திரும்பிய பக்கம் எல்லாம் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான கலந்தாய்வு, தமிழகத்தில் ஒரு திருவிழாவைப் போல கொண்டாடப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில்,  தொழில்நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்புகளை பொறியியல் கல்லூரிகள் பூர்த்தி செய்கின்றனவா ?  என்பதே இன்றைய பிரதான கேள்வி . 
பெரும்பாலான கல்லூரி விளம்பரங்களில் 100  சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது . மற்றொரு பக்கம் தொழில் நிறுவனங்களின் ஆய்வின்படி , 25  முதல்  30  சதவிதம் பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே வேலைக்கான திறன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது .  இந்த இரண்டிற்கும் ஏதோ இடைவெளி இருப்பதை உணர முடிகிறது .  படித்த படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத வேலை செய்வது என்பது சரியான ‘ எம்பிளாயபிலிட்டி ஸ்டேன்டர்டு ’  ஆக கருதமுடியாது . 
கடந்த 10  ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்பில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா ?  என்றால் , ‘ இல்லை ’  என்பது தான் பதில் .  அதே எதிர்ப்பார்ப்புகள் தான் பொதுவாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றன .  உற்பத்தி துறைக்கும் ,  தகவல் தொழில்நுட்ப துறைக்குமான வேறுபாடு பார்த்தோமேயானால் ,  அடிப்படை சாராம்சத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை . 
‘பாசிட்டிவ் எனர்ஜி ’ 
எந்த ஒரு நிறுவனமும் நேர்காணலில் ‘ Attitude ’ க்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன .  எந்தளவுக்கு நிறுவனத்திற்கு  ‘ பாசிட்டிவ் ‘ ஆக இருப்பார் என்பதை சில கேள்விகள் மூலம் சோதிப்பார்கள் .  உதாரணமாக , வேலைக்கான நேர்காணலில் வெளியூர்களில் வேலை செய்யத்தயாரா ?  என்ற கேட்கப்படலாம் .  அந்த நிறுவனத்திற்கு சென்னையில் தேவை இல்லாமல் இருக்கலாம் ;  உண்மையில் ,  பெங்களூருவில் ஆட்கள் தேவைப்படலாம் .  அப்போது  ‘ நான் சென்னையில் மட்டும்தான் வேலை செய்வேன் ’  என்று கூறும்பட்சத்தில் , அவர் தனக்கான வாய்ப்பை குறைத்துக்கொள்கிறார் .  அதேநபரிடம் ,  வெளிநாடுகளில் வேலை செய்யத் தயாரா ?  என்றால் ,  உடனடியாக , ‘ தயார் ’  என்று சொல்லக்கூடும் .  இதைத்தான் ,  ஆங்கிலத்தில்  ‘ குளோபலி பிளக்சிபில் ;  லோக்கலி இம்மொபைல் ’  என்று சொல்வார்கள் . 
நிலைத்து நிற்பாரா? 
ஒருவர் எத்தனை நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வார் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.  முன்பு , பெரும்பாலானோர் ஓய்வு பெறும்வரை ஒரே நிறுவனத்தில் வேலை செய்தனர் .  அரசுத் துறைகளில் இந்தநிலை மிக அதிகம் என்றாலும் ,  தனியார் துறையிலும் அதிகமாக காணப்பட்டது .  கடந்த  10 ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வின்படி ,  சராசரியாக  5  முதல்  8  ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்பட்டது . 
அதே தற்போதைய ஆய்வின்படி,  ஒருவர்  2  முதல்  3  ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்வது பெரிய விஷயமாக இருக்கிறது .  எனவே ,  குறைந்த ஆண்டுகளே வேலை செய்வார் என்று தோன்றும் பட்சத்தில் அவரை தேர்வு செய்ய நிறுவனங்கள் யோசிக்கும் .  கிரிக்கெட்டில்  ‘20-20’ க்கும்  ‘ டெஸ்ட் மேட்ச் ’ க்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே உதாரணமாக கூறலாம் . ‘ டெஸ்ட் மேட்ச் ’  போன்று நிரந்தரமாக நின்று வேலை செய்பவர்களையே இன்றைய நிறுவனங்கள் அதிகம் எதிர்பார்க்கின்றன . 
