Blogger Widgets

Total Page visits

Thursday, October 8, 2015

எத்திக்கல் ஹேக்கிங் - படிப்பது தப்பில்லையே!

குறை கண்டு பிடிக்காமல் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழணும் என்று பெற்றோர் சொல்லி வளர்ப்பது வழக்கம். ஆனால் ஆன்லைனில் பல சமூக வலைத்தளங்களில் இருக்கும் கோளாறுகளை, கண்டுபிடித்து  தருகிறார்  “ஆனந்த பிரகாஷ்”, இதனை வெற்றிகரமான ஒரு தொழிலாகவும் செய்து வருகிறார்.


குறுக்கு வழி வேண்டாம், நேர்மையான  வழி தான் சரி எல்லாம் பழைய லாஜிக்.



“களவும் கற்று மற” னு சொல்லியிருப்பது போல இன்று எப்படி எல்லாம்  இணையத்தை தவறாகப் பயன்படுத்தினால், பிரச்னை வரக்கூடும் என்று யோசித்து அதனை, முன்னாடியே  தடுக்கத் தான் ஆனந்த் போன்றவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.




முதன் முதலில்  வீட்டில் இணைய வசதி கிடைத்ததும்,  சில சாமர்த்தியமான வழிகளை பயன்படுத்தி செலவே இல்லாமல் இணையத்தை பயன்படுத்த கற்றுக் கொண்டார்.  (அடடே நமக்கும் சொல்லி கொடுக்கலாமே ! நெட்பேக் போட்டு கட்டுபடியாகல ) சில மாதங்களில் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டது, அப்போது தான் அவருக்கு புரிந்தது இணையத்தை எவ்வளவு பேர் தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்று.

என்ஜினியரிங்  படிப்பின்  போதும் காலேஜ் வட்டாரத்தில் இவர் மிக பிரபலம். நன்றாகப் படிப்பதனால் அல்ல, வை ஃபை கட்டுப்பாடு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதால். இப்படி ஆன்லைனில் வல்லவனாக இருந்தாலும், பாடங்களில் கவனம் செலுத்த வில்லை. கண்டிப்பாக கேம்பஸ் பிளேஸ்மெண்ட்டில் வேலை கிடைக்காது என்றாயிற்று. 


ஃபேஸ்புக்கில் இருக்கும் கோளாறுகளை கண்டுபிடிப்போருக்கு அந்த நிறுவனம் பரிசு அறிவித்தது. முதன் முதலாக இவர் கண்டுபிடித்தது ஆன்லைனில் இருப்பவர்களை கண்டுபிடிக்கும் யுக்தி . சேட் ஆஃப் செய்து வைத்திருந்தாலும் கண்டுபிடிக்க முடியும் என்பதை சுட்டி காட்டினார். 500 டாலர்கள் பரிசு தொகையாக பெற்றார். அன்று தொடங்கியது இந்த குறை காணும் படலம். 80 பக்கங்களை  ஃபேஸ்புக்கில் கண்டுபிடித்திருக்கிறார்.




தன்னிடம் உள்ள திறமையை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். கர்கான் நகர சைபர் க்ரைம் துறையுடன் இணைந்து பல ஆன்லைன் கிரிமினல்களை பிடிக்க உதவியுள்ளார்.



சமீபத்தில் பிரபல உணவகம் சார்ந்த ஆப் சொமேடோ வில் 62 மில்லியன் நபர்களின் கணக்குகள் பாதுகாப்பில்லாமல் இருப்பதை சுட்டி காட்டினார். ஆனால் இந்திய நிறுவனங்கள் பலவும் சைபர் பாதுகாப்பை தீவிரமாக எடுத்து கொள்வதில்லை.

ஹேக்கர்ஸ் அனைவரும் தவறான செயல்களுக்காக ஹேக் செய்வதில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் பரிசு தொகையும் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி கொடுக்க தயாராக இருக்கும் போது, இந்தியா நிறுவனங்களான   'ஓலா' போன்றவை இவர்களை குற்றவாளியாகவே பார்க்கிறது.


`ஓலா` வில் இருக்கும் பெரும் பாதுகாப்பு பிரச்சனையை சுட்டி காட்டிய  ஷுபம் பரமஹம்சா எனும் இளைஞர்களுக்கு மிக கடுமையாகவே அந்த நிறுவனம் பதிலளித்திருந்தது.

கிரெடிட் கார்ட் விவரங்கள்,  வவுச்சர் எண்களும் மிக எளிமையாக பெற முடியும் என காண்பித்துள்ளனர். மூன்றே நிமிடங்களில் இதனை செய்து முடித்ததாக கூறி அந்த வீடியோவை பதிவு செய்தனர்.
ஹேக்கர் என்பதையே திருட்டு கும்பல் போல சித்தரிக்கும் சினிமாவிற்கும் இதனில் பங்கு உண்டு. த்திக்கல் ஹேக்கிங்  என்ற படிப்பே உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகமே இணையத்தில் இயங்கும் காலத்தில் இது போன்ற படிப்புகளை தேர்ந்தெடுப்போருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


 ஐ.மா.கிருத்திகா
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

பொறியியல் இனி மெல்ல சாகும்!

பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் விதிமுறைகளை குறித்து தான் இன்று சமூக வலைதளங்கள் எங்கும் பேச்சு. ஆனால் இந்த விதிமுறைகள் எதுவும் இன்று நேற்று முளைத்தவை அல்ல. அப்படி இருக்கும் போது திடீரென்று எதற்காக இதற்கு எதிரான போராட்டம் என்ற் கேள்வி கட்டாயம் நம் மனதில் எழும்.

