Blogger Widgets

Total Page visits

Saturday, November 29, 2014

வித்தியாசப்படுத்தினால் வெற்றி

சீனர்கள் பெரும்பாலும் அசப்பில் ஒருவர் போலவே அனைவரும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சீனர்கள் யாரையாவது தேடிக் கண்டு பிடிக்க நேர்ந்தால் தொலைந்தோம். தேடித் தேடி நமக்கும் மூக்கு சின்னதாகிவிடும்.



சீனர்களை விடுங்கள். திருப்பதியில் மொட்டையடித்த பக்தகோடிகள் அனைவரும் ஒன்று போல் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அங்கு மொட்டையடித்த குறிப்பிட்ட நபரைத் தேட நேர்ந்தால் தேடித் தேடி நாமும் மொட்டையாக வேண்டியதுதான்.

இதே கதைதான் மார்க்கெட்டில், மார்க்கெட்டிங்கில், மார்க்கெட்டர்களிடம். விற்கும் பிராண்டை வித்தியாசப்படுத்தாமல் பலர் விற்கிறார்கள். இதனால் பிராண்டுகள் கூட்டத்தோடு கூட்டமாக திருப்பதி மொட்டையடித்த க்ரூப் போல் தெரிகிறது. வித்தியாசப்படுத்தாமல் விற்றால் வாடிக்கையாளருக்கு பிராண்ட் எப்படி தனியாய், தனித்துவமாய் தெரியும்? எல்லா பிராண்டுகளும் சீனர்கள் முகம் போல்தான் இருக்கும். விற்க முடியாமல் விக்க வேண்டியதுதான். திருப்பதி போகாமலேயே மொட்டை தான்!

வித்தியாசமில்லையெனில் தோல்வி நிச்சயம்

வித்தியாசப்படுத்தி விற்காத எந்த பிராண்டும் விற்காது என்கிறார்கள் ‘ஜாக் ட்ரவுட்’ மற்றும் ‘ஸ்டீவ் ரிவ்கின்’. பல காலமாக மார்க்கெட்டர்களிடம் வித்தியாசப்படுத்தி விற்பதன் அவசியத்தை சொல்லி வந்தார் ட்ரவுட். யாரும் கேட்பதாய் இல்லை. பார்த்தார் மனிதர். `வித்தியாசப்படுத்து அல்லது செத்து ஒழி’ (Differentiate or die) என்று தன் புத்தகத்திற்கு தலைப்பாகவே வைத்துவிட்டார். இதைவிட செருப்பால் அடித்தது போல் ஒரு தகவலை யாரும் சொல்லமுடியாது. இருந்தும் எத்தனை பேருக்கு உறைக்கிறது? எத்தனை பேருக்கு பிசனஸ் சூட்சமம் புரிகிறது?

பிசினஸ் செய்வோம், விற்கும் பொருளுக்கு ஒரு பெயர் வைப்போம், நன்றாய் உழைப்போம், விளம்பரம் செய்வோம், கோடிக்கணக்கில் சம்பாதிப்போம், குடும்பத்தோடு செட்டில் ஆவோம். இதுவே பிசினஸ் செய்யும் முறை என்று பலர் நினைக்கிறார்கள்.

எத்தனை உழைத்தாலும், வித்தியாசப்படுத்தாமல் விற்றால் எந்த பொருளும் பிராண்ட் என்னும் அந்தஸ்தைப் பெறாது. பிறகு எங்கிருந்து விற்பது, சம்பாதிப்பது, செட்டில் ஆவது? அதன் பின் எத்தனை உழைத்தாலும் சல்லிக் காசுக்கு பிரயோஜனமில்லை.

பெயர்கள் பல,பொருள் ஒன்று

‘சிப்பி’, ‘உதயா’, ‘கோல்டன் ஃப்ளேம்’, ‘லவ்லி’, ‘டியர்’. இவை வத்திப்பெட்டி பிராண்ட்ஸ். இதில் ஒன்றையாவது கடையில் பெயர் சொல்லி கேட்டு வாங்கியதுண்டா? இவை வத்திப்பெட்டி பிராண்டுகள் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கே தெரிந்திருக்கும். எங்கிருந்து கேட்டு வாங்குவீர்கள்?

கடைக்கு சென்று ’வத்திப்பெட்டி கொடுப்பா’ என்று பொதுவாய் கேட்டு பார்க்காமலே வாங்குகிறோம். அதனாலேயே வத்திப்பெட்டி விற்ப வர்கள் கடைக்காரர் தயவில் தான் தொழில் செய்ய முடிகிறது. கடைக்காரர் சொல் கேட்டு ஆடும் நிலை தான் இந்த பிராண்டுகளுக்கு. பின் எதை வைத்து இதை பிராண்டுகள் என்று அழைப்பது? வித்தியாசப்படுத்தாமல் விற்பதால் விளையும் விபரீதம் இது.
ஆனால் ‘ஹோம் லைட்ஸ்’ வத்திப்பெட்டியை கேட்டு வாங்குகிறோம். ஏன்? படா சைஸாய் பற்ற வைக்க ஏதுவாக இருப்பதால். பெரிய குச்சிகளாய் விளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற சௌகரியமாக இருப்பதால். அட்டையில் ரேடியம் ஒட்டப்பட்டு இரவிலும் பளிச்சென்று தெரிவதால். மற்ற வத்திப்பெட்டிகள் ஒரு ரூபாய்க்கு சல்லிசாய் கிடைக்க அதை விட்டு ‘ஹோம் லைட்ஸ்’ கொடுப்பா என்று அதிக விலை கொடுத்து கேட்டு வாங்குகிறோம். வித்தியாசப்படுத்தியதால் விளைந்த வெற்றி இது.

இதே போல் பல டீவி சேனல்கள் இருந்தாலும் சில சேனல்களை மட்டும் தேடிப் பார்க்கிறோம். சீரியல்கள் என்றால் ‘சன்’. போட்டி நிகழ்ச்சிகள் என்றால் ‘விஜய்’. காமெடி என்றால் ‘சிரிப்பொலி’. நியூஸ் என்றால் ‘புதிய தலைமுறை’. இந்த சேனல்கள் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதால் இவைகளைத் தேடி பார்க்கிறோம்.

ஜவுளிக் கடைகளில் வித்தியாசமில்லை

‘போத்தீஸ்’, ‘கல்யாண் சில்க்ஸ்’, ‘ஸ்ரீகிருஷ்ணா’ இதோடு உங்கள் ஊரிலுள்ள பெரிய ஜவுளிக் கடைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த கடைகளுக்குள் என்ன வித்தியாசம்? ஒவ்வொரு கடையும் தங்களை எப்படி வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது? ஒரு கடை மற்றதை விட எப்படி மாறுபடுகிறது?

ஒரு வித்தியாசமும் கிடையாது. இந்த பிராண்டுகள் தங்களை வித்தியா சப்படுத்திக் காட்டவே இல்லை. யோசித்துப் பாருங்கள். ‘போத்தீஸ்’ என்றால் என்ன தோன்றுகிறது? ‘கல்யாண் சில்க்ஸ்’ என்றால்? தனியாய், தனித்துவமாய் இன்ன பிராண்டுகளுக்கு இன்ன வித்தியாசமான அம்சம் என்று ஏதாவது தோன்றுகிறதா? இல்லையே. இருந்தும் எப்படி இந்த பிராண்டுகள் சக்கை போடு போடுகின்றன? எவ்வாறு மார்க்கெட்டில் கொடி கட்டிப் பறக்கின்றன?

ஜவுளிக் கடை வரிசையில் ஒரு கடையும் வித்தியாசப்படுத்திக் காட்டாததால் எல்லா கடைகளும் ஒன்றுதான் என்றாகிவிட்டது வாடிக்கை யாளர்களுக்கு. அதனால் எந்த கடை அதிகமாக விளம்பரக் கூப்பாடு போடுகிறதோ அந்த கடைக்கு கூட்டம் கூடுகிறது. இதனாலேயே பெரிய ஜவுளிக் கடைகள் புலி வாலைப் பிடித்த கதையாக விளம்பரத்திற்கு கோடி கோடியாக செலவழிக்க வேண்டிய தலையெழுத்து. தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டாததால் விளைந்த வினை இது.

நகைக் கடைகளிலும் இதே நிலை

இதே கதைதான் நகைக் கடைகளிலும். ‘ஜாய்’, ‘ஜோஸ்’, ‘பீமா’, ‘மலபார்’ என்று ஏகத்துக்கும் பிராண்டுகள் இருந்தாலும் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டத் தவறிவிட்டன. பத்தோடு பதினொன்று அத்தோடு நான் ஒன்று என்று இவை சொல்லாமல் சொல்வதால் எக்கச் சக்கமாக செலவழித்தால்தான் வாடிக்கையாளரை கடைக்குள் இழுக்க முடியும் என்கிற நிலை இந்த பிராண்டுகளுக்கு.

