வேலை தேடும் போராட்டத்தில் பல முரணான விஷயங்களை பலரும்
எதிர்கொண்டிருப்பார்கள். இந்த விஷயங்கள், அவர்களுக்கு, சோர்வையும்,
வெறுப்பையும் தரக்கூடியாதாகவும் இருக்கும்.
உதாரணமாக, ஒருவர், புதிதாக
படித்து முடித்த பட்டதாரி என்றால், அவர் விண்ணப்பிக்கும் நிறுவனம், நாங்கள்
அனுபவசாலிகளைத் தேடுகிறோம் என்று சொல்லி, அவர் விண்ணப்பத்தை
நிராகரிக்கும்.
அதேசமயத்தில், அனுபவமுள்ள ஒருவர், ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட
பணிக்காக விண்ணப்பித்தால், அந்நிறுவனம், நாங்கள் புதியவர்களைத்தான்
தேடுகிறோம். இப்போதைக்கு அனுபவசாலிகள் தேவையில்லை என்று சொல்லி அவரை
நிராகரிக்கும். எனவே, இதுபோன்ற சூழல்களை சமாளிக்க, ஒருவர், தனக்கான வேலை
தேடுவோர் நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் அல்லது அதுபோன்றதொரு
நெட்வொர்க்கிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நெட்வொர்க்கிலோ இணைதல்
வேண்டும். அப்போதுதான், பணி தேடும் செயல்பாடு சுலபமானதாக இருக்கும்.
சரியான நெட்வொர்க் இல்லாமல் வேலை தேடும் ஒருவர், ஒரு வாரத்திற்கு சில
நிறுவனங்களையே அணுக முடியும். இதன்மூலம், அவரின் பணியின்மை காலம்
நீடித்துக்கொண்டே செல்லும். சிலர் ஆண்டுக்கணக்கில் கூட, வேலையின்றி
இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், நெட்வொர்க்கில் இருக்கும் ஒரு
நபர், நிறைய நிறுவனங்களை அணுகும் வாய்ப்பைப் பெறுகிறார்.
கூச்சமும், தயக்கமும் வேண்டாம்
சிலருக்கு அதிக கூச்சமும், தயக்கமும் இருக்கும். சிலருக்கு தாழ்வு
மனப்பான்மையும் இருக்கும். அவர்களைப் போன்றவர்கள், மீட்டிங், நேர்முகத்
தேர்வு மற்றும் ஈ-மெயில் அனுப்புவது போன்ற சிறிய விஷயங்கள் ஆகியவற்றைக்
கூட, முடிந்தளவு தவிர்க்கவே பார்ப்பார்கள். அவர்களைப் போன்ற நபர்கள்,
இன்றைய போட்டி உலகில், நிச்சயம் காணாமல் போய்விடுவார்கள்.
எனவே, ஒருவர் கடினமாக முயற்சி செய்து, தனது கூச்ச சுபாவத்தையும்,
தயக்கத்தையும் கைவிட வேண்டும். பிற நபர்களோடு பேசுவதை சந்தோஷமாக உணர
வேண்டும் மற்றும் தயக்கமின்றி பேச வேண்டும். இதுபோன்ற மனோநிலையை
வளர்த்துக்கொண்டால், எளிதில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
புதிய மனிதர்களை சந்தித்து நண்பர்களாக்கி கொள்கையில், எப்போதுமே
எதிர்மறை எண்ணத்தை வைத்திருக்கக்கூடாது. அதாவது, நாம் சந்திக்கும் நபர்கள்,
எங்கே நமக்கு உதவப் போகிறார்கள், எல்லாம் வீண் என்ற எண்ணம் தவறு. நீங்கள்
ஒரு 25 பேரை சந்தித்தால், அதில், குறைந்தது ஒரு 3 பேராவது உங்களுக்கு
ஏதேனும் ஒரு வகையில் உதவக்கூடியவராக இருப்பார். சமயத்தில், நீங்கள்
எதிர்பாராத நபரிடமிருந்தெல்லாம் உதவியைப் பெறுவீர்கள். அதேசமயம், நீங்கள்
மிகவும் எதிர்பார்த்த நபர் உங்களுக்கு எதுவும் செய்யாமல் போகலாம். வாழ்க்கை
என்பதே அப்படித்தான். திருப்பங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்தது.