இன்று பலரின் போராட்டம்  ஒரு ஸ்டேட்டஸில் ஆரம்பித்து, சில பல கமெண்ட் சண்டைகளில் முடிந்து விடுகிறது. சமூக வலைதளங்களின்  பேராற்றலுக்கு இதுவே சான்று. போராட சாலைகளில் இறங்க வேண்டாம், மறியல் வேண்டாம், தடியடி வேண்டாம். ஒரு ஸ்மார்ட்ஃபோன் போதும் இருந்த இடத்திலேயே உலகை மாற்றலாம்.

ஒரு காலத்தில், ஊர் உலகமே சென்று பொறியியல் கல்லூரிகளில் விழுந்தது, ஆனால் இன்று நிலைமை தலைகீழ். ஒவ்வொரு கல்லூரியை மற்றொன்றை தாண்டி முன்னேற கையில் எடுத்துகொண்ட ஆயுதம் தான் பரீட்சை முடிவுகள். மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும் என்பதை மறந்து, அவர்களை புத்தகங்களை மனப்பாடம் செய்யும் கருவிகளாக மாற்றவே விழைந்தனர்.


இதற்காக கொண்டு வந்த கட்டுபாடுகளும் விதிமுறைகளும் கல்லூரியை சிறையாக மாற்றியது. ஆனாலும் பெற்றோர் முந்தி அடித்து தங்கள் பிள்ளைகளை எப்படியாவது லட்சங்களை கொட்டியாவது அங்கே சேர்த்து விட துடிக்கிறார்கள். நல்ல வேலை 100 % பிளேஸ்மெண்ட் என கல்லூரிகள் போடும் வலைகளில் சிக்குவது ஒன்றும் அறியாத கிராமப்புற பெற்றோர் மட்டும் அல்ல. கண்டிப்பு இருந்தால் தான் ஒழுக்கம் வரும் என நம்பும் அனைத்து பெற்றோர்களும் தான்.

அது தான் இந்த கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாகிவிடுகிறது, கண்டிப்புக்கு இவர்கள் கொடுக்கும் வரையறைகளில் தான் பிரச்சனை.  அந்த பட்டியல் அனைவரும் அறிந்ததே, ஆனால் இத்தகைய ஹிட்லர் ஆட்சி இருந்தால் தான் மாணவர்கள் படிப்பார்கள் என்பதில் துளியும் உண்மை இல்லை.
கல்லூரி காலம் பல வகையான அனுபவங்களை கற்று தர வேண்டும், அவற்றை புத்தகங்களுக்குள் அடக்குவது தற்காலிகமான நல்ல மதிப்பெண்களை தந்தாலும், காலப்போக்கில் அவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் நிராகரிக்கும் நிலைக்கே கொண்டு செல்கிறது.

இந்தியாவில் வருடத்திற்கு 600,000  பொறியியலாளர்கள் வெளி வருகிறார்கள் , ஆனால் இவர்கள் ஒரு சொற்ப அளவிலான மாணவர்களே வேலை வாய்ப்புகளுக்கு தயாராக இருக்கின்றனர். பி.பி ஓ வில் கூட நல்ல வேலைகளுக்கு  11.5 % பொறியியலாளர்களே தகுதி பெறுகிறார்கள். பல மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது சிக்கலாக இருப்பதால், இந்த வேலை வாய்ப்பு  பறி போகிறது.

முழுமையான கல்வி என்பது வகுப்பறைக்குள் மட்டும் அல்ல, வெளியுலக அனுபவங்களிலும் தான். எத்தனையோ படிப்புகள் இருக்க பொறியியலிலும், மருத்துவத்திலும் நாம் ஆட்டு மந்தை போல விழுவதால் தான் இந்த நிலை. ஏ. ஐ. சி. டி. ஈ. எனப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி மன்றம், இளங்கலை பொறியியல் சேர்க்கையை 40 % குறைக்க முடிவு எடுத்து உள்ளது. ஐ.ஐ.டி, பி. ஐ.டி. எஸ் போன்ற பெரிய கல்லூரிகளை தவிற மற்ற பல கல்லூரிகளில் இருந்து வேலைக்கு எடுக்கப்படும் மாணவர்கள் தகுதியற்று இருக்கின்றனர். 
நாஸ்காம்  2011 இல் நடத்திய ஆராய்ச்சியின் படி 17.5 % மாணவர்கள் மட்டுமே சாஃப்ட்வேர் துறையில் வேலை செய்ய தகுதி பெற்றிருந்ததாக கூறுகிறது. ஆசிரியர், மற்றும் கல்லூரியின் தரத்தை உயர்த்தவே இந்த முடிவு.

சமூகத்தை புரிந்து கொள்ள வேண்டிய மாணவர்களை சமூக வலைத்தளங்களையே பயன்படுத்த கூடாது என தடுத்து, எடுத்ததற்கெல்லாம்  அபராதம் விதித்து, உடை , சிகை,பேச்சு என எந்த வித சுதந்திரமும் இல்லாமல். நான்கு சுவர்களுக்குள் பாடம் நடத்தி, அப்படி என்ன  கல்வியை கொடுத்த விட முடியும்?
மாணவர்களும் பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

ஐ.மா.கிருத்திகா
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Friday, August 21, 2015

கூகுளைவிட துல்லியமான தேடல் பொறி! - சவால் விடும் 16 வயது மாணவன்

நாம் தினம் ஒரு முறையாவது பயன்படுத்திவிடும் கூகுளில், எதைத் தேடினாலும் நொடி நேரத்தில் ஐந்தாறு இலக்கங்களில் தேடல் முடிவுகளை கொட்டிவிடும். இருந்தாலும் இரண்டு பக்கங்களுக்கு மேல் போகவே மாட்டோம். ஏனெனில் அந்த அளவுக்கு துல்லியமாக நமக்கு என்ன வேண்டுமோ அதை முதலில் தர வல்லது கூகுள் தேடல் பொறி. ஆனால் இந்த பதின்ம வயது சிறுவன், கூகுளுக்கே சவால் விடுகிறார்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடிமகனான அன்மோல் டக்ரெல் என்பவர், தான் கண்டுபிடித்துள்ள தேடல் பொறி, கூகுளைவிட 47% துல்லியமாகவும் சராசரியாக 21% அதிக துல்லியமாகவும் இருப்பதை நிரூபித்துள்ளார்.

