டி.என்.பி.எஸ்.சி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்திய குரூப் இரண்டு மற்றும் வி.ஏ.ஒ தேர்வு முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. குரூப் இரண்டு நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற டாப் 10 ல் ஒன்பது பேர் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில் வென்றவர்களில் கணிசமானோர் பொறியியல் பட்டதாரிகள் என்பது பத்திரிகைகளில் காணக் கிடைத்த முக்கியச் செய்தி.
இது சாதாரண செய்தியாக கடந்து செல்லக்கூடியது அல்ல..டாப் 10 ல் ஒன்பது பேர் பொறியியல் பட்டதாரிகள் என்றால் தேர்வான மொத்த பேரில் எத்தனை பேர் பொறியியல் முடித்தவர்கள் இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ள முடியும். இதற்கு என்ன காரணம்? எதனால் இந்த நிலை? பொறியியல் படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளா? அல்லது பொறியியல் துறையில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததாலா? டி.சி.எஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் சமீபத்திய ஆட்குறைப்பினால் ஏற்பட்ட முன்னெச்சரிக்கையா? போட்டித் தேர்வுகளின் மீதான ஆர்வமா? அல்லது அரசு வேலை வாங்க வேண்டும் என்ற கனவா? அதுபற்றிய ஒரு அலசல் இங்கே...
ஒரு காலத்தில் பொறியியல் துறையானது வசதியானவர்கள் மட்டுமே படிக்கக் கூடியதாகவும்..ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவும் இருந்து வந்தது.கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொழிற்கல்வி மேற்படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்தவுடன் நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு பெரும் கல்விப்புரட்சியாக பார்க்கப்பட்ட இத்திட்டம், ஒரு பெரும் சறுக்கலையும் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் என யாரும் அப்போது நினைத்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை..
அப்படியென்ன சறுக்கல்? என்கிறீர்களா... பிளஸ் டூ தேர்வில் ஐம்பது சதவிகித மதிப்பெண் இருந்தால்போதும் பொறியியல் படித்து விடலாம் என்ற நிலை..அரசின் வங்கிக்கடன் சலுகைகள்..உச்சத்தில் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை..எம்.என்.சி கம்பெனிகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை மற்ற துறைகளில் பத்தாண்டுகளில் காணும் வளர்ச்சியை ஒரே ஆண்டில் அடைந்து விடலாம் என்ற பேராசை பலரை பொறியியல் கல்வி பக்கம் இழுத்துச் சென்றது. இதன் விளைவால் மாணவர்கள் பயன்பெற்றார்களோ இல்லையோ புற்றீசல்களைபோல புதிய பொறியியல் கல்லூரிகள் முளைக்கத் தொடங்கின..தமிழகத்தில் மட்டும் ஐநூறுக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள்..இவற்றுள் பெரும்பாலானவை புறநகருக்கு அப்பால் ஒரு பொட்டல் காட்டில் இரண்டு அடுக்குகளைக்கொண்ட நான்கு கட்டிடங்களையும் நாற்பது கணினிகளையும் ஒரு நூலகத்தையும்..தரமற்ற பேராசிரியர்கள் அல்லது அதே கல்லூரியில் படித்து வேலை கிடைக்காமல் அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியாக பணியாற்றும் ஆசிரியர்களையும் கொண்டவை..
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் அற்ற சரியான வாளாகம் கூட கட்டப்படாத இக்கல்லூரிகளில் வளாக நேர்முகத்தேர்வு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இத்தகைய கல்லூரிகள் கல்வித்தந்தைகளின் ‘கல்லா’வை நிரப்பப் பயன்பட்டதே தவிர கல்லூரி மாணவர்களின் கண்ணீரை துடைக்க கடைசி வரை பயன்படவே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
பொறியியல் பட்டதாரிகளின் மறுபக்கம்
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பொறியியல் முடித்தவர்களில் 70 சதவீதத்தினர் கிராமப்புற மாணவர்களே. “உங்கள் பிள்ளைக்கு வளமான எதிர்காலம் அமைத்துத் தருகிறோம்..படித்து முடித்தவுடன் வேலை நிச்சயம்..வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும்” போன்ற மாய வார்த்தைகளினால் சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகளாகி விட்டனர் பல அப்பாவி பெற்றோர்கள். இது ஒருபுறம் என்றால் மாணவர்களின் நிலையோ இதைவிட பரிதாபம்.
