஆப்டிட்ய்யூட் என்ற எழுத்துத் தேர்வு பகுதி இடம் பெறுவதன் முக்கிய காரணமே, மாணவர்களின் 'ப்ராப்ளம் சால்விங்' திறனை அறியத்தான். இது மாணவர்களின் திறனை அறிய முக்கிய கூராக கருதப்படுகிறது. பொறியியல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை செய்யும் ஒருவருக்கு, இத்திறன் அதிகமாக இருக்கும். வேலையில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் வரும் சிக்கல்களை தீர்ப்பதிலும் இவர்களுக்கான திறன் சற்று அதிகமாக இருக்கும் என்றே கூறலாம்.



வேலைக்கு மட்டும் அல்ல வாழ்க்கைக்கும் பொறியியல்...

முடிவெடுத்தல்:


இன்ஜினியரிங் படிப்பதால் ஒரு மாணவனுக்கு வாழ்கையில் முக்கியமான தகுதியான டிசிஷன் மேக் திறன் அதிகரிக்கும். வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முக்கிய முடிவும் நம் வாழ்க்கையின் பாதையையே மாற்றக் கூடியதாக இருக்கும். இதேதான் இன்ஜினியரிங்குக்கும். பிரச்னை என்ன என்பதை கண்டரிய Problem solving nature தேவை என்றால், அதற்கான சரியான தீர்வை தேர்ந்தெடுப்பதில் உதவுவது டிசிஷன் மேக்கிங் திறன். உலகில் பலரால் எடுக்கப்பட்ட சில நல்ல முடிவுகளே, முன்னேற்றத்துக்கான பாதையாக இருப்பதை நாம் காணலாம்.



வேலையில் ஒருவர் எடுக்கும் முடிவு அந்த நிறுவனத்தை உச்சத்துக்கும் கொண்டு செல்லலாம் அல்லது பதாளத்திலும் தள்ளலாம். ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றால் நாலாபக்கமும் நம் மூளை செயல்பட வேண்டும். முடிவெடுப்பதையே வேலையாகக் கொண்ட ஒரு நல்ல இன்ஜினியர், முடிவெடுப்பதில் தேர்ந்தவராக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. வேலையில் முடிவெடுத்து பழகிய ஒருவர், வெளியுலகில்  எடுக்கும் முடிவும், நாலாபக்கமும் யோசித்து தீர்க்கமான முடிவாக இருக்கும் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம்.



இன்ஜினியரிங் - படிப்பு அல்ல பழக்கம்

க்ரியேட்டிவிட்டி:


ஒரு கணினி திரைக்குள் உலகைக் கொண்டு வருவது ஒரு இன்ஜினியரால் மட்டும்தான் முடியும். அன்றாடம் நம் வீடு முதல் ஸ்பேஸ் வரை பயன்படுத்தும் பல தொழில் நுட்பங்கள் எதார்த்தத்தை தாண்டிய சிந்தனைகளின் உருவாக்கமே. ஒரு தொழில் நுட்பத்தைப் பற்றி ஆழ்ந்த அறிவு கொண்ட ஒருவரால்தான் அதை முழுமையாக பயன்படுத்துவதற்கான வழிகளையும் வகுக்க முடியும். ஒரு இசை அமைப்பாளரால் டிஜிட்டல் சவுண்ட் சிஸ்ட்டத்தை இயக்க முடியுமே தவிர அதை உருவாக்க முடியாது. ஆனால், இசை பயிற்சி இல்லாத ஒரு இன்ஜினியரால் அதை உருவாக்க முடியும். நாளை செவ்வாய் கிரகத்துல இடம் வாங்கி வீடு கட்டனும்னாலும் நீங்க ஒரு இன்ஜினியராதான் பிடிக்கனும்.



இன்ஜினியருக்கு வாச்சதெல்லாம் ஆயுதம்.



சிறந்த தொழில் முனைவோர்:



இ-ஷாப்பிங் நிறுவனங்களில் சிறந்து விளங்கும் இந்திய நிறுவனங்கள் ஃப்லிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல். பல ஆயிரம் கோடிகளில் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனங்களை தொடங்கியவர்கள் பொறியியல் பட்டதாரிகள். இன்னும் உங்கள் ஊரில், தெருவில் ஒரே ஒரு கம்ப்யூட்டரை வைத்து சம்பாத்தித்து வரும் இன்ஜினியர்கள் ஏராளம். எம்.பி.ஏ. படித்தால் மட்டும்தான் தொழில் தொடங்க முடியும் என்பதில்லை. பொறியியல் படித்த ஒருவரால்தான், தன் தயாரிப்பு எப்படி பயன்படும், எங்கே யாரிடம் விற்பது என்று தெரியும். மத்திய அரசு கூறிவரும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் முக்கிய பங்கு இன்றைய இன்ஜினியர்களோடதாகத்தான் இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.



தன் கையே தனக்குதவி

வேலை வாய்ப்பு:


தம்பி என்னப்பா படிக்கப் போற? இன்ஜி... சொல்லி முடிக்குறதுக்குள்ள 'அது படிச்சா வேலை கிடைக்காதாம்ல' என்று யாராது சொன்னா, தயவு செஞ்சு அதை நம்பாதீங்க. உலக அளவுல 2020-ம் ஆண்டில் பணியாளர்களுக்கான தேவை 2 பில்லியனாக இருக்கும் என்கிறது 'நாஸ்காம்' . அப்போ ஏன் பொறியியல் மாணவர்கள் வேலை இல்லாம இருக்காங்கனு நீங்க கேள்வி கேக்கலாம். வேலை வாய்ப்பு இருக்கு. அதுக்கு ஏத்த திறமையான படித்த பட்டதாரிகள் இல்லை என்பதுதான் உண்மை. வருஷா வருஷம் வெளிநாட்டு நிறுவனங்களால், பல லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு இந்தியர்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கபடுவது எல்லோரும் அறிந்த விஷயம். வேலைக்கான தகுதியை வளர்த்துக் கொண்டால் எல்லா பொறியியல் பட்டதாரிக்கும் வேலை உறுதி.



சொல்லக் கூடாதது - வேலை இல்லை



சொல்ல வேண்டியது - இன்ஜினியரிங் நல்லது



குறிப்பு:



மற்ற படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த திறமைகள் இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால், நல்ல இன்ஜினியருக்கு இந்த திறமைகள் நிச்சயம் இருக்கும்.



மேலே குறிப்பிட்டுள்ள ஐந்தும் யாருக்கு பொருந்தும்?.



1. ஆர்வத்தோடு படிக்கும் மாணவர்களுக்கு



2. நல்ல கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு (குறிப்புக்குள்ள ஒரு குறிப்பு: முழுமையான ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கல்லூரியின் தரம் ஒரு பொருட்டல்ல)



-ரெ.சு.வெங்கடேஷ்

இந்த பதிவு விகடனில் 28/05/2015 இல் பதிவு செய்யப்பட்டது

Thursday, May 21, 2015

என்று தீரும் பொறியாளர்களின் கண்ணீர்?

நாட்டில் கல்வியின் நிலை உயர்ந்திருப்பதாக மார்தட்டிக்கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். ஆனால், கொடுமை என்னவெனில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதேயன்றி, கல்வியின் நிலை உயரவில்லை. கல்வி தருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதேயன்றி, கல்வியின் தரம் உயரவில்லை. அதிலும் குறிப்பாக பொறியியல் கல்லூரிகளின் தரம் அடிமட்டமாக இருக்கிறது. 

அரசாங்கம் ஒரு குழு அமைத்து, தமிழகத்தில் இருக்கும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் தரத்தை முறையாக ஆராயும் பட்சத்தில் (நேர்மையாக),  500-ல் 50 கூட மிஞ்சாது என்பது மிகுந்த வேதனைக்குரிய, மறுக்க முடியாத உண்மை. மாணவர்களின் நலனில் துளியும் அக்கறையின்றி பணம் சேமிக்கும் கஜானாவாக மட்டுமே செயல்படுகின்றன கல்லூரிகள். ஒவ்வொரு ஆண்டும் பல புதிய கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்குகிறது அரசு. ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் முதலாம் ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் மாணவர்கள், கல்லூரியின் செயல்பாடுகளால் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. 

அத்தகைய மாணவர்களின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் பாதியைக்கூட கல்லூரி விரிவுரையாளர்களால் பூர்த்திசெய்ய முடிவதில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. காரணம், அவர்களும் சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள்தானே!

''ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வெளிவரும் பொறியாளர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர் களிடம் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான தகுதி இருப்பதில்லை" என்கிறது அந்த நிறுவனங் களின் அறிக்கை. அப்படி வெளிவரும் 80 சதவீதம் பேரும், சில மாதங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டு நிறுவனங்களின் வாசல்களில் குடியிருந்து, தகுதியற்றவர்கள் எனக்கூறி துரத்தப் படுகின்றனர். அவ்வாறு துரத்தப்படுபவர்களில் பெரும்பாலானவர்களின்  அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா?

ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் எம்.இ அல்லது எம்.டெக் மேற்படிப்பில் சேருவதுதான். காரணம், இரண்டு வருட படிப்பை முடித்துவிட்டால், ஏதாவது ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்துவிடலாம் என்பதுதான். சேர்ந்தவுடன் முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கும். இது போதாதா..? ஒருசிலர் இதில் விதிவிலக்கு. பள்ளிப்பிராயத்திலிருந்தே விரிவுரையாளர் பணியை விரும்பி பயின்று விரிவுரையாளர்களாக ஆகிறார்கள்.

இன்று பொறியியல் கல்லூரிகளில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்(!) வாத்தியார்களில் பெரும்பான்மை யானவர்களின் கதை இதுவாகவே இருக்கும். நிறுவனங்களால் பொறியாளராகப் பணிபுரிய தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி புதிய திறமையான பொறியாளர்களை உருவாக்குவார்கள்? 

இது 'விரிவுரையாளர்' என்ற பெயரில் அடுத்தவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் செயல்தானே?. ஒருவர் 10 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார், அந்த 10 பேர் சில வருடங்களில் 100 மாணவர்களின் பிழைப்பைக் கெடுப்பார்கள். இதற்கொரு முடிவே இல்லையா? இதையெல்லாம் யார் கேட்பது?

அந்தக் காலத்தில் ஆசிரியராக சேவைபுரிய ஆசைப்பட்டு, லட்சியமாகக்கொண்டு ஆசிரியர்களாக சேவை புரிந்தவர்களே அதிகம். ஆனால் இன்று, வேறு வழியில்லாமல், எளிமையான வழி என்று ஆசிரியப் பணி யைத் தேர்ந்தெடுப்பவர்களே அதிகம். இது பொறியியல் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
இதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுப்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், ஒவ்வொரு வருடமும் கவுன்சிலிங்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சீட்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக 'வருத்தம் கொள்கிறது' அண்ணா பல்கலைக்கழகம். 