இந்த தேடல் பொறி, கூகுள் நடத்திய ’Google Science fair’ எனும் ஆன்லைன் போட்டிக்காக அன்மோல் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அன்மோல் பயன்படுத்தியது ஒரு 1ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஒரு கணினி, பைத்தான்-மொழி மேம்பாட்டுத் தொழில்நுட்பம், விரிவுத்தாள் செய்நிரல் (spreadsheet program) போன்ற சொற்பமான கருவிகளே!
"இப்போதைய தேடல் பொறிகள் ஒருவருடைய இருப்பிடம், இணைய உலாவல் வரலாறு, மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ள ஆப்ஸ் போன்றவற்றை கருத்தில் கொண்டே இயங்குகின்றன. ஆனால் இது சமன்பாட்டின் ஒரு பக்கம்தான். என் தேடல் பொறி இதன் இன்னொரு பக்கத்தையும் பயன்படுத்தி தேடல் முடிவுகளை வழங்குகிறது. ஒருவர் தேடும் வாக்கியத்தில் உள்ள உள்ளர்த்த்ததை ஆராய்ந்து, அவர் என்ன மாதிரியான முடிவுகளை விரும்புவார் என்று என் தேடல் பொறி கணித்து, பிறகே முடிவுகளை வெளியிடும்" என்கிறார் அன்மோல்.


இதை வடிவமைப்பதற்கு 60 நாட்களும், கோடிங் (coding) செய்வதற்கு 60 மணி நேரமும் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார் பதினோராம் வகுப்பில் அடியெடுத்து வைக்கப்போகும் இந்த இளம் ஜீனியஸ்.



பெங்களூரிலுள்ள ஐஸ்க்ரீம் லேப்ஸ் எனும் நிறுவனத்தில் இரண்டு வார பயிற்சி வகுப்பிற்காக வந்திருந்தார் அன்மோல்.

அதன் இணை நிறுவனரும் ’மிந்த்ரா’ நிறுவனத்தின் முன்னாள் மார்க்கெட்டிங் மேலாளருமான சஞ்சய் ராமகிருஷ்ணன், “ஏற்கனவே பெரும் வெற்றிகண்ட கூகுள் தயாரிப்போடு போட்டி போட்டு அதை விட ஒரு நிலை மேம்படுத்தி செயல்படுத்துவதென்பது அசாத்தியமானது” என்று வியக்கிறார்.


தன் மூன்றாம் வகுப்பிலேயே ப்ரோக்ராமிங் படிக்கத் தொடங்கிவிட்ட அன்மோல், ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பது தன் கனவென்கிறார். ஆனால் இவரைச் சுற்றியுள்ளவர்களோ, சில உலக ஜாம்பவான்களைப் போல தன் யோசனைகளை செயல்படுத்த இவரும் கல்லூரி செல்வதை புறக்கணித்துவிடுவாரா? என கேள்வி எழுப்ப, “கல்லூரிப் படிப்பை புறக்கணிப்பது உண்மையில் முட்டாள்தனம். நம் யோசனைகள்தான் சிறந்தது, இதற்கு மேல் எதுவும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்ற கர்வம் கொள்ளக் கூடாது” என அட்டகாசமாக பதிலளிக்கிறார்.

இது மட்டுமல்ல, இப்போதே பெற்றோர் அனுமதியோடு டகோகேட் கம்யூட்டர்ஸ் (Tacocat Computers) என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


சுந்தர் பிச்சை vs அன்மோல் டக்ரெல்! சபாஷ், சரியான போட்டி!

விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Friday, July 24, 2015

இனி நோ டென்ஷன்!

''டென்சன் ஆகாதீங்கண்ணே... லெஸ் டென்சன்... மோர் வொர்க்!'' - ஒரு படத்தில் செந்தில் இப்படிச் சொல்வார். இன்றைய காலகட்டத்தில் இது எல்லோருக்கும் பொருந்தும். ''டென்ஷனா இருக்கு'' என்ற சொல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 
போட்டிகளும் சவால்களும் நிறைந்த இந்த உலகில், வாழ்வில் வெற்றி பெற எப்படியாவது முன்னேற வேண்டும் என்று இயங்குகின்ற இன்றைய இளைஞர்களுக்கு, 24 மணி நேரம் போதவில்லை. படிப்பு முடிந்த கையோடு, சம்பாதிக்க வேண்டும் என்று சகல வழிகளையும் தேர்ந்தெடுத்து, கார்ப்பரேட் களத்தில் இறங்கும் நமக்கு, சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் மட்டும் நிம்மதி தங்கிவிடுகிறதா என்ன? அங்குதான் ஆரம்பிக்கிறது அடுத்தக் கட்டப் பிரச்னைகள். அலுவலக வேலைச் சூழலில் தங்களது வாழ்க்கையைச் சிக்கவைத்துக்கொண்டு அவதிப்படுபவர்கள் அதிகம். காரணம் அதிக வேலை தரும் டென்ஷன்! விளைவு, ஒவ்வொரு முறையும் தன் மேலதிகாரி கூப்பிடும்போது நகத்தைக் கடித்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.
கஷ்டமான அலுவலக வேலைகளையும் எளிதாக, சந்தோஷமாக மாற்றிக்கொள்ளும் நான்கு வித்தைகளைச் சொல்கிறார்கள் மனநல மருத்துவர்கள் அசோகன் மற்றும் தியாகராஜன் இருவரும்.
தெளிவாகத் திட்டமிடலாம்!
 மன அழுத்தம் என்பது வாழ்வில் அன்றாடம் நடக்கக்கூடிய ஒரு விஷயம். மன அழுத்தம் வந்தாலும், மூளை தன்னைத் தயார்படுத்திக்கொண்டு எதையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடும்.
 குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையைச் செய்து முடிக்க முடியாத நிலையில்தான் ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, நேர நிர்வாகம் மிக முக்கியம். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு முன்பு, அதை எப்போது, எப்படி முடிக்கப்போகிறோம் என்று திட்டமிடுங்கள். 
எதை முதலில் செய்ய வேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை முடிவுசெய்து பணியைத் தொடங்குங்கள். டென்ஷன் நெருங்கவே நெருங்காது.