இந்த பிராண்டுகள் எல்லாம் பரவாயில்லை. பணம் இருக்கிறது. செலவழித்து கொட்ட முடிகிறது. சின்ன வியாபாரி என்ன செய்வார்? சின்ன பிசினஸ் என்ன செய்யும்? வெற்றி பெற என்ன செய்யவேண்டும்?

விமோசனம் நிச்சயம்

சிம்பிள். பிராண்டை வித்தி யாசப்படுத்திக் காட்டினால் போதும். எந்தப் பொருளையும் வித்தியா சப்படுத்த முடியும். வித்தியாசப்படுத்த வேண்டும். வித்தியாசப்படுத்தினால் தான் விமோசனம்.
சாதாரண டூத் பிரஷ். ஒரு நீண்ட பிளாஸ்டிக் குச்சி. அதன் முனையில் பற்களை வெள்ளையடிக்க கொஞ்சம் பிரிசில்ஸ். இதில் என்ன வித்தியாசப் படுத்திக் காட்டுவது என்று எல்லா பிராண்டுகளும் அசால்ட்டாக நினைத் திருந்தன. அதோடு பலருக்கு எத்தனை நாளுக்கொரு தரம் பிரஷ் மாற்றவேண்டும் என்பதே தெரியாது. எத்தனை நாளாக ஒரே ப்ரஷ் உபயோகித்து வருகிறோம் என்பதும் தெரியாது. அதனாலேயே பலர் ஆயுஷ் ஹோமம் ஆனது முதல் அறுபதாம் கல்யாணம் நடக்கும் வரை ஒரே பிரஷ்ஷை உபயோகிக்கிறார்கள்!

வந்தது ‘ஓரல் பி’. எப்பொழுது பிரஷ்ஷை மாற்றவேண்டும் என்பது ஈசியாக தெரிய பிரிசில்ஸ்களின் மத்தியில் நீல கலர் சாயம் அடித்து, பல் தேய்க்க தேய்க்க அதுவும் தேய்ந்து வருவது போல் செய்து, சாயம் பாதியாகும் போது பிரஷ்ஷை மாற்றும் நேரம் என்று அறிவித்து அதற்கு ‘இண்டிகேட்டர்’ என்று பெயர் சூட்டி விளம்பரப்படுத்தியது.

இப்படி ஒரு சௌகரியம் இருக்கிறதோ என்று பலரும் ஒரல் பீ பக்கம் ஒதுங்க அதன் விற்பனை ஓஹோ என்று ஓங்கியது. வித்தியாசப் படுத்தி காட்டாத மற்ற பிரஷ்களின் விற்பனை ஈயென இளிக்கத் துவங்கியது!

பிராண்டை எப்படி வித்தியாசப்படுத்துவது? எப்படி வித்தியாசப்படுத்தக் கூடாது? யார் வித்தியாசப்படுத்த வேண்டும்? வித்தியாசப் படுத்த என்னென்ன தேவை? இவைகளை விளக்க இங்கு இடமில்லை. விட்ட இடத்தி லிருந்து விடைகளை அடுத்த வாரம் தொடர் வோம்.

இல்லையே, நீர் இப்படி தொடரும் போட்டு இதுவரை எழுதியதில்லையே என்று தானே கேட்கிறீர்கள்? கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் காட்டலாமே என்று தான்!

satheeshkrishnamurthy@gmail.com

Friday, November 28, 2014

பெண் மனமே நலமா? என் பார்வை

பெண் என்றால் அமைதியானவள், பொறுமையின் பிரதிபலிப்பு, எதையும் தாங்கும் இதயம் கொண்டவள், மென்மையானவள் போன்ற குணங்களுக்கு இலக்கணமாக திகழ்பவள்.நம் நாட்டை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களுக்கே மனநல பாதிப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 



மிக மோசமான மனநோய்கள் ஆண்களை பாதிக்கக்கூடியதாகவும், மிதமான பாதிப்புகள் பெண்களை அதிகம் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. சிறுவயதில் ஆண்கள் அதிகமாகவும், வயதான பின் பெண்கள் அதிகளவிலும் மனநல பாதிப்பிற்கு ஆளாகின்றனர். மனபதட்டம், மனஅழுத்தம், மனச்சோர்வு, மனஎழுச்சி, மனச்சிதைவு போன்ற பொதுவான மனநல பிரச்னைகள் பெண்களையும் பாதிக்கலாம். ஆனால் மனநிலை மாறுபாடு கோளாறுகள் குறிப்பாக மனவருத்த நோய் மற்றும் மனப்பதட்ட நோய்கள் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் காணலாம். வேகமாக இயங்கும் வாழ்க்கை முறையில் மனஅழுத்தம் பலரிடம் காணப்படுகிறது. வேலைக்கு சென்று வந்து வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டிய பெண்களிடம் மனஅழுத்தம் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. 'ஹிஸ்டிரியா' எனும் மனநல பாதிப்பு பெரும்பாலும் இளம்பெண்களையே அதிகம் பாதிக்கும். உடல் அளவில் எப்படி பெண்ணுக்கும், ஆணுக்கும் சில வேறுபாடுகள் உண்டோ, அதுபோல் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த வேறுபாடுகளும் உண்டு. இதன் முடிவு, பெண்களுக்கென்றே சில பிரத்யேகமான மனநலம் தொடர்பான பிரச்னைகள் உள்ளன.

மாதவிடாய் சார்ந்த பிரச்னை:

மாதவிடாய்க்கு முன் பல பெண்களுக்கு மனநிலையில் ஓர் மாற்றம் தென்படலாம். இதை 'PREMENSTRUAL SYNDROME (PMS)' என்பர். இந்த நேரங்களில் எரிச்சல், கோபம், மனவருத்தம் போன்றவை ஏற்படும். சில நேரங்களில் வெறித்தனமும், தற்கொலை எண்ணமும்கூட தலை தூக்கலாம். இதுபோன்ற மனநிலை வேறுபாடுகள் மாதம் மாதம் வரும்போது கவனம் தேவை. இதற்கு வாழ்க்கை முறை மாற்றியமைப்பு மற்றும் மருந்துகளால் தீர்வு காணலாம். அதுபோன்று மாதவிடாய் நின்றுபோகும் பருவத்தில்(45 அல்லது 50 வயது) மனநல பாதிப்புகள் வரவாய்ப்புண்டு. நாளமில்லா சுரப்பிகளின் மந்தநிலை காரணமாகவும், பெண்மை போய்விட்டதோ என்ற உணர்வு காரணமாகவும், பிள்ளைகளின் படிப்பு, வேலைநிமித்தம், அவர்களை பிரிந்து வாழ்தல் ஆகிய நாட்களில் மனவருத்த நோய் அதிகளவில் வர வாய்ப்புண்டு. தவிர மனப்பதட்டம், காரணமற்ற சந்தேகங்கள், எங்கே கணவர் தன்னை கைவிட்டு விடுவாரோ என்ற நம்பிக்கையின்மை இக்கால கட்டத்தில் காணப்படும்.



பிரசவ கால மனநல பிரச்னை:

பெண்கள் கர்ப்பமாய் இருக்கும்போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்பட்டு மனநிலை பாதிப்பை உண்டாக்கலாம். பிரசவத்திற்குபின் உடனடியாக சில நாட்களில் மனநிலையில் மாற்றம் வருவதை அடிக்கடி காணமுடியும். முக்கியமாக மனவருத்தம். மனவருத்த நோயாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழலில் குழந்தையை எப்படி வளர்ப்பது போன்ற பயம், தன்னம்பிக்கையின்மை ஏற்படலாம். குழந்தையின் மேல் பாசமின்மை, எதிலும் நாட்டாமில்லா உணர்வு போன்றவையும் ஏற்படலாம். சிலருக்கு 'ஸைகோஸிஸ்' எனும் மனநோய் வரலாம். தூக்கமின்மை, இல்லாத விஷயங்கள் இருப்பதுபோல் தவறான கற்பனை, ஆக்ரோஷம், பயம், சந்தேகம் போன்றவை தோன்றும். நோய் தீவிரமாகி தாயின் தன் உணர்வற்ற நிலையினால் கருவில் உள்ள சிசு உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம். கருச்சிதைவுக்கு பின்பும் இவ்வகை மனநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் மருத்துவ சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம்.