பொறியாளர்களின் எதிர்காலம் குறித்த இந்த பிரச்னையில் அரசு கவனம் செலுத்தவேண்டியது அவசியம்!

-கே.பி. மதிவாணன் B.E. 

இந்த பதிவு விகடனில் 20/05/2015 இல் பதிவு செய்யப்பட்டது, தகவலை விகடனில் படிக்க இங்கு சொடுக்கவும்.   

Monday, May 18, 2015

அத்தியாயம் 13- பொறுப்பே பிரதானம்

நேர்முகத்தேர்வு என்ற வார்த்தையை சற்றே மாற்றி, நேர் முக்கியத் தேர்வு என்று தலைப்பிடக் காரணமே, ஒவ்வொரு நேர்முகத் தேர்வின் போதும், உள்ளே செல்லும் நபர் , 'எப்படியாவது' தேர்வு நடத்தும் அதிகாரியின் மனதில் இடம் பிடித்துவிடவேண்டும் என்று நினைப்பதும், அது முடியாமல் போனால், 'அந்த Interview எடுத்த ஆள் சரியில்லை' என்று குறைகூறுவதும் நடக்கும். 

அல்லது வேலை கிடைத்துவிட்டால், 'எனக்கு இந்த மாதிரி interview எல்லாம் ஜுஜுபி' என்று தன் திறமைக்கு மட்டுமே வேலை கிடைத்துவிட்டதாக நினைப்பதும் – இரண்டு விளைவுகளை உருவாக்கும். 

முதலாமவர், அடுத்தவரைக் குறை சொல்வதை விட்டுவிட்டு , தன் மேல் என்ன தவறு என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். அதே சமயத்தில், இரண்டாமவர், தனக்கு போதுமான அளவுக்குத் திறமை இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, உண்மையில் அன்றுதான் அவர் கடைசியாகத் திறமையாக நடந்துகொண்டார் என்று சொல்லும் அளவுக்கு சொதப்பிவிடவும் கூடாது. இதில் நிறுவனத்தின் பிரதிநிதிக்கும் கத்தி மேல் நடக்கும் வேலை! சரியான ஆளைத் தேர்ந்தெடுத்தாரோ பிழைத்தார்… !! இல்லையென்றால்.. பிழை ஆகிவிடுவார். ஆக, ஒரு நிறுவனம் என்ன எதிர்பார்க்கிறது என்று உண்மையில் சரியாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்றார்ப் போல் தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் நபர்கள் கில்லாடிகளாக வலம் வருகிறார்கள். 
 
ஆக, ஒரு ஊழியராக வருபவரின் நிறை குறைகளை இருபுறமும் தெரிந்து கொள்ளும் ஒரு சரியான கருவியாக நேர்முகத்தேர்வு இருப்பதால்தான் அதன் முக்கியத்துவம் உணர்ந்து நேர் முக்கியத் தேர்வு என்றோம்.

இதை ஏன் இந்த 13 வது அத்தியாயத்தில் விளக்கவேண்டும் என்று தோன்றும். இங்குதான் நாம் அடுத்துப் பார்க்கப் போகும் குணம் ஒளிந்திருக்கிறது. ஒரு ஆள், ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது, நான்கைந்து பேர் ஒரு வேலையைச் செய்து அதில் தவறு நிகழ்ந்துவிட்டால், அனிச்சையாக வரும் பதில்  'என் மேல தப்பில்லை' என்பதுதான்!

அதாவது, நியாயமாக யார்மேல் தவறு என்று ஆராய்ந்து அதனைச் சரிசெய்வது ஒரு விதம்! மொத்தத்தில் தவறு நிகழ்ந்துவிட்டது வாருங்கள் . தீர்வைக் கண்டறிந்து சரி செய்வோம் என்று நினைப்பது இன்னொரு விதம். அதை விட்டுவிட்டு, என் மேல் தவறே இல்லை என்று எல்லாருமே ஒதுங்கினால், என்ன ஆகும்? தவறு தானாகவே நிகழ்ந்துவிட்டதா என்று பிரச்னை வேறு கோணத்தில் பயணிக்கும்.

இதை உணர்த்தத்தான், அந்த நேர்முகத்தேர்வு உதாரணம் சொன்னேன். நான் நன்றாகத்தான் பதிலளித்தேன். ஆனால், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று ஒரு முன்முடிவை எடுத்துவிட்டால், நேர்முகத் தேர்வு மட்டுமல்ல. வாழ்வில் எதிலுமே அந்த நபர் கற்றுக்கொள்வது நின்றுவிடும். அப்படியானால், நேர் முக்கியத் தேர்வுக்குத் தேவையான அடுத்த குணம் என்ன?

பொறுப்புணர்ச்சி !!

பொதுவாக நிறுவனங்களில், ஒரு வேலையில் ,பிரச்னை என்று வரும்போது, 

நான் பாக்கலை சார்!
என் வேலை இல்லை சார்!
அவர் பாக்குறாரேன்னு விட்டுட்டேன் மேடம்!
கம்ப்யூட்டர்தான் ஏதோ மிஸ்டேக்!
நான் தப்புப் பண்ண வாய்ப்பே இல்லை!
அடுத்தவங்க செஞ்ச தப்புக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?
என் லெவல் வரைக்கும் கரெக்டா இருக்கு பாருங்க!

இப்படிக் காரணங்களை அடுக்க மட்டும் எந்த ஊழியரும் மறப்பதே இல்லை. ஆனால், ஒரு நிறுவனம் என்பது அப்படி அல்ல..! நீங்கள் உள்ளே நுழைந்தவுடனேயே உங்கள் ஊதிய மீட்டர் ஓடத் துவங்கிவிடும்.. ஆனால் அவர்களது வேலை மீட்டர்?
 
இங்கு பல்வேறு நிறுவனங்களில் நடக்கும் கூத்து என்னவென்றால், மேலதிகாரி இருந்தால், ஒருமாதிரியும், அவர் இல்லாவிட்டால் வேறொரு மாதிரியும்தான் ஊழியர்கள் நடந்துகொள்கிறார்கள். அமீபாவாகத் தெரியும் இந்த பிரச்னைதான் அனகோண்டாவாக மாறி நிறுவனத்தையே விழுங்கிவிடும்.

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே

என்று திரமூலரின் திருமந்திரத்தில் ஒரு பாடல் வரும். அதன்படி, நம்மைக் கண்காணிக்க யாருமே இல்லை என்றுதான் நாம் பல தவறுகளைச் செய்கிறோம். ஆனால், கண்காணிப்பவர் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்று உணர்ந்தவர்கள் தவறு செய்யமாட்டார்கள்.  இதனை நான் நிறுவனத்துக்கும் உரித்தாக்குகிறேன்.

நம்மைப் பார்க்க யாருமே இல்லை என்ற நேரத்திலும், சரியாக நடந்துகொண்டால் போதும்.

ஒரு போக்குவரத்து சிக்னல், இரவு இரண்டு மணி, நாம் மட்டும் வாகனத்தில் செல்கிறோம். நம் வழியில் சிகப்பு விழுந்திருக்கிறது. அதனை மதித்து நிற்பதுதான் பொறுப்புணர்ச்சி!

இங்கு குப்பைப் போடாதீர்கள் என்ற பொது இடத்தை மதித்து , அப்போது சாப்பிட ஆரம்பித்த சாக்லேட் பேப்பரை , குப்பைத்தொட்டியைத் தேடிப் போய்ப் போட்டுவிட்டு வந்தால், அதன் பெயர் பொறுப்புணர்ச்சி!

அப்படிப்பட்ட பொறுப்புணர்ச்சி இருக்கிறதா என்று நேர்முகத்தேர்வில் எப்படிக் கண்டுபிடிப்பார்கள் ? 

ஒரு வாரம் நேரம் இருக்கிறது. சிந்திக்கலாம்...

அத்தியாயம் 12 - தீர்வின் வாசல்

இன்றைய நிர்வாகச் சூழலில் Problem Solving Skill என்பது மிக மிக அத்தியாவசியமானதாகிவிட்டது. முன்பெல்லாம், ஒரு மேலதிகாரி முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று கீழுள்ளவர்கள் சென்றுவிடுவார்கள். ஆனால், இன்றோ, அனைவருமே, அனைத்துப் பிரச்னைகளையும் கையாள வேண்டும் என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. ஏனெனில் இன்றைய யுகத்தில், மனிதவளம்தான், Money தரும் வளம் என்று நிறுவனங்கள் நம்புகின்றன.

பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் இயல்பிலேயே இருந்தாலும், நம் சுற்றுச் சூழலும், குடும்பமும் அந்தக் குணத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும்பாலும், நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போதோ, அல்லது அங்கு ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்ட பிறகோ, ஒரு சிறு பதட்டம் வரும். அதனை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் கூட பிரச்னைகளைத் தீர்க்கும் திறனை அறிந்து கொள்ளலாம்.
 

பொதுவாகவே, தினமும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு அதைத் தீர்த்துக் கொண்டே வருவதால், அந்தத் திறன் அதிகமாகத் தெரியும். ஆக, பிரச்னையைத் தீர்க்கும் திறன் என்பது பிறவிக் குணம் அல்ல என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் அது எல்லாப் பிரச்னைக்கும், ஒரே மாதிரி தீர்வாகவும் இருந்து விடக்கூடாது.

ராக்கெட் ஏவும் வேலைக்குச் சேர்ந்தாராம் மொக்கைச்சாமி! அன்று அனுப்ப வேண்டிய ராக்கெட் கவுண்ட் டவுன் டைம் முடிந்தும் கிளம்பவே இல்லை! உடனே இவர் சென்றார். ராக்கெட்டை சாய்க்கச் சொன்னார். அதன் இடுப்புப் பகுதியில் ஒரு உதை விட்டார். இப்ப ஸ்டார்ட் பண்ணுங்க! என்றார். எல்லா விஞ்ஞானிகளும் அதிர்ச்சியாக.. என் ஸ்கூட்டரையே இப்படித்தான் நான் ஸ்டார்ட் பண்ணுவேன். ராக்கெட் எம்மாத்திரம்! என்றார்.

ஆக, ஸ்டார்ட் ஆகாத எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வுதான் என்ற மன நிலையும் ஆபத்தானது. ஆனால், எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு ஒரு விஞ்ஞானரீதியான, உளவியல் ரீதியான முறை ஒன்று இருக்கிறது என்று பார்த்தோம். அதற்கு டாப் என்ற பெயரும் கண்டோம்.