 மன அழுத்தம் ஏற்பட்டால், முன்பு இதேபோன்ற சூழ்நிலையை எப்படி வெற்றிகரமாகக் கையாண்டோம் என்பதை எண்ணிப்பாருங்கள். பயம், பதட்டம் விலகி தைரியம் பிறக்கும்.
 அலுவலகத்துக்குச் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ, வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தாலோ, பலருக்கு மன அழுத்தம் வரும். இதை முன்கூட்டியே எதிர்பார்த்து, அதற்கேற்ப முன்கூட்டியே கிளம்புவதன் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.
 மன அழுத்தம் இருந்தால், அந்த விஷயத்தைத் தீர்க்க முயற்சி செய்யவேண்டும். அதையே யோசித்து, விளைவுகளை எண்ணி, இன்னும் மன அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ளக் கூடாது. தீர்வைக் கண்டுபிடிப்பதன் மூலம், நம் குறிக்கோள்களைச் சென்று அடைவதற்கான வழி கிடைத்துவிடும்
 நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்பது மாதிரியான நெருக்கடி நேரங்களில் இரவில் வேலை செய்வது தவிர்க்க முடியாதது. அதற்காகத் தினமும் அலுவலக வேலையில் மட்டும் பழியாய் கிடப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அலுவலக வேலைகளை வீட்டுக்குக் கொண்டுவருவதும் தவறு. இதனால், குடும்ப உறவில் பாதிப்பு ஏற்படலாம்.
 நாம் இல்லாத நேரத்தில், ஏதேனும் முக்கியமான விஷயம் நடந்து, அதை நாம் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயத்திலேயே பலர் அலுவலகத்திலேயே ஆணி அடித்தாற்போல் இருப்பார்கள். இதுவும் தவறு. நீங்கள் இல்லை என்றாலும், உங்களின் பணி வேறு ஒருவரால் செய்யப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
 'உன்னால் விழுங்க முடியாததைக் கடிக்காதே’ என்று ஒரு முதுமொழி உண்டு. அதன்படி யார் எந்த உதவி கோரினாலும், கூடுதல் பணியைக் கொடுத்தாலும், அது நம் கடமையாக இல்லாதபோதும், மரியாதை நிமித்தமாக செய்து தருவதாக ஒப்புக்கொண்டு முடிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்காதீர்கள். அந்த வேலையை உரிய நேரத்தில் செய்ய இயலாது என நிச்சயமாகத் தெரிந்தால், 'மன்னிக்கவும் இதை நான் ஏற்பதற்கு இல்லை’ என்று சொல்லுங்கள்.
 பணியில் இருக்கும்போது, கூடுமானவரை அடிக்கடி டீ, காபி குடிப்பது, அரட்டை அடிப்பது என்று அலுவலக நேரத்தை வீணாக்காதீர்கள். இவையெல்லாம் உங்களை இன்னும் பதட்டப் பேர்வழியாக மாற்றுவதோடு, உங்கள் உடல் நலத்துக்கும் வேட்டு வைத்துவிடும்.
 அடுத்தவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ஒரு சிலருக்கு அலாதியான சந்தோஷம். அடுத்தவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள். இதனால், நாம் செய்யவேண்டிய வேலைகள் மீது கவனம் திரும்பும். மனம் லேசாகும். தங்களுடைய திறமைக்குறைவினால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையின் விளைவாகச் சிலர் வேண்டும் என்றே உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருந்து விலகி இருப்பது நல்லது.
உற்சாகமாக உழைக்கலாம்!  
 ஐம்புலன்களையும் எப்போதும் விழிப்பு உணர்வுடன், கூர்மையாகவும் உற்சாகமாகவும் வைத்திருந்தால் ஒருவித த்ரில் நம்மில் ஊடுருவுவதை உணர முடியும். அந்த த்ரில்லே ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உற்சாக மனநிலைக்கு நம்மை மாற்றும்.
 சக மனிதர்களுடன் அன்புடன் பழகுங்கள். இதனால், மனதில் கோபம், பகை, பொறாமை, விரோதம் போன்ற அனைத்துத் தீயகுணங்களும் அடித்துச் செல்லப்படும். வேலையிலும் ஆர்வம் அதிகரிக்கும்.
  எந்த வேலையையும் ஒரு விளையாட்டாக, பொழுதுபோக்காகச் செய்யுங்கள். நம் எண்ண ஓட்டத்தைப் பொருத்துக் கடினமான வேலைகள்கூட எளிதாக மாறும். வேலை செய்யும் சோர்வே இருக்காது.
 சிலர் இயல்பிலேயே சின்ன விஷயத்துக்கும் அதிகமாகப் பதட்டப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள், தினமும் தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் செய்வதன் மூலம் பதட்டம் குறைந்து, எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைப் பெற முடியும்.
  'எதிலும் மீண்டு வருவோம்’ என்று எவ்வளவுக்கு எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கி றோமோ, அந்த அளவுக்கு மன அழுத்தம் குறையும்.
வேலையில் வெற்றி காணலாம்!
 சக அலுவலரின் சாதனையை முறியடிக்க வேண்டுமெனப் போட்டியிடுவது நல்ல விஷயம்தான். இதற்கு ஒரே வழி, நாம் நம் தகுதியை வளர்த்துக்கொள்வதுதான். தகுதி உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதும், அவர்களை மட்டம்தட்டும் விதத்திலும் செயல்படுவது உடல் மற்றும் மன நலன்களைப் பாதிக்கும்.
 எந்தக் காரணத்துக்காகவும் வேலையைத் தள்ளிப்போடாதீர்கள். அந்த வேலை பிடிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக முடித்துக் கொடுங்கள். 'ஐயோ... இந்த வேலை செய்யவே எனக்கு பிடிக்கலை...’ என்று நினைத்தாலே மனதில் சோர்வு வந்து புகுந்துகொள்ளும்.
 மன அழுத்தத்தைக் குறைக்கிறேன் என்று புகை, குடி என்று பாதை மாறாதீர்கள். இதனால், நிலைதடுமாறுதல், தரம் தாழ்ந்துபோதல், எல்லை மீறுதல், வரம்பு மீறுதல், கீழ்த்தனமாக நடந்துகொள்ளுதல் போன்றவை நிகழக்கூடும். வேலைக்கும் உலை வைக்கும்.
 மாற்றங்கள் என்பது என்றும் மாறாது. அதற்கு நம்மை உட்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். 'நான் இப்படித்தான் இருப்பேன்...’ என்று வறட்டுப்பிடிவாதம் முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.  
 குறுகிய வழிகளை யோசிக்கக் கூடாது. ஒருவர் அலுவலகத்தில் உயர் அதிகாரியிடம் பாராட்டுப் பெறுகிறார் என்றால், 'நம்மால் வாங்க முடியவில்லையே’ என்று வருத்தப்படலாம். ஆனால், 'வேறு ஒருவர் வாங்கிவிட்டார், அதனால் நம்மால் இனி வாங்கவே முடியாது’ என்கிற ரீதியில் யோசிக்கக் கூடாது. எதையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ரேவதி, உ.அருண்குமார்
 மருந்தும் மன அழுத்தத்தைக் குறைக்கும்
''நம் மூளை நரம்பு மண்டலத்தில் 'அட்டானமஸ் நெர்வஸ் சிஸ்டம்’ (Autonomous nervous system) என்று ஒரு பகுதி உள்ளது.  இதில் 'பீட்டா’(Beta) என்ற நரம்புத் தொகுதி கூடுதலாகத் தூண்டப்பட்டு ஒரு சிலருக்கு இதயத் துடிப்பு அதிகரிப்பது, அதிகம் வியர்ப்பது, தசை துடிப்பது, கை கால் நடுங்குவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதை மருத்துவர்கள் 'பீட்டா பிளாக்கர்’ Beta Blocker (Propranolol/Atenolol) எனும் ஒரு வகை மருந்தினால் கட்டுப்படுத்துவது உண்டு. அதேபோல் ஆங்சைட்டி என்ற மனம் சார்ந்த பதட்டம் ஏற்படும் நபருக்கு 'மைனர் ட்ரான்க்குலைஸர்’ (Minor Tranquillizer) எனும் ஒரு வகை மன அமைதிக்கான மாத்திரைகளை சில காலம் பயன்படுத்துவது நல்ல பயனைத் தரும். மருத்துவரைக் கலந்து ஆலோசித்து அறிவுரையின் பேரில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது நல்லது.
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Tuesday, July 21, 2015

