அனைவருக்குமே பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும், பெரும் சாதனைகளை புரிய
 வேண்டும் என்பதே லட்சிய கனவாக இருக்கிறது. ஆனால் பெரும் பொறுப்புகளுக்கு 
வரும் பலர் அந்த பொறுப்புகளை எப்படி கையாளவேண்டும் என்று அறியாதவர்களாக 
இருக்கிறார்கள்.
சிறந்த நேர்மையான 
தலைவனால், அந்த தலைவனுக்கு மட்டுமல்ல அவனைச் சார்ந்துள்ள மக்களுக்கும் 
நன்மைகள் கிடைக்கும். அப்படிப்பட்ட நிலையை திறமையின்றி அடைய நினைப்பது 
அவனைச் சார்ந்துள்ள மக்கள் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
தலைமைப் பண்பை சிறு வயதிலிருந்தே ஊக்கம் கொடுத்து வளர்த்து 
வந்தால் தான் பிற்காலத்தில் பெரும் பதவிகள், பொறுப்புகளை அனைவரும் 
பயன்பெறும் வகையில் பயன்படுத்த முடியும். சிறந்த தலைவனாக உருவாக சில 
மாற்றங்கள் நமக்குள்ளாக ஏற்படுத்த வேண்டியது உள்ளது. அந்த மாற்றங்கள் 
தானாகவே நம்மை தலைவனாக்கும்.
திட்டமிடுங்கள்
எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு முன்னால், அந்த வேலையை 
எப்படி, எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என தெளிவான திட்ட அறிக்கையை தயார் 
செய்யுங்கள். கடைசி நேரத்தில் அவசரத்துடன் செயல்படாதீர்கள். படிக்க 
வேண்டும் என்றால் எந்த பாடத்தை முதலில் படிக்க வேண்டும், எதனை கடைசி படிக்க
 வேண்டும் என்றும் எப்பொழுது விளையாட வேண்டும் என திட்டமிடுங்கள்.
செயல்படுங்கள்
திட்டமிடுவதற்கான அறிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு 
செயல்படாமல் இருந்தால் அதனால் பயன் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. படிக்க 
வேண்டும், படிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் 
படிப்பதில்லை. ஆனால் அந்த நேரம் கடந்தவுடன் படித்து முடித்த திருப்தியை 
மட்டும் அடைந்து விடுகின்றனர். இதனால் நன்மை விளையாது. எந்த ஒரு செயலையும் 
அடுத்தவர் செய்ய காத்திராமல், நீங்களாகவே முதல் ஆளாக முன் நின்று செயலாற்ற 
தொடங்குங்கள்.
நணபர்களுக்கு மரியாதை அளியுங்கள்
நட்பு என்று வந்தவுடன் மரியாதை என்பது மறந்துபோகும். 
மரியாதையை மறந்தால் தான் நட்பு இனிமையாகும் என்பது நண்பர்களின் எண்ணமாக 
இருந்தாலும் நட்பின் பெயரால், தான் செய்யக்கூடிய வேலைகளுக்கு மாற்றாக 
நண்பர்களை கட்டாயப்படுத்தி ஈடுபட வைக்காதீர்கள். ஒரு முறை, இரு முறை 
என்றால் நட்புக்காக நண்பர்கள் உதவுவார்கள். உதவி தவறாகப் 
பயன்படுத்தப்படுவதை அவர்கள் உணரும்பொழுது நட்பில் விரிசல் வருவதற்கான 
வாய்ப்புகள் உருவாகலாம்.
தொடர்ந்து தொடர்புகொள்ளுங்கள்
மழலையர், நடுநிலை, மேல்நிலை, உயர்நிலை, இளநிலை, முதுநிலை என
 ஒவ்வொரு மாணவரும் புதிய புதிய நண்பர்களை குறிப்பிட்ட நிலைகளில் 
பெறுகின்றனர். குறிப்பிட்ட காலம் நட்பாக இருக்கும் பலரும், அடுத்த நட்பு 
வட்டம் வந்தவுடன் பழைய நட்பு வட்டத்தை மறந்து விடுகின்றனர். அனைத்து நட்பு 
வட்டத்திலும் உள்ள நண்பர்களையும் அவ்வவ்பொழுது தொடர்பு கொள்ளுங்கள். இதன் 
மூலம் பல்வேறு வகையான தகவல்களை நீங்கள் பெறலாம்.
