கடந்த ஐந்து வருடங்களாகவே பொறியியல் படிப்பானது, ஆசை காட்டி மோசம் செய்யும் எலிப்பொறி போன்றே இருந்து வருகிறது. எனினும், வருடா வருடம் லட்சகணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துகொண்டுத்தான் இருகிறார்கள். பொறியியல் படிப்பின் கறுப்புப் பக்கமானது பெரும்பாலான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவதே இல்லை. இண்டர்நெட்டில் கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 5,682 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதில் வருடத்துக்கு சுமார் 20 லட்சம் பொறியியலாளர்கள் பட்டம் பெறுகின்றனர். அந்த 20 லட்சம் பொறியியலாளர்களுக்கும் நம் நாட்டில் வேலை இருக்கிறதா என்றால், கண்டிப்பாக இல்லை!
2010 ஆம் வருடம் பல கனவுகளுடன் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்த பல லட்சம் மாணவர்களில் நானும் ஒருவன். ஆனால், அடுத்த நான்கு வருடங்கள் என் கனவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்தன. நான்காம் வருட முடிவில் கேம்பஸ் இண்டர்வியூ எனப்படும் நிகழ்வில் ஒரே ஒரு பி.பி.ஓ. மட்டுமே எங்கள் கல்லூரிக்கு வந்தது. அந்த வேலைக்கு நான் தேர்வாகியிருந்தபோதும், பொறியியல் படித்துவிட்டு அந்த பி.பி.ஓ. வேலைக்குச் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். நான்காம் ஆண்டு தேர்வு முடிந்த பின் நானும் என் நண்பர்களும் வேலை தேடும் வேலையில் மும்முரமாக இறங்கினோம். பல தொழிற்சாலைகளை அணுகினோம். ஆனால், எந்தத் தொழிற்சாலையில் இருந்தும் எங்களுக்கு சாதகமான பதில் வரவில்லை.
ஒரு நாள், திருவண்ணாமலையில் ஒரு பிரபல கல்லூரி ஒன்று நடத்தும் வேலைவாய்ப்பு முகாமின் விளம்பரம் கண்ணில் பட்டது. உடனே திருவண்ணமலைக்குக் கிளம்பினோம். வேலைவாய்ப்பு முகாம் நடப்பதாகக் கூறிய அந்தக் கல்லூரியில் பயங்கர கூட்டம். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு பட்டம் பெற்றிருந்தவர்கள்கூட வேலை கிடைக்காததால் அந்த முகாமுக்கு வந்திருந்தனர். ஆனால், எங்கள் அனைவருக்குமே அந்த முகாம் ஏமாற்றமாகவே இருந்தது. நாட்கள் ஓடின... ஆனால், எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் வேலை தேடினோம். சில நிறுவனங்களில் வேலையும் கிடைத்தன. Material handling engineer என்று சொல்வார்கள். ஆனால் வண்டி இழுக்கச் சொல்வார்கள். quality engineer என்று சொல்வார்கள். ஆனால், தயாராகும் பொருட்களை சுத்தம் செய்ய சொல்வார்கள்.. Production engineer என்று சொல்வார்கள், ஆனால் போல்ட், நட்டுகளை திருகச் சொல்லுவார்கள். பொறியியல் படித்துவிட்டு மூட்டைத் தூக்கவும் வண்டி இழுக்கவும் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால், என் நண்பர்கள் கிடைத்த வேலை போதும் என்று அந்த சிறு நிறுவனங்களில் சேர்ந்தனர். நான் இப்போது தனிமை ஆனேன்.
காலையில் எழுந்து நான்கு resume-களை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக சுற்றிய நாட்களும் உண்டு. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியாக உக்கார்ந்து என் நிலைமையை எண்ணி கண் கலங்கிய நாட்களும் உண்டு. 'வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பாத்துட்டியா?' என்று யாரேனும் யதேச்சையாக்கக் கேட்டால்கூட, எனக்கு வேலை இல்லை என்பதற்காகவே அப்படி கேட்கிறார்கள் என்பதுபோல் தோன்றும். எத்தனையோ நாட்கள் வீட்டில் பெற்றோர் சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு உள்ளர்த்தம் இருக்குமோ என்று யோசித்து, அந்த சாதாரண வார்தைகளுக்கு நானே அர்த்தம் பொருத்தி அழுததுண்டு. பல போலி மனிதவள மேலாளர்களைச் சந்தித்து மன அளவில் அடி வாங்கியதும் உண்டு. பல போலி வேலை வாங்கிக் கொடுக்கும் நிறுவனங்களையும் சந்தித்ததுண்டு.
ஐந்து வருடத்துக்கு முன் பட்டம் பெற்று நல்ல வேலைகளில் இருப்பவர்களுக்கும், ஐ.ஐ.டி போன்ற சிறந்த கல்லூரிகளில் பயின்று நல்ல வேலைகளில் இருப்பவர்களுக்கும் எங்களின் கஷ்டம் தெரிவதும் இல்லை... புரிவதும் இல்லை. நாங்கள் ஒழுங்காகப் படிக்காததால்தான் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று அவர்கள் நினைகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளில் போதுமான வசதிகள் இல்லை. மாணவர்கள் தங்களது முழு உழைப்பை படிப்பில் செலுத்தினாலும் போதுமான வசதிகள் இல்லாததால் ஐ.ஐ.டி. போன்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுடன் போட்டியிட முடிவதில்லை. நம் நாட்டில் மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர், தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணம், கடன் வாங்கிய பணம் என எல்லாவற்றையும் செலவு செய்கிறார்கள். இருப்பினும், பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வியும், கல்விக்குப் பின் வேலையும் கிடைப்பதில்லை.
பொறியியல் படிப்பின் தரத்தை உயர்த்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொறியியல் படிக்கச் சொல்வதற்கு முன், பொறியியலின் இந்த கறுப்புப் பக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனக்கு இப்போது ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது, ஆனால், அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் அமையாது அல்லவா?
- சூரியகுமார், காரைக்கால்
விகடனில் வெளியிடப்பட்ட செய்தி, நண்பர்கள் தெரிந்து கொள்ள பகிர்கிறேன்.
No comments:
Post a Comment