பாஸ்பிரேஸ்: இனி உங்க பாஸ்வேர்டை திருட முடியாதுங்கோ...!

ணையத்தில் தாக்காளர்கள் கைவரிசை காட்டிஆயிரக்கணக்கில் பாஸ்வேர்டுகளை களவாடுவது பற்றி எல்லாம் படிக்கும்போது,  'நம்முடைய பாஸ்வேர்டு பலமானதுதானா?' என்ற சந்தேகமும் அச்சமும் உங்களுக்கு ஏற்படலாம்

இத்தகைய அச்சம் உண்டாவது நல்லதுதான். அச்சம் மட்டும் போதாது, உங்களுடைய பாஸ்வேர்டு பலமானதுதானா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும். 'பொதுவாக எளிதில் ஊகித்துவிடக்கூடிய பாஸ்வேர்ட்கள் அதே அளவு எளிதாக தாக்காளர்களின் கைகளில் சிக்க கூடியது' என்கின்றனர். எனவே பாஸ்வேர்டு உருவாக்கத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் முறைகளை கைவிட்டு, எவராலும் எளிதில் ஊகிக்க முடியாத சிக்கலான பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர்.

ஆனால் சிக்கலான பாஸ்வேர்டு எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும்படியும் இருக்க வேண்டும். தாக்காளர்கள் உள்ளிட்ட இணைய விஷமிகளால் கண்டுபிடிக்க முடியாதபடி பாஸ்வேர்டை அமைத்துவிட்டு பின்னர் உருவாக்கியவரே அதை மறந்து தவிப்பதால் என்ன பயன்? இந்த சிக்கலுக்கு எளிதான தீர்வை சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் முன்வைக்கின்றனர். அது என்ன வழி என்று பார்ப்போம்...