மண வாழ்க்கையை பாதிக்கும்:

பெண்களுக்கே உரித்தான கருக்கலைப்பு, கர்ப்பப்பை அகற்றல், கற்பழிப்பு போன்றவற்றாலும் பெண்களின் மனநிலை பாதிக்கப்படலாம். குறிப்பாக சிறு வயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகளில் சில பேர் பிற்கால மணவாழ்க்கையில் சிரமப்படும் அபாயம் உண்டு. பெண்களின் தனிப்பட்ட உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி காரணமாக வெவ்வேறு காலக்கட்டங்களில், இயற்கையாகவே சில சமயம் கடுமையாகவே பாதிக்கப்படும். இம்மாதிரியான நேரங்களில் மனநிலை அறிந்து அதற்கேற்றவாறு மனநல சிகிச்சை பெறுவது அவசியம். பெண் குழந்தைகளை வளர்ப்பதில் முற்போக்கு சிந்தனை வேண்டும். அவர்களின் பழக்கவழக்கம், படிப்பு போன்றவற்றில் அவர்களுக்கு கண்காணிப்புடன்கூடிய கருத்து சுதந்திரம் வேண்டும். சிறந்த கல்வியறிவும் வேலை பார்க்கும் சூழ்நிலையும் ஏற்பட்டாலே அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு என்பது இயற்கையாகவே அமைந்துவிடும். அதேசமயம் அது அவர்களுக்கு ஒரு மனப்பாதுகாப்பு கவசமாக மாறி நிற்கும். பெண் என்பவர் தன் உடல் என்ற எண்ணெய்யில் மனம் என்ற திரியாக நின்று மகிழ்ச்சி எனும் ஒளி தரும் ஒரு குடும்ப விளக்கு என்பதை நினைவில் கொள்வோம். பெண்ணின் மனநலமே அவள் குடும்பத்தின் மனநலம்.


- டாக்டர் ஆர். பாஹேஸ்ரீதேவி, மனநல நிபுணர், மதுரை. 93444 60432 

ஜெயித்துக் காட்டுவோம் - கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி

இன்றைய சமூகத்தில், ஒவ்வொருவர் மனதையும், நான்கு விதமான பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால், சமூகம் சீரழிந்து கிடக்கிறது. அந்த பூச்சிகள், உங்கள் மனதையும் அரித்தபடி தான் இருக்கின்றன.சுயநலம், நன்றி கெட்டத்தனம், உணர்ச்சியற்ற தன்மை, எடை போடுதல் ஆகியவையே அவை.



சுயநலம்:நீங்கள் எல்லாம் வறுமையில் இருந்து வந்திருப்பீர்கள். உங்களால் சாதிக்க முடியாது என நினைத்துக் கொண்டிருப்பீர்கள். நானும், உங்களைப் போல, மாநகராட்சி பள்ளியில் படித்து தான், இப்போது உங்கள் முன் நிற்கிறேன். வறுமையில் முன்னேறுவது பெரிய விஷயம் இல்லை. சுயநலத்தால் தான் முன்னேற முடியாது.ஒரு கதை... வறுமையில் உள்ள, அப்பா இல்லாத ஒரு குடும்பத்தில், அம்மா தன் நிலத்தை விற்ற பணத்தில், மகளுக்குப் பிடித்த தங்க கம்மலை வாங்கிக் கொடுக்கிறார். அதன் பின்னும், அம்மாவிடம் பணம் இருப்பதை அறிந்து, மற்றொரு கம்மல் கேட்கிறாள் மகள்.இப்படித்தான், இன்றைய மாணவர்கள் சுயநலத்துடன் இருக்கின்றனர். ஆனால், அந்த தாய்க்கும் ஆசைகள் இருக்கும்.அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூட உங்களுக்கு தோன்றாது. அப்படி இருந்தால், கண்டிப்பாக, உங்களால் முன்னேற முடியாது.

நன்றி கெட்டத்தனம்:பெரும்பாலான அப்பாக்கள் குடிப்பதாகவும், அவர்களை வெறுப்பதாகவும், மாணவர்கள் கூறுகின்றனர். குடிப்பது தவறு தான். ஆனால், அந்த அப்பாக்கள் குடிப்பதற்கு பின்னால், பல பிரச்னைகள் இருக்கலாம்.அதைப் பற்றி ஆராய, யாருக்கும் மனம் வராது. பலர், உடல் உழைப்பின் களைப்பு தீரவும், பலர் ஏமாற்றங்களை மறக்கவும் என, பல்வேறு காரணங்களுக்காகவும் குடிக்கலாம். ஆனால், அந்த அப்பாக்கள் உங்களுக்கு செய்யும்

செயல்களை எண்ணிப் பார்த்தது உண்டா?இன்னொரு கதை... ஒரு அப்பா, ஒரு துணிக் கடைக்குச் செல்கிறார். அவருக்குப் பிடித்த சட்டையைப் பார்க்கிறார். அதை வாங்கப் போகும்போது, மகன் காலில் இருக்கும், பிய்ந்த செருப்பு ஞாபகம் வருகிறது. அவர், உடனே, செருப்பு வாங்கி வருகிறார். இப்படி, உள்ள அப்பாக்களை தான், நீங்கள் வெறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்; படிக்க மறுக்கிறீர்கள்.

உணர்ச்சியற்ற தன்மை:உங்களுக்காக, இரண்டு ஜீவன்கள் உருகியபடி இருப்பதை, நீங்கள் உணர வேண்டும். இளமையில் வறுமையை விட, முதுமையில் வறுமையே கொடுமையானது. அந்த வறுமையை விரட்ட, நீங்கள் படிக்க வேண்டும்.இல்லையேல், உங்கள் தாயைப் போல, எங்கேனும் வீட்டு வேலை செய்து கொண்டோ, தந்தையை போல குடித்துக் கொண்டோ தான் இருப்பீர்கள் என்பதை உணருங்கள். உணராமல் இருப்பது தான், உணர்ச்சியற்ற தன்மை.

எடை போடுதல்

மாணவர்களே... இப்போது, நீங்கள் இருக்கும் சூழலையும், பின் இருக்கப்போகும் சூழலையும் எடை போடுங்கள். தியான நிலையில், கண்களை மூடிக்கொண்டு, மனதால், நான் சொல்லும்

இடங்களுக்கு வாருங்கள்.

இப்போது, உங்கள் வீட்டுக்கு போகிறீர்கள். அங்கு, வறுமையின் பிடியில் உங்கள் பெற்றோர், ஏதோ ஒரு வேலையை கஷ்டப்பட்டு செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள், அவர்களை கவனிக்காமல், கிரிக்கெட் விளையாடவோ, திரைப்படம் பார்க்கவோ செல்கிறீர்கள். திரும்பி வந்து, உணவை குறை சொல்கிறீர்கள்.உங்களுக்கு 3 வயதாக இருக்கும் போது, உங்களுக்கு உடல் நலமில்லை. உங்களை துாக்கிக் கொண்டு, ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடுகின்றனர். அவர்களைத் தான், இப்போது நீங்கள் திட்டுகிறீர்கள்.

உங்கள் தவறுகளை உணராவிட்டால், உங்களால், எதையும் செய்ய முடியாது. இப்போது, காலங்கள் ஓடி விட்டன. நீங்கள், வசதியான வீட்டில் இருக்கிறீர்கள். உங்கள், பெற்றோரின் கால்களை, உங்கள் மடியில் வைத்துக் கொண்டு, நீங்கள் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கிறீர்கள். அவர்களும் மன்னித்து விடுகின்றனர்.

அதே போல், அவர்கள் சூழ்நிலையால் செய்த தவறுகளையும் நீங்களும் மன்னித்து விடுங்கள். இப்போது, ஆண்டவனிடம் வேண்டுங்கள். 'இறைவா, என் குடும்பத்தை காப்பாற்றி நல்ல நிலைக்கு வர, நான் தினமும், மூன்று மணி நேரம் படிக்க வேண்டும். அதை புரிந்து படிக்கும் மன நிலையை எனக்கு அருள வேண்டும். நான், பிளஸ் 2வில் ஜெயிப்பேன். அதற்கான, மன உறுதியை கொடு' என, வேண்டிக் கொள்ளுங்கள்.இப்போது, ஜெயித்து விட்டீர்கள். மெதுவாக, கண்களைத் திறந்து அருகில் இருப்பவர்களைப் பார்த்து 'ஆல் தி பெஸ்ட்' சொல்லி அணைத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

Thursday, November 27, 2014

கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

  
அதிவேக பவுன்சர் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவருடைய ஆத்துமா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.





Wednesday, November 26, 2014

ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை அனைத்துக்கும் இனி சிறப்புக் கட்டணம்: விரைவில் அறிவிக்கிறது ரிசர்வ் வங்கி

இனிமேல் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் விதிவிலக்கின்றி சிறப்புக் கட்டணம் வசூலிப்பதற்கு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விரைவில் அனுமதியளிக்க உள்ளது.

வங்கிப் பரிவர்த்தனைகளை எளிமையாக்குவதற்காகவும் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் ஏ.டி.எம். மற்றும் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை சேவைகளை வங்கிகள் வழங்கி வருகின்றன. தொடக்கத்தில், அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம்.களில் அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகளை மட்டுமே பயன்படுத்தி பணம் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது.

