Blogger Widgets

Total Page visits

Tuesday, March 31, 2015

பொறியியலின் கறுப்புப் பக்கம்!

டந்த ஐந்து வருடங்களாகவே பொறியியல் படிப்பானது, ஆசை காட்டி மோசம் செய்யும் எலிப்பொறி போன்றே இருந்து வருகிறது. எனினும், வருடா வருடம் லட்சகணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துகொண்டுத்தான் இருகிறார்கள். பொறியியல் படிப்பின் கறுப்புப் பக்கமானது பெரும்பாலான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவதே இல்லை. இண்டர்நெட்டில் கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 5,682 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதில் வருடத்துக்கு சுமார் 20 லட்சம் பொறியியலாளர்கள் பட்டம் பெறுகின்றனர். அந்த 20 லட்சம் பொறியியலாளர்களுக்கும் நம் நாட்டில் வேலை இருக்கிறதா என்றால், கண்டிப்பாக இல்லை!
2010 ஆம் வருடம் பல கனவுகளுடன் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த பல லட்சம் மாணவர்களில் நானும் ஒருவன். ஆனால், அடுத்த நான்கு வருடங்கள் என் கனவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்தன. நான்காம் வருட முடிவில் கேம்பஸ் இண்டர்வியூ எனப்படும் நிகழ்வில் ஒரே ஒரு பி.பி.ஓ. மட்டுமே எங்கள் கல்லூரிக்கு வந்தது. அந்த வேலைக்கு நான் தேர்வாகியிருந்தபோதும், பொறியியல் படித்துவிட்டு அந்த பி.பி.ஓ. வேலைக்குச் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். நான்காம் ஆண்டு தேர்வு முடிந்த பின் நானும் என் நண்பர்களும் வேலை தேடும் வேலையில் மும்முரமாக இறங்கினோம். பல தொழிற்சாலைகளை அணுகினோம். ஆனால், எந்தத் தொழிற்சாலையில் இருந்தும் எங்களுக்கு சாதகமான பதில் வரவில்லை.


ஒரு நாள், திருவண்ணாமலையில் ஒரு பிரபல கல்லூரி ஒன்று நடத்தும் வேலைவாய்ப்பு முகாமின் விளம்பரம் கண்ணில் பட்டது. உடனே திருவண்ணமலைக்குக் கிளம்பினோம். வேலைவாய்ப்பு முகாம் நடப்பதாகக் கூறிய அந்தக் கல்லூரியில் பயங்கர கூட்டம். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு பட்டம் பெற்றிருந்தவர்கள்கூட வேலை கிடைக்காததால் அந்த முகாமுக்கு வந்திருந்தனர். ஆனால், எங்கள் அனைவருக்குமே அந்த முகாம் ஏமாற்றமாகவே இருந்தது. நாட்கள் ஓடின... ஆனால், எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை.



பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் வேலை தேடினோம். சில நிறுவனங்களில் வேலையும் கிடைத்தன. Material handling engineer என்று சொல்வார்கள். ஆனால் வண்டி இழுக்கச் சொல்வார்கள். quality engineer என்று சொல்வார்கள். ஆனால், தயாராகும் பொருட்களை சுத்தம் செய்ய சொல்வார்கள்.. Production engineer என்று சொல்வார்கள், ஆனால் போல்ட், நட்டுகளை திருகச் சொல்லுவார்கள். பொறியியல் படித்துவிட்டு மூட்டைத் தூக்கவும் வண்டி இழுக்கவும் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால், என் நண்பர்கள் கிடைத்த வேலை போதும் என்று அந்த சிறு நிறுவனங்களில் சேர்ந்தனர். நான் இப்போது தனிமை ஆனேன்.



காலையில் எழுந்து நான்கு resume-களை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக சுற்றிய நாட்களும் உண்டு. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியாக உக்கார்ந்து என் நிலைமையை எண்ணி கண் கலங்கிய நாட்களும் உண்டு. 'வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பாத்துட்டியா?' என்று யாரேனும் யதேச்சையாக்கக் கேட்டால்கூட, எனக்கு வேலை இல்லை என்பதற்காகவே அப்படி கேட்கிறார்கள் என்பதுபோல் தோன்றும். எத்தனையோ நாட்கள் வீட்டில் பெற்றோர் சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு உள்ளர்த்தம் இருக்குமோ என்று யோசித்து, அந்த சாதாரண வார்தைகளுக்கு நானே அர்த்தம் பொருத்தி அழுததுண்டு. பல போலி மனிதவள மேலாளர்களைச் சந்தித்து மன அளவில் அடி வாங்கியதும் உண்டு. பல போலி வேலை வாங்கிக் கொடுக்கும் நிறுவனங்களையும் சந்தித்ததுண்டு.



ஐந்து வருடத்துக்கு முன் பட்டம் பெற்று நல்ல வேலைகளில் இருப்பவர்களுக்கும், ஐ.ஐ.டி போன்ற சிறந்த கல்லூரிகளில் பயின்று நல்ல வேலைகளில் இருப்பவர்களுக்கும் எங்களின் கஷ்டம் தெரிவதும் இல்லை... புரிவதும் இல்லை. நாங்கள் ஒழுங்காகப் படிக்காததால்தான் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று அவர்கள் நினைகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளில் போதுமான வசதிகள் இல்லை. மாணவர்கள் தங்களது முழு உழைப்பை படிப்பில் செலுத்தினாலும் போதுமான வசதிகள் இல்லாததால் ஐ.ஐ.டி. போன்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுடன் போட்டியிட முடிவதில்லை. நம் நாட்டில் மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர், தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணம், கடன் வாங்கிய பணம் என எல்லாவற்றையும் செலவு செய்கிறார்கள். இருப்பினும், பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வியும், கல்விக்குப் பின் வேலையும் கிடைப்பதில்லை.



பொறியியல் படிப்பின் தரத்தை உயர்த்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொறியியல் படிக்கச் சொல்வதற்கு முன், பொறியியலின் இந்த கறுப்புப் பக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.



எனக்கு இப்போது ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது, ஆனால், அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது அல்லவா?

- சூரியகுமார், காரைக்கால்
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Monday, March 30, 2015

பணம் கொடுத்தால் வேலை... வலை வீசும் மோசடிக் கும்பல்!

வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி விதம்விதமாக ஏமாற்றும் நிகழ்ச்சிகள் தினமும் நடக்கின்றன. இதுமாதிரியான ஒரு மோசடிக் கும்பலிடம் சிக்கி, தப்பித்து வந்திருக்கிறார் சூரியகுமார். இந்த மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவத்தை நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
வேலைவாய்ப்பு விளம்பரங்கள்!
“படித்து முடித்துவிட்டு, வேலை கிடைக்காத காரணத்தினால் நம்பிக்கை இழந்திருந்த எனக்கு, கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்புக் கான அந்த விளம்பரம் என் கண்ணில்பட்டது.  நம்பகத்தன்மையான வேலைவாய்ப்பு வலைதளத்தில் விளம்பரம் வந்திருந்ததால், அதில் குறிப்பிட்டிருந்த நபரைத் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு பிரபல தொழிற்சாலையில் மனிதவள மேலாளர் என்று தன்னை சொல்லிக் கொண்டார். எனக்கு வேலை கிடைக்க உதவுவதாகவும், வேலை கிடைத்தப்பின் நான் அவருக்கு 2 லட்சம் ருபாய்த் தரும்படியும் கேட்டார். கடந்த ஆறு மாதங்களாக வேலை தேடி மிகவும் அவதிப் பட்டதால், பணம் கொடுத்து வேலை வாங்குவதில் விருப்பம் இல்லாதபோதும் வேறு வழி இல்லாததால் ஒப்புக்கொண்டேன்.
இரண்டு லட்சம் பணம்!
அவர் சொன்ன பெயரில் நிஜமாகவே ஒரு பெரிய நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் போலவே, ஒரு மின்னஞ்சலில் இருந்து என்னைத் தொடர்புகொண்டனர். தொலைபேசி மூலம் இன்டர்வியூ நடத்தப்பட்டது. அந்த இன்டர்வியூவிலேயே துறை சார்ந்த கேள்விகளை கேட்டு  என்னைத் திக்குமுக்காட வைத்தார்கள்.  
சில நாள் கழித்து, நான் அந்த இன்டர்வியூவில் தேர்ச்சியும் பெற்றதாகச் சொன்னார்கள். ஆனால், நேரில் பார்க்காமல் வேலைக்கான அப்பாயின் மென்ட் ஆர்டரை தரமுடியாது என்பதால் என்னை டெல்லிக்கு அழைத்தனர். டெல்லியில் அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கியவுடன் பேசியபடி பணத்தைத் தரவேண்டும் என்று கேட்டனர்.
கடைசி நேரத்தில்..!
டெல்லியில் அந்த நிறுவனத்தின் வாசலில் ஒரு பெண் என்னைச் சந்தித்தார். நிறுவனத்துக்குள் என்னை வரச் சொல்லாமல், வெளியில் சந்தித்ததால் எனக்குச் சந்தேகம் வந்தது. அவரைச் சந்தித்த சிறிது நேரத்தில் அவர்கள் வழங்குவதாகச் சொல்லியிருந்த அப்பாயின்மென்ட் ஆர்டர் என் மின்னஞ்சலுக்கு வந்தது. பேசியபடி பணத்தைத் தர டெல்லியிலுள்ள ஒரு இடத்துக்கு  வரும்படி அழைத்தனர். என் சந்தேகம் வலுவடைந்ததால், முதல் வேலையாக  செல்போனை அணைத்து விட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டேன்.
சிக்கியவர்கள் பலர்!
ஒரு மாதத்துக்குப் பிறகு ஃபேஸ்புக் மூலம் கிடைத்த தகவலின்படி, அந்த மோசடிக் கும்பல் 12 பட்டதாரிகளை ஏமாற்றியுள்ளதாகச் செய்தி கிடைத்தது. டெல்லியில் என்னைச் சந்தித்த பெண்ணின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, அந்த மோசடிக் கும்பலைப் பற்றி எழுதியிருந்தேன். அதைப் பார்த்த ஒரு நண்பர் சமீபத்தில் என்னைத் தொடர்புகொண்டார். அவரும், அவரது நண்பர்கள் ஐந்து பேரும் அதே மோசடிக் கும்பலிடம் வேறு ஒரு நிறுவனத்தின் பெயரில் ரூ.12.5 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். அதே மோசடிக் கும்பல் தொடர்ந்து இதேபோன்ற நூதன மோசடி வேலைகளில் ஈடுபட்டு வேலை தேடும் பட்டதாரி களின் வாழ்கையில் விளையாடி வருகின்றனர். வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள், இதுமாதிரியான மோசடிக் கும்பலிடம் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும். இந்த மாதிரியான மோசடிக் கும்பலிடம் இருந்து பட்டதாரிகளைக் காக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிற கோரிக்கையுடன் முடித்தார் சூரியகுமார்.
இளைஞர்கள் கவனிக்க!
இதுபோன்ற நூதனமான வேலை மோசடியில் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று சென்னையிலுள்ள மனிதவள மறுமலர்ச்சி மையத்தின் இயக்குநர் மற்றும் மனிதவள ஆலோசகர் கே.ஜாபர் அலியிடம் பேசினோம்.
“ஒரு இளைஞன் பணம் கொடுத்து வேலை வாங்க முடிவெடுத்துவிட்டால், அவன் ஏமாறத் தயாராகிவிட்டான் என்று அர்த்தம். தனது திறமையை, அறிவைக் கொண்டுதான் வேலையைத் தனதாக்க வேண்டுமே தவிர, எந்தவொரு சூழ்நிலையிலும் இதுபோன்ற காரியங்களில் இளைஞர்கள் இறங்கவே கூடாது.
இன்றைய இளைஞர்கள்  பலவிதமான நூதன வேலை மோசடிகளைக் கவனிக்க வேண்டும்.
ஏமாற்றும் விதம்!
1. இல்லாத நிறுவனம், அங்கு வேலை செய்யாதவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.
2. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள், இல்லாத வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.
3. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள் இருக்கும் வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி. ஆனால், இவர்கள் பலே கில்லாடிகளாக இருப்பார்கள். அவர்கள் சொன்னபடி வேலையையும் வாங்கித் தருவார்கள். ஆனால், அந்த வேலையானது ஓரிரு மாதங்கள்கூட இருக்காது அல்லது அங்கு ஓரிரு மாதங்கள்கூட ஒருவரால் தாக்கு பிடிக்க முடியாது.
4. பணம் வாங்கிப் பயிற்சி தந்துவிட்டு, அதன்பிறகு வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.
5. புதிய நிறுவனங்களை ஆரம்பிப்பவர் கள் வேலை கொடுப்பதாகத் தரும் வாக்குறுதி. இவர்கள், “நாங்கள் புதிதாக நிறுவனம் ஆரம்பித்திருக்கிறோம். எங்களால் குறிப்பிட்ட தொகையை மட்டுமே முதலீடு செய்ய முடிந்தது. மீதித் தொகையை இந்த நிறுவனத்தில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளலாம். நிச்சயமாக வேலை நிரந்தரமாகும்” என்பார்கள். இவர்களின் ஒரேநோக்கம் பணமாக மட்டுமே இருக்கும்.
முதலில், எந்தவொரு நிறுவனமும் ஆட்களை நேரில் பார்க்காமல் தொலைபேசி இன்டர்வியூ எடுத்து பணியாளர்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள். அதுபோல, வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்கிறவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் மையம் அமைத்து அங்குதான் தேர்வு செய்வார் களே தவிர, பொது இடங்களுக்கு மாணவர்களை வரவைத்து இன்டர்வியூ நடத்த மாட்டார்கள். இதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் மற்றும் எம்பிஏ முடிக்கும் மாணவர்களில் 15% பேர் மட்டுமே உடனடியாக வேலை செய்வதற்குத் தகுதியானவர் களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் நடத்தும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். மீதி இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்குத்தான் ஏமாற்று நிறுவனங்கள் வலைவிரிக்கின்றன.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை!
வேலைக்காகப் பணத்தைக் கொடுத்து ஏமாற்றத்தைச் சந்திப்பவர்களில் பெரும்பாலும் சமூகத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தால், ஏதேனும் ஒருவேலை கிடைத்தால் போதும் என்று நினைத்து, சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களாகவே  இருப்பார்கள். இன்றைய இளைஞர்கள் செய்யும் பெரிய தவறு, பணம் கொடுத்தாவது பெரிய நிறுவனத்தில் அதிகச் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்று முனைவதுதான். இன்றைய நிலையில் தரமான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இவர்களுக்குப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் தன்னைத் தேடிவரும் திறமையாளனை தவறவிடுவதே கிடையாது. அதே சமயம், தானாகத் தேடிப் போய்த் திறமையாளர் களை அழைத்து வருவதும் கிடையாது. அதனால், அதிக சம்பளம், பிரபலமான நிறுவனம் என்று மட்டும் வேலை தேடாமல் ஆரம்பத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் சேர்ந்து அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு சில ஆண்டு களுக்குப் பிறகு அதிக சம்பளத்துக்காக வேலையை மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம்.
இதை விடுத்து பணத்தைக் கொடுத்து வேலைக்குச் சேர முயற்சித்தால், வேலையில்லா பட்டதாரியாகவே நிற்கவேண்டும். தவிர, பணத்தைத் தந்து வேலை வாங்கும் பணியாளரிடம் சுயமதிப்பு என்பதும், தன்னம்பிக்கை என்பதும் இல்லாமல் போய்விடும். இந்த நிலையானது தொடரும்பட்சத்தில் வேலையிலாகட்டும், பொது வாழ்க்கையில் ஆகட்டும், வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளவே முடியாது” என்றார்.
மோசடி நிறுவனங்கள் தீவிரமாக வலைவிரித்து அலையும் இந்தக் காலத்தில் எச்சரிக்கை அவசியம் இளைஞர்களே!
விசாரித்த பிறகு களமிறங்குங்கள்!
வேலை வாங்கித் தருவதாக சொல்லும் மோசடி நிறுவனங்கள் பற்றி சைபர் கிரைம் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘இன்றைய நிலையில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து பெரும்பாலான ஏமாற்று நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. 
இதைக் களைவதற்கான நடவடிக்கைகளை சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து எடுத்துவருகிறது. இதுமாதிரியான மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல், இன்றைய இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்பதற்காக பணம் கொடுத்து வேலைக்குச் செல்லலாம் என்கிற மனநிலைக்கு வரவேண்டாம்.

