கண்ணாடியும், பளிங்குக் கல்லுமாய்ப் பளபளக்கும் கட்டிடங்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சவால் விடும் வசதிகள். படித்து முடிக்கும் முன்பாகவே, காம்பஸில் தேடி வந்து வேலை தரும் கம்பெனிகள். கை நிறையச் சம்பளம். நாம் கும்மிடிப்பூண்டி போவதுபோல், அடிக்கடி அமெரிக்கா பயணம். வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு சாஃப்ட்வேர் கம்பெனிகள், பி.பி.ஓக்கள், பூலோக சொர்க்கங்கள்.
இந்த சொர்க்கங்களுக்கு இன்னொரு சோகப் பக்கம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? தலைக்கு மேல் எப்போதும், ஒரு கத்தி தொங்கும் – வேலை எப்போதும் பறிக்கப்படலாம். அமெரிக்காவில் மிகப் பரவலாக இருக்கும் Hire and fire policy நம் நாட்டுக்கும் வந்துவிட்டது. அதாவது, வேலை நிரந்தரம் கிடையாது. பிஸினஸ் நன்றாக ஓடுகிறதா, ஆயிரக்கணக்கில் ஆட்களை எடுப்பார்கள். பிஸினஸ் சரிகிறதா, வீட்டுக்கு அனுப்புவார்கள்.
சாஃப்ட்வேர், பி.பி.ஓ கம்பெனிகள் மட்டுமல்ல, எல்லாத் துறை நிறுவனங் களும், பிஸினஸ் சறுக்கும்போது ஆட்குறைப்பைத்தான் ஒரே வழியாக வைத்திருக்கிறார்கள். திடீரென வேலைகளை இழக்கும் போது, தொழிலாளிகளின் உள்ளங் களும், வருங்கால வாழ்க்கையும் சிதறிப்போகின்றன. ஊழியர்கள் மனம் காயப்படாமல், அவர்களுடைய வருங்கால வாழ்க்கை அதிகம் பாதிக்கப் படாமல் பணி நீக்கம் செய்ய வேண்டும்.
அதே வேளையில், நிறுவனத்தின் லாபத்திலும் அதிக சேதம் ஏற்படக்கூடாது. இது எப்படி முடியும்? போகாத ஊருக்கு வழி கேட்பது போல் இருக்கிறது என்று எல்லோரும் நினைப்போம். இல்லை, இது முடியும் என்று நிரூபிக்கிறது, டாடா ஸ்டீல் கம்பெனியின் அனுபவம். 1990 – களில் இந்திய இரும்பு உருக்குத் தொழில், மிகவும் பின் தங்கிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. ஜப்பான் நாட்டில் ஒரு தொழிலாளியின் சராசரி தயாரிப்பு ஆண்டுக்கு 602 டன்கள். கொரியாவில் 420 டன்கள், பிரேசில் நாட்டில் 218 டன்கள், டாடா ஸ்டீலில் வெறும் 57 டன்கள்.
1992 – இல் டாடா ஸ்டீல் மேனேஜிங் டைரக்டராக டாக்டர் இரானி பதவி ஏற்றார். இந்தியா தன் வாணிபக் கதவுகளை வெளி உலகத்துக்குத் திறக்கத் தொடங்கியிருந்த நேரம். கம்பெனி தன்னை மாற்றிக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை இரானி உணர்ந்தார்.
அவர் சொன்னார், “இன்றைய யுத்தங்களை மகாபாரத ஆயுதங்களால் ஜெயிக்க முடியாது. உலகளாவிய போட்டியை சமாளிக்க டாடா ஸ்டீலுக்கு இரண்டே இரண்டு வழிகள்தாம் – நவீன தொழில்நுட்ப உற்பத்தி முறையைப் பின்பற்றவேண்டும், தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிரடியாகக் குறைக்கவேண்டும். இல்லாவிட்டால், பாரம்பரியம் மிக்க இந்தக் கம்பெனி அழிந்தே போய்விடும்.”
டாடா ஸ்டீலின் முக்கிய தொழிற்சாலை ஜாம்ஷெட்பூர் நகரத்தில் இருக்கிறது. 1992 – இல், இங்கே, 78,300 பேர் வேலை பார்த்தார்கள். குறைந்தபட்சம் 30,000 பேரை வீட்டுக்கு அனுப்பவேண்டும். கம்பெனியின் பல்வேறு இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன, நிறுவனம் இருக்கும் நெருக்கடி நிலையை விளக்கின, 30,000 பேரை வேலையிலிருந்து நீக்கவேண்டிய கட்டாயத்தை விளக்கின.
யூனியன் – மேனேஜ்மென்ட் பேச்சு வார்த்தைகள் தொடங்கின. முதல் இரண்டு, மூன்று சுற்றுக்கள் – கம்பெனி நிர்வாகிகள் ஏன் 30,000 பேரை வேலை நீக்கம் செய்யவேண்டுமென்பதை நியாயப்படுத்தினார்கள். “ஏன் தொழிலாளி அடிமடியில் கை வைக்கிறீர்கள்? கம்பெனியில் ஏராளமான விரயச் செலவு நடக்கிறது. அதைக் கட்டுப்படுத்துங்கள்” என்று யூனியன் தலைவர்கள் புள்ளி விவரங்களை அடுக்கினார்கள். பேச்சு வார்த்தைகளில் இழுபறி.
நிர்வாகம் இப்போது, இரண்டு ஆலோசனைகளை முன்வைத்தது. கட்டாய வேலை நீக்கம் கிடையாது; விருப்பமாக வேலையை விட்டுப் போகிறவர்கள் மட்டுமே போனால் போதும். இரண்டாம் ஆலோசனை, நஷ்ட ஈடு தொடர்பானது.