அதன்பிறகு, எந்த ஏ.டி.எம்.மிலும் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்-களை மாதத்தில் 5 தவணைகளுக்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு தவணைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் மாதத்தில் 5 தவணைகள் மட்டுமே ஏ.டி.எம்.களை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலதிக தவணைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தன. இனி அடுத்த கட்டமாக, ஆன்லைன் மூலம் நடைபெறும் அனைத்து விதமான வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பிலிருந்து ’தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள், வெளியூர் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தினால் கமிஷன் பிடித்தம் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலானோர் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர்.

சினிமா டிக்கெட்டிலிருந்து டெலி ஷாப்பிங் வரை அனைத்துவிதமான பரிவர்த்தனைகளும் இப்போது ஆன்லைன் மூலம் எளிதில் செய்ய முடிகிறது. ஆனால், இந்தப் பரிவர்த்தனைகளுக்காக பெரும்பாலான வங்கிகள் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.

இந்தியா முழுவதும் தினமும் சுமார் 10 லட்சம் கோடிக்கு ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இதில் ஒருவர் கணக்கிலிருந்து இன்னொருவர் கணக்குக்கு ஆன்லைனில் பணம் மாற்றப்படுவதற்கு தற்போது மிகக் குறைந்த அளவிலான கட்டணங்களை வங்கிகள் வசூலிக்கின்றன. ஒருசில பரிவர்த்தனைகள் கட்டணம் ஏதும் இல்லாமலும் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் ஏ.டி.எம். பயன்பாட்டுக்கு அனைத்து வங்கிகளும் கட்டணம் விதிக்கத் தொடங்கினால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் இன்னும் அதிகரிக்கக் கூடும். மேலும், குறைந்தபட்ச பண இருப்பு இல்லாத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் வசூலிக்கக் கூடாது என அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகள் குறைந்தபட்ச பண இருப்பு கட்டுப்பாட்டை அமலில் வைத்திருப்பதால் சாமானியர்கள் வங்கிக் கணக்குத் தொடங்கத் தயங்குகிறார்கள். இதனால் இவர்களின் பரிவர்த்தனைகள் அனைத்தும் நேரடி கொடுக்கல் வாங்கல் மூலமே நடைபெறுகிறது. இந்த நிலைமையை தவிர்த்து அனைவரது பண பரிவர்த்தனைகளையும் வங்கிகள் மூலமாக நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் குறைந்தபட்ச பண இருப்பு முறையை ரத்து செய்ய அறிவுறுத்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி.

ஆனால், இந்த அறிவிப்பால் வங்கிகளுக்கு குறைந்தபட்ச பண இருப்பு இல்லாத கணக்கு களையும் அதிகம் பரிவர்த்தனை இல்லாத கணக்குகளையும் கையாள வேண்டிய பணிச்சுமை ஏற்படுகிறது. இதைக் கணக்கில் கொண்டு விதிவிலக்கு ஏதுமின்றி அனைத்து விதமான ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் சிறப்புக் கட்டணம் வசூலிக்க அனுமதி கேட்டு வங்கிகள் தரப்பிலிருந்து அண்மையில் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியும் இதை பரிசீலிப்பதாக உறுதி கொடுத்திருக்கிறது. எனவே விரைவில் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் சிறப்புக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரலாம் என்று வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Monday, November 24, 2014

உருவாக்கிக்கொள்பவைதான் வேலைகள்!

வாழ்க்கையில் உளச் சிக்கல் உள்ளவர்களுக்கும் அவர்களின் வேலைப் பளுவுக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்டார் நண்பர் ஒருவர். வேலைப் பளு அதிகம் இருந்தால் உளச் சிக்கல் வருமோ இல்லையோ, மிகக் குறைவான வேலைப் பளு நிச்சயம் மன உளைச்சலைத் தரும் என்றேன். வேலை குறைவாக இருந்தால் முதலில் ஆறுதலாகத்தான் இருக்கும். நிறைய நேரம் இருப்பது நன்மையாகத் தோன்றும். பின்னர் அதுதான் ஆபத்தாக மாறும்.

குறைந்த சம்பளத்திலும் திருப்தி

“வேலைன்னு பெரிசா கிடையாது. ஆனால் கண்டிப்பா சீட்டில் இருக்கணும்!” என்று ஆரம்பத்தில் பெருமையாகப் பேசுபவர்கள் பின்னர் நேரத்தைக் கொல்வதைவிடத் தங்கள் அமைதியைக் கொல்வார்கள். வேலை இல்லாதவன் மனம் ஒரு பிசாசின் பட்டறை என்று தெரியாமலா சொன்னார்கள்?

நீங்களே யோசித்துப் பாருங்களேன். உற்பத்திக் கூடத்தில் அடிமட்டத் தொழிலாளியின் பணியிடம் அவரது ஒவ்வொரு நிமிட வேலையையும் நிர்ணயித்து விடுகிறது. ஒரு பாகத்தைப் பொருத்துவதற்குள் அடுத்த பாகம் தயாராக நிற்கிறது. அத்தனையையும் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். தேநீர் இடைவெளியும் உணவு இடைவெளியும் போய் வரத்தான் நேரம் சரியாக இருக்கிறது. இதனால் மனதை வேறு எதிலும் செலுத்தாவண்ணம் பணிபுரிகிறார்கள். இதனால்தான் குறைந்த சம்பளத்திலும் பணித் திருப்தி இவர்களிடம் அதிகம் உள்ளது.

ஓய்வறியா சூரிய(ளே)னே!

என்ன வேலை , எவ்வளவு வேலை என்று அளவிட முடியாத வேலைகளில் யோசிப்பதற்கு நேரம் நிறைய கிடைக்கிறது. அது பெரும்பாலும் மன உளைச்சலில்தான் கொண்டு முடிகிறது. வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களை நான் எப்போதும் பெருமையுடன் பார்ப்பேன். என் வீட்டுப் பக்கத்தில் உள்ள ஒரு பெண்மணி காலை 5 முதல் இரவு 8 வரை பல வீடுகளில் வேலை பார்ப்பவர். ஒரு பக்கம் வீட்டு வேலை. இன்னொரு பக்கம் சமையல். இன்னொரு பக்கம் வண்டி துடைத்தல். இப்படிப் பல வேலைகள்.

காலை முதல் இரவுவரை அப்படி ஒரு துறுதுறுப்பு. தெரியாத வேலையே கிடையாதோ என்று சந்தேகிக்கும் அளவு எல்லா வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். யாருக்குப் பிரச்சினை என்றாலும் முதலில் நிற்பார். எங்க ஏரியாவில் எல்லாருக்கும் அந்தம்மா பரிச்சயம்.

“ஓய்வறியா சூரியனே” என்று இவருக்கு போஸ்டர் ஒட்ட ஆளில்லை. ஆனால் சொந்தச் சோகங்கள் எவ்வளவு இருந்தாலும் படுத்தால் நிம்மதியாக உறங்கும் வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். உட்கார்ந்து யோசித்தால் பெரும் பட்டியல் போடும் அளவுக்குப் பிரச்சினைகளும் துயரங்களும் அவருக்கு நிச்சயம் உண்டு. ஆனால் நேரம் ஏது?

வேலையில் கரைதல்

யோசிக்க நேரமில்லை என்பது மறைமுக ஆசீர்வாதம். நம் வாழ்க்கையில் வருத்தப்படவும், கோபப்படவும் ஆட்களுக்கும் சம்பவங்களுக்குமா பஞ்சம்? உட்கார்ந்து யோசித்தால் கசப்புதான் மிஞ்சும். குறிப்பாகக் கடந்த காலத்தை இம்மி அளவும் மாற்ற நமக்குச் சக்தி கிடையாது. வருங்காலம் பற்றிய பயங்களும் பெரும்பாலும் வீண் என்று நமக்கே தெரியும். அதனால் நேற்றைய வாழ்க்கையையும் நாளைய வாழ்க்கையையும் நினைக்காமல் இருக்க, இன்றைய பொழுதில் நிலைக்க நமக்கு ஒரு வேலை தேவைப்படுகிறது. அது நம்மை முழுவதுமாக உள் வாங்கிக்கொள்ள அனுமதித்து அதில் கரைந்து போக முடிந்தால் நாம் பாக்கியசாலிகள்.

இதனால்தான் விழித்திருக்கும் நேரத்தில் அதிகம் வேலை இல்லாதவர்கள் நிம்மதியைத் தொலைத்துவிடுகிறார்கள்.வேலை என்பதை நாம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகப் பார்க்க வேண்டும்.

மன அழுத்தம்

ஆறு மாதமாகச் சம்பளம் தராத கம்பெனியில் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும் மிகச் சிறப்பாகச் செயல்படும் நண்பரைச் சந்தித்தேன். சம்பளம் வராத பிரச்சினையைக் கூட நினைக்க நேரமில்லை என்று சிரித்தார். ஒரு புத்த பிக்குவைப் பார்த்தது போலிருந்ததது. “சம்பளம் வராம எங்கே போகும், அதுக்காக வேலையைக் கெடுக்க முடியுமா?”