பாஸ்வேர்டு என்றவுடன், உங்கள் பிறந்த தினத்தையோ அல்லது நெருக்கமானவர்களின் பெயரையோ நினைத்துப்பார்க்கத்தோன்றும். அவற்றை வைத்துக்கொண்டு தான் பாஸ்வேர்டை உருவாக்குவீர்கள். இவை எல்லாம் ஆபத்தானவை என்கின்றனர். ஏனெனில் தாக்காளர்கள் இதுபோன்ற விவரங்களை கொண்டு நீங்கள் யோசித்தது போலவே யோசித்து பாஸ்வேர்டை கண்டுபிடித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே வழக்கமான உத்திகளை எல்லாம் விட்டு விட்டு, பாஸ்பிரேசில் இருந்து துவங்க வேண்டும் என்கின்றனர். அதென்ன பாஸ்பிரேஸ்? ஏதேனும் ஒரு நீளமான வாசகத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள், அது தான் பாஸ்பிரேஸ். அந்த வாசகம் உங்களுக்கு பிடித்தமான பாடல் வரியாக இருக்கலாம், நாளிதழ் அல்லது நாவலில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம். குறைந்தது 10 வார்த்தைகளாக இருந்தால் போதுமானது. உதாரணத்திற்கு , இந்த வாசகத்தை எடுத்துக்கொள்வோம்: "My Daughter started at Kennedy College in 2006."

இது போன்ற பாஸ்பிரேசை தேர்வு செய்த பின், அவற்றில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை எல்லாம் வரிசையாக எழுதுங்கள். எல்லாம் பெரிய எழுத்துக்களில் இருக்க வேண்டும். அந்த எழுத்துக்கள் இப்படி வரும்: MDSAKCI2006. அட இதுவும் பாஸ்வேர்ட் போல இருக்கிறதே என தோன்றுகிறதா?



pass
இருங்கள், இந்த பாஸ்வேர்டை இன்னும் பலமாக்க வேண்டும். இந்த எழுத்து வரிசையில் எங்கெல்லாம் முடியுமா அந்த எழுத்துக்களுக்கு பதில் குறியீடுகளை போடவும். உதாரணத்திற்கு S மற்றும் A எழுத்துக்களுக்கு பதிலாக டாலர் குறியீடு ( $) மற்றும் இமெயில் குறியீடு (@) பயன்படுத்தவும். இப்போது உங்கள் பாஸ்வேர்டு இப்படி மாறியிருக்கும்: MD$@KCI2006.

இதன் பிறகு எந்த எழுத்துக்களை சிறிய எழுத்தாக மாற்றலாம் என பார்த்து மாற்றிக்கொள்ளவும். அதாவது இப்படி:  Md$@KCi2006. இப்போது பாதுகாப்பாக இருக்க கூடிய சூப்பர் ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் தயார். அது மட்டும் அல்ல, இந்த பாஸ்வேர்டு, பெரும்பாலான சேவைகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு பொருந்தியும் இருக்கும்.

இப்படி நீங்களும் மிக எளிதாக வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம். இது பார்க்க சிக்கலாக தோன்றினாலும் அதை உருவாக்க பயன்படுத்த மூல வாசகத்தை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும் பாஸ்வேர்டை உருவாக்கிய வழிமுறைகளை கொண்டு, அதை எளிதாக நினைவில் கொள்ளலாம்.


ஆனால் ஒன்று, என்னதான் வலுவான பாஸ்வேர்டாக இருந்தாலும் அதையே ஒன்றுக்கும் மேற்பட்ட இணைய சேவைகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே ஒவ்வொரு சேவைக்கும் ஒரு தனி பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவும் கூட எளிதானதே.


நீங்கள் உருவாக்கிய மூல பாஸ்வேர்டை அடிப்படையாக வைத்துக்கொள்ளுங்கள். எந்த சேவைக்கு புதிய பாஸ்வேர்டு தேவையோ, அந்த சேவையின் பெயரில் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை தனியே எழுதி அவற்றை பாஸ்வேர்டின் முதலிலும் கடைசியிலும் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் ஒரு புதிய பாஸ்வேர்டு தயார். இதே முறையில் எல்லா சேவைகளுக்கான தனித்தனி பாஸ்வேர்டை அமைத்துக்கொள்ளலாம். எல்லாமே நினைவில் நிற்க கூடியதாகவே இருக்கும்.


பாஸ்பிரேஸ் கொண்டு பாஸ்வேர்டு அமைப்பதில் என்ன அணுகூலம் என்றால், ஒருவரது பாஸ்வேர்டை கண்டுபிடிக்க வேண்டும் என தாக்காளர்கள் முயலும் பட்சத்தில் அவர்கள் பிறந்த தேதி, செல்லப்பெயர் போன்ற அந்தரங்க விவரங்களை சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றின் அடிப்படையில் எழுத்துக்களையும் எண்களையும் மாற்றி மாற்றி போட்டுப்பார்த்து சரியான பாஸ்வேர்டை ஊகித்து விடுவது சாத்தியம்தான். ஆனால் எந்த கில்லாடி தாக்காளராலும், ஒருவர் மனம் போன போக்கில் தேர்வு செய்த பாஸ்பிரேஸ் வாசகத்தை ஊகிக்கவே முடியாது. எனவே இந்த வகையிலான பாஸ்வேர்டுகள் மிகவும் பாதுகாப்பானவை.


இன்னொரு விஷயம் எக்காரணம் கொண்டும் பாஸ்வேர்டை துண்டு சீட்டிலோ அல்லது கம்ப்யூட்டரில் வேர்ட் பைலிலோ ,எக்செல் பைலிலோ குறித்து வைக்க வேண்டாம். பாதுகாப்பிற்காக தேவை என கருதினால், ஜிடிரைவ் அல்லது டிராப்பாக்ஸ் போன்ற கிளவுட் சேவைக்குள் அந்த கோப்பை பாதுகாத்து வைக்கவும். 