இன்றைய நிலையில் பேருந்துகள், ரயில் வண்டிகள் எனப் பல இடங்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்க்கிறோம். இதைப் பார்த்ததும் நாம் நம்பிவிடுகிறோமா என்ன? அதுபோல, நம்பகத்தன்மையான வலைதளங்கள், நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்த்தாலும் அதுகுறித்து முழுமையாக விசாரித்து, அதில் உண்மைத்தன்மை இருக்கும்போது அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. வேலைகான வாய்ப்புகளை அந்தந்த நிறுவனங்களின் வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்களா என்பதையும் பார்ப்பது அவசியமாகும். மேலும், வேலை மோசடி குறித்த புகார்களுக்கு சென்னை எழும்பூரிலுள்ள மத்திய க்ரைம் குற்றப்பிரிவு கிளையை அணுகலாம்” என்றனர்.
செ.கார்த்திகேயன்
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Monday, March 16, 2015

நேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்!

ணேஷும் ராஜனும் கல்லூரி காலத்தில் நெருங்கிய நண்பர்கள். ஆனால், படித்து முடித்தபிறகு இருவரும் இருவேறு பாதையில் சென்றுவிட்டார்கள். தினப்படி வேலைகளில் இருவருமே பிஸியாக இருக்க, பத்து ஆண்டு காலம் ஓடிவிட்டது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் மீண்டும் இருவரும் இணைய, சென்னையில் ஒரு ஹோட்டலில் சந்திக்க முடிவு செய்தார்கள். கணேஷ் தன்னுடைய பைக்கில் போய் ஹோட்டலில் இறங்கினான். ராஜன் தன்னுடைய புதிய காரில் ஹோட்டலுக்கு வந்தான். கார் மட்டுமல்ல, அவன் வாங்கியிருந்த வீடு, அவன் அணிந்திருந்த ஆடை, சேர்த்திருந்த சொத்து என எல்லாமே கணேஷைவிட மிக மிக அதிக மதிப்புடையவையாக இருந்தது. இத்தனைக்கும் படிப்பு விஷயத்தில் கணேஷைவிட ராஜன் பெரிய புத்திசாலியல்ல. பிறகு எப்படி ராஜன் இந்த அளவுக்கு முன்னேறினான்?
அடுத்தடுத்த சந்திப்பில் ராஜனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டான் கணேஷ். ‘‘பெரிய அற்புதம் எதையும் நான் செய்துவிடவில்லை. நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டது தான். நம் எல்லோருக்கும் ஒருநாளில்  கிடைக்கும் 24 மணி நேரமானது பொன் போன்றது. அதைக் கண்ணும் கருத்துமாக நிர்வகித்து, ஒரு மணித் துளியைக்கூட வீணாக்காமல், நமது வேலைகளைத் திறனோடு முடித்தால், நம் வாழ்க்கையில் நாம் வெற்றியடைவது நிச்சயம். வெற்றியாளர்களால் செய்ய முடிந்த விஷயத்தை; இன்னொருவரால் செய்ய முடிவதில்லை என்றால், அதற்கு மிக முக்கிய மூலகாரணம் வெற்றியாளர் களுக்கு நேரத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகள் தெரிந்திருப்பதே’’ என்று சொன்னான்.
வீடு திரும்பும் வழியில் ராஜன் சொன்னதை நினைத்துப் பார்த்தான் கணேஷ். கல்லூரிப் படிப்பு  முடிந்ததும், நல்ல வேலையில் இருந்தாலும், அந்த வேலையை நன்றாகச் செய்து, உயர்பதவி களை அடைய வேண்டும் என்கிற லட்சியம் எதுவும் இல்லாமல், காதல், சினிமா, பீச் எனப் பலநாட்கள் அலைந்தது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தான் கணேஷ். இந்த கணேஷைப்போல, நீங்களும் நேரத்தின் அருமையை உணர்ந்து வெற்றியுடன் செயல்பட 10 எளிமை யான டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக...
உங்களுடைய பொன்னான நேரம் எங்கு வீணாகச் செலவாகிறது என்பதைக் கண்டறிய உங்களின் ஒருவார கால நடவடிக்கைகள், எண்ணங்கள் மற்றும் உரையாடல்களைப் பதிவு செய்து ஆராயுங்கள். உதாரணத்துக்கு, தேவையில்லாமல் நீங்கள் பேசும் செல்போன் உரையாடல் கள், டிவி பார்ப்பதில் நேரம் கழித்தல், இணையத்தில் மிகுந்த நேரத்தைச் செலவிடுதல் ஆகியவைகளைக் கண்ட றிந்து அவைகளைத் தவிர்க்க முயற்சி எடுங்கள்.

2 வெற்றிக்கு முக்கியமான ஒவ்வொரு நடவடிக்கையும் உரையாடலும் சரியான கால அளவைப் பின்பற்றி இருப்பது மிக அவசியம். உங்கள் மிக முக்கியமான வேலைகளைத் தொடங்கும் நேரத்தையும்; முடியும் நேரத்தையும் அளவிட்டு, அதைக் கச்சிதமாக அமைத்துக்கொள்வது அவசியம். இதை மற்றவர்கள் விமர்சித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுத்தினால், எந்த வேலையிலும் தோல்வி என்பது இருக்கவே இருக்காது.
3 உங்களை வாழ்க்கையில் முன்னேற்றும் எண்ணங்கள், நடவடிக்கைகள் மற்றும் உரையாடல் களுக்கு உங்களது 50 சதவிகித நேரத்தையாவது செலவிடுங்கள். தேவையற்ற வேலைகளில் கவனம் சிதறாமல் இருத்தல் மிகவும் நல்லது.
தினமும் அலுவலகத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வந்து உங்களது அன்றைய பணிகளை முழுமையாகப் பட்டியலிடுங்கள். இதை ஒரு முக்கியமான முதல் பணியாக உங்களின் ஒவ்வொருநாள் தொடக்கத்திலும் மேற்கொள்ளுங்கள். அன்றாடப் பணிகளைப் பட்டியலிடும் போது முக்கியமான பணிகளை முதன்மைப்படுத்துதல் அவசியம்.
5 வேலையையும் வாழ்க்கையையும் சமன்படுத்திக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். தினமும் எழும் நேரம் மற்றும் தூங்கச் செல்லும் நேரம் இரண்டையும் சரியாக வகைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழு முதல் எட்டு மணி நேர தூக்கமும், தினசரி உடற்பயிற்சியும் புத்துணர்ச்சியுடன் நாம் வேலையில் ஈடுபட இன்றியமையாததாகும்.
6 மிகவும் முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்தும்போது, மற்றவர்கள் உங்களைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமாதிரியான சமயங்களில் ‘do not disturb’ என்று உங்கள் அறை அல்லது மேஜையின் மீது எழுதிவைத்துவிட்டு, வேலை பார்க்கலாம். அப்படி செய்யும்போது மற்றவர்கள் நீங்கள் செய்யும் வேலை யின் முக்கியத்துவத்தைச் சரியாகவே புரிந்துகொள்வார்கள்.
இதுமாதிரியான சமயங்களில் எந்தவித சமூக வலைதளங்களிலும் கவனம் சிதறாமல் இருத்தல் அவசியம். உங்களின் வேலைக்கு உதவுவதாக இருந்தால் மட்டுமே அத்தகைய வலைதளங்களை உபயோகிக்கலாம். தொலைபேசி / கைப்பேசி அழைப்பு களுக்கும் மெயில்களுக்கும் தனியாக நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வேலை நேரத்தில் வரும் அழைப்புகளையோ, மெயில்களையோ மிக முக்கியமான தாக இருந்தால் மட்டுமே பதிலளியுங் கள். அவற்றுக்குப் பிற்பாடு, அதாவது நீங்கள் ரிலாக்ஸ்டாக இருக்கும் நேரத்தில் பதில் அளித்துக்கொள்ளலாம்.
சிலர் காலை நேரங்களில் வேலைகளைச் சிறப்பாகச் செய்வார்கள்; இன்னும் சிலர் மாலை நேரங்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். அவரவருக்கு ஏற்றமாதிரி முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை அந்தந்த நேரங்களில் செய்யலாம். கடிகாரத்துடன் போட்டிபோட்டு வேலை செய்வது நம்பிக்கையைக் கொடுக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பத்து நிமிடமாவது இடைவேளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கும் மனதுக்கும் மிக, மிக அவசியம். ஏனென்றால், உடலும் மனதும் தொடர்ச்சியாக உழைக்க ஒத்துழைக்காது. ஆனால், இடைவேளைவிட்டு முக்கியமான வேலைக்குத் திரும்பும்போது அதை மட்டும் செய்தால், கவனம் சிதறாமலும் தடம் மாறாமலும் வேலையைச் செய்துமுடிக்கலாம்.
8 எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய முடியாமல் திணறுவதைத் தவிர்க்க வேண்டும். நேரத்தை திறம்பட நிர்வகித்து வேலைகளைச் செய்து முடிக்க, தேவையில்லாத வேலைகளைப் பக்குவமாக நிராகரிக்கவும், சரியானவர்களிடம் ஒப்படைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இது உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செயல்படுத்தவும் மற்றவர்களின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு இடம் பெறவும் உதவும்.
9  நீங்கள் பட்டியலிட்டுள்ள வேலைகளை ஒவ்வொன்றாக முடிக்கும்போது அதை ‘டிக்’ செய்து கொள்ளுங்கள். இது உங்களின் வேலைகளைச் சிறப்பாக விரைந்து முடிக்க ஊக்குவிக்கும். அது மட்டுமல்லாமல், இது நாம் தயாரித்து வைத்திருக்கும் வேலை முதன்மை பட்டியலை மாற்றியமைக்கவும், புது வேலைகளைச் சேர்க்கவும் உதவும்.
10 உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பிலும் சரி, நீங்கள் உபயோகிக்கும் பணி மேஜையானாலும் சரி, அதில் பராமரிக்கும் கோப்புகளை ஒழுங்குபடுத்தி வைப்பது நீங்கள் அவைகளைத் தேடும் நேரத்தை மிச்சமாக்கும். இதனால் மற்ற வேலைகளை விரைந்து முடிக்க முடியும். நமக்குக் கிடைக்கும் காலநேரத்தின் அருமையை உணர்ந்து நாம் செய்யும் வேலையைச் சிறப்பாகவும் துரிதமாகவும் சரியான நேரத்தில் செய்து முடித்து எல்லோரது பாராட்டுக்களைப் பெற்று முன்னேறுவதே இன்றைய புரஃபஷனல் வாழ்க்கைக்கு அவசியம்.
முடிவுகளை உங்கள் நிறுவனத்தின் நன்மைக் காகவும் உங்களின் வேலையின் தேவைக்காவும் சரியான நேரத்தில் எடுக்கத் தெரிந்திருப்பது உங்கள் முன்னேற்றத்துக்குத் தேவையான சூட்சுமம். நேரத்தை நிர்வகிக்கும் திறனை கற்றுக் கொண்டால், வெற்றி நிச்சயம்.
ந.பத்மலட்சுமி
ஹெச்ஆர் பிரிவின் மேலாளர் எம்சிஸ் டென்னாஜிஸ்

விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Wednesday, March 11, 2015

அத்தியாயம் 3 - தன்னஞ்சல் முகவரி

ட்டப்படிப்பு முடிக்கும்போது இறுதி ஆண்டின் இறுதிக் கட்டத்தில்,  கல்லூரியிலேயே வளாக நேர்முகத் தேர்வு (CAMPUS INTERVIEW) நடப்பது இப்போது  பெருகிவிட்டது. அப்படி நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்போதே, அனைத்து இறுதி ஆண்டு இளைஞர்களிடமும் ‘அவரவர் ரெஸ்யூமை ரெடி பண்ணிக்கோங்க’ என்று சொல்லியிருப்பார்கள். உடனே அரக்கப் பரக்க, ஒருவர் தயாரித்த ரெஸ்யூமேக்கு, டிங்கரிங் பார்த்து, பெயின்ட்டை மாற்றி அடித்து அதாவது, பெயர், சொந்த விவரங்களை மட்டும் மாற்றி, ஒரு ரெஸ்யூமே தயாரித்து அதனைக் கல்லூரிக்கு எடுத்துச் செல்வதுதான் இன்று பொதுவான வழக்கமாகப் போய்விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், யாருடைய ரெஸ்யூமே காப்பி அடிக்கப்பட்டதோ, அவரைவிட மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக மற்றவர்கள் தயாரித்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு விடுவார்கள்.

ஒரிஜினல் ஓனர், ஓரம் இப்படியாகத் தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமேக்களை வளாக நேர்முகத் தேர்வில் பயன்படுத்திவிட்டு, அதில் தேர்வு செய்யப்படாமல், வெளியில் வேலை தேடும் நிலை வந்தால், அதே ரெஸ்யூமில், கடைசி செமஸ்டரில் வாங்கிய மதிப்பெண்களை மட்டும் சேர்த்துக்கொண்டு, புதிதாக பிரிண்ட் எடுக்கத் துவங்குவார்கள்.
ரெஸ்யூமேகளை பிரிண்ட் எடுப்பதில் இரண்டு வகை திறமையாளர்கள் உண்டு!
ஒருவர், நேர்முகத் தேர்வு அன்று காலை, ஒவ்வொரு இன்ட்டர் நெட் பிரௌசிங் சென்ட்டராக தேடி, அவசர அவசரமாக ஒரு பிரின்ட் எடுத்துக்கொண்டு செல்பவர்.
இன்னொருவர், தான் வாழ்நாளில் கலந்துகொள்ளப்போகும் அனைத்து நேர்முகத் தேர்வுக்கும் மொத்தமாக 50 பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளும் முன் ஜாக்கிரதை இதில் இரண்டு பேருமே, கொஞ்சம் தங்களைச் சரி செய்துகொள்ளவேண்டி முதலில், ரெஸ்யூமே எப்படித் தயாரிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வது முக்கியம். அப்படித் தெரியவில்லையென்றால், இந்தக் கட்டுரையின் முந்தைய  பாகங்களைப் படித்துப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். பிறகு, ரெஸ்யூமேவை எத்தனை பிரின்ட்டுகள் போடுவது என்று முடிவெடுக்கலாம்.
வேலைக்கான இன்ட்டர் வியூ தினத்தில், ரெஸ்யூமேவை பிரின்ட் போடுவது, நமது மெத்தனத்தைக் காட்டுகிறது.
ரெஸ்யூமேவை மொத்தமாக பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டு சுண்டல்போல்  விநியோகம் செய்வது அதைவிடக் கொடுமை. முதல் வேலையே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தன்னம்பிக்கை இருப்பவர்களாகத்தான் நாம் வளர வேண்டும். அப்படியானால், ரெஸ்யூமேவை எத்தனை பிரதிகள் வைத்துக்கொள்ளலாம்?
அதிகபட்சம் 5 பிரதிகள் எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஏனெனில், அதில் இடைப்பட்ட காலத்தில் படித்த ஒரு டிப்ளமோவை சேர்க்கலாம்… திருத்தலாம்…
மாற்றங்கள் ஏற்படுத்தும்போது இரண்டு மூன்று தாள்கள்தான் வீணாகும். ஆனால் மொத்தமாக எடுத்து வைத்துக்கொள்ளும்போது, நம் ரெஸ்யூமே ஒரு பக்கக் குறிப்பு நோட்டு ஆவதை (one side rough note) தவிர்க்க முடியாது.
பொதுவாக, பல்வேறு நிறுவனங்கள் தங்கள் மின்னஞ்சலுக்கு ரெஸ்யூமேவை அனுப்பச் சொல்லி கேட்பார்கள். அப்படிக் கேட்கும்போது, ஒருமுறைக்கு இரண்டு முறை படித்துப் பார்த்து, தவறுகளைச் சரி செய்து அனுப்புவதுதான் சாலச் சிறந்தது.