மன அழுத்தம் மேல்த் தட்டு மக்களுக்கு அதிகமாக வரக் காரணம் அவர்களுக்கு அதிகமான நேரம் கிடைப்பதால்தான். பத்துப் பேருக்குச் சதா பொருள் எடுத்துத் தரும் பெட்டிக்கடைக்காரருக்கோ, சாலையில் மக்கள் நெரிசலில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளிக்கோ வராத மன அழுத்தம், ஏசி அறையின் தனிமையில் அடுத்து என்ன செய்ய என்று தெரியாதவருக்கு வருகிறது.

வேலையின் முக்கியத்துவம்

அலுவலகத்திலும் அதிகம் வம்பு பேசும் மக்கள் வேலை குறைவான பிரிவுகளில்தான் இருப்பார்கள். ஆனால் வேலைப்பளு உள்ள துறைகளில் உடல் அசதி இருந்தாலும் மன வெறுமை இருக்காது. சீனா போன்ற தேசத்தில் மக்கள் மன நலத்துடன் இருக்கக் காரணம் எல்லாரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள். முதியவர்கள்கூட வீட்டில் இருந்தே சின்னச் சின்ன வேலை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள்.

வேலை பார்ப்பது முக்கியம். அது நம் படிப்புக்கு, தகுதிக்கு, வசதிக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும் வேலை முக்கியம். வருமானம் இல்லாவிட்டாலும் வேலை முக்கியம். குறிப்பாகக் குடும்பத்தை மட்டும் பராமரிக்கும் பெண்கள், ஓய்வுக்குப் பின் முதியோர்கள், படித்து வேலைக்குக் காத்திருக்கும் மாணவர்கள் இவர்கள் அனைவரும் அதிகம் தாமதிக்காமல் சில மணி நேரங்கள் செய்யும் பகுதி நேர வேலையையாவது மேற்கொள்ள வேண்டும்.

என்ன செய்யலாம்?

தொலைபேசி வழியே பொருட்கள் விற்கலாம். வலைத்தளத்தில் எழுதலாம். பார்வையற்றோர்க்குப் படித்துக் காட்டலாம். சின்ன முதலீட்டில் பலர் சேர்ந்து தொழில் செய்யலாம். டியூஷன் எடுக்கலாம். மொழிபெயர்ப்பு செய்யலாம். உங்கள் துறை சார்ந்து ‘குறைந்த கட்டண ஆலோசகர்’ ஆகலாம்.

கோயில்களில் சேவை செய்யலாம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் அலுவலகத்தில் உதவிகள் செய்யலாம். சிறியதாகத் தொடங்கும் பல வேலைகள் பின்னர் பெரும் வாழ்க்கை மாற்றங்களை ஏற்படுத்தலாம். எதையாவது செய்யலாம். ஆனால் கண்டிப்பாக எதையாவது செய்யணும். வேலைகள் தானாக வருவதில்லை. அவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

உங்களைத் தேர்வு செய்பவர் நீங்களே!

சிறந்த விற்பனையாளனாகத் தொடர்ந்து பெருமை பெற்றுவரும் உங்கள் சகாவுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் தம்பி விளையாட்டில் பிரமாதமாக இருக்கும்போது நீங்கள் ஏன் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்க்கிறீர்கள்?

உங்களுக்குத் திறன்களும் பிரமாதமான புத்திசாலித்தனமும் உண்டு. ஆனால் நீங்கள் இன்னும் அவற்றைப் பயன்படுத்தத் தீர்மானிக்கவில்லை. கடும் பயிற்சியில் இறங்கவோ, உங்கள் நம்பிக்கையை வளர்த்தெடுக்கவோ செய்யவேயில்லை. அதனால் நீங்கள் கடிவாளத்தை விடாமல் இருக்கிறீர்கள்.

நான்சியின் கதை

நான்சி என்ற ஒரு பெண்ணின் கதையைக் கேளுங்கள். அவள் 9 வயதில் அம்மாவால் கைவிடப்பட்டாள். தனது ஆறு வயது, மூன்று வயது தம்பிகளுக்கு அன்னையாக மாறினாள். அவள் தினசரித் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. உணவைத் திருடித் தம்பிகளுக்குக் கொடுக்க வேண்டி இருந்தது. அவர்களுடன் விளையாடவும் வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்யுமாறு நான்சியிடம் கத்திவிட்டு அவளது குடிகார அம்மா, வெவ்வேறு ஆண்களுடன் பின்புற அறைக்குள் சென்று மறைந்துவிடுவாள்.

ஒரு கட்டத்தில் குழந்தைகள் பாட்டி வீட்டுக்குச் சென்று வாழத் தொடங்கினார்கள். பாட்டி இறந்தவுடன் வேறு வேறு அநாதை விடுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். நான்சி நூலகங்களுக்குப் போனாள். அவளால் எவ்வளவு முடியுமோ அத்தனை நூல்களைப் படித்தாள். அவள் பள்ளிக்குச் சென்றபோது கற்றுக்கொடுக்கப்பட்ட பாடங்களை ஆசையோடு படித்தாள். ஆசிரியர்களை விஞ்சினாள். மற்ற மாணவர்களைவிடத் தான் சிறந்த மாணவி என்று நான்சிக்குத் தெரியும்.

புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராகத் தன்னைப் பாவித்துக்கொண்டாள். நிறைய ஏழைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றுவதாக நினைத்தாள். சிறந்த ஆசிரியராக மாறித் தன்னைப் போன்ற எண்ணற்ற மாணவர்களுக்கு உதவுவதாக நினைத்தாள். அவள் என்னவானாள்? சிறந்த ஆசிரியையாகவும் பாடகியாகவும் விளங்கினாள். ஏழை மற்றும் வறிய நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவர நான்சியால் முடிந்தது.

எப்படி இந்த உயர்வு?

இப்படியான வெற்றியைப் பார்க்கும் யாருக்கும் அதிசயமாக இருக்கும். ஆன்மிக ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு அடிப்படையிலும் அவர்கள் முழுமையாகக் குணமடைந்து அதைச் சாதிக்க முடிந்தது என்பதும் வியப்பாக இருக்கும். இத்தனை மோசமான அனுபவங்களைத் தாண்டி ஒருவர் எப்படி உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடிகிறது?

அத்தகைய பயங்கரங்களைச் சந்தித்தவர்கள் கோபம், வெறுப்பு அல்லது மன அழுத்தமுடையவர்களாக இருப்பார்கள். அதனால்தான் நான்சியின் சகோதரர்களால் அந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. ஒருவர் தற்கொலை செய்தார். இன்னொருவர் மதுவுக்கு அடிமையாகி, வீடற்றவராகத் திரிந்தார்.

காரணி

சூழ்நிலைகளைத் தாக்குப்பிடித்து உயர்பவர் என்ன செய்கிறார்? பதில் மிகவும் எளிமையானது. இன்னல்களிலிருந்து மீண்டு வெற்றிபெற்றவர்களுக்கும், துயரத்தின் குழிகளில் வீழ்ந்து அவதிப்படுபவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கிறது. புத்துயிர்ப்பு பெறுவதற்கான தனிநபர் ஒருவரின் போராட்டம்தான் அது.

இதைத்தான் நான் மீ ஃபேக்டர் (நான் என்னும் காரணி) என்கிறேன். எனது வாழ்க்கையிலிருந்து உதாரணம் தருகிறேன். என் வீட்டில் பிறந்த மூன்று பையன்களில் நான்தான் கடைசி. எனது பெரிய அண்ணன் லாரன்ஸ் (லாரி) என்னைவிட இரண்டு வயது மூத்தவன். வில்லி என்னைவிட 11 மாதங்கள் மூத்தவன். நாங்கள் எல்லாரும் ஒரே விதமான சூழ்நிலைகளில்தான் வளர்க்கப்பட்டோம். தந்தை, தாய் எல்லாரும் ஒன்றுதான். ஆனால் ஒரே வித்தியாசம் அந்த யு ஃபேக்டர்தான். நாங்கள் மூவரும் எங்கள் சூழ்நிலைக்கு வெவ்வேறு விதங்களில் எதிர்வினை யாற்றினோம்.

வாய்ப்பும் தேர்வுகளும்

என் பெரிய அண்ணன் லாரி, தற்போது மூன்றாவது முறையாகச் சிறையில் இருக்கிறார். தொடர் கொள்ளைக் குற்றத்திற்காக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் அவர். எனது இரண்டாவது அண்ணன் வில்லி, திருச்சபையில் 18 வயதில் சேர்ந்தார். தற்போது அரசு ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு 30 வயதாகப் போகிறது.
நான் ஆயிரக்கணக்கான மக்களிடம், உண்மையான மன, ஆன்மிக, உடல் வளத்தை அடையும் அனுபவம் குறித்து ஊக்குவிக்கவும் தன்னிறைவு பெறவும் ஆண்டுதோறும் பேசிக்கொண்டிருக்கிறேன். ஒரே சூழ்நிலையில் வளர்ந்த மூன்று சகோதரர்கள் எப்படி வெவ்வேறு எதிர்காலத்தை அடைந்தார்கள்? மீ ஃபேக்டர்தான் அதற்குக் காரணம்.