அதை எப்படிப் பயன்படுத்துவது?

THINK ON PAPER என்றாலே, எண்ணங்களைக் காகிதத்தில் கொண்டு வருவது தான்..நாம் நினைப்பது எல்லாவற்றையும் காகிதத்தில் கொண்டு வந்தால் சரியாகிவிடுமா? என்றால்,.. இல்லை. நாம் எப்படி நினைக்கிறோம் என்பதையும் நாம்தான் வடிவமைக்கவேண்டும்.

அதற்குத்தான், இதில் நாம் ஒரு முறையைக் கையாளப்போகிறோம்.

ஒரு காகிதத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ! கீழ்க்கண்ட செயல்களை வரிசைப் படிச் செய்யுங்கள் !

  1. உங்களுக்கு இருக்கும் தலையாய பிரச்னைகள் மூன்றை வரிசையாக எழுதுங்கள்!

  2. அதனை, இப்போது முக்கியத்துவ அடிப்படையில் - அதாவது, எந்தப் பிரச்னையை உடனே தீர்க்கவேண்டும் என்ற வகையில் - வரிசைப்படுத்தி, அதில் தேர்வான முதல் பிரச்னையை மீண்டும் கீழே எழுதுங்கள்.

  3. இந்தப் பிரச்னை ஏன் ஏற்பட்டது என்று எழுதுங்கள்.

  4. எதற்காக இது பிரச்னையாகக் கருதப்படுகிறது என்று எழுதுங்கள். இது இப்படியே போனால் என்ன ஆகும் என்று எழுதுங்கள்.

  5. எப்படி இது ஆரம்பித்தது என்று குறிப்பிடுங்கள்.

  6. எங்கு தவறு நடந்திருக்கும் என்று சிந்தித்து அதையும் எழுதுங்கள்.

  7. யார் காரணம் என்று குறிப்பிடுங்கள்.

  8. எப்படித் தீர்ப்பது, தீர்வுக்குப் பிறகு கிடைக்க இருக்கும் பலனை எழுதுங்கள்.

  9. மனதில் தோன்றும் அத்தனைத் தீர்வுகளையும் வரிசையாக எழுத ஆரம்பியுங்கள்.

  10. அவற்றில் முக்கியமாகவும், சரி வரக் கூடியதாகவும் கருதப்படும் 3 தீர்வுகளை மீண்டும் எடுத்து எழுதுங்கள்.

  11. மூன்றையும் ஆராய்ந்து, அவற்றில் ஏதாவது ஒரு தீர்வை “இதைத் தவிர வேறுவழியில்லை” என்ற வகையில் தேர்ந்தெடுங்கள்.

  12. அதுதான் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு!

இப்படித்தான் TOP வேலை செய்கிறது.
 
இதனை நடைமுறையில் செய்துப் பார்த்தால், உண்மையிலேயே சிறப்பான தீர்வை அடைந்துவிடலாம். பொதுவாக பிரச்னைகளைப் பற்றி சிந்திப்பதில் செலவழிக்கும் நேரத்தில் பத்தில் ஒரு பங்குகூட, இதனைச் செய்துப் பார்க்க ஆகாது.

மேற்கண்ட பயிற்சியை எந்தப் பிரச்னைக்கு வேண்டுமானாலும் செய்துபாருங்கள்.

ஒரு சில சுவாரஸ்யங்கள் நிகழும். யார் காரணம் என்ற கேள்விக்கு பெரும்பாலோருக்கு “நான்தான்” என்று பதில் வரும்.

நீங்கள் கண்ட தீர்வை விட சிறந்த தீர்வு இருக்கவே முடியாது என்று வந்து நிற்கும். ஏனெனில், உங்கள் பிரச்னையில், அனைத்துச் சூழலும், அதன் தன்மையும், அதன் வீரியமும், அது ஏற்படுத்தப் போகும் தாக்கமும் அறிந்தவர் நீங்களாக மட்டும்தான் இருப்பீர்கள்.

சரி..பிரச்னையைத் தீர்க்கும் சூட்சுமம் தெரிந்து கொண்டாகிவிட்டது. இத்தோடு நேர்முகத் தேர்வில் விட்டு விடுவார்களா? என்றால், இப்போது பாதி கிணறுதான் தாண்டியிருக்கிறோம் என்பதுதான் உண்மை…

மீதிக் கிணறை வரும் வாரங்களில் தாண்டுவோம்.

அத்தியாயம் 11 - டாப் நல்லது

நேர்முகத் தேர்வை அணுக இதுபோன்ற குணங்களெல்லாம் தேவை என்று சொல்லிக்கொண்டே செல்கிறோம். அதில், தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர், பிரச்னைகளைத் தீர்க்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்று நிறுவனங்கள் எதிர்பார்ப்பதற்கு, பல்வேறு தேவைகளும் நடைமுறைகளும் காரணமாக இருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் அந்நிறுவனத்தின் ஒவ்வொரு கிளைக்கும் தினசரி வந்து சென்றுகொண்டிருக்க முடியாது. அதே நேரத்தில், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளும் தவறின்றி நடைபெற வேண்டும் என்று நினைப்பார்கள். அதனைக் கையாள முதலில் ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கி வைத்திருப்பார்கள். பிறகு, அந்த ஒழுங்குமுறையைப் பின்பற்ற சரியான ஆள்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இங்குதான் தினசரிச் செயல்பாடுகளில் பிரச்னை வரும். அதனைத் தீர்க்கும் மனோபாவம் உள்ளவர்கள்தான், அந்த நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகளை முறையாகக் கொண்டுசெல்ல முடியும். அதனால்தான் பிரச்னைகளைத் தீர்ப்பவர்களை எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் நிறுவனத்துக்கு ஒரு பிரச்னை தீர்கிறது என்பது மட்டுமல்ல, அந்த நபரை அந்த நிறுவனம் சொத்தாகப் பார்க்கத் துவங்கிவிடும் என்பதுதான் நிதர்சனம்.

சென்ற வாரம், இயல்பான இரண்டு பிரச்னைகளைச் சொல்லி, அதற்குத் தீர்வு சொல்லச் சொல்லியிருந்தோம். அதற்கு நேரம், உழைப்பு, பணம் மூன்றும் செலவழியாத ஒரு தீர்வாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி! அதன்படி யோசித்தால், என்ன தீர்வு வரும் என்று பார்க்கலாம்.

அது ஒரு குறுகலான மலைப்பாதை. இருபுறமும் பாறைகள். ஒருநாள், ஒரு பெரிய பாறை உருண்டு அந்தப் பாதையில் விழுந்துவிட்டது. நீங்கள் அதனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும். கிரேன் போன்றவற்றைக் கொண்டுவர இயலாது. வெடி வைத்துத் தகர்க்க முடியாது. நேரமும் குறைவுதான். என்ன செய்வீர்கள்?

இதுதான் முதல் கேள்வி! இதற்கான தீர்வு, அதே சாலையில், அந்தப் பாறைக்கு அருகில் அதன் அளவுக்கு ஒரு பள்ளம் தோண்டி, அந்தப் பள்ளத்தில் பாறையைத் தள்ளிவிட்டுவிடலாம். அதன் மேல் இந்தப் பள்ளத்தின் மண்ணைப் போட்டுவிட்டால், சாலை தயார்! இதற்கு, கல்லை வெடி வைத்துத் தகர்க்க வேண்டும். பாறை மேல் அப்படியே சாலை போட வேண்டும். கிரேன் மூலம் பாறையைத் தூக்க வேண்டும் என்ற தீர்வுகளைத்தான் யோசிப்போம். ஆனால், இந்தத் தீர்வில், நேரம், உழைப்பு, பணம் ஆகியவை மிச்சமாவதைக் காணலாம்.

அடுத்ததாக,

ஒருநாளில் 35,000 சோப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளிவரும் சோப்புப் பெட்டிகளில், பரவலாக, பல சோப்புப் பெட்டிகளுக்குள் சோப்பு இல்லாமல், கவர் மட்டும் வருவதாகப் புகார் எழுகிறது. அந்தத் தொழிற்சாலையில் சோதிக்கும்போது, சோப்புகளை கவர்களுக்குள் போட்டு சீல் செய்யும் இடத்தில், அந்தக் கவருக்குள் சோப்பு இருக்கிறதா என்பதை ஆராயும் வழிமுறை இல்லை என்று தெரியவருகிறது. அதாவது, அங்கிருந்து செல்லும் எல்லா சோப்புப் பெட்டிகளிலும் சோப்பு இருக்க வேண்டும். வெற்றுக்கவராக ஒரு பெட்டிகூடச் செல்லக்கூடாது. இதற்கு நீங்கள் எப்படித் தீர்வளிப்பீர்கள்?

இதற்கான தீர்வு, மிகவும் எளிமையானது. சோப்புகளை அதற்கான உறைக்குள் அடைத்தபின் வெளிவரும் கன்வேயர் பெல்ட்டை நோக்கி ஒரு பெரிய காற்றாடியை (FAN) வைத்துவிட்டால் போதும். சோப்பு இல்லாத உறைகள் எல்லாம் பறந்துவிடும். ஆனால், பொதுவாக நாம், சோப்புகளை எடை போட வேண்டும். ஒரு டிஜிட்டல் லேசர் இயந்திரம் வைக்க வேண்டும். ஒரு எக்ஸ்ரே இயந்திரம் வைக்க வேண்டும். ஒவ்வொரு சோப்பையும் யாராவது தூக்கிப் பார்க்க வேண்டும் என்று பல்வேறு தீர்வுகளை முன்வைப்போம். இவை எல்லாவற்றையும்விட, எது நேரம், உழைப்பு, பணத்தைச் சேமிக்கிறது என்பதுதான் முக்கியம்.

ஆக, பிரச்னையைத் தீர்க்கவும், கற்பனை சக்தியும், கவனமும்தான் கைகொடுக்கும் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

நமக்கு வேலையில் மட்டுமா பிரச்னை வருகிறது? சொந்த வாழ்விலும் வருகிறது. அவற்றைத் தீர்க்க முடியாமலோ அல்லது இன்னும் சிக்கலாக்கிக்கொண்டோதான் நாம் வாழ்ந்து வருகிறோம். ஒரு சிலருக்கு மட்டும் பிறவியிலேயே சிக்கலைத் தீர்க்கும் வகையில் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கும் அல்லது தீர்வுகாணும் இயல்பு இருக்கும். ஆனால், அவர்களைத் தவிர மற்றவர்களும், அதேபோன்று தீர்வு காணலாம் என்பதை உணர வேண்டும். ஒரு வேலைக்குப் போவதற்கு மட்டுமல்ல! மொத்த வாழ்க்கைக்குமே, சிக்கலைத் தீர்க்கும் மனநிலை உதவும். இதனை நாம் வளர்த்துக்கொள்ளலாம்.

இதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது.

அது என்னவென்றால், 

ஒரு பிரச்னை ஏற்படுகிறது என்றால், நாம் என்ன செய்கிறோம்? என்னடா இப்படி ஆகிவிட்டதே?

கொஞ்சம் முன்னர் சிந்தித்திருக்கலாமோ?
யாரும் ஒன்றும் சொல்லிவிட மாட்டார்களே?
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
என்று பல்வேறு சிந்தனைகள் ஓடி, தீர்வு காணும் மனநிலை மறைந்து, கவலை தலையெடுத்துவிடும். அதுதான், நமது பலத்தை பலவீனமாக்கும் இடம். இந்த இடத்தில்தான் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

அதுதான் TOP.
இதன் விரிவாக்கம் Think On Paper!
அதை எப்படிச் செய்வது?

நமது பிரச்னையை, நிறுவனத்தின் பிரச்னையை – காகிதத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதைத்தான் மிகப்பெரிய வெற்றியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
காகிதத்தில் சிந்திப்பது என்றால்? நாம் ஒரு பிரச்னை ஏற்பட்ட பிறகு எப்படிச் சிந்திக்க வேண்டும் என்று முறைப்படுத்துவது. மேலும், அப்படிச் சிந்திப்பதை உடனடியாகக் காகிதத்தில் பதிவுசெய்வது. இதுதான் மிகவும் மேம்படுத்தப்பட்ட வழிமுறையாகப் பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஒரு பிரச்னையைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கும்போதே, பேனாவுடன் ஒரு காகிதத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு…?

ஒரு வாரம் காத்திருங்கள். தீர்வுடன் சந்திப்போம்…

அத்தியாயம் 10 - தீர்வுத் திறன்

பட்டப்படிப்பு முடித்துவிட்டேன். கல்வியறிவு இருக்கிறது. முறையாக ஒரு சுய விவரம் (ரெஸ்யூமே) இருக்கிறது. கவனம் இருக்கிறது. கற்பனை வளத்துக்கும் பஞ்சமில்லை. இன்னும் எனக்கு வேலை கொடுக்க என்னதான் பிரச்னை? என்று ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் நபர் கேட்டால், என் பதில் இப்படித்தான் இருக்கும்.
பிரச்னைதான் பிரச்னை!
புரியவில்லை என்றால், பிரச்னைகளை எப்படி அணுகுகிறார்கள்? எப்படித் தீர்க்க முயல்கிறார்கள் என்பதுதான், அடுத்தகட்டமாகத் தேவைப்படும் திறன். அதாவது, PROBLEM SOLVING SKILL.
வேலை பார்க்கும் இடத்தில் என்ன மாதிரியான பிரச்னை வந்துவிடப் போகிறது? அதனைத் தீர்க்க என்ன புதிதாக ஒரு திறன் தேவைப்படப் போகிறது? என்று கொஞ்சம் கண்டுகொள்ளாமல்தான் இருப்போம். ஆனால், ஆழ்ந்து பார்க்கும்போதுதான், விஷயம் விளங்கும்.
ஏனெனில், அடிப்படையாகவே எல்லா நிறுவனங்களுமே பிரச்னைகளை அடிப்படையாக வைத்துத்தான் இயங்குகின்றன. பிறரின் பிரச்னையைச் சரி செய்வதுதான் ஏறத்தாழ எல்லாத் தொழில்களின் அஸ்திவாரம். அதாவது, வாடிக்கையாளருக்கு ஒரு பிரச்னை. அதனைச் சரி செய்வதுதான் அந்த நிறுவனத்தின் தொழில்.



உலகச் செய்திகளை வீட்டுக்குள்ளேயே தெரிந்துகொள்ள முடியவில்லையே என்ற பிரச்னை – தினசரி செய்தித்தாள் என்பது தீர்வு!

துணிகளைத் துவைக்க கை வலிக்கிறது என்பது பிரச்னை – வாஷிங் மெஷின் என்பது தீர்வு!
உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வை பார்க்கமுடியவில்லையே என்பது பிரச்னை – தொலைக்காட்சி என்பது தீர்வு!
அழுக்குப் போக, நுரை வரக் குளிக்க முடியவில்லையே என்பது பிரச்னை – சோப் என்பது தீர்வு!
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக்கு வேகமாகக் செல்ல முடியாதது பிரச்னை – மோட்டார் வாகனங்கள் தீர்வு!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதன்படி, ஒரு பிரச்னைக்குத் தீர்வாகத்தான் நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு, அன்றாடம் வேலையில் வரும் பிரச்னையைத் தீர்ப்பவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறே இல்லையே?

பொதுவாக, ஒரு நிறுவனத்தில், வாடிக்கையாளருக்கு ஒரு சேவை செய்யும்போது, அதில் ஒரு பிரச்னை வந்தால், அதனை எப்படித் தீர்க்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதில், நிறுவனத்தின் நன்மதிப்பு உயர வேண்டும். நேரம், பணம், உழைப்பு ஆகியவற்றை மிச்சப்படுத்த வேண்டும். பிரச்னைகளை வேறு ஒரு கோணத்தில் அணுகி, தீர்வுடன் வரும் சாமர்த்தியம் வேண்டும்.
சரத்குமார் இரு வேடங்களில் நடித்த ‘ஐயா’ திரைப்படத்தில், ஒரு கிராமத்து ஏரியைத் தூர் வார 37 லட்ச ரூபாய் செலவாகும் என்பதால், செய்ய இயலாது என்று அரசு சொல்லிவிடும். அது ஒரு பிரச்னையாக நிற்கும். அதனை மிகவும் எளிய முறையில், எதற்கு என்ன செலவழித்தால், எப்படி வருமானம் ஈட்டினால், கிராம மக்களே அந்த ஏரியைத் தூர் வார முடியும் என்று தீர்வு சொல்வார் சரத்குமார். அதில், பிரச்னையை எல்லாக் கோணத்திலும் அலசிய புத்திசாலித்தனம் தெரியும்.



பொதுவாக, நேர்முகத் தேர்வில், ஒரு நபரிடம் கேள்வி கேட்கும்போது, அவரது தீர்வு காணும் திறனைச் சோதிக்க, கற்பனையாகச் சில கேள்விகள் கேட்பார்கள். உதாரணமாக…

அது ஒரு குறுகலான மலைப்பாதை. இரு புறமும் பாறைகள். ஒருநாள், ஒரு பெரிய பாறை உருண்டு அந்தப் பாதையில் விழுந்துவிட்டது. நீங்கள் அதனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும். கிரேன் போன்றவற்றைக் கொண்டுவர இயலாது. வெடி வைத்துத் தகர்க்க முடியாது. நேரமும் குறைவுதான்.. என்ன செய்வீர்கள்.?
அடுத்ததாக,
ஒருநாளில் 35,000 சோப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளிவரும் சோப்புப் பெட்டிகளில், பரவலாக, பல சோப்புப் பெட்டிகளுக்குள் சோப்பு இல்லாமல், கவர் மட்டும் வருவதாகப் புகார் எழுகிறது. அந்தத் தொழிற்சாலையில் சோதிக்கும்போது, சோப்புகளை கவர்களுக்குள் போட்டு சீல் செய்யும் இடத்தில், அந்தக் கவருக்குள் சோப்பு இருக்கிறதா என்பதை ஆராயும் வழிமுறை இல்லை என்று தெரியவருகிறது. அதாவது, அங்கிருந்து செல்லும் எல்லா சோப்புப் பெட்டிகளிலும் சோப்பு இருக்க வேண்டும். வெற்றுக் கவராக ஒரு பெட்டிகூடச் செல்லக் கூடாது. இதற்கு நீங்கள் எப்படித் தீர்வளிப்பீர்கள்?
இதுபோன்று எண்ணற்ற கேள்விகள் உள்ளன. இதற்கான தீர்வுகளை நாம் எப்படிக் கண்டுபிடிக்கிறோம்? எந்த விதத்தில் அதற்கு பதில் சொல்ல முனைகிறோம்? எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறோம்? என்பது போன்ற பல விவரங்கள் பார்க்கப்படும்.
சில நேரங்களில், பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகச் சொல்லும் தீர்வுகளே பிரச்னையாகிவிடக்கூடாது.
அதாவது, அவசரமாக விக்கல் எடுக்கிறது என்பது பிரச்னை. அதற்குத் தீர்வாக, அருகில் இருக்கும் விஷத்தை எடுத்துக் குடித்துவிடுவது!
இப்போது, தீர்வு இன்னொரு பிரச்னையை உருவாக்கிவிடும். விஷம் குடித்தால் விக்கல் நின்றுவிடும். ஆனால், விஷம் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்குமே?
அப்படித்தான், சில பிரச்னைகளுக்குத் தீர்வு யோசிக்கும்போது, தவறு செய்துவிடுகிறார்கள்!
சரி! பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறனை எப்படி வளர்த்துக்கொள்வது? அது என்னிடம் எப்படி இருக்கிறது என்பதை எப்படி அளப்பது?
அதற்குமுன், நான் கேட்ட இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வை சிந்தித்து வையுங்கள். அடுத்த வாரம் சந்திக்கலாம்!

அத்தியாயம் 9 - கற்பனையும் செய்ப்பழக்கம்!