ஐயா, இத்துடன் எனது ரெஸ்யூமேவை இணைத்திருக்கிறேன். தகுந்த வேலைக்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நல்ல பிள்ளையாக, தன்மையாக மெயில் டைப் செய்துவிட்டு, ரெஸ்யூமேவை அட்டாச் செய்ய மறந்துபோகும் அறிவுக்கொழுந்துகளாகச் சிலர் இருப்பார்கள். ஒரு அழகான கடிதம் எழுதி, அதனை உள்ளே வைக்காமல், வெறும் கவரை மட்டும் அனுப்புவதைப் போன்ற தவறு அது.
ஆனால், நிறுவனங்கள் – நம் ஆள், மீண்டும் ரெஸ்யூமை அட்டாச் செய்தால் கூட – உடனடியாக நிராகரித்துவிடும். ஏனெனில், தன் ரெஸ்யூமேவைக்கூட அட்டாச் செய்யாமல் அனுப்பும் அளவுக்கு கவனக்குறைவான ஆளை அவர்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்க விரும்பமாட்டார்கள்.
ஆக, நேராகப் போய், சந்திக்கும்போதுதான் நேர்முகத் தேர்வு நடக்க வேண்டும் என்று இல்லை. அந்த நிறுவனத்துடன், நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தகவல் தொடர்பில் இருந்தே நமது தேர்வு துவங்குகிறது.
அவர்களுடன் நாம் இரண்டு விதங்களில்தான் தொடர்புகொள்வோம். ஒன்று, மின்னஞ்சல். இரண்டாவது, நேராகச் செல்வது. இந்தக் காலகட்டத்தில், முதல் வேலைக்கு நிறுவனத்தை அணுகுபவர்கள், பொதுவாக கடிதப் போக்குவரத்து அப்படி, தகவல் தொடர்பில் முதலாவதாக விளங்கும் மின்னஞ்சல் அனுப்ப நமக்கு ஒரு மெயில் ஐடி எனப்படும் மின்னஞ்சல் முகவரி வேண்டும். ஆனால், அதுவே நம் வேலைத் தகுதியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு முக்கியமானது.
மெயில் ஐடியில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக ஒரு புள்ளிவிவரம் - உலகளாவிய வகையில் 86 சதவீத நிறுவனங்கள், மின்னஞ்சல் முகவரியை வைத்து விண்ணப்பதாரரை எடைபோடும் பாணியைப் பின்பற்றுகின்றன. அதாவது, ஒரு தனி மனிதனின் குணாதிசயத்தை அவரது பெயரை வைத்து எடைபோட முடியாது.
ஏனெனில், அந்தப் பெயர் அவரது பெற்றோர்கள் வைத்தது. மேலும் அவர் குழந்தையாக இருக்கும்போது வைத்தது. ஆனால், மின்னஞ்சல் முகவரியை மட்டும் தனக்குத்தானே வைத்துக்கொள்கிறோம். அப்படி நமக்கு நாமே திட்டத்தில் வைத்துக் கொள்ளும் மின்னஞ்சல் முகவரி, நமது குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்பது நிறுவனங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!
உதாரணமாக, கோபு என்ற புதிய மனிதரை ஒரு கூட்டத்தில் சந்திக்கிறீர்கள். பேசுகிறீர்கள். பின்னர் விலகும்போது, மின்னஞ்சல் முகவரியைப் பரிமாறிக் கொள்கிறீர்கள். அப்போது அவர் தனது மின்னஞ்சல் முகவரியைச் சொல்கிறார். அது, gujaal_gopu@gmail.com என்று இருக்கிறது. உடனே அவரைப் பற்றி நமக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும்?
நிறுவனங்களுக்கும் நமது வேடிக்கையான மின்னஞ்சல் முகவரிகளைப் பார்த்து அதே அபிப்பிராயம்தான் ஏற்படும்.

இங்கே சில மின்னஞ்சல் உதாரணங்களைப் பார்ப்போம் -
anushka_fan_anand@yahoo.com – இவர் வேலையைவிட, அனுஷ்காவைத் தான் அதிகம் நேசிப்பார் என்பதை நிறுவனத்துக்குச் சொல்கிறார்.
sweetlittlebabybanu@rediff.com - இவ்வளவு சின்னக் குழந்தையான பானுவை வேலைக்குச் சேர்த்தால், குழந்தைத் தொழிலாளர் சட்டம் பாயும் என்ற பயம் நிறுவனத்துக்கு ஏற்படும்.
pulsarpandian@gmail.com – பைக் மட்டும் ஓட்டிக்கொண்டு இருக்கட்டும் என்று நிறுவனம் விட்டுவிடும்.
Ilovejothi_martin@hotmail.com – இவர் ஜோதிக்குத்தான் சரியாக வருவார் என்று நிறுவனம் நிராகரித்துவிடும்.
மேற்கண்ட முகவரிகள் அனைத்தும் கற்பனையே. அந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம். சில நேரங்களில், உண்மையிலேயே அத்தகைய முகவரிகள் இருந்தால், அவர்கள் பாவம். தான் செய்தது என்னவென்று தெரியாமல் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விட்டுவிடலாம்.
மின்னஞ்சல் முகவரி எப்படி இருக்கக்கூடாது என்று பார்த்தோம். அப்படியானால், மின்னஞ்சல் (இமெயில்) ஐடி எப்படி இருக்க வேண்டும்?
தனது பெயர், அதனுடன் ஒரு எண் என்று இருந்தால், பிரச்னை இல்லை. அல்லது முழுமையாக இனிஷியலுடன் பெயர் வைத்துக்கொள்ளலாம். நமது பெயரில் நேரடியாகக் கிடைக்கவில்லை என்றால், ஓரிரு எழுத்துக்கள் –உச்சரிப்பு மாறாமல் இருக்கும் வகையில் – கூட்டியோ குறைத்தோ வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, selvaraj@gmail.com என்ற ஐடி ஏற்கெனவே இருந்தால், selvaraaj@gmail.com, sellvaraj@gmail.com என்று வைத்துக்கொள்ளலாம்.
மேலும், உண்மையிலேயே மின்னஞ்சலில் ஏதாவது சொல்ல விரும்பினால், நல்ல நம்பிக்கை நிறை வார்த்தைகள் பயன்படுத்தலாம். murugeshgood @gmail.com,  iamgokul@yahoo.com, wilsonthewinner@hotmail.com போன்ற மின்னஞ்சல் முகவரிகளை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சில நேரங்களில்  இதனை ஏன் வைத்தீர்கள் என்று கேட்பார்கள். அவ்வளவுதான்.
ஆக, வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு முன்னராக, ரெஸ்யூமே எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மின்னஞ்சலும் முக்கியம் என்று தெரியவருகிறது. அப்படியானால், உடனே மின்னஞ்சல் முகவரியை அதற்குத் தகுந்தார்ப்போல் மாற்றினால் போதும். இது கிட்டத்தட்ட, வீட்டு முகவரியை மாற்றினால், நல்ல நேரம் ஆரம்பித்துவிடும் என்பதைப்போல்தான். இருந்தாலும், காசா பணமா? மாற்றிப் பார்த்துவிடலாம்.
இவ்வளவு தயார் செய்யும் நம்மிடம் நிறுவனங்கள் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறார்கள்.

அத்தியாயம் 2 - சுயமான விவரம்

பொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வோம். அல்லது வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ, தொழில் செய்து கொண்டிருந்தாலோ, அந்த நிறுவனத்தின் பெயருடன், நம் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும் விசிட்டிங் கார்ட் எனப்படும் அறிமுக அட்டையைக் கொடுப்போம்.
வேலை இன்னும் கிடைக்கவில்லை என்றால்… வேலைக்காகச் சந்திக்க வேண்டியவரிடம் நம்மைப் பற்றி ஏதாவது சொல்லலாம். அதைவிட, நம் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, விருப்பங்கள் போன்ற விவரங்களுடன் நம்மைப் பற்றிய கொஞ்சம் பெரிய அறிமுக அட்டையாக அளிக்க வேண்டியதைத்தான் தமிழில் ‘சுய விவரக் குறிப்பு’ என்ற பொருளில் ‘BIO DATA’ என்று பெயரிட்டு அழைத்துக்கொண்டிருந்தோம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, அதன் பொதுவான பெயர் பயோடேட்டாதான். பிறகு உலகளவிய அளவில், அதன் வடிவம் மாறி இப்போது RESUME, CV என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