வேலை தேடும் செயல்பாட்டில் உதவக்கூடிய முக்கியமான 4 நெட்வொர்க் விபரங்கள்
* உங்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நன்கு தெரிந்தவர்கள்
* உங்களின் உறவினர்கள் மற்றும் உறவினர்களின் நண்பர்கள்
* உங்களின் தொழில்முறை சங்கம். நீங்கள் எந்த துறையை சார்ந்தவராக
இருந்தாலும் சரி, அதற்கென்று லாபநோக்கமற்ற ஒரு சங்கம் இருக்கும். அந்த
சங்கத்தில் உங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்வதன் மூலமாக, உங்களுக்கு பல
நன்மைகள் கிடைக்கும். அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர், பெரிய
பதவிகளில் இருப்பார்கள் என்பதையும் மறத்தல் கூடாது.
* உங்கள் பகுதியில், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளை
மேற்கொள்வதற்கென்று, சில அமைப்புகள் இருக்கலாம். வழிபாட்டு இடங்களைப்
பராமரித்தல் மற்றும் சமூக சேவைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளில் அந்த
அமைப்புகள் ஈடுபட்டிருக்கும். எனவே, அதுபோன்ற அமைப்புகளிடம் நீங்கள்
கொண்டிருக்கும் தொடர்புகளும்கூட, சில நேரங்களில் உங்கள் வேலைதேடும்
செயல்பாட்டில் உதவி புரியும்.
மேலும், நீங்கள் யாரிடமாவது சிறிய உதவி பெற்றாலும்கூட, அவருக்கு
குறைந்தபட்சம் தொலைபேசி மூலமாகவாவது நன்றி சொல்ல மறத்தல் கூடாது. மேலும்,
சற்று பெரியளவிலான உதவியாக இருந்தால், நன்றி தெரிவித்து ஒரு கடிதமே
எழுதலாம். இதன்மூலம், நீங்கள் எளிதில் மனிதர்களை கவரலாம். மேலும், இன்னும்
பல பெரிய வாய்ப்புகள் வந்தாலும், உங்களின் நன்றியால் கவரப்பட்ட மனிதர்கள்,
அந்த வாய்ப்புகளைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று
தூண்டப்படுவார்கள்.
வேறு சில ஆலோசனைகள்
நீங்கள் வேலை தேடுதல் தொடர்பாக, ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கங்கள்
நீடித்த அம்சம் கொண்டதாக இருக்க வேண்டும். வெறுமனே அவசரப்பட்டு,
ஒன்றிலிருந்து மற்றொன்று என்று தாவிக்கொண்டே இருத்தலானது, உங்களின்
நோக்கத்தையே சிதறடித்துவிடும்.
நெட்வொர்க் குழுவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நேரம்
கிடைக்கையில், நீங்கள் யார் யாரிடமெல்லாம் பேசினீர்கள் என்பதைப் பற்றி
நினைவிற்கு கொண்டுவர வேண்டும். இதன்மூலம், சரியான நேரத்தில் சரியான நபரை
நீங்கள் அடையாளம் காண முடியும்.
நீங்கள் நெட்வொர்க் நபர்களிடம் பேசும்போது, ஆர்வத்துடனும்,
இன்முகத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இந்தத் தன்மை, வெறும்
வேலைக்காக மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதற்குமான செயல்பாட்டில் ஒரு நபருக்கு
பேருதவி புரியும். நீங்கள் உரையாடலில் காட்டும் ஆர்வம்தான், உங்கள் எதிர்
நபரை, உங்களின்பால் கவனம் காட்டத் தூண்டும்.