வேலைக்குச் சேர, கல்வித் தகுதி மட்டுமே போதும் என்றுதான் இன்றைய வேலை தேடும் இளைஞர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், வேலைத் தகுதி எதையுமே வளர்த்துக்கொள்ளாமல், தினசரி ஏதாவது ஒரு நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது அல்லது, தெரிந்த நண்பர் நம்மை பரிந்துரைப்பார் (RECOMMEND), தொடர்பு கொடுப்பார் (REFERENCE) என்று நம்பி, அந்த கம்பெனி வேலைக்காகவே உட்கார்ந்திருப்பது என்று ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், கல்வித் தகுதிக்கும் மேல், எந்த மாதிரியான அடிப்படைத் திறன்களை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று தெரிந்தால், அதனை வளர்த்துக்கொள்ள விழையலாம். அப்படிப்பட்ட திறன்கள் எவை, அவற்றை எப்படி வளர்த்துக்கொள்வது என்பது பற்றித்தான் கடந்த எட்டு வாரங்களாகப் பார்த்துவருகிறோம்.
முதலில், எப்படித் தயாராவது? சுயவிபரம், மின்னஞ்சல் எப்படி இருக்க வேண்டும்? கவனம் எவ்வளவு அவசியமானது? அதனை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? அடுத்து, கற்பனை சக்தியின் அவசியம் என்ன என்று பார்த்தோம்.
விவரமாகப் படிக்க விரும்புபவர்கள் இதற்கு முந்தைய பாகங்களையும் படித்துவிட்டு வரலாம்.
சென்ற அத்தியாயத்தில், நமது கற்பனை சக்தியோடு தொடர்புடைய உளவியலை அறிய ஒரு வட்டத்தைக் கொடுத்து, அதைப் பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது என்று கேட்டிருந்தேன்.
இதை வைத்து, உங்களை நீங்களே எடை போட்டுக்கொள்ளலாம்.
வட்டத்தை நினைத்தவுடன் –
உடனே என்ன நினைவுக்கு வருகிறது?
அடுத்தடுத்து எத்தனை பொருள்கள் நினைவுக்கு வருகின்றன?
அப்படி நினைவுக்கு வர எவ்வளவு நேரமாகிறது?
இவையெல்லாம், நமது கற்பனை சக்தியை அளவிட்டுவிடும்.
உடனடியாக, உங்கள் கையில் பயன்படுத்தும் பொருள்கள் நினைவுக்கு வந்தால், (பேனா மூடி, சி,டி, டீ மேட்) – நீங்கள் ஒரு அலுவலக வேலைக்கு உங்களைத் தயார் செய்துவைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
பூஜ்ஜியம் என்ற எண்ணோ, நாணயமோ நினைவுக்கு வந்தால், உங்களுக்கு நிதி சம்பந்தமான துறையில்தான் நாட்டம் என்று அர்த்தம்.
நீங்கள் அன்றாடம் சாலையில் பார்க்கும் பொருள்கள், குறிப்பாக சக்கரம், குடை போன்றவை தோன்றினால், உங்களுக்குப் பயணம் சார்ந்த, வாகனம் சார்ந்த வேலைகளில் நாட்டம் இருக்கும்.
நீங்கள் நினைத்த பொருள் இந்த பூமியிலேயே இல்லை. அதாவது நிலா, சூரியன் போன்றவையாக இருந்தால், நீங்கள் யதார்த்தத்தை மீறி கற்பனையாக நிறைய சிந்திப்பவர். மேலும், உங்களுக்கு ஒரு கனவு வாழ்க்கை எப்போதும் உங்களைத் துரத்தும்.
வட்டத்தைப் பார்த்தவுடன், அது வேறு ஒரு பெரிய பொருளின் ஒரு பாகமாக கேஸ் ஸ்டவ்வின் பர்னர், மீனின் கண், பூவின் நடுப்பகுதி, புகைபோக்கியின் மேல்பகுதி என்று பார்த்தால், நீங்கள் மிகவும் யதார்த்தவாதி, பிரச்னைகளைப் புரிந்துகொள்பவர். அதே சமயம், எல்லாவற்றிலும் அதன் ஆழம் வரை செல்பவர்.
இதையெல்லாம் விடுத்து, வட்டத்தைப் பார்த்தவுடன், இந்த உலகிலேயே இல்லாத, இன்னும் உருவாக்கப்படாத ஒரு பொருளாகவோ, நாம் நினைத்தே பார்த்திராத ஒரு பொருளையோ (உ.ம்., புத்தரின் தலை, வேற்றுக் கிரக மனிதனின் வாய், குண்டூசியின் முனை, கண்ணனின் வாய்க்குள் உலகம், ஒரு சொட்டுத் தண்ணீர் என்று சொன்னார்கள் என்றால், அவர்கள்தான் புதிய கண்டுபிடிப்புகளையும், கற்பனா சக்தி மூலம் படைப்புகளையும் உருவாக்குபவர்களாக ஆவார்கள்.
மேலே கண்ட அனைத்தையுமே கூற முடிந்தால், உங்களால், எதை வேண்டுமானாலும் கற்பனை செய்யமுடியும் என்று எண்ணலாம்.
இவற்றைத் தவிர வேறு சிந்தனை வந்தாலும், அதுதான் கற்பனைக்கு அடிப்படை. அப்படிப்பட்டவர்கள்தான் புதிய பொருள்களை உருவாக்குகிறார்கள்.
இவற்றையெல்லாம் மீறி, இந்த வட்டத்தை, ஒரு குழந்தையிடம் கேட்டுப் பாருங்கள். நாம் சிந்திக்காத கோணத்தில் பதில் சொல்லும். மாத்திரை, பர்த்டே கேக், கிண்டர் ஜாய், பஸ் ஸ்டீயரிங், பிஸ்கட், தோசை, பள்ளிக்கூட கேட்டில் உள்ள டிசைன், ஓ, காட்டுக்குள் யானையைப் பிடிக்கத் தோண்டிய பள்ளம்… இவையெல்லாம். இரண்டாம் வகுப்பு படிக்கும் எனது மகள் ஒரு நிமிடத்துக்குள் சொன்ன பதில்கள்.
இதுதான்…

நமக்கு சிறுவயதில் இருந்த கற்பனை சக்திக்குத் தீனி போடாமல் விட்டுவிட்டு, படித்து முடித்து, வேலைக்குச் செல்லும்போது, திடீரென்று கற்பனை சக்தியைக் கேட்டால் எங்கே போவது? இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. அதனை உடனே வளர்த்துக்கொள்ளலாம்.
ஏனெனில், கற்பனை சக்தி இரண்டு விதங்களில் நமக்குள் வரும். ஒன்று, பிறவியிலேயே கற்பனை வளம் அதிகமாக இருப்பது. இரண்டாவது, நாமே அதனை திரும்பத் திரும்ப, பழக்கத்தில் வளர்த்துக்கொள்வது!!
பழக்கத்தில் வளர்த்துக்கொள்வதுதான், பிறவியிலேயே திறன் உள்ளவர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும்.
தனக்குக் கற்பனை சக்தி இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் எல்லோருமே, அதனை தன் வாழ்வின் தருணங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆகவே, நேர்முகத் தேர்வை அணுகுவதற்கு முன், நாம் பார்க்கும் பொருள்கள் அனைத்திலுமே, ஒரு வடிவத்தைப் பார்க்கலாம். அல்லது, நாம் ஒரு வடிவத்தை மனத்தில் வைத்துக்கொண்டு, அதை நாம் பார்க்கும் பொருள்கள் அனைத்திலுமே தேடலாம். இப்போது, இதனை மூளை பதிந்துவைத்துக்கொள்ளும்.
ஆகவே, மீண்டும் கற்பனை சக்திக்கு வேலை வரும்போது, அது தான் பார்த்த பொருள்களை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும்.
மேலும், ஒரு கதையைப் படிக்க ஆரம்பித்துவிட்டு பாதியில், இதை நான் எழுதினால் எப்படிக் கொண்டு செல்வேன் என்று சிந்திக்கலாம். அது மொக்கையாகக்கூட இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இதன்மூலம் உங்கள் கற்பனை வளத்துக்கு ஒரு ஊட்டச்சத்து உரம் போட்டதுபோல் ஆகிவிடும்.
மற்றவர்கள் ஒன்றைச் செய்துவைத்திருந்தால், அதில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து பெருமைப்படாமல், அந்தக் குறையைக் களைய இதனை இப்படிச் செய்திருக்கலாம். எப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்ற ரீதியில் சிந்திக்கலாம்.
இதைத்தான் நான் பெட்டியை விட்டு சிந்திப்பது என்று சொன்னேன்.
பெட்டியை விட்டுச் சிந்தித்தால், கற்பனை சக்தி மட்டும் வளராது. இன்னுமொரு முக்கியமான குணமும் சேர்ந்து வளர்ந்துவிடும்.
நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்களுக்கு அது அடுத்த பிரச்னை!
அதை அடுத்த வாரமே தீர்ப்போம்...

அத்தியாயம் 8 - முக்கோணக் கற்பனைக் கதை

நேர் முக்கியத் தேர்வில், ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி நம்மை, நம் அறிவை நம் குணாதிசயங்களை, பல்வேறு சோதனைகள் மூலம் கண்டறிகிறார். அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கும். 

பொதுவாக, நேரடியாகக் கேட்பதைவிட, மறைமுகமாகக் கேட்டு, அதன்மூலம் நமது இயல்பான திறனை வெளிக்கொண்டுவருவதுதான் நிறுவனங்களின் நேர்முகத் தேர்வுச் சூத்திரமாக இருக்கிறது. அந்த வகையில்தான், வேலை கேட்டு வருபவரின் கற்பனைத் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பல்வேறு கேள்விகள் மூலம் கண்டறிவார்கள். அப்படிப்பட்ட ஒரு கேள்வியைத்தான் சென்ற வாரம் கேட்டிருந்தேன்.

அந்தக் கேள்விக்கு பதிலைப் பார்ப்போம்.

5 + 5 + 5 = 550 என்றவுடன், அந்தக் கூட்டல், கழித்தல், பெருக்கலில்தான் ஏதோ செய்ய வேண்டும் என்று அந்தக் குறிகளில் சில கோடுகளைப் போட்டுப் பார்த்து, விடை வராமல் திண்டாடிக்கொண்டிருப்போம்.

ஆனால், உண்மையான கற்பனை சக்தி உள்ளவர்கள், கூட்டல் குறியை (+), ஒரு கோடு போடுவதன் மூலம் 4 என்ற எண்ணாக ஆக்கிவிடலாம் என்று தெரிந்துகொண்டுவிடுவார்கள்.

அதன்படி, 5 4 5 + 5 = 550 என்று ஆக்கிவிட்டு, சென்றுகொண்டே இருப்பார்கள்.
இதில், கற்பனை என்பது எங்கு வருகிறது என்று பார்ப்போம். ஒரு முக்கோணத்தைப் பார்க்கிறோம். அதைப் பார்த்தால், என்ன நினைவுக்கு வருகிறது என்று கேட்கும்போது, 

இது ஒரு முக்கோணம்.  
 
ஒரு கிராமக் குடிசையின் விளக்குப் பிறை
கோன் ஐஸ் தலைகீழாக உள்ளது
உடைந்த நட்சத்திரம்
சிங்கத்தில் பல்
ராக்கெட்டின் நுனி
கண்ணாடித் துண்டு
பென்சில் முனை
கலைடாஸ்கோப்பின் குறுக்குவெட்டுத் தோற்றம்
Puzzle-ன் ஒரு துண்டு
கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி
என்று பல கோணங்களில் கற்பனை செல்லும். நாம் எதைச் சொல்கிறோம் என்பதை வைத்தே, அந்த மனிதரின் குணாதிசயத்தைக் கணித்துவிட முடியும் என்று உளவியல் சொல்கிறது. இவற்றை மீறி, ஒரு முக்கோணத்தைப் பார்த்தவுடன், உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறது என்று கேட்டபின்... 