முந்தைய அத்தியாயத்தில் RESUME-க்கும் CV-க்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்கள் இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று சொல்வார்கள். ஆனால், RESUME – CURRICULAM VITAE இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாலே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வோம்? உண்மையிலேயே ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ரெஸ்யூமுக்கும் சிவிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டிருக்கிறார்கள். நம் ஆள் இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் கடவுளுக்குப் பல பெயர்கள் இருப்பது மாதிரி இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று வாதாடியிருக்கிறார். அப்புறம் என்ன ஆச்சு? என்ற உங்கள் கேள்விக்கு “இதுகூடத் தெரியாத உங்களுக்கு இங்கு வேலை தர இயலாது’ என்ற அவர்களது பதில்தான், பதில்!!
ரெஸ்யூமே என்பது ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் நறுக்குத்தெறித்த அறிமுகப் படிவம். இதில் உங்கள் சுய விவரம், கல்வித் தகுதி, திறமைகள் மற்றும் முன் அனுபவம் இருந்தால் அதனைப் பற்றிய ஒற்றை வரிச் செய்தி இவற்றுடன் நிறுத்திக்கொள்ளலாம்.
கரிக்குலம் விட்டே எனப்படும் CV என்பது, இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களை கொஞ்சம் விரிவாக, ஆற அமரப் படிக்கும் வகையில் அமைக்கும் அறிமுகப் படிவம். இதில் சுய விவரம். கல்வித் தகுதி. அந்தப் படிப்பில் செய்த ப்ராஜக்ட்கள் (செயல்முறைகள்), சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள், விளையாட்டில் வாங்கிய பரிசுகள், பொது நிகழ்வுகளில் பங்களிப்பு, NSS, NCC, RED CROSS, ரோட்டரி, லயன்ஸ் போன்ற சங்கங்களின் கல்வி நிறுவன அமைப்புகளில் வகித்த பதவிகள் ஆகிய அனைத்தும் இடம்பெறும்.
முதலில் நாம் ரெஸ்யூமை பற்றி விரிவாகப் பார்ப்போம். பொதுவாக முதலில் நிறுவனம் நம்மைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள விரும்பும்போது, ரெஸ்யூமைத்தான் கேட்பார்கள். ஏனெனில் இதனை முதலாம் நிலை வடிகட்டலுக்குப் பயன்படுத்தமுடியும்.
ஒரு நிறுவனத்தில் புதிய வேலைகளுக்கு 6 பேர் தேவைப்படுகிறார்கள் என்றால், முதலில் விண்ணப்பிக்கும் 250 நபர்களைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்வது கடினம் என்பதால், அவர்களது ரெஸ்யூமை பார்த்துத்தான் முதல்கட்ட முடிவு எடுப்பார்கள். அப்படியெனில், உண்மையிலேயே ஒரு வேலை தேடும் நபர், நிறுவனத்தின் மனத்துக்குள் நுழைய முதலில் வீச வேண்டிய அம்பு, ரெஸ்யூமேதான். அப்படியெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். பொதுவாக நாம் செய்வது என்னவென்றால், நண்பனுடைய ரெஸ்யூமை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, அதில் நம் தகவல்களை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே தேவையான நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துவிடுகிறோம்.
இதனை இப்படி ஒப்பிடலாம். ஒரு பெண்ணைக் காதலிக்க கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற சூழலில், ஏற்கெனவே ஒரு நண்பன் அதே பெண்ணுக்குக் கொடுத்த கடிதத்தை அப்படியே காப்பி அடித்து, அதில் பெயரை மட்டும் மாற்றிக்கொடுத்தால், அந்தப் பெண் நம்மைப் பற்றி என்ன நினைப்பாள்? (இந்தக் காலகட்டத்தில் அதனை இ-மெயில், SMS என்றுகூடக் கொள்ளலாம்) ஒரு பெண்ணுக்கு நண்பன் அனுப்பிய காதல் ப்ரோப்பஸல் SMS-ஐ அப்படியே பெயர் மாற்றி அவளுக்கே FORWARD செய்தால் எப்படிச் சொதப்புமோ… அதேபோல்தான் காப்பி அடித்து ரெஸ்யூமே அனுப்பினாலும் சொதப்பும்.
சொந்தமாகச் சிந்தித்து கொஞ்சம் கற்பனையும் கலந்து அனுப்பப்படும் ரெஸ்யூமேக்கள் நிறுவனங்களை வெகுவாகக் கவர்கின்றன. ஆனால், அது எந்த வேலை என்பதைப் பொறுத்து மாறுபடும். இங்கே சில கற்பனை மிகுந்த ரெஸ்யூமேகளை பார்க்கலாம்.
இதனையும் அப்படியே காப்பி அடித்துவிட வேண்டாம். உங்களைப்போலவே, நிறுவனத்தினரும் இந்த மாடல் ரெஸ்யூமேக்களை இணையத்தில் நிறையப் பார்த்திருப்பார்கள். அதனால், எச்சரிக்கையாக இருக்கவும்.
ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக, உண்மையிலேயே சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமிற்கு மதிப்பு அதிகம். அதனை பெயருக்குக் கீழ் எழுதும் OBJECTIVE என்ற விவரத்திலேயே நிறுவனம் கண்டுபிடித்துவிடும். பொதுவாக, அதில்தான் வேலை தேடும் அனைத்து நபர்களும் மாட்டுவார்கள். தன்னுடைய சுயசக்தியால், நேர்மையால், உழைப்பால், நிறுவனத்தையும் நிமிர்த்தி, தன்னையும் வளர்த்துக்கொள்வதுதான் நோக்கம் என்றபோக்கில் இருக்கும் அந்த வார்த்தைகள். இதெல்லாம் சினிமா வசனத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால் யதார்த்தமாக எழுதப்படும் OBJECTIVE மீதுதான் நிறுவனம் அதிகக் கவனம் செலுத்தும்.
புதுப் பட்டதாரியாக இருந்தால், OBJECTIVE–ல் முதல் வேலையாக இருப்பதால், வேலை கற்றுக்கொண்டு, அதனை திறம்பட இங்கேயே செயல்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். வேலையில் என் திறமைகள் என்னவென்று கண்டுணர்ந்து, வளர்த்துக்கொள்ள என்னை இங்கு ஒப்படைக்க விரும்புகிறேன் என்ற ரீதியில் இருந்தால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்.
ஏனெனில் HARD WORKING என்ற பதத்தை, முதலில் வேலை தேடுபவர்கள் பயன்படுத்தவே முடியாது. அவர்கள் படிப்பதற்காகச் செய்த கடின உழைப்பு வேறு. அதில் அவர்கள் பணம் செலவழித்து உழைத்தார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு உழைக்க வேண்டும். இதில் மனநிலையே மாறும். அதனை நிறுவனம் கண்டறிந்துகொள்ளும். கடினமாக உழைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாலே போதும்.
அடுத்த அத்தியாயத்தில் தொடர்வோம்...

அத்தியாயம் 1 - அறிமுக அழகு!

து ஒரு நீண்ட ரயில் பயணம். நம் எதிரில் மூன்று பேர். அருகில் இரண்டு பேர். முதலில் நேர் எதிரில் இருப்பவர்தான் நம் இலக்கு. அவருக்கும் நாம்தான் இலக்கு. முதலில் ஒரு புன்னகையை வீசிப் பார்ப்போம். அவர் அதை கேட்ச் பிடித்து திரும்ப புன்னகையாகவே வீசினால், பிழைத்தோம்.. இல்லையென்றால், அந்த வரிசையில் யார் புன்னகைக்கிறார்களோ அவரிடம் தாவுவோம். அதன்பிறகு, பேச்சு இந்தவிதமாகத்தான் துவங்கும்..
ஒரே புழுக்கமா இருக்குல்ல?
நீங்க எங்க இறங்கணும்? (சென்னையா, பெங்களூரா என்ற ரீதியில்)
டயத்துக்கு எடுத்துருவாங்களா?
ட்ரெயினை பிடிக்கிறதுக்குள்ள ஒரே டென்ஷனாய்டுது…
என்று ஆரம்பித்து, “தம்பி என்ன பண்றீங்க?” என்று அவர் கேட்கத் துவங்கி (பெண்ணாக இருந்தால், “என்னம்மா பண்றீங்க?”) பேச்சு வளரும். அப்போது நம்மைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுப்போம். அவர் கேள்வியாகக் கேட்டுத் தள்ளுவார். பிறகு, அவருக்கு நம்மையோ, நமக்கு அவரையோ பிடித்திருந்தால்தான் அந்த உரையாடல்கூட அடுத்த கட்டத்துக்குப் போகும்.
இதே நிலைதான், ஒரு வங்கிக்குள் நுழையும்போதும் ஏற்படும். எதிரில் அமர்ந்திருக்கும் வங்கி அதிகாரிகளில், எந்த கவுன்ட்டரில் உள்ள நபர் நம்மைக் கவர்கிறார்களோ, அவரைத்தான் தேர்ந்தெடுத்து நம் சந்தேகத்தைக் கேட்போம்.
இரு நபர்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்து, இவர் நமக்கு ஒத்துவருவாரா என்று மனத்துக்குள் அனுமதித்த பிறகுதான் ஒவ்வொரு சந்திப்பும் வெற்றிகரமாக நிகழும்.
பெண் பார்க்கும் படலத்தில், ஆண், பெண் அழகைத் தவிர, அவர்கள் இருவரும் எப்படிப் பேசுகிறார்கள், அவர்களது எண்ணம் எப்படிச் செல்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்பதைத்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அதில் ஏதேனும் சிறு இடர் ஏற்பட்டால்கூட, அப்போதே கௌரவமாகத் தவிர்த்துவிடலாம் என்பதுதான் பெண் பார்க்கும் படலத்தின் நோக்கம்.
மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதரைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதோ, சந்தேகம் கேட்பதோ, வாழ்வதோ நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எதை வைத்து ஒருவர் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கிறார்? எந்த விஷயங்கள் ஒருவரை ஈர்க்கிறது என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக இருக்கும்.