தொடர்பில் இருங்கள்
உங்களால் உங்கள் நட்பு வட்டத்தில் சரியாக தொடர்பில் இருக்க 
முடியாத சூழ்நிலைகள் அமையலாம். அந்த நேரத்தில் நிச்சயம் பிற நண்பர்கள், 
அறிமுகமானவர்கள் உங்களை தொடர்புகொள்ள முயற்சிக்கலாம். அப்பொழுது அதனை தட்டி
 கழிக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் அருகில் இருக்கும் நபர்களிடம் 
சொல்லக்கூடிய ஒரு வணக்கம் கூட உங்களை தொடர்பில் வைத்திருக்கும் என்பதை 
மறவாதீர்கள்.
உங்கள் எல்லைகளை தெரிந்துகொள்ளுங்கள்
எந்த ஒரு செயலையும் செய்யும்பொழுது அதற்கான தேவைகள், 
சூழ்நிலைகள், விதிமுறைகள், வாய்ப்புகள் என அனைத்தையும் ஆராய்ந்து 
செயல்படுங்கள். சிறியவன் இவனிடம் இந்த பொறுப்பை கொடுக்கலாமா என்று வீட்டில்
 உள்ளவர்களோ, உறவினர்களோ அல்லது சுற்றத்தாரோ சிந்திக்கும்படியாக இல்லாமல், 
பொறுப்பானவன் என்ற பெயரை எடுக்க இது உதவும்.
நம்புங்கள்
உங்களோடு இருக்கும் நண்பர்களின் மேல் நம்பிக்கை வையுங்கள். 
பள்ளியிலோ, கல்லூரியிலோ நடைபெறும் ஒரு நிகழ்ச்சியை உங்களை பொறுப்பேற்று 
நடத்தச் சொல்லும்பொழுது, உடன் பணியாற்றும் சுமாராக செயல்படக்கூடிய ஒரு 
நண்பர் சிறப்பான செயல் திட்டத்தோடு வருகிறார் என்றால், "இவரால் வெற்றிகரமாக
 நடத்த முடியாதே" என நம்பிக்கை இழக்காதீர்கள். அவரின் கோரிக்கையை 
புறந்தள்ளாமல் சிறப்பாக செயல்படக்கூடிய மேலும் சிலரை உடன் இணைத்து 
வெற்றிகரமாக செயல்பட வையுங்கள். அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை 
உணர்த்தி அவரை சிறப்பாக செயல்பட வையுங்கள்.
பாராட்டுங்கள்
ஒவ்வொருவரும் தங்கள் செயல்பாடுகளுக்கு அங்கீகாரத்தை 
எதிர்பார்ப்பார்கள். அங்கீகாரம் என்பது பெரிய பரிசாக இருக்க வேண்டிய 
அவசியம் இல்லை. அவர்களின் தோள் தட்டி பாராட்டும் ஒரு சில வார்த்தைகள் 
போதும்; அதுவே அவர்களுக்கு அங்கீகாரமாக இருக்கும். பாராட்டுவதற்கு ஒரு 
போதும் தயங்காதீர்கள். வெற்றிக்காக எடுத்துக்கொண்ட முயற்சிக்காக தோல்வி 
அடைந்தவர்களையும் பாராட்டுங்கள். மற்றவர்கள் வளர்ச்சியை பாராட்டும்பொழுது 
அவர்கள் மனதில் நீங்கள் வளர்கிறீர்கள்.
சிக்கல்களை எதிர்கொள்ளுங்கள்
மாணவப்பருவத்தில் சண்டைகளும், விளையாட்டுத்தனங்களும் 
அதிகமாகவே இருக்கும். இவை சில நேரங்களில் பிரச்சினைகளை உண்டாக்கிவிடும். 
அந்த நேரத்தில் எல்லோரும் தப்பிப்பதற்கான முழு முயற்சிகளிலே இருப்பார்கள். 
நீங்கள் அப்படி இருக்காதீர்கள். அந்த நேரத்தில் தவறு உங்கள் மேல் இருந்தால்
 அதற்கு மன்னிப்பு கேளுங்கள், இனி இதுபோன்று நடக்காது என நீங்களாகவே முன் 
நின்று உறுதி மொழி அளியுங்கள். தவறு உங்கள் மேல் இல்லாவிட்டாலும், 
சூழ்நிலைகளை எடுத்துக்கூறி இதுபோன்று நடக்காமல் இருக்க நண்பர்களிடம் 
வலியுறுத்துவதாக கூறுங்கள். உங்களின் செயல்பாடு நிச்சயம் தண்டனையின் அல்லது
 பாதிப்பின் வீரியத்தை குறைக்கும்.