அன்றைய தொழிலாளர் நலச் சட்டங்களின்படி, ஒருவரைப் பணி நீக்கம் செய்தால், பிராவிடண்ட் பண்ட் தவிர, அவருக்கு நிவாரணத் தொகை தர வேண்டும். இந்தத் தொகை, அவர் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு மாதச் சம்பளம் என்று கணக்கிடப்படும். சட்டம் நிர்ணயித்த இந்தத் தொகையைத் தருவதாக, டாடா ஸ்டீல் நிர்வாகம் சொன்னது. சுமார் 1000 தொழிலாளிகள் இதை ஏற்றுக்கொண்டார்கள். வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டார்கள்.
நிர்வாகத்தின் இலக்கு 30,000 பேர். சென்றவர்களோ 1,000 பேர். என்ன செய்யலாம்? தொழிலாளிகளுக்கு அதிர்ச்சி தர முடிவெடுத்தார்கள். யூனியனை அடுத்த சுற்றுப் பேச்சுக் களுக்கு அழைத்தார்கள். முதல் முயற்சி பலிக்காத மேனேஜ்மென்ட் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்று யூனியன் எதிர்பார்த்தது.
“முதலாளியா, தொழிலாளியா? ஒரு கை பார்த்து விடுவோம்” என்று வேலை நிறுத்தத் துக்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கியது. தொழிலாளிகளின் மனங் களில் பயம், நிர்வாகம் தொழிற் சாலையை மூடிவிட்டால் என்ன செய்வது? அவர்கள் குடும்பத்தோடு வசித்தது கம்பெனி குடியிருப்புகளில். தொழிற்சாலையை மூடினால், வீடுகளையும் காலி பண்ணவேண்டும்.
பேச்சு வார்த்தைகள் தொடங்கின. மேனேஜ்மென்ட் பிரதிநிதி தங்கள் ஆலோசனைகளை ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க, யூனியன் தலைவர்களுக்கும், தொழிலாளர் பிரதிநிதி களுக்கும் தாங்கள் கேட்பதை நம்பமுடியவில்லை. அப்படி என்ன தந்தது நிர்வாகம்?
வேலை நீக்கம் செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய சம்பளத்தின் 150 சதவிகிதத் தொகை, அவர்கள் ஓய்வுபெறும் 55 வயதுவரை வழங்கப்படும். அதாவது, வேலைக்கு வராமலே 50 சதவிகித அதிக ஊதியம்! பானர்ஜி என்பவர் தன் 20 – ம் வயதில் டாடா ஸ்டீலில் வேலைக்குச் சேர்ந்தார். இன்று அவர் வயது 40, மாதச் சம்பளம் 8000 ரூபாய். தொழிலாளர் சட்டப்படி, அவருக்குக் கிடைக்கவேண்டிய தொகை 8000 x 20 = 1,60,000 ரூபாய்.
டாடா ஸ்டீலின் புதிய திட்டப்படி, அவருக்கு மாதம் 12,000 ரூபாய் வீதம், அவருடைய 55 வயதுவரை, அதாவது இன்னும் 15 வருடங்களுக்கு மாதாமாதம் கிடைக்கும். அடுத்த 180 மாதங்களில், கம்பெனி அவருக்குக் கொடுக்கப்போகும் தொகை 12,000 x 180 = 21,60,000 ரூபாய். 20 லட்சம் ரூபாய் அதிகம். பானர்ஜி பிற கம்பெனிகளில் தாராளமாக வேலைக்குப் போகலாம்.
அப்போதும், மாதத் தொகை தொடரும். ஒருவேளை பானர்ஜி இறந்துவிட்டால், இந்தப் பணம் அவர் குடும்பத்துக்குத் தரப்படும். ஊரைவிட்டுப் போகிறவர்கள், புதிய இடங்களில் வீடுகள் வாங்க 3 லட்சம் வட்டியில்லாக் கடன் வேலையை விட்டாலும், தொழிலா ளிகளுக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் டாடா ஆஸ்பத்திரியில் குறைந்த செலவில் சிகிச்சை. டாடா ஆஸ்பத்திரியைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் 3 லட்ச மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி.
ஆமாம், டாடா ஸ்டீல் நிர்வாகம் தொழிலாளர்களுக்குத் தந்தது வெறும் அதிர்ச்சியல்ல, ஆனந்த அதிர்ச்சி! அடுத்த ஆறு ஆண்டுகளில் 30,300 பேர் விருப்ப ஓய்வு வாங்கிப்போனார்கள். பிற கம்பெனிகளும், ஊடகங்களும், டாடா ஸ்டீல் மாபெரும் தவறு செய்துவிட்டதாகக் கேலி செய்தார்கள். ஆனால், வரவு செலவுக் கணக்குகள் இரானியின் தீர்க்கதரிசனம் எத்தனை சரியானது என்பதை நிரூபித்தன.
டீலை வெற்றிகரமாக முடித்தார் இரானி. பேச்சு வார்த்தைகளில் அவர் கண்ட வெற்றியின் ரகசியங்கள் – 30,000 பேரைக் குறைக்கவேண்டும் என்னும் இலக்கில் தெளிவு, உறுதி, தொழிலாளர் நலம் காக்கவேண்டும் என்னும் நேர்மையான கொள்கை, பிரச்சினையைப் பல கோணங்களிலிருந்து ஆழமாக ஆராய்ந்த கடும் முயற்சி, தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிறவிடாமல் அடக்கிவாசித்த யுக்தி, அவர்கள் நினைத்துப்பார்த்தேயிராத சலுகைகள் தந்த பரந்த மனம். டீல்களில் ஜெயிக்க நம் எல்லோருக்கும் ஒரு பாடம்.