நான் எனது இரண்டு சகோதரர்களையும் முழுமையாக நேசிக்கிறேன். வில்லி தனது தேர்வுகளை இளம்வயதிலேயே மேற்கொண்டுவிட்டான். அவன் தனது சூழலின் விளைபொருளாக மாற மறுத்துவிட்டவன். நியாயத்தின் பக்கம் நிற்க எப்படியோ வில்லி தீர்மானித்துவிட்டான். எங்களுக் கிருந்த பல சபலங்களுக்கு அவன் ஆட்படவேயில்லை.

ஒரே விதமான தேர்வுகளை மேற்கொள்ளும் ஒரே விதமான வாய்ப்புகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களது முடிவுகளும் அதற்கெனச் செயல்பட்ட விதமும்தான் அவரவர் தேர்வுகளை உருவாக்கின. நாங்கள் யாரும் ஒருவரைவிட ஒருவர் மேம்பட்டவர் அல்ல. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள். நான் ஒருவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொள்ளையடிக்கவில்லை என்றாலும் சிறைத் தண்டனையைப் பெறுவதற்கான காரியங்களில் பங்கேற்றிருக்கிறேன். நான் பிடிபடுவதற்கு முன்பே என்னை மாற்றிக்கொள்ள முடிவுசெய்தேன்.

எங்கள் மூன்று பேருக்கும் பொதுவான அம்சங்கள் நிறைய உண்டு. மூவரும் மிகுந்த நேசம் கொண்டவர்கள். எங்களுக்குச் சட்டை இல்லாவிட்டாலும், இல்லாதவருக்குக் கொடுக்கக்கூடியவர்கள். எங்கள் பெற்றோருக்கும் அந்த இயல்பு உண்டு. நாங்கள் பேசுவதிலும், புரியும் செயல்களிலும் ஒற்றுமை உண்டு. தவறிலிருந்து சரியானதைத் தீர்மானிக்கும் அதே வாய்ப்புகள் எங்களுக்கு இருந்தன. நாங்கள் மேற்கொண்ட தேர்வுகள்தான் எங்களை வித்தியாசப்படுத்தின. ஒரு நபர் தன் முன் இருக்கும் சாத்தியங்களுக்குச் செய்யும் எதிர்வினைதான் அவரது தனிப்பட்ட தேர்வாகிறது. அதைத்தான் நான் மீ ஃபேக்டர் என்கிறேன்.

அமெரிக்கத் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான் வெளியிட்டுள்ள From the HOOD to doing GOOD எனும் நூலிலிருந்து, 
தொகுப்பு - நீதி

Sunday, November 23, 2014

கான்வென்ட் பள்ளிகளும், கருவேல மரங்களும்!!!

உங்களுக்கு நேரமிருந்தால், வாய்ப்பிருந்தால், விருப்பமிருந்தால் ஏதாவதொரு அரசுப் பள்ளிக்கூடங்களையோ அதில் பயிலும் மாணவர்களையோ கூர்ந்து பாருங்கள். அதேபோல் ஆங்கிலப்பள்ளி அதில் படிக்கும் மாணவர்களின் செயல்பாடுகளை கவனித்துப் பாருங்கள். நம் பிள்ளைகள், எதிர்கால தலைமுறையினர் குறித்த சிந்தனை உங்களுக்கு ஏற்படாமலிருக்காது.



நாம் பேசிக்கொண்டேயிருக்கிறோம். எழுதிக்கொண்டே இருக்கிறோம். மாற்றங்களை ஏற்படுத்த ஆள்பவர்கள் மனதில் நேரமில்லையா? ஈரமில்லையா தெரியவில்லை. தான் பிறந்த மண்ணை, மக்களை, பெற்றோர்களை, உறவினர்களை விட்டு பிரிப்பது கல்வி ஒன்று மட்டும்தான். பிறந்ததிலிருந்து பின் அவர்களை ஒரு பணியில் அமர்த்திவிடும் வரை இன்று ஒவ்வொருப் பெற்றோர்களின் பிள்ளைகளின் கல்விக்காகவே மட்டும் உழைக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கு செலவழிப்பதற்காகவே நெறிமுறைகளை மீறி பொருள் சேர்க்க வேண்டியிருக்கிறது.

வணிகர்கள் கையில் கல்வியைக் கொடுத்துவிட்டு அரசு மெல்ல நழுவிக்கொண்டுவிட்டது. கல்வித்துறை எனும் பெயரில் தேர்வு ஒன்றை நடத்தி இருக்கிற ஏதோ ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் செய்வது மட்டுமே போதும் என நினைத்துவிட்டது.. இங்கிருக்கிற கல்வி எதற்கும் உதவாது என்பதைச் சொல்லிப் போராட ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் துணிவும் இல்லை, நேரமும் இல்லை. சம்பளத்திலும், பணியில் அமர்த்தும் தகுதி குறித்தும் மட்டுமே போராடினால் போதும் என ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். பணத்தைச் சேர்த்து இந்த கொள்ளைக்கூடங்களில் கொட்டவும், பிள்ளைகளுக்கு வேண்டியதை சம்பாதிக்கவும் மட்டுமே பெற்றோர்களுக்கு நேரமிருக்கிறது. தங்களின் சொந்தப் பிரச்சினைகளுக்கு போராடுவதுபோல் அரசியில் கட்சிகளும் கல்வி போன்ற நம் தலைமுறையினரின் முதன்மையான பிரச்சினைகளுக்காக ஒன்று சேர்ந்து போராடுவதில்லை. இங்கு எல்லாமே தனித்தனி அறிக்கையோடு முடிந்து போகிறது. அனைவருமே இங்குள்ள மக்கள் கொத்தடிமைகளாகவும், அகதிகளாகவும் ஆக்கப்படுவது குறித்து கவலைப்படாமல் ராஜபக் ஷேவின் செயல்பாடுகளை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டின் விடுதலைக்குப்பின் மக்களாட்சி எனும் பெயரில் மக்களின் கையில் வாக்குரிமையைக் கொடுத்துவிட்டு அவர்களை சிந்திக்க மறந்த அடிமைகளாக்கி அவர்களின் கையாலேயே ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றும் தொழிலைத்தான் இன்று அரசியல் கட்சிகள் கையிலெடுத்துக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும், ஒவ்வொரு நிறுவனங்களாக இன்று செயல்படத் தொடங்கிவிட்டன. மக்களும் எதையும் கண்டுகொள்வதில்லை.

வயது வந்தவர்களின் மூளைகளை மதுக்கடைகள் பிடுங்கிக் கொள்கிறது. இளம் தலைமுறையினரின் மூளைகளை முடக்கி தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. அடிமையாய் இருப்பவர்களைவிட தாங்கள் அடிமைகள்தான் என்பதை உணராதவர்களின் நிலைமைதான் கொடுமையானது என்பதைச் சொன்ன ஒரு சிந்தனையாளனின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

கருவேல மரங்களை அழிக்க இன்று எத்தனைத் திட்டங்கள் போட்டாலும் அதனை அழிக்கவே முடியாது. வீட்டுக்குள் மட்டும் அவைகள் பரவவில்லை. நாடெங்கிலும் பரவி நிலத்தின் வனத்தையும், நீர்ப்பிடிப்பையும் அழித்துவிட்டன. இது நமக்கான தாவரமில்லை. இந்த மக்களுக்கு ஏதோ நன்மை செய்வதாக நினைத்துத்தான் இந்த செடிகளை இங்கு கொண்டுவந்திருப்பார்கள் நம் ஆட்சியாளர்கள். அதேபோலத்தான் இம்மக்களுக்கு நல்லதை செய்வதாக நினைத்து ஆங்கிலக் கல்வியை மூலை முடுக்கெல்லாம் தூவினார்கள். கருவேல மரங்கள் நம் ஆதாரங்களையே அழித்ததுபோல் இந்த ஆங்கிலக்கல்வி நம் தாய்மொழி முதற்கொண்டு வாழ்வியலின் அனைத்து அடிப்படைக் கூறுகளையும் அழித்துவிட்டன.

இந்தக் கல்வித்திட்டம் நம்மை அடிமைகளாக வைத்திருந்தவர்கள் கொண்டு வந்தத்திட்டம். ஏர்க்காடு உணவகம் ஒன்றில் மேசையில் துணிக்குப்பதிலாக துணிக்குப்பதிலாக பெரியதாள் ஒன்றில் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த வரிகள் எனக்குத்தந்த அதிர்வுகள்போல் நம்மில் எத்தனைப் பேருக்கு இது இருந்திருக்கும் எனத்தெரியவில்லை.

