மனித வாழ்வில் எவ்வளவோ சிக்கல்கள் உள்ளன. அவை அனைத்திற்கும் அனைவராலும் தீர்வு கண்டுவிட முடியாது. ஆனால் அதேசமயம் நமது வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும். வாழ்வின் சிக்கல்களுக்கு வயதான அனுபவம் உடையவர்களிடமும் இதற்கென்றே ஆலோசனை கூறுவதற்காக உள்ள மையங்களிலும் சென்று ஆலோசனை பெறலாம்.
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்களில் இருந்த பெரியோர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டினர். அவர்களின் மதிப்புமிக்க வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டனர். ஆனால் இன்று தனிக்குடும்பங்கள் அதிகம் உருவாகியுள்ள நிலையில், வழிகாட்டவோ, ஆலோசனை சொல்லவோ யாரும் இல்லை.
ஒவ்வோர் ஆண்டும் +2 தேர்வு முடிவுகள், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அத்தேர்வுகளில் தோல்வி அடைவோர் தங்களின் வாழ்வை அத்தோல்வியால் முடித்துக் கொள்கின்றனர். இது முறையான செயலல்ல. ஒரு சிக்கலுக்குத் தீர்வு தன்னை மாய்த்துக் கொள்வதுதான் என்றால் யாருமே, இந்த உலகில் வாழ முடியாது. அதனால் எந்த ஒரு சிக்கலுக்கு ஆட்பட்டாலும் தக்கவர்களிடம் ஆலோசனை பெற்று அதிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கலாம்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நண்பனால், ஆசிரியரால், நிர்வாகத்தால், சக வகுப்புத் தோழனால் ஏற்படும் சிக்கல்கள் பல உள்ளன. இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வு நல்ல நண்பனைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதுதான். இன்றைய நவீன ஊடக உலகில் செல்பேசி, இணையம், கணினி, கட்செவி அஞ்சல் என்று பல உள்ளன. அவற்றின் மூலம் வளரவும் முடியும்; தாழ்ந்து போகவும் முடியும். அதனால் அவற்றைத் தம் வளர்ச்சிக்கே பயன்படுத்த வேண்டும்.
தமது படிப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் கூட ஏதோ ஒரு சிக்கலால் மனம் பாதிக்கப்பட்டு தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். முறையான கல்வி, தகுந்த ஆலோசனை, அன்பு, நல்ல நண்பன் கிடைக்காமை, பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் இல்லாமை, பெற்றோரின் அறியாமை, ஆசிரியர்களுக்குப் பயப்படுதல், பெற்றோருடன் பல வருடங்களாகப் பேசிக் கொள்ளாமல் இருப்பதால் மன இறுக்கம் என்று பல்வேறு சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுவதும் அவற்றிற்குத் தகுந்தத் தீர்வுகள் கிடைக்காததும்தான் காரணமாகும். எனவே எந்தச் சிக்கலாக இருந்தாலும் கூச்சப்படாமல், தன்னைத் தாமே மிக உயர்வாக நினைத்துக் கொண்டு தனிமைப்படாமல், தகுந்தவர்களிடம் ஆலோசனை பெற்று, அதிலிருந்து மீண்டு வருவதில்தான் வாழ்வின் வெற்றியே அடங்கியுள்ளது.
படிக்கும் காலங்களில் மனத்தைக் கட்டுப்படுத்தி, படிப்பில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வாழ்ந்து வந்தால், பிற்கால வாழ்க்கை மிகவும் நன்றாக அமையும். அனைத்து வளங்களும் நம்மைத் தேடிவரும். அதனால் இளமைப்பருவத்தில் மனத்தை அடக்கி வாழ்வது, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய தன்மைகளைப் பின்பற்றுவது மிக மிக முக்கியம்.