ஒரு ஆளுக்குப் பிடிக்காதவர், வேறு ஒருவருக்கு மிகவும் பிடித்தவர் ஆவதன் மர்மமும் இதுதான்!
ஆனால், சில பொதுவான நல்ல குணாதிசயங்கள் உள்ள நபரை எல்லோருக்கும் பிடிக்கும். அதற்கும் மேல் ஒரு மனிதர் சேர்த்து வைத்திருக்கும் அறிவை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதும் மற்றவர்களைக் கவரும் வாய்ப்பு இருக்கிறது.
இதேபோலத்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஒரு துறையில் ஊழியர் வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, அதற்குத் தகுதியான ஆளைத் தேர்ந்தெடுக்க ,நடத்தும் ஒற்றைச் சந்திப்பில்தான், ஒரு தனி மனிதரின் அடிப்படை குணாதிசயங்கள் மற்றும் அறிவு கணக்கிடப்படுகிறது. அந்தச் சந்திப்புதான் அவரை “இவர் இதுக்கு ஒத்துவருவாரா? மாட்டாரா?” என்று முடிவெடுக்க வைக்கிறது.
பொதுவாக, ஒரு நிறுவனம், தங்களிடம் காலியாக உள்ள வேலைக்கு – தொழில்நுட்பத் தகுதி மற்றும் வேலைக்கான குணாதிசயம் இருக்கிறதா என்பதை ஒரு சில நிமிடங்களில் அல்லது ஓரிரு சுற்றுகளில் கண்டறிய ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள். அந்த வார்த்தைதான் நம் இளைஞர்களின் வயிற்றில் பந்தாக உருளவைக்கும் ஒற்றைச்சொல்லாகி கபடி ஆடிக்கொண்டிருக்கிறது.
இன்டர்வியூ – நேர்முகத் தேர்வு!
ஒரு இளைஞர் (ஞன், ஞி இருவரும் சேர்த்துத்தான்) கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தின் இன்டர்வியூவுக்கு செல்கிறார் என்றால்…
ட்ரெஸ்ஸை இன் பண்ணிக்க…
கேட்ட கேள்விக்கு, தெரியுதோ தெரியலையோ, பட் பட்டுன்னு பதில் சொல்லு…
நிதானமா பேசு…
நேரா உக்காரு…
லைட் கலர் சட்டை போட்டுக்க…
தலையை லூசா விடாத…
கண்ணைப் பாத்து பேசு…
உக்காரலாமான்னு கேட்டுட்டு உக்காரு…
ஒரு சிரிப்போடயே இரு…
சீரியஸா முகத்தை வச்சுக்க…
சொந்த விவரங்களை ரொம்ப சொல்லாத…
சம்பளம் என்னன்னு கேளு…
சம்பளத்த பத்தியே கேக்காத…
என்று பல்வேறு தரப்பில் இருந்தும் அறிவுரைகள் பறக்கும். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு, அங்கே போய், கேள்வி கேட்பவரின் முன்னால் எப்படி அமர்வது என்றுகூட முடிவெடுக்க முடியாமல், திகில் படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுபோல், சீட்டின் நுனியிலேயே அமர்ந்து, ஏற்கெனவே காதில் வாங்கிய அறிவுரைகளில் எதைச் செய்வது என்று தெரியாமல், மொத்தமாகச் சொதப்புவதுதான் நமது வேலையாக இருக்கும்.
கேட்கும் கேள்விக்குப் பதில் தெரிந்தால் ஹீரோவாகவும், பதில் தெரியாவிட்டால் வில்லனாகவும், ஒரே நேரத்தில் நமக்கு நாமே உணரவைக்கும் உன்னத நிகழ்வான இன்டர்வியூ பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று உத்தேசம்.
இன்டர்வியூ – இது ஒரு மாயச்சொல்லாகவே மாறியிருக்கிறது.
இன்டர்வியூவை தமிழில் நேர்முகத் தேர்வு என்று சொல்கிறோம். இன்னும் சரியாகத் தமிழாக்கினால், உள்பார்வை என்று பொருள்படும்.
இந்தப் பொருளுடன் இதனை அணுகினாலே பாதி வேலை முடிந்துவிடும்.
இருந்தாலும், ஒரு ஊழியருக்கான உள்பார்வைப் பேட்டியில் இன்றைய நிறுவனங்கள் எதை எதிர்பார்க்கின்றன என்று பார்ப்போம்.
முதலில் பார்க்கவேண்டியது ரெஸ்யூம் எழுதுவது.
அதற்கு முன்னால், ஒரு கேள்வி. Resume - Curriculam Vitae எனப்படும் CV. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அடுத்து பார்க்கலாம்…
சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், எழுத்தாளர், தொழில் ஆலோசகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். எளிய வார்த்தைகள் மூலம் கல்வி, தொழில் ஆகியவற்றில் உள்ளங்களில் மாற்றம் கொண்டுவரமுடியும் என்று நம்புபவர். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் புதிய, பிரபல தொழில் நிறுவனங்களின் நிரந்தர ஆலோசகர். இதுவரை 5 நூல்கள் எழுதியுள்ளார். தமிழில் முதல் தொழில் நாவல் எழுத்தாளர் (Business Novelist) என்ற பெயருக்குச் சொந்தக்காரர். சுவாரஸ்யமான எழுத்துநடை இவரது பலம்!
இன்றைய இளைஞர்களுக்கு வேலை தேடுவது என்பது கற்கால மனிதனின் வேட்டையைப் போன்ற ஒரு சாகஸமாகவே ஆகிவிட்டது.
மான் எதிரில் இருக்கிறது. கையில் அம்பும் இருக்கிறது. மானைக் கொல்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அம்பு மட்டும் இருந்தால் போதுமா? மானை வீழ்த்த சாதுரியம் வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதே சக்ஸஸ் ஃபார்முலாதான், வேலைக்கான வேட்டைக்கும்.
அம்பைப்போல் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு, வேலை என்ற மானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேட்டையின் முக்கிய அம்சமே நேர்முகத் தேர்வுதான். அப்படிப்பட்ட நேர்முகத் தேர்வு என்ற இலக்கை/ஒற்றைக் கதவை எப்படி எட்டுவது/ஓங்கித் திறப்பது என்று எளிமையாகப் புரியவைக்கும் முயற்சிதான் இந்த நேர்முக்கியத் தேர்வு என்ற தொடர்.