வேலை தேடி அலைந்து அலைந்து வேலை கிடைக்காமல் இப்போதைக்கு இதை செய்வோம் என நகரத்தின் ஓரத்தில் நான்கைந்து நண்பர்களை கொண்ட சிறு அறையில் இருந்து கொண்டு, வெறும் ஐயாயிரம் ருபாய் சம்பளத்தில் மிச்சம் பிடித்து வாழும் பொறியியல் படித்த ரகுவரன்கள் நிறைய பேர் நம் தமிழ்நாட்டில் உண்டு. சுரேஷ் டெண்டுல்கருக்கோ, சி. ரங்கராஜனுக்கோ வேண்டுமானால் மாதம் ருபாய் ஐயாயிரம் போதுமானதாக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு பணம் அனுப்பவோ..வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவோ இவர்களுக்கு அந்த பணம் போதவே போதாது.
ஏளனப் பேச்சுக்கள்
நெருக்கும் வங்கிகள் ஒருபுறமும்..மகனின் அல்லது மகளின் வருமானத்தை எதிர்பார்க்கும் பெற்றோர் மறுபுறமுமாக எப்போது வீட்டிற்கு அனுப்பப்படுவோம் என்கிற நிரந்தரமில்லாத வேலையும், குறைந்த சம்பளம் தரும் அயர்ச்சியுமாக ஒரு அசாதாரண சூழ்நிலையில் ஒரு பொறியாளன் போட்டித்தேர்வாளனாக மாற்றப்படுகிறான். உண்மையில் பெற்றோர்களும் இச்சமூகமும் பொறியாளர்கள் போட்டித் தேர்வர்களாக ஆவதை எளிதில் அங்கீகரிப்பதில்லை. ஏளனப்பேச்சுகளும் அவமானங்களும்தான் அவர்களை முதலில் வரவேற்கும் வரவேற்புப் பலகைகள்.
டி.என்.பி.எஸ்.சி. என்ற கலங்கரை விளக்கம்
அதையும் தாண்டி கடந்த மூன்று நான்கு வருடங்களாக பொறியியல் பட்டம் பெற்ற பெரும்பகுதியினர்
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுதி துணை கலெக்டர் முதல் இளநிலை உதவியாளர் வரை பல்வேறு நிலைகளில் மனநிறைவோடு பணியாற்றி வருகின்றனர். தேர்வுகளை விரைவாக நடத்தினாலும் முடிவுகளை வெளியிடுவதில் தேர்வாணையம் செய்யும் காலதாமதம் போட்டிதேர்வர்களிடையே சில நேரங்களில் சோர்வைத் தந்தாலும் கூட தற்போதைய நிலையில் தமிழகத்தில் படித்த இளைஞர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்வது டி.என்.பி.எஸ்.சி என்றால் அது மிகையல்ல.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு தொழிற்கல்வி படித்தோருக்கு தகுதி இல்லை என பின்பற்றப்படும் கொள்கைகளில் விலக்கு அளிக்கும் பட்சத்தில் ஏராளமான பொறியியல் பட்டதாரிகளின் வாழ்கையில் விளக்கேற்றி வைத்த புண்ணியமும் டி.என்.பி.எஸ்.சி க்கு கிடைக்கும். வருங்காலத்தில் இன்னும் நிறைய பொறியியல் பட்டதாரிகள் கலந்து கொள்வார்கள் என்பதால் போட்டித் தேர்வில் இன்னும் பலத்த போட்டி நிலவும்.
எனவே கடின உழைப்பும், தொடர்ச்சியான தயாரிப்பும் அவசியம். அரசு வேலையானது சமூக அந்தஸ்தையும் மற்றவருக்கு சேவை செய்திடும் நல்வாய்ப்பையும் கொடுப்பதால் கனவுகளைத் துரத்திப் பிடிக்க இப்போதே தயாராகுங்கள் தோழர்களே!
-மஹபூப்ஜான் ஹுசைன்
காரிமங்கலம்