‘ஒண்ணும் தோணலை சார்…’ என்று தட்டையாகப் பதிலளிக்கும் ஆள்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைத்தான் நிறுவனம் கழித்துக்கட்ட முயற்சி செய்யும். ஏனெனில், இவர்கள் எதையுமே அதன் வட்டத்திலிருந்தோ, கட்டத்திலிருந்தோ வெளியில் சென்று யோசிக்கமாட்டார்கள். அதற்குள்ளேயே உழன்றுகொண்டிருப்பார்கள். இன்னும் ஒருவிதமான ஆள்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் மேற்கண்ட கேள்வியைக் கேட்டபின், இப்படி ஆரம்பிப்பார்கள்.

என்ன வேணும்னாலும் சொல்லலாமா சார்?

ம்…

நான் சொல்ற பொருள்ல முக்கோணம் இருக்கலாமா சார்?

ம்ம்...

அந்தப் பொருளே முக்கோண ஷேப்புலதான் இருக்கணுமா சார்?

ம்ம்ம்…

கையால தூக்குற பொருளாத்தான் இருக்கணுமா சார்?

அப்படி இருக்கணும்னு அவசியமில்லை…

அது நாம தினசரி பாக்குற விஷயமா இருக்கலாமா சார்?

இருக்கலாம்…

அதை நாமளும் பயன்படுத்துற மாதிரி இருக்கலாமா சார்?

ஹலோ... நீங்க என்ன தோணுதுன்னு சொல்லுங்க பாஸ்… ஏன் இவ்வளவு கேள்வி கேக்குறீங்க?

ம்… நீங்க நினைச்சதை கண்டுபிடிச்சிட்டேன். அம்புக்குறியோட மேல்பாகம்தானே சார்!! என்று, அவர் இவ்வளவு வடிகட்டுதலுக்குப் பிறகு தோன்றியதை, நாம் நினைத்ததாகச் சொல்லுவார்

அந்த விநாடியில், நேர்முகத் தேர்வு எடுப்பவரின் ரத்த அழுத்தத்தைச் சோதித்துப் பார்த்தால், அந்தச் சோதனைக் கருவியே வெடித்துவிடும் அளவுக்கு எகிறி இருக்கும்.

இந்த மாதிரி ஆள்கள், தனக்குப் பதில் தெரியவில்லை என்று நேரடியாகச் சொல்லாமலும், அதே நேரம் சரியாக ஒன்றும் தோன்றவில்லை என்பதால், காலம் தாழ்த்தியும், கேள்விகளால் குழப்பத்தை ஏற்படுத்தியும், கடைசியில் ‘சப்’பென்று ஒரு பதிலைச் சொல்லிவைப்பார்கள். இவர்களை இன்னும் ஜாக்கிரதையாகக் கழட்டி விடவேண்டி இருக்கும். ஆனால், இத்தகைய நபர்களை சில சேவை நிறுவனங்கள், வேலை தாமதமானதற்குக் காரணம் சொல்லி வாடிக்கையாளரைச் சமாளிக்கத் தேர்வு செய்துவிடுவார்கள். 

சரி... கற்பனை சக்தி என்பது நமக்கு உண்மையிலேயே இருக்கிறதா இல்லையா என்று எப்படி சோதித்துக்கொள்வது?

நாம் பார்க்கும் அனைத்துப் பொருள்களிலும், வேறு ஒரு மாற்றுப் பொருளை உங்களால் சிந்திக்க முடியும் என்றால், கற்பனை சக்தி உங்களிடம் வந்துவிட்டதாக அர்த்தம்.

சாதாரணமாகவே நாம் பொய் சொல்லிப் பழகியிருக்கிறோம். சிறுவயதில், பள்ளிக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு, அன்று ரஜினி படம் ரிலீஸுக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் தாமதமாக வந்தால், அம்மாவிடம் அளந்துவிட ஆரம்பிப்போம். அது நமது கற்பனையாகத்தான் இருக்கும். ஆனால், நம்பும்படி இருக்க மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வோம். 

ஒரு ஃபிரண்டு வர வழில விழுந்துட்டான். அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டு வர லேட்டாயிருச்சு!

ஒரு வீட்டுப்பாடம் முடிக்கவேண்டி இருந்தது. ஸ்கூல்லயே உக்காந்து முடிச்சிட்டு வந்தேன் என்று பொய் சொல்ல ஆரம்பிப்பதுதான், கற்பனை சக்தியின் ஆரம்பம்...

இப்படி அளந்துவிட்டபின்,.. அம்மா ஒரு வார்த்தை சொல்லுவார். 

‘டேய்! சும்மா கதைவிடாத!’

அதுதான் கற்பனை சக்தி இன்னும் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான சாட்சி.. அவர்கள் நம்பிவிட்டார்கள் என்றால், உங்கள் கற்பனை சக்தி தகுந்த தரத்தில் உள்ளதாக அர்த்தம்.

ஆனால், பொய் மட்டுமே கற்பனை சக்தி கிடையாது. அது ஒரு ஆரம்பம், அவ்வளவுதான். அதையே பொருள்களிடமோ, படைப்புகளிடமோ காட்டும்போது, ஒரு விஷயத்தைப் பார்த்தால், அதற்குச் சம்பந்தமே இல்லாத இன்னொரு விஷயம் தோன்றும். அதுதான் கற்பனை சக்திக்கான அடிப்படை!

அத்தியாயம் 7 - கற்பனையே விற்பனையாகும்

ஒரு நிறுவனத்துக்குள் நுழைவது மிகச் சுலபம். வாசலில் உள்ள செக்யூரிட்டியை சமாளித்தால் போதும். ஆனால், அந்த நிறுவன ஊழியராக உள்ளே நுழைய, படிப்பு மட்டும் போதாது. நேர்முகத் தேர்வு என்று ஒன்று நடத்துவதே, படிப்பை மீறி, நம் குணாதிசயம், மனோபாவம், மற்ற திறன்களை அறிந்துகொள்ளத்தான்!

அந்த வகையில்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஊழியராக வர விரும்புபவரிடம், குறிப்பிட்ட சில திறன்களை எதிர்பார்க்கும். அத்தகைய திறன்களில் முதன்மையானதாக, ‘கவனமாக இருப்பது பற்றி’ சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம்.

அடுத்து, ஒரு நிறுவனம் என்ன எதிர்பார்க்கும் என்று கற்பனையைத் தட்டிவிடச் சொல்லியிருந்தேன்.

இன்றைய காலகட்டத்தில், பல்வேறு நிறுவனங்கள், முந்தைய சூழலிலிருந்து வேறுபட்டு, புதிய யுக்திகளைக் கையாண்டு தொழில் செய்து வருகின்றன. அதுவும், இந்த யுகத்தை தகவல் தொழில்நுட்ப யுகம் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால், இந்தத் தகவல் தொழில்நுட்ப யுகத்துக்கு அடிப்படையான காரண குணாதிசயம் ஒன்று இருக்கிறது.

உதாரணமாக, கம்ப்யூட்டர், ஸ்மார்ட் ஃபோன் ஆகியவை வகை தொகை இல்லாமல், எண்ணற்ற வடிவங்களில், நிறைய வசதிகளுடன் வருகின்றன. ஆனால், பொதுவாக கம்ப்யூட்டருக்கு ஒரு விசைப்பலகை, மவுஸ் எனப்படும் சுட்டி, மானிட்டர், சிபியு ஆகியவை இருந்தால் போதும். ஆனால், அதில் மட்டுமே ஏகப்பட்ட மாடல்கள், நிறங்கள், வடிவங்கள் என்று நம்மை தேர்ந்தெடுக்கவே தேர்வெழுத வைக்கின்றன

இந்தக் கதை இப்படியென்றால், ஸ்மார்ட்ஃபோன் எனப்படும் தொடு திரை செல்பேசிகள்! ஒரு புள்ளிவிவரம் என்ன சொல்கிறதென்றால், கடந்த 30 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட செல்பேசிகளின் எண்ணிக்கையைவிட, கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட செல்பேசிகளின் மாடல்களின் எண்ணிக்கை அதிகமாம்! அதாவது, நாம் தேர்ந்தெடுக்கவே குழம்பும் அளவுக்கு மாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு என்ன அடிப்படை என்று யோசித்தால், ஒரே பதில்தான் கிடைக்கும் - ‘கற்பனை வளம்’.

இந்த நூற்றாண்டில் மனித வளமும், கற்பனை வளமும்தான் நமது வாழ்வின் தரத்தை அதிகப்படுத்தியிருக்கின்றன. ஆகவே, நிறுவனத்துக்குள் மனித வளமாக நுழையும் ஒரு நபரின் கற்பனை வளத்தைத்தான் அடுத்ததாக உன்னிப்பாகக் கவனித்துப் பார்ப்பார்கள். அதைத்தான், சென்ற அத்தியாயத்தின் கடைசியில் சூசகமாகச் சொல்லியிருந்தேன்.

பொதுவாக, நமது தகவல் தொடர்புத் திறனைத்தான் பார்ப்பார்கள் என்று நினைப்போம்,. ஆனால் அது அடுத்த கட்டம்தான். ஏனெனில், ஏற்கெனவே பார்த்தபடி, தனது ரெஸ்யூமேவிலேயே தனது கற்பனைத் திறனை ஒருவர் காட்டிவிட்டார் என்றால், அதனை மீண்டும் சோதிக்கத் தேவையிருக்காது. நேரடியாக தகவல் தொடர்புக்குப் போய்விடலாம்.

ஆனால் நமது ஆள், வெள்ளைத்தாளில் கருப்பு எழுத்துகளில் தன்னைப் பற்றி தட்டையாகச் சொல்லியிருந்தாலும், அதில் ஏதாவது கற்பனைத் திறனான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எதுவுமே செய்யாமல், மண்டபத்தில் எழுதி வாங்கி வந்த ரெஸ்யுமேவாக இருந்தால், அதனை வைத்துக்கொண்டு திறனை எடை போட முடியாததால், நேர்முகத் தேர்வில் முக்கியமானதாக கற்பனைத் திறன் பங்கு வகிக்கிறது.