Saturday, March 7, 2015

நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன்



• சில பக்கங்களைப் படிக்கிறோம். ஆனால் படித்த பிறகு என்ன படித்தோம் என்று நினைவுக்கு வருவதில்லை. காரணம் மனம் அதில் ஈடுபடாமல் இருப்பதால், கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் குறிப்புகள் எடுப்பது சிறந்தது.
• கண்கள் 5 சதவிகிதம் தான் வேலை செய்கிறது. 95 சதவிகிதம் மூளைதான் வேலை செய்கிறது. 1 மணி நேரம் படியுங்கள். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
• காலையில் கிழக்குப் பக்கமும், மாலையில் மேற்குப் பக்கமும் உட்கார்ந்து படியுங்கள். தெற்கு நோக்கிப் படிப்பதை தவிர்க்கவும்.
• எவற்றைப் படிக்க வேண்டுமென்று முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
• அவசியமில்லாததை ஒதுக்கித்தள்ள வேண்டும். மூளை ஒரு சேமிக்கும் வங்கி.
அவசியம் அல்லது முக்கியம் என்று கருதுவதை நன்கு படித்து நினைவுப் பெட்டியில் பத்திரப்படுத்த வேண்டும். மனப்பாடம் செய்வதில் தவறில்லை. ஆனால் புரிந்து கொண்டு செய்தால், எப்போதும் நினைவிலிருக்கும்.
• படிக்கும் வேகம் என்ன என்று அறிந்து, அதனைப் படிப்படியாக அதிகரித்துக் கொள்.
ஒரு நிமிடத்திற்கு 150 வார்த்தைகளைப் படிக்கவும், அதில் 100 வார்த்தைகளையாவது கிரகிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் 200-150, 200-250 எனப் படிப்படியாக உயர்த்திக் கொள்ள முயற்சி செய்யவும்.
• தினசரி பாட சம்பந்தமில்லாத, பொது அறிவினை வளர்க்கக் கூடிய ஏதேனும் ஒரு புத்தகத்தை குறைந்தது 15 நிமிடமாவது படிக்கவும். ஒரு வாரத்தில் சுமார் 2 மணி நேரம், மாதத்தில் 8 மணி நேரம் கிடைக்கிறது. ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்க சுமார் 4 மணி நேரம் தேவை. மாதத்தில் இரண்டு புத்தகங்களைப் படிக்கலாம். ஆண்டில் 24 புத்தகங்களைப் படிக்கலாம்.
• வெளியில் போகும் போது, ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள், பயணம் செய்யும் போதும், பலவற்றிற்காகக் காத்திருக்கும் போது, நமது நேரத்தை வீணாகச் செலவிடாமல், பயனுள்ள வகையில் செலவிடலாம்.
• படிப்பதைக் கடமையாகக் கருதாமல் பிடித்தமான விஷயமாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக மறக்காது.
• படிக்கிற நேரம் உங்களுக்கு எந்த நேரம் சிறந்தது என்று கருதுகிறீர்களோ, அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
• படிக்கின்ற போது முக்கியமானவற்றை அடிக்கோடிடுங்கள். தனி குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
• படிக்கும் பழக்கும் ஒரு சிறந்த பழக்கம். அதனை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன், வழிபோக்கத் துணைவன்

தினமணி 07-03-2015 அன்று வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

'ஓயாத’ வேலை உயிருக்கு ஆபத்தா?

ன அழுத்தம் ஒரு மனிதனை என்ன செய்யும்? கோமாவில் கொண்டுபோய் சேர்க்கும்! கிஷோரை அப்படித்தான் கோமாவில் தள்ளியிருக்கிறது மன அழுத்தம்!
'பரதேசி’, 'ஆடுகளம்’, 'எங்கேயும் எப்போதும்’, 'பயணம்’ என தனித்துவமான படங்கள் மூலம் தன்னுடைய கலைப்பயணத்தைத் தொடர்பவர் எடிட்டர் கிஷோர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் என்ற கிராமத்தில் இருந்து வந்த இளைஞர் கிஷோர். 'ஆடுகளம்’ படத்துக்காக தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றார். தற்போது பாலாவின் 'தாரை தப்பட்டை’, வெற்றிமாறனின் 'விசாரணை’ போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி வந்தவர், கடந்த சனிக்கிழமை திடீரென மயங்கி சரிந்திருக்கிறார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. 'ஓவர் ஸ்ட்ரெஸ்ஸில் தன்னை வருத்திக்கொண்டு ஓயாமல் வேலை செய்தது மட்டும்தான் கிஷோரின் இந்த நிலைக்குக் காரணம்!’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
கிஷோர் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயா மருத்துவமனைக்குச் சென்றோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் எந்த அசைவும் இல்லாமல் படுத்திருக்கிறார் கிஷோர். உறவுகள், நண்பர்கள் என மருத்துவமனையில் சூழ்ந்திருந்தார்கள்.
'கடந்த வாரம் சனிக்கிழமை காலையில் வெற்றிமாறனின் 'விசாரணை’ படத்தை எடிட் பண்ணிட்டு இருந்தார். திடீர்னு உட்கார்ந்து இருந்ததுபோலவே அப்படியே சிலை மாதிரி ஆகிட்டார். வெற்றிமாறன் கூப்பிட்டுப் பார்த்தும் சுயநினைவுக்குத் திரும்பாதவர். அவர் அருகில் சென்று தொட்டு அழைத்ததும் மயங்கி கீழே சாய்ந்துவிட்டார். சிறிது நேரத்துக்குள் சுயநினைவு திரும்பியவரை மருத்துவமனையில் சேர்த்தார் வெற்றிமாறன். அங்கு ஸ்கேன் செய்தபோது தலைக்குள் சின்ன கட்டி இருப்பது  தெரியவந்தது. அறுவைச் சிகிச்சை மூலம் அதை அகற்றலாம் என்று இருந்தபோது சனிக்கிழமை இரவு, மூளைக்குள் அந்தக் கட்டி வெடித்து ரத்தம் கசிந்து நினைவு இழந்து கோமாவுக்குச் சென்றுவிட்டார். 'நினைவு திரும்ப 95 சதவிகிதம் வாய்ப்பு இல்லை’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். 'அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவராகவே சுவாசிக்க வேண்டும். அப்படிச் சுவாசித்தால் அவரைக் காப்பாற்றலாம்’ என்றார்கள். ஆனால், இதுவரை அவராகவே சுவாசிக்கவில்லை. வென்ட்டிலேட்டர் மூலம் ஆக்சிஜனை செலுத்தி வருகிறார்கள். கிஷோருக்கு 36 வயசு ஆகுது. இன்னும் கல்யாணம் ஆகலை. கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் நடந்துட்டு இருந்துச்சு. ஆனால், அதற்குள் இப்படி ஆகிடுச்சு. இயக்குநர்கள் பொறுமையாகப் பல மாதங்கள் ஷூட்டிங் நடத்திவிட்டு... அது அத்தனையும் எடிட்டர் டேபிளுக்கு வரும்போது மட்டும் நாலு நாட்களில் அத்தனையையும் பார்த்து உடனே எடிட் பண்ணித்தாங்க. டீஸர் கட் பண்ணித்தாங்க, டிரெய்லர் ஒட்டித்தாங்கன்னு சொன்னால் எப்படி? நாலு மணி நேரம்கூட தொடர்ந்து கிஷோர் தூங்க மாட்டார். எப்பவும் வேலை வேலைன்னு பரபரன்னு இருப்பார். அதுவே அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துடுச்சுங்க. 'இனி கிஷோர் மீண்டு வந்தாலும் ஒரு குழந்தைபோலத்தான் இருப்பார். அவரை பொறுமையாகப் பராமரிக்க வேண்டும்’ என்று டாக்டர்கள் சொல்லிட்டாங்க.!'' என்று கலங்குகிறார்கள் அவரது நண்பர்கள்.
கிஷோரின் அக்கா பரணி பிரியாவுக்கு ஆறுதல் சொல்லி பேசினோம். 'அவனுக்கு இப்படி ஆனதை எங்களால நினைச்சுக்கூட பார்க்க முடியலைங்க. காசு, பணம் இந்தப் பேரு, புகழ் எதுவும் எங்களுக்கு வேணாம். எங்க கிஷோர் மட்டும் திரும்பி வந்துட்டா போதும். அவனை நாங்க ஊருக்குக் கூட்டிட்டுப்போய் காலம் முழுக்க பக்கத்துல இருந்து பார்த்துக்குவோம்!'' என்று தேம்பித் தேம்பி அழுகிறார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி  நரம்பியல் அறுவைச் சிகிச்சை பேராசிரியர் டாக்டர் டி.பாலசுப்ரமணியனிடம் கேட்டபோது, ''உடலுக்கும், மனசுக்கும் ஓய்வு என்பது கட்டாயம் தேவை. எந்த வேலையாக இருந்தாலும் ஒருநாளைக்கு எட்டு மணி நேரத்துக்குள்தான் செய்ய வேண்டும். எட்டு மணிநேரம் வேலை செய்தாலும், இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் 10 நிமிட பிரேக் தேவை. மூளைக்குள் இருக்கும் ரசாயனத்தின் அளவு குறைந்தாலோ, கூடினாலோ பிரச்னைகள் வரும். அப்படி குறையவோ, கூடவோ காரணம், மூளையை கசக்கி ஓய்வு இல்லாமல் வேலை செய்வதுதான். உடலை நாம் ஓய்வு இல்லாமல் அளவுக்கு அதிகமாக வருத்தும்போது மூளை தானாகவே ஓய்வெடுத்துக்கொள்ளும். அந்த ஓய்வு என்பது நீங்கள் நினைப்பதுபோல சாதாரணமானது அல்ல... அதுதான் கோமா!'' என்று சொல்லி அதிரவைத்தார்.

சீக்கிரம் நலமுடன் திரும்பி வாங்க கிஷோர்!
நா.சிபிச்சக்கரவர்த்தி

விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.