நெட்வொர்க் என்பதையே, உங்கள் திறன்களை விற்பனை செய்யும் செயல்பாடு என்று
நினைத்து விடாதீர்கள். உங்களின் பொது சமூக தொடர்பை அதிகரிக்கும் செயல்பாடே
நெட்வொர்க் ஆகும். நெட்வொர்க் செயல்பாடு என்பது, வெறுமனே வேலை பெறுவதற்காக
மட்டுமே மேற்கொள்ளப்படும் சுயநல செயல்பாடு என்பதல்ல. அப்படி நினைத்தலும்
கூடாது. இது புதிய மனித உறவுகளை பெறும் ஒரு செயல்பாடும்கூட. இதன்மூலம்,
இந்த உலகம் எப்படி போட்டி நிறைந்ததாக உள்ளது மற்றும் மனிதர்கள் எப்படி
வெற்றிகொள்ள போராடுகிறார்கள் என்பன போன்ற தகவல்கள் கிடைக்கும்.
நீங்கள் ஒரு நெட்வொர்க் நபரிடம் ஏதேனும் ஒரு தகவலுக்காகவோ அல்லது
உதவிக்காகவோ தொடர்புகொண்டு, அவரிடமிருந்து தெரியாது அல்லது தற்போது இயலாது
என்ற பதில் வந்தால், அதற்காக உடனே தொடர்பை துண்டித்தல் கூடாது. ஏனெனில்
அந்த மனிதரின் சூழல் அப்போதைக்கு வேறுமாதிரி இருக்கலாம்.
எனவே, அந்த சூழலில், எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கியமைக்கு நன்றி என்று
சொல்லி அவரை மகிழ்விக்க வேண்டும். இதன்மூலம், அப்போது இல்லையென்றாலும்,
வேறு சமயங்களில் அவரால் உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கலாம்.
வேலைதேடும் நெட்வொர்க் அம்சத்திலிருந்து, உடனடியாக பலன்களை
எதிர்பார்ப்பது கூடாது. சில சமயங்களில் உடனடி பலன்கள் கிடைத்தாலும், பல
சமயங்களில் சிறிது காத்திருக்க வேண்டும். ஆனால், எந்த சமயத்திலும்
நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது. ஏனெனில், நெட்வொர்க் குரூப்
மூலமாக, வெறுமனே வேலை வாய்ப்புகளை மட்டுமே நீங்கள் பெறுவதில்லை. மாறாக, ஒரு
புது பணி தொடர்பான உறவுக் குழுக்களையே பெறுகிறீர்கள்.
நெட்வொர்க்கிங் என்பதன் தத்துவம்
ஒரு மாங்காயை வீழ்த்த பல கற்களை நாம் எறிய வேண்டியுள்ளது. எனவே, பல
நெட்வொர்க் தொடர்புகளை நாம் பேண வேண்டியதும் அவசியமாகிறது. நெட்வொர்க்
மூலம் ஒரு பணி வாய்ப்பை பெற்றதும், பலர் நெட்வொர்க் தொடர்புகளையே மறந்து
விடுகிறார்கள். சிலர் மட்டுமே பழைய நண்பர்களோடு, தொடர்ந்து தொடர்பில்
இருக்கிறார்கள்.
ஏனெனில், இன்றைய யுகத்தில், ஒரே பணியில் காலம் முழுவதும் இருப்பதென்பது
சவாலான விஷயமாகவே உள்ளது. அது பழைய கலாச்சாரம் என்பதாக ஆகிவிட்டது. எனவே,
நெட்வொர்க் தொடர்பை தொடர்ந்து பேணி காப்பதன் மூலமாக, புதிய புதிய நன்மைகள்
நமக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருப்பதோடு, மனித உறவுகளை மதிப்பதன்
மாண்புகளையும் பெறலாம்.
* நெட்வொர்க் செயல்பாடு, உங்களின் வேலையில்லாத காலஅளவை குறைக்கும்.
* உங்களை செயல்பாட்டுத் திறத்துடனும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்.
* வேலை வாய்ப்பு சந்தையைப் பற்றிய புதுப்பிக்கப்பட்ட அறிவை உங்களுக்கு வழங்கும்.
* உங்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை பெறுவதற்கு உதவிபுரியும்.