தீர்வு காணும் திறன்
பொறியியலில் சிவில்,  மெக்கானிக்கல் ,  ஐ . டி .,  இ . சி . இ .,  இ . இ . இ .,  என எந்த பிரிவை படித்தவராக இருந்தாலும் ,  சிறந்த  ‘ Problem Solving Skills ’, ‘ Logical and Analytical Thinking ’  திறனை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன .  நேர்முகத் தேர்வில் ஒரு தர்க்கத்தை கொடுத்து ,  அதை சரியாக பிரித்து ,  முன்னுரிமை அடிப்படையில் வரிசையாக அதற்கு தீர்வு அளிக்க முடிகிறதா ?  என்பது பரிசோதிக்கப்படுகிறது .  எனவே இவற்றை மாணவர்களிடையே வளர்க்கும் வகையில் பள்ளி ,  கல்லூரிகள் பயிற்சி அளிக்க வேண்டும் ; மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும் . 
துறை சார்ந்த அறிவு
கல்லூரியில் எந்த பிரிவு படித்திருந்தாலும்,  அந்த துறையில் உங்களுக்கு ஆழ்ந்த அறிவு உள்ளதா ?  என்பதை நிறுவனங்கள் எதிர்பார்க்கும் .  புரிதல் இல்லாமல் மனப்பாடம் செய்து முதல் மதிப்பெண் பெற பள்ளிக் கல்வியில் முடியும் .  ஆனால் ,  கல்லூரியில் அதற்கான வாய்ப்புகள் குறைவு .  அப்படியே தேர்வாகினாலும் , எந்த ஒரு வேலைக்கான நேர்காணலிலும் ,  புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதில்லை . செயல்முறைத் திறன் அடிப்படையிலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும் . 
குழுவாக செயல்பட முடியுமா? 
மாணவர்களுக்கு குழுவாக செயல்பட சில கல்லூரிகள் மட்டுமே போதிய பயிற்சி அளிக்கின்றன. ‘ மாணவிகளிடம் பேசக்கூடாது ’  என்று கூறும் கல்லூரிகள் இன்றளவும் உள்ளன .  ஆனால் ,  பொதுவாக நிறுவனங்களில் இருபாலரும் இணைந்து ஒரு குழுவாக செயல்பட வேண்டியது அவசியம் . ‘ தனிமனிதாக வெற்றி பெற்றுவிட்டேன் ;  ஆனால் குழு தோற்றுவிட்டது ’  என்றாலும் ,  உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்காது .  எனவே ,  குழுவாக இணைந்து செயல்படும் திறன் உங்களிடம் உள்ளதா ? அனைவரிடமும் சகஜமாக பழக முடிகிறதா ?  என்பதை நிறுவனங்கள் தெளிவாக பரிசோதிக்கும் . 
தொடர் கற்றல்
ஒரு மருத்துவர் 20  ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தை இன்றும் பயன்படுத்தி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தால் அவர் ஒதுக்கப்படுவார் .  எந்த துறையாக இருந்தாலும் துறை சார்ந்த தொடர் கற்றல் ,  நவீன அறிவு ஆகியவை அவசியம் .  இவையும் நேர்முகத் தேர்வில் பரிசோதிக்கப்படும் . 
தகவல் தொடர்புத் திறன்
இன்றும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் ‘ கம்யுனிகேஷன் ஸ்கில்ஸ் ’.  அனைத்து திறன்களும் உங்களுக்கு இருந்தாலும் ,  அவற்றை மற்றவருக்கு அழகாக வெளிப்படுத்த பேச்சுத் திறமை அவசியம் .  தகவல் தொடர்பில் ஆங்கிலத்திற்கு முக்கிய பங்கு உண்டு . 
-சுஜித் குமார் ,  மனிதவள மேம்பாட்டு ஆர்வலர் 
 
No comments:
Post a Comment