அது ஒரு நீண்ட ரயில் பயணம். நம் எதிரில் மூன்று பேர். அருகில் இரண்டு பேர். முதலில் நேர் எதிரில் இருப்பவர்தான் நம் இலக்கு. அவருக்கும் நாம்தான் இலக்கு. முதலில் ஒரு புன்னகையை வீசிப் பார்ப்போம். அவர் அதை கேட்ச் பிடித்து திரும்ப புன்னகையாகவே வீசினால், பிழைத்தோம்.. இல்லையென்றால், அந்த வரிசையில் யார் புன்னகைக்கிறார்களோ அவரிடம் தாவுவோம். அதன்பிறகு, பேச்சு இந்தவிதமாகத்தான் துவங்கும்..
ஒரே புழுக்கமா இருக்குல்ல?
நீங்க எங்க இறங்கணும்? (சென்னையா, பெங்களூரா என்ற ரீதியில்)
டயத்துக்கு எடுத்துருவாங்களா?
ட்ரெயினை பிடிக்கிறதுக்குள்ள ஒரே டென்ஷனாய்டுது…
என்று ஆரம்பித்து, “தம்பி என்ன பண்றீங்க?” என்று அவர் கேட்கத் துவங்கி (பெண்ணாக இருந்தால், “என்னம்மா பண்றீங்க?”) பேச்சு வளரும். அப்போது நம்மைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுப்போம். அவர் கேள்வியாகக் கேட்டுத் தள்ளுவார். பிறகு, அவருக்கு நம்மையோ, நமக்கு அவரையோ பிடித்திருந்தால்தான் அந்த உரையாடல்கூட அடுத்த கட்டத்துக்குப் போகும்.
இதே நிலைதான், ஒரு வங்கிக்குள் நுழையும்போதும் ஏற்படும். எதிரில் அமர்ந்திருக்கும் வங்கி அதிகாரிகளில், எந்த கவுன்ட்டரில் உள்ள நபர் நம்மைக் கவர்கிறார்களோ, அவரைத்தான் தேர்ந்தெடுத்து நம் சந்தேகத்தைக் கேட்போம்.
இரு நபர்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்து, இவர் நமக்கு ஒத்துவருவாரா என்று மனத்துக்குள் அனுமதித்த பிறகுதான் ஒவ்வொரு சந்திப்பும் வெற்றிகரமாக நிகழும்.
பெண் பார்க்கும் படலத்தில், ஆண், பெண் அழகைத் தவிர, அவர்கள் இருவரும் எப்படிப் பேசுகிறார்கள், அவர்களது எண்ணம் எப்படிச் செல்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்பதைத்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அதில் ஏதேனும் சிறு இடர் ஏற்பட்டால்கூட, அப்போதே கௌரவமாகத் தவிர்த்துவிடலாம் என்பதுதான் பெண் பார்க்கும் படலத்தின் நோக்கம்.
மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதரைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதோ, சந்தேகம் கேட்பதோ, வாழ்வதோ நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எதை வைத்து ஒருவர் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கிறார்? எந்த விஷயங்கள் ஒருவரை ஈர்க்கிறது என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக இருக்கும்.
ஒரு ஆளுக்குப் பிடிக்காதவர், வேறு ஒருவருக்கு மிகவும் பிடித்தவர் ஆவதன் மர்மமும் இதுதான்!
ஆனால், சில பொதுவான நல்ல குணாதிசயங்கள் உள்ள நபரை எல்லோருக்கும் பிடிக்கும். அதற்கும் மேல் ஒரு மனிதர் சேர்த்து வைத்திருக்கும் அறிவை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதும் மற்றவர்களைக் கவரும் வாய்ப்பு இருக்கிறது.
இதேபோலத்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஒரு துறையில் ஊழியர் வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, அதற்குத் தகுதியான ஆளைத் தேர்ந்தெடுக்க ,நடத்தும் ஒற்றைச் சந்திப்பில்தான், ஒரு தனி மனிதரின் அடிப்படை குணாதிசயங்கள் மற்றும் அறிவு கணக்கிடப்படுகிறது. அந்தச் சந்திப்புதான் அவரை “இவர் இதுக்கு ஒத்துவருவாரா? மாட்டாரா?” என்று முடிவெடுக்க வைக்கிறது.
பொதுவாக, ஒரு நிறுவனம், தங்களிடம் காலியாக உள்ள வேலைக்கு – தொழில்நுட்பத் தகுதி மற்றும் வேலைக்கான குணாதிசயம் இருக்கிறதா என்பதை ஒரு சில நிமிடங்களில் அல்லது ஓரிரு சுற்றுகளில் கண்டறிய ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள். அந்த வார்த்தைதான் நம் இளைஞர்களின் வயிற்றில் பந்தாக உருளவைக்கும் ஒற்றைச்சொல்லாகி கபடி ஆடிக்கொண்டிருக்கிறது.