1835ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசாங்கத்தின் பணியாளாக இந்தியாவிற்கு வந்த “லார்ட் மெக்காலே” இந்தியாவை சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டாண்டுகளுக்குப்பின் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு இப்படி எழுதுகிறான்.

"இந்தியாவை இரண்டாண்டுகள் குறுக்கிலும் அதன் நெடுக்கிலும் சுற்றிப்பார்த்து இந்த மடலை எழுதுகின்றேன். எல்லா வளங்களும் நிறைந்த நாடு. மக்கள் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்குவதாக இருக்கிறார்கள். இந்தக் காலத்தில் எங்குமே ஒரே ஒரு பிச்சைக்காரனையோ, ஒரு திருடனையோ நான் பார்க்கவில்லை. அறநெறிகளை உருவாக்கி அதனை மதித்து வாழும் இவர்கள் ஒன்றைப் பார்த்து மட்டும் பயப்படுகிறார்கள். அந்நியர்கள், அந்நிய மொழி!

குறிப்பாக ஆங்கிலம் பேசினால் பயப்படுகிறார்கள், மதிக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையை சிதைத்து நம் கட்டுப்பாட்டில் கொண்டுவரை ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவர்களின் கல்வி, மருத்துவம், கணிதம், அறிவியல் என எல்லாவற்றையும் அழித்துவிட்டு நம் முறையைப் புகுத்தினால் நிரந்தர அடிமைகளாகி விடுவார்கள்" என எழுதியிருந்தான். இந்தக் கடிதத்தைக் காண்பிடித்துதான் சென்ற ஆண்டு தலைமுறைகள், தங்கமீன்கள் படத்துக்காக என் கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துரைத்து விருதுகளைப் பெற செயல்பட்டேன்.

மெக்காலே 185 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் செயல்படத் தொடங்கியதில் நாம் இப்பொழுது நம் அடையாளங்களை இழந்து நிற்கிறோம். தாய்மொழியும் தெரியாத, அயல் மொழியும் தெரியாத ஒரு சமூகமாக சிதைந்து கிடக்கிறது. நம் மக்களைப் பற்றி சிந்தித்த, நம் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் உருவாக்கிய நம் அரசுப் பள்ளிக்கூடங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மாணவர்களில்லாத மாட்டுக் கொட்டகைகளாகிவிட்டன.

ஐந்து வயது வரும்போது பள்ளிக்கு அனுப்பலாம் என்றிருந்த பெற்றோர்கள் இன்று குழந்தை கருவுற்ற உடனேயே பணம் கொடுத்து பள்ளியில் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். மூன்று வயதிலிருந்தே வீட்டிலும் படிப்பு, பள்ளியிலும் படிப்பு. இந்த வயிற்றுப் பிழைப்பு கல்வியில் எம் தலைமுறையினர் அழிக்கப்படுவதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.

எல்லாப் பெற்றோர்களைப் போலவேதான் நானும் தவறினை செய்தேன். நண்பர் ஒருவரின் கேட்கக்கூடாத சொல்லைக்கேட்டு இந்தக் கறிக்கோழிகள் உருவாக்கப்படும் இடங்களைப் போலுள்ள வெளியூரிலுள்ள ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் என் மகனை சேர்த்தேன். அந்த இரண்டாண்டு காலத்தில்தான் இந்த மாணவர்கள்படும் துயரங்களும், அவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வியும், அவை தரப்படும் விதங்களும் புரிந்தது. ஒவ்வொரு ஆங்கிலப்பள்ளிக் கூடங்களும், சிறைக் கூடங்கள்தான் என்பதை உணர்ந்தேன். மனநோயாளி அளவுக்கு மாற்றப்படும் பிள்ளைகள் ஆசிரியரைக் கொலை செய்யும் அளவுக்கு மாற்றப்படுவது இப்பள்ளிகளில்தான். அவர்கள் அதிக அளவில் தேர்ச்சியைப் பெற்று அதனைக் காண்பிப்பதற்குத்தான் அத்தனைக் கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன.

தனது குடும்பத்துக்கும், தனது சமூகத்துக்கும், இவ்வுலகத்துக்கும் அவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. பயந்து நடுங்கிய மனதோடும், சோர்ந்து போய் குழி விழுந்த இருண்ட கண்களோடும்தான் என் மகனை வீட்டிற்கு அழைத்து வந்தேன். தன்னம்பிக்கை இழந்த, தன்னைப்பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கின்ற சிறு பிரச்சினைகளைக் கண்டுகூட அஞ்சுகின்ற, சமூகத்தைப்பற்றி சிந்திக்க மறுக்கி்ற அவனை சமநிலைக்குக் கொண்டு வருவதுப்பற்றித்தான் இப்பொழுது கவலைகொள்கின்றேன். அவனுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களையும், பள்ளியின் பொறுப்பாளர்களையும் பார்த்தபோது நான் அடைந்த வேதனைகளையும் என்னால் எழுத முடியவில்லை. ஒட்டுமொத்த சமூகமும் அழிக்கப்படுவதைப் பார்த்து நான் கொள்ளும் கவலை இது.

அந்தப்பள்ளி மட்டுமல்ல தமிழ்நாட்டின் எல்லாப்பல்லிகளிலுமே ப்ளஸ் 1 பாடத்தை கற்பிக்காமல் நேரடியாகவே பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே மனப்பாடம் செய்ய கட்டாயப்படுத்துப்படுகிறார்கள். இதனால் ஐ.ஐ.டி,ஐ.எம்.எம்., போன்றத்தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை மிகவும் குறைந்துப்போகிறது.பிளஸ் 1 பாடத்திலிருந்து பாதி கேள்விகள் கேட்கப்படுவதால் மாணவர்கள் விடை தெரியாமல் தோல்வியடைகிறார்கள்.மூன்று மாதங்களுக்கொருமுறை பருவத்தேர்வை நடத்தி இதனைச் சரி செய்யலாம். யாருக்கு இங்கே இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது?

தன் மொழியைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் இம்மக்களைப் பற்றியும் சுற்றி நடக்கின்ற எதைப் பற்றியும் கவலை கொள்ளாத தலைமுறைகளைத்தான் இந்த கல்வித்திட்டம் உருவாக்கிக்கொண்டு வருகிறது. தங்களுக்கு நல்ல அடிமைகள் வேண்டும் என்பதற்காகவே இதில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரத் தயங்குகிறார்கள். கல்வி என்பது வெறும் விவரங்களைக் கொடுப்பது என்பதாக இல்லாமல் அறிவைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். உலக அளவில் தலை சிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் இருநூறில்கூட இந்தியாவிலிருந்து ஒன்றுமே இல்லை. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு! வல்லரசாக உருவெடுக்க கனவு காணும் நாடு!ஆங்கிலக் கல்வி கொடுத்து எம்மக்களை முன்னேற்றுபவர்களாகச் சொல்லி மார்தட்டிக்கொள்பவர்கள் கொஞ்சம் இதற்கு பதில் சொல்லுங்களேன். விதைத் தானியத்தை தின்று வயிறு வளர்ப்பவர்களால் எதுவும் சொல்ல முடியாது. மொழி, பண்பாடு, கலாச்சாரம், அறம் நாட்டுப்பற்றை வார்ப்பதாகக் கல்வி இருக்க வேண்டும். அதனைப்புரிந்து கொண்ட நாடுகள்தான் இன்று உண்மையாக கல்வியைக் கற்றுத்தருகின்றன.

எல்லாமுமே ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன என நினைக்கும் முட்டாள்தனமும், மூடத்தனமும் அவர்களிடத்தில் இல்லை.

பணம் கொடுத்தால் எந்த பதவியையும் வாங்கலாம். துணைவேந்தர் பொறுப்பு என்பது எப்படிப்பட்டது! அரசியல் உயர் பொறுப்பில், செல்வாக்கின் அச்சாணியைக் கையில் வைத்திருக்கிற பணத்தாசைப் பிடித்தவர்கள்தான் இவர்களை நியமிக்கிறார்களாமே என வெளிநாட்டிலிருந்து தமிழ் கற்க வந்திருக்கிற ஒரு மாணவர் என்னிடம் கேட்கிறார். க,ங,ச 18 எழுத்தை வரிசையாகச் சொல்லத் தெரியாமல் மாட்டிக்கொண்டு தவித்த முனைவர் பட்டம் பெற்றவரைக் காட்டட்டுமா என அவர் என்னிடம் கேட்கிறார். வெளிநாட்டுக்காரர் தமிழ்மொழியின், நம் பழைய கல்வித் திட்டத்தின் மேன்மை அறிந்து வியக்கிற நிலையில் இருக்கும்போது முனைவர் க,ங,ச தெரியாமல் கோட்டு சூட்டுடன் அலைவதும், மனப்பாடக் கல்வி மூலம் 500 மதிப்பெண்களில் 496 பெற்று பீற்றிக்கொள்வதும்தான் நம் கல்வித்திட்டம் சாதித்திருப்பது.