கற்பனைத் திறன் ஏன் தேவை என்று தெரிந்துகொள்ள, இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட, இணையம் என்ற ஒரு அமைப்பைப் பார்த்தாலே போதும். எத்தனைவிதமான வடிவமைப்புகளுடன் இணையதளங்கள் வருகின்றன? இணையம் சார்ந்த ஊடகங்கள் இருக்கின்றன? விளம்பரங்கள்? ஓவியங்கள், டிஜிட்டல் படங்கள், காணொலிகள் என்று இணையத்தை மையமாக வைத்து, கற்பனை வளம் எப்படிப் பெருகியிருக்கிறது. கற்பனை வளத்தை மையமாக வைத்து இணையம் எத்தகைய சாதனைகளைச் செய்திருக்கிறது? இவ்வளவு வண்ணமயமான உலகத்துக்குப் பின்னால், விஞ்ஞானிகள் மட்டுமல்ல, கற்பனை வளம் மிக்க மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் போதும்.

இதில்கூட ஒரு முக்கியச் சிறப்பு இருக்கிறது. இந்தியர்களின் கற்பனைத் திறன் அலாதியானது. அதற்கு நமது முன்னோர்கள் சாட்சியாக விட்டுச் சென்றிருக்கும் பலவிதமான கலைப் பொக்கிஷங்கள்தான் ஆதாரம். இது நமது மரபணுவிலேயே ஒன்றிப்போன ஒரு விஷயம். ஆனால், ஒரு சிறிய மாற்றம்.

இப்போதெல்லாம் நம் கற்பனைத் திறனை, சினிமா போய்விட்டு வந்ததை மறைக்கவும், தாமதமாக வந்ததற்குக் காரணம் சொல்லவும், செய்த தவறை செய்யவில்லை என்று பூசி மெழுகவும், பெற்றோர்களைத் திசை திருப்பவும், நண்பர்களையோ, காதலன், காதலியையோ வசீகரிக்கவோ பயன்படுத்துகிறோம். இப்படி சொல்லப்படுபவை பொய் எனப்படுகிறது. இதையே மிகத் தெளிவாக, தகுந்த லாஜிக்குடன் இன்னும் கவனமாகச் சிந்தித்து ஒரு படைப்பாக உருவாக்கினால், அதனை கற்பனை என்று சொல்லலாம்.

ஏனெனில் இன்றைய காலகட்டத்தில், ஒரு நிறுவனத்தின் ஊழியர் என்பவர் அதன் சொத்தாகவே பார்க்கப்படுகிறார். அவர் எவ்வளவு திறமையானவராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு, அந்தச் சொத்தின் மதிப்பு அதிகரிக்கும். அப்படி மதிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால், சொத்துக்கு, அதாவது ஊழியருக்கு கற்பனை வளம் அவசியம். நம் கற்பனை வளத்தை பல்வேறு விதங்களில் பயன்படுத்திக் கொள்ளத்தான் நிறுவனங்கள் விரும்பும்.

ஏனெனில், இன்று உலகின் முன்னணியில் விளங்கும் கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர, அந்த நிறுவனம் ஒருமுறை ஒரு அறிவிப்பு வெளியிட்டது. ‘உங்கள் கல்வியோ, மதிப்பெண்ணோ எங்களுக்கு இரண்டாம்பட்சம்தான்! உங்களுக்கு கற்பனைத் திறன் பொங்கி வழிகிறது என்று நீங்கள் நம்பினால், எங்கள் நிறுவனத்தின் மேற்கண்ட முகவரியில் 12 இருக்கைகளும் அதன் முன்னால், கணிப்பொறிகளும் காத்திருக்கின்றன. வந்து அமர்ந்துகொள்ளுங்கள். கற்பனைக்கேற்ப உங்களை விற்பனை செய்துகொள்ளுங்கள். இப்படிச் சென்றது அந்த அறிவிப்பு.

அப்படியென்றால், இந்தக் காலகட்டத்தில் கற்பனை வளம் அத்தகைய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.

கூகுள் நிறுவனத்தையே எடுத்துக்கொண்டால், அவர்கள் கற்பனைத் திறனின் உச்சத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். கூகுள் டாக்ஸி என்ற ஓட்டுநர் இல்லா காரை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தச் சிந்தனையின் அடிப்படை என்ன தெரியுமா?

ஜுராஸிக் பார்க் என்ற திரைப்படம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்ற அமெரிக்க இயக்குநரின் படைப்பு. அந்தப் படத்தில், ஓட்டுநர் இல்லா கார்கள் வரும். அதை அடிப்படையாக வைத்து, உண்மையிலேயே அந்த வகை கார்களை உருவாக்கியும் காட்டிவிட்டார்கள். இது ஒரு சோறு பதம்தான்!

இப்படித்தான், எக்கச்சக்கமான நிறுவனங்கள் கற்பனைத் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது முக்கியத் தேவை, அவர்களது ஊழியர்களுக்கு அத்தகைய கற்பனைத் திறன் நிறைய இருக்க வேண்டும் என்பதுதான்.

இதில் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது. நாம் முதலில் பார்த்தது கவனமாக இருக்க வேண்டும் என்பதை. உண்மையில், கவனமாக இருப்பவர்களுக்கு எல்லாமே கண்ணில் படும். அதில் என்ன புதுமைகள் செய்யலாம் என்று மூளை கொஞ்சம் ஓவர்டைம் எடுத்து வேலை பார்க்கும். அப்போது தானாகவே, கற்பனை ஊற்றெடுக்கும். இந்தக் கற்பனைத் தி்றன் அதிகமாகிவிட்டதென்றால், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் திடீரென்று உருவாகும். 

இப்படியும் யோசிப்போம். ஒரு காலகட்டத்தில், மின்சாரம் இருந்தது. ஆனால், அதன்மூலம் வெளிச்சத்தை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. இருள் என்ற மிகப்பெரிய பிரச்னை இருந்தது. அதில் இருந்து மீள முடிவெடுத்தார் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற மனிதர். அவர் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கக்கூடிய விஞ்ஞானி. ஆகவே விளக்கை உருவாக்க, அவரது கற்பனையைத் தூண்டிவிட்டு, பல்வேறு பொருள்களை மின்சார புலத்தில் சோதித்துக்கொண்டே இருந்தார். மின்சார விளக்கை ஒருநாள் கண்டுபிடித்துவிட்டார். அதுதான், நம்முடைய இருள் பிரச்னைக்குத் தீர்வாகிவிட்டது. இதுதான் கற்பனை வளத்தின் வெற்றி!

அத்தகைய கற்பனை வளம் மிகுந்தவர்களை நிறுவனங்கள் ‘வாடா ராஜா’ என்று அள்ளிக்கொள்ளும். இதனை எப்படி நம்மிடம் தெரிந்துகொள்கிறார்கள் என்றால், முதலில் நமக்கு பெட்டியைவிட்டு சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். அதென்ன பெட்டியை விட்டு சிந்திக்கும் ஆற்றல்? ஆங்கிலத்தில், OUT OF THE BOX THINKING என்று சொல்வார்கள்.

ஒரு பிரச்னை என்றால், அதற்குள்ளேயே சிந்திக்காமல் அதற்கும் மேல் சிந்தித்தால், அதை மேற்கண்டவாறு சொல்லலாம். ஆனால், அப்படிச் சிந்திக்கிறோமா இல்லையா என்பதுதான் இன்றைய கேள்வி! பெட்டிக்கு வெளியே சிந்திக்கும் ஆற்றலை சோதிக்க பல்வேறு முறைகள் இருக்கின்றன.

மிகச் சுலபமாக ஒரு கேள்வி


5 + 5 + 5 = 550. இந்த கூட்டுத்தொகை நேரடியாகப் பார்த்தால் தவறு! ஆனால், உங்களிடம் ஒரு கோடு தரப்படும். அந்தக் கோட்டைப் பயன்படுத்தி, இந்த கூட்டுத்தொகை சரி என்று நிரூபிக்க வேண்டும். ‘=’ என்ற குறியில் கை வைக்கக்கூடாது. Not Equal To என்று போடக்கூடாது. ஆனால், வேறு எங்காவது அந்தக் கோட்டைப் போட்டு, அந்தக் கூட்டுத்தொகை உண்மைதான் என்று நிரூபிக்க வேண்டும். இதில் உங்கள் கற்பனைத்திறன் வெளிப்படும். கற்பனையைத் தூண்டிவிட்டு முயற்சி செய்யுங்கள்.

அத்தியாயம் 6 - அமைதியே ஆதாரம்

கவனம் ஒன்றுதான் நேர்முகத் தேர்வில் முதலில் பார்க்கப்படும் முக்கியக் குணம் என்று பார்த்தோம். அது புரிகிறது! ஆனால், எனது கவனத்தை எப்படி வளர்த்துக்கொள்வது? என்று நீங்கள் கேட்டால், அதற்கான பதில் அந்த வார்த்தைக்குள்ளேயே அடங்கி இருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய சூட்சுமம்.

LISTEN என்ற சொல்லில் இருந்து என்னன்ன ஆங்கில வார்த்தைகள் உருவாக்கலாம் என்று சிந்தித்துப் பாருங்கள். உடனே LIST, TEN, SIT, NET என்று பல வார்த்தைகள் தோன்றும். ஆனால், LISTEN என்ற வார்த்தையில் இருந்து உருவாக்க முடிந்த ஒரே சிறந்த வார்த்தை SILENT என்பதுதான்.

ஒரு மனிதன் முழுக் கவனத்துடன் இருக்க, அவன் செய்ய வேண்டியது - அமைதியாக இருப்பதுதான்!

அது எப்படி? அமைதியாக இருந்தால், கவனம் அதிகரித்துவிடுமா? அப்படியெனில், நான் பேருந்துப் பயணத்திலும், தனியாக நடந்து போகும்போதும், இரவில் தூங்கும்போதும் அமைதியாகத்தானே இருக்கிறேன். அது போதாதா? என்று அடுத்து தோன்றும்.

மேலே சொன்ன தருணங்கள், நம் மீது திணிக்கப்பட்ட அமைதி! ஆனால், பேசுவதற்கு வழி இருக்கும் இடத்தில், அமைதியாக இருக்கும் போதுதான் கவனம் வலுப்பெறும்.

முதலில், தினமும் நாம் செய்யும் வகையில் ஒரு பயிற்சி சொல்ல விரும்புகிறேன்

அது… தினமும் காலையில் எழுந்தவுடன், ஐந்து நிமிடம் அமைதியாக அமர்ந்திருக்க முயற்சிக்கலாம். அதாவது, காலையில் எழுந்து, அடிப்படைக் கடமைகளை முடித்த பிறகு, வீடோ, அறையோ... அதன் ஒரு பகுதியில் சென்று அமைதியாக அமர வேண்டும். பிறகு, மெதுவாக அந்த அறையில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றையும் கவனிக்கத் துவங்கலாம். அப்போது ஓர் ஆச்சரியம் நிகழும்.