இன்டர்வியூ – நேர்முகத் தேர்வு!
ஒரு இளைஞர் (ஞன், ஞி இருவரும் சேர்த்துத்தான்) கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தின் இன்டர்வியூவுக்கு செல்கிறார் என்றால்…
ட்ரெஸ்ஸை இன் பண்ணிக்க…
கேட்ட கேள்விக்கு, தெரியுதோ தெரியலையோ, பட் பட்டுன்னு பதில் சொல்லு…
நிதானமா பேசு…
நேரா உக்காரு…
லைட் கலர் சட்டை போட்டுக்க…
தலையை லூசா விடாத…
கண்ணைப் பாத்து பேசு…
உக்காரலாமான்னு கேட்டுட்டு உக்காரு…
ஒரு சிரிப்போடயே இரு…
சீரியஸா முகத்தை வச்சுக்க…
சொந்த விவரங்களை ரொம்ப சொல்லாத…
சம்பளம் என்னன்னு கேளு…
சம்பளத்த பத்தியே கேக்காத…
என்று பல்வேறு தரப்பில் இருந்தும் அறிவுரைகள் பறக்கும். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு, அங்கே போய், கேள்வி கேட்பவரின் முன்னால் எப்படி அமர்வது என்றுகூட முடிவெடுக்க முடியாமல், திகில் படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுபோல், சீட்டின் நுனியிலேயே அமர்ந்து, ஏற்கெனவே காதில் வாங்கிய அறிவுரைகளில் எதைச் செய்வது என்று தெரியாமல், மொத்தமாகச் சொதப்புவதுதான் நமது வேலையாக இருக்கும்.
கேட்கும் கேள்விக்குப் பதில் தெரிந்தால் ஹீரோவாகவும், பதில் தெரியாவிட்டால் வில்லனாகவும், ஒரே நேரத்தில் நமக்கு நாமே உணரவைக்கும் உன்னத நிகழ்வான இன்டர்வியூ பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று உத்தேசம்.
இன்டர்வியூ – இது ஒரு மாயச்சொல்லாகவே மாறியிருக்கிறது.
இன்டர்வியூவை தமிழில் நேர்முகத் தேர்வு என்று சொல்கிறோம். இன்னும் சரியாகத் தமிழாக்கினால், உள்பார்வை என்று பொருள்படும்.
இந்தப் பொருளுடன் இதனை அணுகினாலே பாதி வேலை முடிந்துவிடும்.
இருந்தாலும், ஒரு ஊழியருக்கான உள்பார்வைப் பேட்டியில் இன்றைய நிறுவனங்கள் எதை எதிர்பார்க்கின்றன என்று பார்ப்போம்.
முதலில் பார்க்கவேண்டியது ரெஸ்யூம் எழுதுவது.
அதற்கு முன்னால், ஒரு கேள்வி. Resume - Curriculam Vitae எனப்படும் CV. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
அடுத்து பார்க்கலாம்…
சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், எழுத்தாளர், தொழில் ஆலோசகர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். எளிய வார்த்தைகள் மூலம் கல்வி, தொழில் ஆகியவற்றில் உள்ளங்களில் மாற்றம் கொண்டுவரமுடியும் என்று நம்புபவர். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் புதிய, பிரபல தொழில் நிறுவனங்களின் நிரந்தர ஆலோசகர். இதுவரை 5 நூல்கள் எழுதியுள்ளார். தமிழில் முதல் தொழில் நாவல் எழுத்தாளர் (Business Novelist) என்ற பெயருக்குச் சொந்தக்காரர். சுவாரஸ்யமான எழுத்துநடை இவரது பலம்!
இன்றைய இளைஞர்களுக்கு வேலை தேடுவது என்பது கற்கால மனிதனின் வேட்டையைப் போன்ற ஒரு சாகஸமாகவே ஆகிவிட்டது.
மான் எதிரில் இருக்கிறது. கையில் அம்பும் இருக்கிறது. மானைக் கொல்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அம்பு மட்டும் இருந்தால் போதுமா? மானை வீழ்த்த சாதுரியம் வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதே சக்ஸஸ் ஃபார்முலாதான், வேலைக்கான வேட்டைக்கும்.
அம்பைப்போல் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு, வேலை என்ற மானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேட்டையின் முக்கிய அம்சமே நேர்முகத் தேர்வுதான். அப்படிப்பட்ட நேர்முகத் தேர்வு என்ற இலக்கை/ஒற்றைக் கதவை எப்படி எட்டுவது/ஓங்கித் திறப்பது என்று எளிமையாகப் புரியவைக்கும் முயற்சிதான் இந்த நேர்முக்கியத் தேர்வு என்ற தொடர்.
No comments:
Post a Comment