- சைபர்சிம்மன்

விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.  

Monday, July 13, 2015

நோக்கியாவை டைவர்ஸ் செய்தது மைக்ரோசாஃப்ட் - ஒரு விரிவான அலசல்!

நோக்கியாவை லாபம் தராத முதலீடாக ஒதுக்கிவிட்டது மைக்ரோசாஃப்ட். கடந்த வருடம்தான் நோக்கியாவை 7.6 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. முன்னாள் மைக்ரோசாஃப்ட் தலைவர் ஸ்டீல் பால்மர் -ன் இந்தக் காரியம் அப்போதே தீவிரமாக விமர்சிக்கப்பட்டது. இந்நாள் தலைவர் சத்யா நாதெள்ள, அந்தத் தவறை இப்போது சரிசெய்ய விரும்புகிறார் போல.
/microsoft-writes-off-nokia
 
'நிர்வாகத்தில் கடுமையான முடிவுகளை எடுக்கப்போகிறோம். தயாராக இருங்கள்’ என்று கடந்த ஜூன் மாதமே சத்யா அனைவருக்கும் மெமோ அனுப்பியிருந்தார். இப்போது விண்டோஸ் ஃபோன் ஹார்டுவேர் துறையில் பணிபுரியும் 7,800 பேரை வேலையில் இருந்து நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளார் சத்யா நாதெள்ள. மேலும், 7.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள நோக்கியா முதலீடை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஒதுக்கிவிட்டார் சத்யா.

என்ன பிரச்னை?

விண்டோஸ் ஃபோன் வர்த்தகம் இருக்கட்டும். மைக்ரோசாஃப்ட்-ன் எதிர்காலமே யாராலும் கணிக்க முடியாதது போல் இருக்கிறது. கூகுள், ஆப்பிள்  போன்று  தன்னுடைய எதிர்காலம் குறித்த தெளிவு இல்லாமல் மைக்ரோசாஃப்ட் தடுமாறுவதாக எக்ஸ்பர்ட்டுகள் கருதுகிறார்கள்.

ஆனால் பிரச்னையே மைக்ரோசாஃப்ட்டை ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களோடு ஒப்பிடுவதுதான். ஏனென்றால், அடிப்படையில் மைக்ரோசாஃப்ட் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம். ஆப்பிள் ஒரு ஹார்டுவேர் நிறுவனம். தன்னுடைய விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை உலகம் முழுக்க கொண்டுசேர்த்ததுதான் மைக்ரோசாஃப்ட்-ன் சாதனை. தன்னுடைய கேட்ஜெட்டுகளை உலகம் முழுக்க ‘கெத்து’ கேட்ஜெட்டுகளாக மார்கெட் செய்தது ஆப்பிள்-ன் சாதனை.

                                                   
 
இங்குதான் ஒரு ட்விஸ்ட். மைக்ரோசாஃப்ட் நிறுவனமும்தான் ஸ்மார்ட்ஃபோன்களைத் தயாரித்தது. ஆனால், ஏன் பிரபலமாகவில்லை? இங்குதான் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும் ஒரே புள்ளியில் இணைகின்றன.  

ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஃபோன்கள் பெறும் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் அதன் டிஸைனோ, ஆபரேட்டிங் சிஸ்டமோ, வசதிகளோ இல்லை. பிஸினஸ் எக்கோசிஸ்டம்தான் இவற்றின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

ஆப்பிள் நிறுவனம் ஹார்டுவேர், சாஃப்ட்வேரை மட்டும் உருவாக்கிவிட்டு, அப்ளிகேஷன் டெவலப்பர்களுக்கு கதவைத் திறந்துவிட்டது. அதனால், அதன் வர்த்தகம் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கொடுத்துவிட்டு, அப்ளிகேஷன் டெவலப்பர்களை வாரியணைத்துக்கொண்டது. சாம்சங், எல்ஜி, லெனோவோ போன்ற ஹார்டுவேர் நிறுவனங்களுக்கு இதுபெரும் வசதியாகப்போய் விட்டது. முன்புபோல் ஒவ்வொரு ஃபோனுக்கும் தனித்தனியாக ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கத் தேவையில்லை. ஹார்டுவேரை மட்டும் உருவாக்கிவிட்டு, நிம்மதியாக இருந்தன. இந்த பிஸினஸ் எக்கோசிஸ்டத்தை மைக்ரோசாஃப்ட் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.  


பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் ஃபோன் முயற்சி மூலம்  ஒரு அப்ளிகேஷன் டெவலப்பர், ஹார்டுவேர் உருவாக்கம், ஆபரேட்டிங் சிஸ்டம் டெவலப்மென்ட் என அனைத்து துறைகளையும் தானே செய்துகொள்ளமுடியும் என்று நினைத்ததுதான் மைக்ரோசாஃப்ட்-ன் தவறு. அவசரப்பட்டுவிட்டோம் என்று சுதாரிப்பதற்குள் நோக்கியாவையும் வாங்கி தன்கையை தானே கட்டிப் போட்டுக்கொண்டது மைக்ரோசாஃப்ட்.

