இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாக, பரவலாக கூறப்பட்டாலும், இன்ஜி., படிப்பில் சேர,
2017ஐ விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது, இன்ஜி., கல்லுாரிகளை உற்சாகம் அடையச்செய்துள்ளது.
இது குறித்து, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்.,
- பி.டி.எஸ்., மட்டுமின்றி,'ஆயுஷ்' எனப்படும், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கும்,
'நீட்' தேர்வுகட்டாயம் ஆகியுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில்,
'சீட்' பெற முடியுமா என, மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால், நுழைவு தேர்வு இல்லாத இன்ஜினியரிங் படிப்பில் எளிதாக சேர்ந்து விடலாம் என, பெரும்பாலான மாணவர்கள் நினைத்துள்ளனர். எனவே, 2017ஐ விட,
19 ஆயிரம் பேர் வரை கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர்.
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டை விட, 19 ஆயிரம் கூடுதலாகும். 'நீட்' தேர்வு பயத்தால், மருத்துவ படிப்பை காட்டிலும், இன்ஜி., படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளதையே, இது காட்டுகிறது. விண்ணப்பித்தோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 8 முதல், 14ம் தேதி வரை நடக்கிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, தமிழக அரசின் ஒற்றை சாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இதில், மாணவர்களின் மதிப்பெண், தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகள் ஒதுக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, இம்மாத இறுதியில், கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. 2017 வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடந்த நிலையில், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங்காக மாற்றப்பட்டுள்ளது.