முதல் மதிப்பெண்ணைப் பெறும் ஒரே நோக்கத்திற்காகவே ஒரு மாணவனை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த பெற்றோர்களிடமும், கல்வி நிறுவனங்களிடமும், ஆசிரியர்களிடமும் நான் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள நினைக்கிறேன். கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா?

கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மதிப்பெண் தேர்ச்சியில் முதல் 25 இடங்களில் தேறிய மாணவர்களெல்லாம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். யாருடன், எங்கே, எப்படி வாழ்கிறார்கள் என்பதைச் சொல்லுங்களேன்.

இதிலிருந்து நிச்சயம் தெரிந்துவிடும் நம் கல்வித்திட்டத்தின் அருமை பெருமை.
- இன்னும் சொல்லத் தோணுது, தங்கர் பச்சான்

Saturday, November 22, 2014

எதிர் நீச்சல் போட கற்று குடுங்கள் பிள்ளைகளுக்கு


நேற்று ஒரு பள்ளி செல்லும் பெண் என்ன காரணத்தினாலோ பெற்றோர்கள் வீட்டில் இல்லாதபோது தூக்கில் தொங்கி உயிரை விட முடிவு செய்து விட்டால். தற்போது அந்த 15 வயது குழந்தையின் நிலை என்ன என்று தெரியவில்லை. 



அந்த சமயம் நான் அவர்களின் பக்கத்தில் இருக்க நேர்ந்தது, அந்த பெண்ணின் தாயாரின் கதறலும், கண்ணீரும் என்றும் என் நினைவில் இருந்து விலகாது, பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது.

அந்த பெண்ணின் தாயார் மற்றும் தந்தை கூலி வேலை செய்பவர்கள், தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவு தான் திரும்புவார்கள் என்று அங்கு இருந்த மக்கள் பேசிகொண்டார்கள். அவர்கள் அப்படி வேலை செய்து என்ன பயன்?

பெற்ற பிள்ளைகளை பக்கத்தில் இருந்து அன்பு காட்டி, அரவணைத்து, மன தைரியத்தை ஊட்டி, நல்லது கேட்டது சொல்லி நல்ல மனிதர்களாய் உருவாக்க வேண்டிய கடமையை யார் செய்வார்கள்? 

காசு, பணம் சம்பாதித்து, பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிதந்தாள் மட்டுமே ஒருவர் நல்ல பெற்றவர்களாய் ஆகி விடமுடியாது, பிள்ளைகளின் மனது அறிந்து, அவர்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது, அவர்களின் ஆர்வம் எதில் உள்ளது என்று பிள்ளைகளை நன்கு அறிந்து அவர்கள் வாழ்கையில் எதையும் தாங்கும் மன பக்குவம் பெரும் வகையில் அவர்களை பக்குவபடுதுவதில் பெற்றவரின் பங்கு அளப்பரியது.

தற்கொலை என்றும் நமது துன்பத்திற்கு, கவலைகளுக்கு ஒரு முடிவு அல்ல. அது ஒரு கோழைத்தனம் என்று குறிப்பால் உணர்த்துவது யார் பொறுப்பு. 

வாழ்கை ஒரு போர்களம் என்று சொல்லி,போராட கற்று குடுங்கள் 

எதிர்ப்புகள் இல்ல வாழ்க்கை சுவாரசியம் இல்ல பயணம் என்று சொல்லி, சுவாரசியமான பயணம் செய்வது எப்படி என்று சொல்லி குடுங்கள்.

எதிர் நீச்சல் போட கற்று குடுங்கள் பிள்ளைகளுக்கு.

கிருஷ்ணமூர்த்தி

பாதுகாப்புக்கு முன்னுரிமை!

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் மோட்டார் கார்களுக்கு சில அடிப்படை பாதுகாப்பு அம்சங்களைக் கட்டாயம் ஆக்குவது என்று அரசு தீர்மானித்திருக்கிறது. எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவு, என்றைக்கோ நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய நடவடிக்கை இது!
புதிய கார்களின் சர்வதேச தர நிர்ணயத் திட்டத்தின் அறிக்கைதான் இந்த முடிவு எடுக்க அரசை தூண்டியிருக்கிறது. உலகில் தயாரிக்கப்படும் கார்களை அதிவேகத்தில் ஏதாவது ஒன்றின் மீது மோதவிட்டு, அதன் தாக்குப் பிடிக்கும் சக்தி பரிசோதிக்கப்படுகிறது. அந்த முறையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்திய, கொரிய, ஜப்பானிய, அமெரிக்க நிறுவனங்களின் மோட்டார் கார்களும் மோதல் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. ஆனால், ஒரு கார்கூட அந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்பது புதிய கார்களின் தர நிர்ணயத் திட்டத்தின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.
நமது இந்திய கார்களை மனிதர்கள் ஓட்டிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அவர்கள் பலத்த காயம் அடைந்திருப்பார்கள் அல்லது மடிந்திருப்பார்கள் என்கிறது அறிக்கை. அந்தச் சோதனைகளின் ஒளிப்படம் வெளியிடப்பட்டு அதைப் பார்க்கிறவர்கள், இந்தியாவில் தயாரித்த கார்களில் ஏறுவதற்கேகூட பயப்படுவார்கள்.
இந்தியா உலகின் மிகப்பெரிய கார்களின் சந்தையாக மாறிவிட்டிருக்கிறது. உலகிலுள்ள குறிப்பிடத்தக்க எல்லா மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இப்போது இந்தியாவில் கார்களைத் தயாரிக்கின்றன. ஆனால், அவர்கள் வெளிநாடுகளிலும், தங்களது தாய்நாட்டிலும் கடைப்பிடிக்கும் விதிமுறைகளையும், தரக் கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் இந்தியாவில் தயாரிக்கும் கார்களில் கடைப்பிடிப்பதில்லை. எரிபொருள் சிக்கனத்திலும்கூட இந்தியக் கார்கள் தரம் தாழ்ந்தவையாகவே இருக்கின்றன.
இதற்கு கார் தயாரிப்பாளர்கள் கூறும் காரணம் விசித்திரமானது. இந்தியர்கள் விதியில் நம்பிக்கை உடையவர்கள் என்பதால், அவர்கள் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை என்பது முதல் காரணம். இரண்டாவதாக, இந்தியர்கள் விலை பற்றிய சபலத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்றும், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் குறைந்த விலைக்குக் கார்கள் கிடைக்குமானால் அதைத்தான் விரும்புவார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 55 லட்சம் பேர் பலத்த காயம் அடைந்து ஊனமுற்றவர்களாகவும், செயலிழந்த நிலையிலும் இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், கார்கள் தரமானவையாக இல்லாமல் இருப்பதும், பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்படாமல் இருப்பதும்தான்.
இந்தியாவில் மிகுந்த வரவேற்புப் பெற்றிருக்கும் ஐந்தில் மூன்று பிரபலமான கார்கள், சர்வதேச தர நிர்ணயத் திட்டத்தில் நேரடி மோதல் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் நொறுங்கி விட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் அந்தக் கார்களின் தயாரிப்புத் தரம்தான் என்று கூறப்படுகிறது. இதே தயாரிப்பு நிறுவனங்கள், வெளிநாடு
களில் விற்பனை செய்வதற்காக இந்தியாவில் தயாரிக்கும் கார்கள், தர நிர்ணய சோதனையில் சிறப்பானதாகத் தேர்ச்சி பெறுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய அரசின் இப்போதைய சட்டதிட்டப்படி ஐரோப்பா, அமெரிக்காவில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகளின் அடிப்படை மோதல் சோதனைகூட இந்தியாவில் கார் தயாரிப்பாளர்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தனியார் மோதல் சோதனைத் திட்டத்தின் அடிப்படையில் மோட்டார் கார்களின் பாதுகாப்பு நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே, நுகர்வோர் கார்களின் தரத்தை எடை போட முடியும்.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள், நடுத்தர மக்கள் கார்களை வாங்க முடியாத அளவுக்கு விலையை அதிகரிக்க வைத்து விடும் என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களின் விற்பனையையும், லாபத்தையும் உறுதிப்படுத்துவதைவிட, பொதுமக்களின் பாதுகாப்புதான் அரசுக்கு முன்னுரிமையாக இருந்தாக வேண்டும்.
அரசு கொண்டு வர இருக்கும் "சாலை வாகனம், பாதுகாப்பு மசோதா - 2014' என்பது பழைய 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்துக்கு மாற்றாக இருக்கும். இது நடைமுறைக்கு வரும்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேசத் தரத்திலான அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்களை அவர்களது கார் தயாரிப்பில் உறுதிப்படுத்தியாக வேண்டும். இப்போதாவது விழித்துக் கொள்கிறோமே, அந்த வரைக்கும் மகிழ்ச்சி!