என்னதான் நோக்கியாவை வைத்துக்கொண்டு மைக்ரோசாஃப்ட் ஃபோன்களை விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் லூமியா ஃபோன்களைக் கொண்டுவந்தாலும் சந்தையில் எடுபடவில்லை. காரணம், அப்ளிகேஷன் டெவலப்பர்களை முழுமையாக உள்ளே விடாமல் இருந்ததால்தான். இன்னொரு பக்கம் ஆப்பிள் உயர்ரக செக்மென்ட்டை குறிவைத்து ஒவ்வொரு முறையும் வெற்றிபெற, ஆண்ட்ராய்டு ‘மாஸ் ஆடியன்ஸ்’ ஃபார்முலாவில் எல்லோர் கையிலும் ஸ்மார்ட்ஃபோனைத் திணிக்க, தன்னுடைய டார்கெட் வாடிக்கையாளர்கள் யார் என்பதிலேயே இன்னும் குழப்பமாக இருந்தது மைக்ரோசாஃப்ட்.  உயர்ரக லூமியா ஃபோன்கள் விற்பனைக்கு வரும். ஒரே மாதத்துக்குள் பட்ஜெட் லூமியா ஃபோன்களும் வரும். ஆப்பிள் இந்தத் தவறை செய்ததே இல்லை. ஒரு ஃபோன் என்றாலும் கெத்தாக சந்தைப்படுத்தும் வல்லமை படைத்தது ஆப்பிள்.

லூமியா ஃபோன்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த மார்கெட் ஷேர் மிகவும் குறைவு. காரணம், iOS மற்றும் ஆண்ட்ராய்டு-ன் மார்கெட் ஷேர் மிக மிக வேகமாக எகிறிக்கொண்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட்-ன் ஃபோன் பிஸினஸ் கடந்த மூன்றாவது காலாண்டில் 1.4 பில்லியன் டாலர் வருவாயைக் குவித்திருக்கிறது. அதிகமாகத் தெரிகிறதா? இதே சமயம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் பிஸினஸ் வருவாய்  மட்டும் 40.3 பில்லியன் டாலர்கள்!

அப்ப விண்டோஸ் ஃபோன் அவுட்டா?

ஃபோன் மார்கெட்டை புரிந்துகொண்டிருப்பதிலேயே தவறு இருக்கிறது என்பதை சமீபத்திய அறிக்கையில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சத்யா நாதெள்ள.


சத்யா நாதெள்ள அனுப்பிய மெமோவில் இருந்து சில வரிகள்:

“I am committed to our first-party devices including phones. However, we need to focus our phone efforts in the near term while driving reinvention. We are moving from a strategy to grow a standalone phone business to a strategy to grow and create a vibrant Windows ecosystem that includes our first-party device family.”


ஸ்மார்ட்ஃபோன் வர்த்தகத்தில் எக்கோசிஸ்டம்தான் முதல் தேவை என்பதில் இப்போது தெளிவாக இருக்கிறது மைக்ரோசாஃப்ட். எப்படி?

சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் வரிசையாக அப்ளிகேஷன் நிறுவனங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தது. Wunderlist,Acompl, Sunrise போன்ற iOS, ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் இப்போது மைக்ரோசாஃப்ட்-இடம். ஃபோன் பிஸினஸுக்காக தன்னை மேலும் பலப்படுத்தி வருவதற்கான சிக்னல் இது.


 

இத்தனைக்கும் மைக்ரோசாஃப்ட்-ன் சமீபத்திய அப்ளிகேஷனான Tossup விண்டோஸ் ஃபோனுக்குக் கிடையாது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்களில் மட்டுமே இருக்கிறது அந்த அப்ளிகேஷன். மைக்ரோசாஃப்ட்-ன் சொந்த ஒன்நோட், ஒன்டிரைவ் போன்ற அப்ளிகேஷன்களை இப்போது ஆண்ட்ராய்ட்-ல் இயங்கு சாம்சங் கேலக்ஸி S6 ஃபோனில் ப்ரி-இன்ஸ்டால் செய்து வாங்கமுடியும். அதற்காக சாம்சங்குடன் ஒப்பந்தமும் போட்டிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இப்போது அப்ளிகேஷன் டெவலப்பர்களையும் ஆண்ட்ராய்டு, iOS-க்கு அப்ளிகேஷன்களை டெவலப் செய்யச் சொல்கிறது மைக்ரோசாஃப்ட். 
இன்னும் எக்ஸ்க்ளூசிவ்வான தகவல், மைக்ரோசாஃப்ட்-ன் Cortana பெர்சனல் டிஜிட்டல் அஸிஸ்டன்ட் iOS, ஆண்ட்ராய்டு ஃபோன், டேப்லட்களுக்கு வர இருப்பதுதான்.
ஜூலை 29-ம் தேதி உலகம் முழுக்க விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம் விற்பனைக்கு வர இருக்கிறது. கம்ப்யூட்டர்கள், டேப்லட்கள், ஃபோன்கள் என அனைத்து சாதனங்களிலும் ஒருங்கிணைந்து இயங்கக்கூடியது இந்த ஆபரேட்டிங் சிஸ்டம். இனி, ஒரு அப்ளிகேஷன், கேம், சாஃப்ட்வேர் டெவெலப்பர்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு தனித்தனியாக டெவலப் செய்யத் தேவையில்லை. ஒரே கோடிங்தான்! யூஸர் இன்ட்டர்ஃபேஸ் மட்டும் மாறுபடும். இது டெவலப்பர்களுக்கு வரப்பிரசாதம்!பின்னாலேயே ஹார்டுவேர் நிறுவனங்களும் வந்துவிடும்.
எனவே, விண்டோஸ் ஃபோன் வர்த்தகத்தை மைக்ரோசாஃப்ட் முழுமையாக கைவிடவில்லை. விண்டோஸ் 10 எனும் ஒரே ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் டெஸ்க்டாப், மொபைல், டேப்லட் என 3 கோல்களையும் போட இருக்கிறது மைக்ரோசாஃப்ட்.
பதுங்கிப் பாயத் தயாராகிவிட்டதோ மைக்ரோசாஃப்ட்?
ர. ராஜா ராமமூர்த்தி