நாம் அன்றுவரை கவனிக்காத பல விஷயங்கள், நாம் அமர்ந்திருக்கும் அறையில் இருக்கும். அதே இடத்தைத்தான் நாம் பல நாள்களாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றுதான் கவனிக்கிறோம். அதுவும் விழிப்புணர்வுடன் கவனிக்கிறோம் என்ற உணர்வு தோன்றும். இதுதான் அமைதியின் வெற்றி!








பேசாமல் இருப்பதைத்தான் அமைதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது இல்லை! பேசாமல் இருக்கும்போது என்ன செய்கிறோம் என்பதுதான்!

பொதுவாக, எல்லோருக்கும் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரியும். நாம் ஓட்டப் பழகும்போது, கைகள் எங்குள்ளது? காலில் எப்படி கியர் போடுவது என்று பல்வேறு பகுதிகளில் முழுக் கவனமும் இருக்கும். போகப்போக, வாகனம் ஓட்டப் பழகிய பின், தன்னிச்சையாக கைகளும் காலும் இயங்கும். நம் சிந்தனை வேறு எங்கோ இருக்கும். அப்படி ஓட்டிச் செல்லும்போது நாம் பேசுவதில்லை. ஆனால், சிந்தனை வேறு எங்கோ இருந்தால், சாலையில் முழுக் கவனமும் இருக்காது. அதனால், நாம் எப்படி அந்தச் சாலையைக் கடந்தோம் என்று வந்த பிறகு யோசிக்கத் தோன்றும்.

அதேபோல், போதுமான கவனமின்மையால்தான் விபத்துகளும் ஏற்படுகின்றன. வாகனம் ஓட்டும்போது, அந்த விநாடியில் சாலையில் எப்படிச் சென்றுகொண்டிருக்கிறோம்? அருகில் எந்த வண்டி வருகிறது? சாலையில் மேடுபள்ளங்களின் நிலை என்ன என்று கவனத்தோடு சென்றால், அதுவே ஒரு பயிற்சியாகிவிடும்.

ஆம். அதுதான் இரண்டாம் கட்டம்.

அதிகாலையில், அமைதியாக அமர்ந்து கவனம் செலுத்தத் துவங்கிய பிறகு, நாம் தன்னிச்சையாகச் செய்யும் அனைத்துச் செயல்களையும், கவனத்துடன் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, விழிப்புணர்வு அதிகமாகிவிடுகிறது. இதைத்தான், ‘அந்தக் கணத்தில் வாழ்வது’ என்று ஜென் தத்துவம் சொல்கிறது.

அந்தக் கணத்தில் வாழ்பவர்கள், கவனமில்லாமையால் ஒருபோதும் தவிக்க வேண்டியதில்லை. வீட்டைப் பூட்டும்போதும், கியாஸ் சிலிண்டர் வால்வை மூடும்போதும், வேறு ஒரு சிந்தனையில் இருந்துவிட்டு, வெளியில் கொஞ்ச தூரம் சென்ற பிறகு, ஆஹா... பூட்டினேனான்னு தெரியலையே? சிலிண்டரை மூடினேனான்னு தெரியலையே? என்று கவலைப்படுவது அல்லது சந்தேகத்துக்கு வந்து பார்த்துச் செல்வது என்பது இங்கு சாதாரணமாக நடக்கும் செயல். இதற்கு ஒரே தீர்வு, அமைதிதான்!

அப்படி இருக்கும்போதுதான், ஒரு கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று சரியாகப் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியும்.

நாம் பேசுவதை கவனமாக தேர்ந்தெடுத்துப் பேசமுடியும். நம்மில் பலருக்கு, தன்னையறியாமல் ஒரு சில வார்த்தைகளை திரும்பத் திரும்ப பேசும் பழக்கம் இருக்கும். எனக்குத் தெரிந்து, பல பெரிய நிறுவன அதிபர்களே, ஒரு சில வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்.

அந்த வகையில், எனக்குத் தெரிந்த ஒரு நிறுவன அதிகாரி, தொடர்ந்து  ‘புரியுதா?’ என்று ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இடையே கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்குப் பயிற்சி அளிக்கும்போது, அதைக் கவனிக்கவைத்து, விழிப்புணர்வுடன் குறைத்துக்கொண்டார். பிறகுதான் தெரிந்தது, அவருக்குக் கீழ் பணிபுரிந்த அதிகாரிகள் அவருக்கு ‘புரியுதா மேனேஜர்’ என்று பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது.

இப்படி, நாம் அடிக்கடி தேவையில்லாமல் பயன்படுத்தும் வார்த்தைகளை, அமைதியாகக் கவனித்தால்தான், அதைக் கண்டுபிடித்து, அந்தத் தவறைக் களையமுடியும்.

ஏனெனில், Communication எனப்படும் தகவல் தொடர்புதான் ஒரு வேலையின் முதல் தகுதிக்கூறாகப் பார்க்கப்படும். அதன் அடிப்படைதான் இந்தக் கவனம்

வேலை தேடுபவருக்கு, நேர்முகத் தேர்வில் என்னென்ன கேட்பார்கள் என்று தெரியும். அதற்குப் பதிலும் தெரியும். ஆனால், அதனை வெளிப்படுத்தத் தெரியாமல் தடுமாறுவார்கள். அப்படிப்பட்ட தகவல் தொடர்பில், பேச்சு, எழுத்து, கேட்டல், வெளிப்படுத்தல் என்று நான்கு நிலைகள் உள்ளன.

அந்த நான்கு நிலைகளை VERBAL, WRITTEN, LISTENING, PRESENTATION என்று ஆங்கிலப்படுத்தலாம். ஆனால், இந்த நான்கின் நோக்கமே, அடுத்தவருக்கு நாம் சொல்ல, எழுத வந்ததைப் புரிய வைப்பதுதான். அதை எப்படி எளிதாகப் புரியவைக்கிறோம் என்பதுதான் முக்கியம். அப்படிப் புரியவைக்க வேண்டுமென்றால், ஒரு விஷயத்தை நாம் நன்றாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அதற்கு, ‘கவனம்’தான் ஒரே மருந்து! அப்போதுதான், அன்றே வேலை கிடைத்து, நண்பர்களுக்கு வைக்கமுடியும் விருந்து!

பேச்சில் எப்படி கவனத்தை வளர்த்துக்கொள்வது?

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும், நமக்குள்ளேயே ஒரு சென்ஸார் போர்ட் வைத்துக்கொண்டு பேசலாம். நம்மைப் பற்றிய அறிமுகத்தை முழுமையாக மனப்பாடம் செய்துகூட வைத்துக்கொள்ளலாம். நாலு முறை கேட்ட திரைப்பாடல் நினைவில் இருக்கும்போது, நம்மைப் பற்றி கோர்வையாகச் சொல்ல மனப்பாடம் செய்வதற்கு எந்தச் சட்டத்திலும் தண்டனை இல்லை! கவலையே வேண்டாம்.

நாம் பேசும் பேச்சில், அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகள், எதிர்மறை வார்த்தைகள், தேவையில்லாத வார்த்தைகள், இடைச்செருகல் வார்த்தைகளை தணிக்கை செய்து வெளியேற்றத் தொடங்கினால், நாம்தான் பேச்சில் வல்லவர் என்று சொல்லப்படுவோம். இதற்குப் பயிற்சியாக, பெரிய தலைவர்கள் பேச்சை, ஒலியாகக் கேட்கலாம். ஒளிப்படமாகப் பார்த்தால், அந்த ஒலியின் மீது செல்லும் கவனம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

அடுத்து, எழுத்து…


இதற்கு அதிகம் நாம் படிக்க வேண்டியது அவசியம். நிறைய வாசிக்கலாம். மற்றவர்கள் எழுதியதை ஆழமாகக் கவனிக்கலாம். ஒவ்வொரு வார்த்தையும் எப்படி கோர்க்கப்பட்டிருக்கிறது என்று சிந்திக்கலாம். நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிப் பழகலாம். அதில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டச் சொல்லலாம்.

பிறகு, கவனித்தல்…

இதில் கேட்டல், நுகர்தல், சுவைத்தல் எல்லாமே வரும். ஒரு உயர்தர உணவகத்தில், தலைமை சமையல் ஆய்வாளராக பணியில் சேர வேண்டும் என்றால், நல்ல சுவை குறித்த கவனம் வேண்டும். மற்றவர் பேசுவதை மிகக் கவனமாகக் கேட்டால், தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அடுத்தவர் கடிதத்தையோ, எழுத்தையோ சரியாகப் புரிந்துகொண்டால், அதற்கேற்றார்போல் செயல்பட முடியும்.

அடுத்து, வெளிப்படுத்துதல்…

இதுதான் கவனத்தை கவரக்கூடியது. செய்தித்தாள், திரைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக, வித்தியாசமாக தன்னை வெளிப்படுத்தினால்தான் கவனத்தைக் கவரமுடியும் என்பதுதான் காரணம். மேலும், வெளிப்படுத்தும் விதத்தில்தான், நமது கற்பனா சக்தி வெளிப்படுகிறது

எடுத்துக்காட்டாக, ஒருவரைச் சந்திக்கும்போது, ‘என்ன சார்? எப்படி இருக்கீங்க?’ என்று கேட்கலாம். ‘வணக்கம் சார்! நலமா?’ என்று கேட்கலாம். இதில், முதல் வாக்கியத்தைவிட, இரண்டாவதில் ஒரு தரம் வெளிப்படுகிறதல்லவா? அதுதான், மொழியை சரியாகப் புரிந்து கொண்டு தகவல் தொடர்பு மூலம், கவனத்தைக் கவரும் வகையில் அதை வெளிப்படுத்துவது! அதற்கு முதலில், நாம் கவனமாக இருக்க வேண்டும்

முத்தாய்ப்பாக ஒன்று…

பொதுவாக, எல்லாவற்றையும் கவனிப்பவர்தான், எல்லோராலும் கவனிக்கப்படுவார்! அதற்காக, எல்லாவற்றையும் கவனிப்பதையே வேலையாகவே வைத்திருக்க வேண்டியதில்லை. ஆனால், எப்போதும் கவனமாக இருந்தால், அது ஒரு வேலையாகத் தெரியாது. தன்னிச்சையாக அமைந்துவிடும் என்பதுதான் உண்மை!

நேர்முகத் தேர்வில் முதலில் கவனிக்கப்படும், ‘கவனம் பற்றி வேண்டிய மட்டும் பார்த்தாகிவிட்டது. அதற்குப் பிறகு நமது எந்தத் திறனை நிறுவனம் அளவிடும்.? எந்தத் திறன் இருந்தால் நல்லதென்று எதிர்பார்க்கும்?

கற்பனையைத் தட்டிவிட்டுக் காத்திருங்கள். அடுத்த பாகம் சொல்லும், அதற்கான பதிலை!