சமமாக நடத்துங்கள்
உங்கள் நண்பர்கள் வட்டத்தில் அனைத்துவிதமான நண்பர்களும் 
இருப்பார்கள். அப்படி இல்லாவிட்டாலும் அனைத்துவிதமான நண்பர்களையும் 
சேர்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரம் நண்பர்களில் பாகுபாடு பார்ப்பதை 
முற்றிலும் கைவிட வேண்டும். ஏனெனில் நண்பர்களில் திறமையானவர்கள், 
திறமையில்லாதவர்கள், பொருளாதாரம் அதிகமாக உள்ளவர்கள், குறைவாக உள்ளவர்கள் 
என பல்வேறு வகையான நண்பர்கள் இருப்பார்கள். ஒருவருக்கு முன்னுரிமை, 
மற்றொருவருக்கு மரியாதைக் குறைவு என பிரித்து பார்ப்பது பகைமையையும், மன 
வருத்தத்தையும் உருவாக்கலாம். எனவே அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை மனதில் 
நிறுத்தி செயல்படுங்கள்.
நேர்மறையாக எண்ணுங்கள்
எந்த நல்ல செயலையும் செயல்படுத்த முடியாது என்று 
தன்னம்பிக்கை இல்லாமலோ அல்லது நாம் அதற்கு தகுதியானவன்தானா என்று தாழ்வு 
மனப்பான்மையுடனோ எண்ண வேண்டாம். எதனையும் வெற்றிகரமாக தன்னால் செய்ய 
முடியும் என்று நேர்மறையாக எண்ணுங்கள். மேலோட்டமாக இதனை எண்ணாமல் 
ஒவ்வொன்றையும் ஆராய்ந்து; இதனை இவ்வாறு செயல்படுத்த வேண்டும் என 
திட்டத்துடன், எந்த செயலில் இறங்கினாலும் வெற்றி நிச்சயம். ஆராயாமல் இது 
நமக்கு சரிவராது என சிந்தித்தால் அது வளர்ச்சிக்கான தடையாக அமையும்.
நிதானமாக இருங்கள்
உற்சாகம் எப்பொழுதும் அவசியம் என்றாலும், சிறப்பான 
முடிவுகளை தராது என தெளிவாக ஆராய்ந்து அறிந்த ஒரு செயலை செய்யத் துணிந்து 
பயன் தராமல் போவது, உங்கள் மேல் அவநம்பிக்கையை பிறருக்கு ஏற்படுத்தலாம். 
உங்கள் வெற்றிகளும், திறன்களும் எப்பொழுதும் மனதைக் கடந்து மூளைக்கு 
செல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை நோக்கி மற்றவர்களிடமிருந்து 
வரும் பாராட்டுக்களும், நம்பிக்கைகளும் அதிகமாகும்பொழுது; உங்களுக்குள்ளாக 
நிதானம் அதிகமாக வேண்டும்.
எடுத்துக்காட்டாக விளங்குங்கள்
உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும், உங்களால் 
செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு செயல்களும் உங்கள் குணத்தை, நல்ல எண்ணத்தை 
வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். வன்முறைகளுக்கிடையே அமைதியை 
ஏற்படுத்துபவராகவும், துன்பங்களுக்கிடையே உதவுபவராகவும், கவலைகளுக்கிடையே 
மகிழ்ச்சியை ஏற்படுத்துபவராகவும் இருங்கள்.
ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு.
 அந்த வாய்ப்பினை சோம்பல் தவிர்த்து, அன்புடன் அன்றாட பணிகளை சிறப்பாக 
முடித்தலும், பொறுப்புகளை தேடிப் பெற்று வெற்றி காண்பதும், நாளைய 
தலைமுறைக்கு உங்களை நிச்சயம் தலைவனாக்கும். தலைவன் என்ற பொறுப்பு 
கிடைக்காவிட்டாலும், தலைமைப் பண்போடு பணிகளை செய்வதே சமுதாயத்திற்கு 
செய்யும் அரும்பணியாகும்.
Source Dinamalar n
 
No comments:
Post a Comment